TNPSC Thervupettagam

இந்தியா - சீனா எல்லைப் பதற்றம்

September 28 , 2017 2611 days 7022 0

இந்தியா - சீனா எல்லைப் பதற்றம்

-------

மு. முருகானந்தம்
 
உலகின் மக்கட்தொகை வரிசைப் பட்டியலில் முதல் இரு இடத்தில் உள்ள ஆசிய நாடுகள் சீனாவும்-இந்தியாவும் ஆகும்.  உலக மக்கட்தொகையில் 37%, ஆசியாவில் 61% மக்கள் இவ்விரு நாடுகளில் வசிக்கின்றனர்.  இரு நாடுகளும் ஆசியாவில் முக்கிய இடம் வகிக்கின்றன.  இந்தியப் பெருங்கடலில் இந்தியாவும், மேற்குப் பசுபிக் பெருங்கடலில் சீனாவும் ஆதிக்க சக்திகளாக விளங்குகின்றன.  அமெரிக்காவின் புதிய அதிபர் தனது பழைய முன்னோடிகளின் பாதையிலிருந்து மாறுபட்டு புதிய அரச தந்திரங்களைக் கையாள்பவராகவும், அமெரிக்காவே பிரதானம் என்ற எண்ணமுடையராகவும் இருக்கிறார்.
இங்கிலாந்து-பிரான்சு-இரஷ்யா ஆகிய நாடுகளின் பொருளாதார வல்லாண்மை தேக்கநிலையை நெருங்கிவிட்டது.  சீனா புதுவேகத்துடன் உலக அரங்கில் பெருஞ்சக்தியாக உருப்பெற்று வருகிறது.   இந்தியாவும் சீரான வேகத்தில் வளர்ந்து வருகிறது.  மாறுகின்ற உலகப் புவியரசியல் (Geo Political), புது உற்சாகத்துடன் உலக அரங்கில் நுழையும் இந்தியா, வல்லரசாகத் துடிக்கும் சீனா என்று பல காரணிகள் இந்தியா-சீனா உறவில் சிற்சில உரசல்களுக்கு வழிவகுத்துள்ளது.  இப்போதைக்கு டோக்லாம் சிக்கல் முக்கியமானதாக உருவெடுத்துள்ளது.
இந்தியா-சீனா இருதரப்பு உறவு
இந்தியாவும் சீனாவும் நவீன யுகத்தின் புதிய சக்திகளாகும்.  இந்தியா-1947-ல் சுதந்திரமடைந்தது.  சீனா (தற்போதைய சீன மக்கள் குடியரசு) 1949-ல் மா சேதுங் தலைமையில் புதிய அரசாக உருவெடுத்தது.  ஆரம்ப கட்டத்தில் இரு நாடுகளும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தன.  1954-ல் பஞ்சசீலக் கொள்கையை ஏற்றுக்கொண்டன. இக்கொள்கைகள் உலக அளவில் பின்பற்ற வேண்டிய அளவிற்கு முக்கியத்துவம் நிறைந்தவை.
பஞ்சசீலக்  கொள்கைகள்
  1. பரஸ்பரம் இருநாடுகளும் அடுத்த நாட்டின் ஒற்றுமையையும் இறையாண்மையையும் மதிக்க வேண்டும் (Mutual Respect for each other’s Territorial Integrity and Sovereignty).
  2. பரஸ்பரம் இரு நாடுகளும் எல்லைகளை அத்துமீறக் கூடாது (Mutual Non-aggression).
  3. பரஸ்பரம் இரு நாடுகளும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது (Mutual Non- Interference in each other’s internal affairs).
  4. சமத்துவம் (மற்றும்) பரஸ்பர நலனுக்காகப் பாடுபடுதல் Equality and Cooperation for mutual benefit).
  5. சமாதான சக வாழ்வு (Peaceful Co-existence).
இந்த ஒப்பந்தமே இந்திய-சீன உறவில் முக்கியமான அடித்தளமாகும்! எனினும் பல்வேறு சிக்கல்கள் காரணமாக 1962-ல் இந்தியா மீது சீனா போர் தொடுத்தது.  அதன் பின்னர் பல நெருடல்கள் இருந்தாலும் அவையெல்லாம் பேச்சுவார்த்தையால் தீர்க்கப்பட்டு வருகின்றன. தற்போது டோக்லாம் பிரச்சினை பெரிதாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவும் எல்லைகளும்
இந்தியாவின் நில எல்லை 15106.7 கி.மீ நீளமுடையது.  இந்தியாவின் 17 மாநிலங்கள் நில எல்லையைக் கொண்டதாகும். இந்தியாவில் 7516.6 கி.மீ நீளத்திற்கு கடற்கரை உள்ளது.  13 மாநிலங்கள் கடற்கரை உடையனவாகும்.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், டெல்லி, ஹரியானா ஆகிய 5 மாநிலங்கள் தவிர்த்து ஏனைய மாநிலங்கள் பன்னாட்டு எல்லை அல்லது கடற்கரையைக் கொண்டுள்ள எல்லை மாநிலங்களாகும்.

இந்தியாவின் எல்லை நிர்வாகம் உள்துறை அமைச்சகத்தின் (Ministry of Home Affairs) கீழ் செயல்படும் எல்லை மேலாண்மைத் துறையின் (Department of Border Management) பணியாகும்.

.எண்

நாடு நில எல்லையின் நீளம் (கி.மீ)
1.     வங்கதேசம் 4096.7
2.     சீனா 3488
3.     பாகிஸ்தான் 3323
4.     நேபாளம் 1751
5.     மியான்மர் 1643
6.     பூடான் 699
7.     ஆப்கானிஸ்தான் 106
  மொத்தம் 15106.7
இந்திய எல்லைக் கோடுகளின் பெயர்கள்
இந்தியா என்ற நவீன நாடு ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது எனலாம். பெரும்பாலான எல்லைக் கோடுகளை வரைந்தவர்களும் அவர்களே தான். சொல்லப்போனால் இன்றைய சில எல்லைச் சிக்கல்களுக்கும் அவர்களது ஒப்பந்தங்களே காரணமாகின்றன. அந்த எல்லைக் கோடுகளின் பெயர்களைத் தெரிந்து கொள்வது சிக்கலைப் புரிந்துக் கொள்ள வழிவகுக்கும்.
.எண் அண்டை நாட்டின் பெயர் எல்லைக் கோட்டின் பெயர்
1.     பாகிஸ்தான் ரெட் கிளிஃப் கோடு (3323 கி.மீ)
2.     வங்கதேசம் புர்பச்சால் (4096.7 கி.மீ)
3.     சீனா மெக்மோகன் கோடு (3380கி.மீ)
4.     பூடான் இந்தோ-பூடான் (699 கி.மீ)
5.     ஆப்கானிஸ்தான் துரந்த் கோடு (106 கி.மீ)
6.     இலங்கை பாக் சலசந்தி (30.கி.மீ)
7.     மியான்மர் இந்தோ-பர்மா எல்லை (1643 கி.மீ)
8.     நேபாளம்  எல்லைக் கோடு (1236 கி.மீ)
இதில் இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினைக்குக் காரணமான கோடு மெக்மோகன் கோடாகும். இந்த மெக்மோகன் கோடு அக்சய்-சின் (Aksai – Chin) என்றறியப்படும் பகுதியை சீனாவினுடையதாகக் காட்டக்கூடியது. சீனா இந்தக் கோட்டை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் இந்தியா, ஜான்சன் கோடு என்ற எல்லையை முன்வைக்கிறது. ஜான்சன் கோட்டின்படி அக்சய்-சின் இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாகும்.
டோக்லாம் சிக்கல்
டோக்லாம் பீடபூமி (Doklam Plateau) இந்தியா-சீனா-பூடான் ஆகிய மூன்று நாடுகள் சந்திக்குமிடத்தில் (Tri junction) உள்ளது. தற்போது இந்தப் பீடபூமி பூடானின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பீடபூமியைச் சீனா உரிமை கோருகிறது.

இது குறித்த பேச்சு வார்த்தை முடியும் வரை தற்போதைய நிலையினைத் தொடர வேண்டும் என்பது பூடானின் வாதமாகும். ஆனால் சீனா இந்தப் பகுதியில் சாலை அமைக்கத் தொடங்கியது.இந்தப் பீடபூமி சும்பி பள்ளத்தாக்கிற்கு (Chumbi Valley) மேலே உள்ளது.  இப்பகுதியில் சிலிகுரி பெருவழிப்பாதை (Siliguri Corridor) உள்ளது.  இது கோழிக்கழுத்துப் பகுதியென (Chicken’s Neck) உருவகப்படுத்தப்படுகிறது.  வடக்கு மாநிலங்களுக்குச் செல்ல குறுகலான நிலவழியாக இது  உள்ளது.

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் சீனா உள்ளே நுழைவது ஆபத்தானதாக இந்தியா கருதுகிறது.

பூடான்-இந்தியா உறவும் டோக்லாமும்
பூடானும் இந்தியாவும் மிக நெருங்கிய நண்பர்கள், பூடானின் வெளியுறவு விவகாரங்கள் இந்திய ஆலோசனைப்படி கட்டுப்படுத்தப்படுகின்றன. பூடானின் நிர்வாக அதிகாரிகள் (ராயல் பூடான் சிவில் சர்வீஸ்), பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியா தனது குடிமைப் பணியாளர் மற்றும் பாதுகாப்புப் படைகளுடன் கூட்டாகப் பயிற்சியளிக்கின்றன. பூடானின் வட எல்லைப் பகுதிகளில் பூடான் இராணுவத்துடன் இந்திய வீரர்களும் ரோந்து செல்வதுண்டு. இவ்வாறு பூடானுடன் மிக மிக நெருங்கிய நட்பு நாடாக இந்தியா உள்ளது.
இந்நிலையில் சீனா பூடானில் ஆக்கிரமிப்பதை இந்தியா எதிர்க்கிறது.  சீனா-பூடான் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையிடுவதாக சீனா இந்தியாவைக் குற்றஞ்சாட்டுகிறது.  உச்சபட்ச அரசதந்திர முறைகளுடன் இந்தச் சிக்கல் கையாளப்படுகின்றது. ‘உலக அரங்கில் முழு இறையாண்மையுடையது பூடான்’ என்றும் ‘தமக்கிடைப்பட்ட சிக்கலில் மூன்றாம் நாடு தலையிடக்கூடாது’ எனவும் சீனா கூறுகிறது.  இந்தியா தனது நட்பு நாட்டின் பாதுகாப்பிற்காக  2007-ல் மேற்கொள்ளப்பட்ட  இந்திய-பூடான் நட்பு ஒப்பந்தத்தின் படி செயல்படுகிறது.
சீனா- இந்தியா உரசல்கள்
அண்டை நாட்டுடன் சிக்கல்கள் தவிர்க்க முடியாதவை. ஆனால் முறையான அரசதந்திர பேச்சுவார்த்தைகள் மூலம் இவை தீர்க்கப்பட வேண்டும். இதுபோன்ற பல பிரச்சினைகள் இந்தியா-சீனாவுக்கிடையே தீர்க்கப்படாமல் உள்ளன.
  • ஜம்மு-காஷ்மீர் எல்லை குறித்த சிக்கல்.
  • ஜம்மு-காஷ்மீரின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பெருவழி (China – Pakistan Economic Corridor) செல்வதற்கு இந்தியாவின் எதிர்ப்பு.
  • தன்னாட்சியுடைய திபெத்தைக் கோரி வருபவரும், சீனாவிலிருந்து இந்தியாவில் தஞ்சமடைந்தவருமான புத்தமதத் தலைவர் தலாய்லாமா, சீனாவால் எதிரியாகக் கருதப்படுகிறார்.
  • அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடுகிறது.
  • அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் குடிமக்கள் சீனாவிற்குளே செல்ல, தாள்தைப்பு நுழைவுரிமை (Stapled Visa) வழங்கும் சீனாவின் செயல் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானதாகக் கருதப்படுகிறது.
  • இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம்-மியான்மர்-வங்கதேசம்-இலங்கையுடன் சீனா பொருளாதார ரீதியாகவும் அரசதந்திர ரீதியாகவும் நெருங்கி வருகின்றன. இது நமக்கு அச்சுறுத்தலான விஷயமாகும்
  • இந்தியா ஐ-நா பாதுகாப்பு மன்றத்தில் (United Nations Security Council) நிரந்தர உறுப்பினராவதற்கும் அணுப்பொருள் வழங்குநர் குழுவில் (Nuclear Suppliers Group) இணைவதற்கும் சீனா முட்டுக்கட்டையாக உள்ளது.
  • அமெரிக்காவுடனான இந்திய உறவு சீனாவின் பாதுகாப்பிற்குக் குந்தகமாக சீனா நினைக்கிறது.
எப்படி இருக்கும் எதிர்காலம்?
சீனாவும் இந்தியாவும் 21-ம் நூற்றாண்டின் புதிய சக்திகளாகும். உலக ஆதிக்கச் சமநிலை அட்லாண்டிக்கிலிருந்து ஆசியா-பசுபிக் பிராந்தியத்துக்கு மாறிவருகின்றது. இந்தியாவும் சீனாவும் தத்தம் மக்களுக்குச் செய்ய வேண்டுவன ஏராளம் உண்டு.
இந்தச் சூழ்நிலையில் போர்க் கூக்குரல்கள் எழுந்தன. இந்தியாவிற்காகவும் சீனாவிற்காகவும் உயிரைத் தரத் தயாராக இருக்கும் இராணுவ வீரர்கள் யாரும் போரை விரும்புவதில்லை. பொதுமக்களும் போரை விரும்புவதில்லை. அரசியல்வாதிகளும் போரைத் தவிர்க்கவே எண்ணினர். ஆக யாருக்கும் போர் வேண்டாம்.
அமைதியான முறையில் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட்ட டோக்லாம் சிக்கல் மட்டுமில்லாது இன்னபிற சிக்கல்களும் தீர்க்கப்படும்; தீர்க்கப்பட வேண்டும்; இதுவே எல்லோரது விருப்பம். உங்களது விருப்பமும் அது தானே!

-------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories