TNPSC Thervupettagam

இந்திய – அமெரிக்க வணிக முரண்பாடுகள் எங்கே இட்டுச்செல்லும்?

May 13 , 2019 2015 days 1222 0
  • அமெரிக்கப் பொருள்களுக்கு அதிக வரி விதிப்பது, சந்தையைப் பகிர்ந்துகொள்வது தொடர்பில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் கடுமையான கருத்து வேறுபாடுகள் இரு தரப்புகளுக்குமே நல்லதல்ல.
  • அண்மையில், டெல்லி வந்த அமெரிக்க வர்த்தக அமைச்சர் வில்பர் ரோஸ் இதை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார். அமெரிக்கப் பொருள்கள் மீது இந்தியா கடுமையாக வரி விதிப்பதாகவும், சந்தையை முழுக்கத் திறந்துவிடாமல் தடுப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்; இடையிலேயே இந்தியாவைப் பாதிக்கும் வகையில் அமெரிக்காவும் ஒவ்வொரு நடவடிக்கையாக எடுத்துவந்திருக்கிறது. இந்தியாவுக்கு அளித்த ‘முன்னுரிமை வர்த்தகக் கூட்டாளி’ என்ற அந்தஸ்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் அமெரிக்கா முடிவெடுத்திருக்கிறது.
வரி விதிப்பு
  • இந்தியாவை ‘வரிவிதிப்பு மன்னன்’ என்று அதிபர் ட்ரம்ப் முன்னர் கூறியதை, வில்பர் ரோஸ் எதிரொலித்திருக்கிறார். இந்த நிலை தொடர்ந்தால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்றும் எச்சரித்திருக்கிறார். பரஸ்பர வரி விதிப்பு தொடர்பில் இந்தியா, அமெரிக்கா இரண்டுமே தீவிரமான பேச்சுகளை நடத்த வேண்டும். அமெரிக்க மோட்டார் சைக்கிள்கள் மீது 60% வரையிலும், மது வகைகள் மீது 150% வரையிலும் இந்தியா வரி விதிக்கிறது.
  • இவை சொகுசு மற்றும் உல்லாச வாழ்க்கைக்கானவை என்ற அடிப்படையில் விதிக்கப்படுவதாக இந்தியா சொல்கிறது; அமெரிக்கா இதை ஏற்கத் தயாராக இல்லை. பிற பொருள்கள் மீது இந்தியா விதிக்கும் வரி சராசரியாக 8% ஆக இருக்கிறது. தென் கொரியா, பிரேசில் போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டால் இது குறைவுதான். ஆனால், இந்தியாவிடமிருந்து கூடுதலாக அமெரிக்கா எதிர்பார்க்கிறது. வரி விதிப்பு மட்டுமல்லாமல் வேறு சில வர்த்தகக் காப்பு நடவடிக்கைகளும் அமெரிக்காவுக்கு எரிச்சலை ஊட்டியுள்ளது.
  • இந்தியர்களின் தரவுகளைத் திரட்டும் நிறுவனங்கள் அவற்றை இந்தியாவுக்குள்ளேயே வைத்துப் பராமரிக்க வேண்டும், தங்களுடைய சொந்த நாடுகளில் பராமரிக்கக் கூடாது என்று இந்தியா கட்டுப்பாடு விதிக்கிறது. இந்தத் தரவுகள்தான் பெருநிறுவனங்களின் வர்த்தகம் விரிவடைய மிகவும் அவசியமானவை.
  • இந்தியத் தரப்பிலிருந்து நாம் பேசிவரும் விஷயங்கள் எல்லாமே இந்திய நலன்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதோடு, அதை அமெரிக்காவை ஏற்கச் செய்யும் நியாயங்களையும் கொண்டவை. அமெரிக்க உறவு காரணமாக வெளியுறவில் இந்தியா கொடுத்துக்கொண்டிருக்கும் விலைகள் சாதாரணமானவை அல்ல. ஈரான் மீதான அமெரிக்கப் பொருளாதாரத் தடையின் விளைவாக எண்ணெய் இறக்குமதியில் இந்தியா எதிர்கொண்டுவரும் சங்கடங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
  • ஆனால், வெளியுறவு என்பது பேச்சுவார்த்தைகளாலும் பேரங்களாலுமே கட்டப்படுகிறது. இந்தியா தன்னுடைய பேச்சுவார்த்தை உத்திகளை மாற்ற வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை(13-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories