TNPSC Thervupettagam

இந்திய ஊடகங்கள் எப்போது உலகத்தை ஆளப்போகின்றன?

February 25 , 2024 183 days 210 0
  • அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசி (vaccine) ஏராளமான உடல் பிரச்சினைகளை உண்டாக்கி கொண்டிருக்கும் போது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் மிகச் சிறந்த பாதுகாப்பை வழங்கியது. அது மட்டுமில்லாமல் தடுப்பூசி தோழமை (Vaccine Maitri) என்ற திட்டத்தின் மூலம் 150 நாடுகளுக்கு கோவிட் தடுப்பூசிகளை வழங்கினோம்.
  • இந்தியாவின் சாதனைகளையும், அதன் தரப்பு நியாயங்களையும் சொல்ல, இந்தியா மீதான நன்மதிப்பை உலகளவில் எடுத்துச் செல்ல, இந்திய ஊடகங்கள் தங்களின் செயல்பாடு மீதும், நம் நாட்டின் மீதும் நம்பிக்கை வைத்தும் உலகளவில் கால் பதிக்க வேண்டும்.
  • இந்தியா பல சிறந்த ஊடகவியலாளர்களை பெற்று இருப்பதோடு, அவர்களில் சிலர் ஊடக தொழில் முனைவர்களாக (media entrepreneurs) மாறி வெற்றி பெற்றிருக்கிறார்கள், மேலைநாட்டு ஊடகங்களின் வசதி வாய்ப்பு, ஏற்கெனவே நிலைகொண்டு விட்ட தன்மை ஆகியவை இந்திய ஊடகங்களுக்கு இல்லாவிடினும், இந்திய ஊடகங்கள் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்காமல், மேற்கத்திய நாடுகளின் ஊடகங்களோடு போட்டி போட முன்வர வேண்டும். பல இந்திய நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களாக மாறியதுபோல், இந்திய ஊடகங்களும் பன்னாட்டு ஊடகங்களாக மாற வேண்டும்.
  • இந்தியாவைப் பற்றிய வெளிநாட்டு ஊடகங்களின் ஒருதலைபட்சமான சித்தரிப்புகளை இந்திய ஊடகங்கள் கேள்வி கேட்கின்றதோ இல்லையோ, ‘Russia Today’ என்று முன்பு அழைக்கப்பட்டு வந்த ‘RT India’ ஊடகம் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறது.
  • இந்தியாவை இன்றளவும் 3-ம் உலக நாடு என்று சிறுமைப்படுத்தி வருவதோடு, இந்தியாவைப் பற்றிய மோசமான சித்திரத்தை வலிந்து உள்நோக்கத்துடன் திணித்து வருவதை தோலுரித்துக் காட்டுகிறது RT India ஊடகம். ஒரு அயல்நாட்டு ஊடகத்திற்கு இருக்கும் பொறுப்பு, நம் நாட்டு ஊடகங்களுக்கு இல்லையா என்பதே கேள்வி.
  • இவ்வளவு பெரிய ஊடக பரப்பைக் கொண்டிருக்கும் இந்திய ஊடகங்கள், ஆற்றலைஉணரா ஹனுமனாக இருந்து கொண்டிருக்கையில், நூறாண்டுகளுக்கு முன்பே கிடைத்த மூலதனம் மற்றும் வெகுகாலம் உலகளவில் கோலோச்சும் அனுகூலத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவைப் பற்றிய சித்திரத்தை தங்களது ஆசைப்படி நிலை நிறுத்தி வருகின்றன மேலைநாட்டு ஊடகங்கள்.
  • இந்த மேலைநாட்டு ஊடகங்களின் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல், இங்கே உள்ள சிலரும் BBC, Time, CNN, Al Jazeera, Telegraph UK சொல்லிவிட்டால் அதுதான் வேதவாக்கு என்று நம்புகிற நிலை இருக்கும் போது, உண்மைத்தன்மையைச் சொல்ல வேண்டிய பொறுப்பு இந்திய ஊடகங்களுக்கு இருக்கிறது.
  • இந்தியாவும், சீனாவும் தெற்குலகின் 2 பெரிய நாடுகளாக இருந்த போதிலும், இந்தியாவைப் போல பரந்துபட்ட ஊடகங்களோ அல்லது சுதந்திரமோ சீனாவில் இல்லை. இந்திய ஊடகங்கள்தான் இந்த விஷமத்தனத்தை எதிர்கொள்ள வேண்டும்.
  • இன்றைய கடுமையான பணிச் சுமை சூழலில், உலகத்தின் எந்த நாட்டவருக்கும் உலகத்தின் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தையும், குறிப்பாக தெற்குலகின் மிக வலிமையான நாடான இந்தியாவின் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் அறிந்து கொள்ள கிடைக்கும் நேரம் மிகக் குறைவாகவே இருக்கும்.
  • இது வரையான கால கட்டத்தில் இந்தியாவின் வறுமை, பிணி, கல்வியறிவின்மை மற்றும் தொழில்நுட்பத்தில் பின்தங்கிய நிலை பற்றிதான் மேற்குலகின் ஊடகங்கள் பரப்புரை செய்து வந்ததோடு, இந்த அம்சங்களில் பெரும் மாற்றம் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்ததை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், தொடர்ந்து இந்தியாவைப் பற்றிய பழைய பிம்பத்தையே அவதூறுகள் மூலம் மேல்நாட்டு ஊடகங்கள் நிலைநிறுத்துவதை எதிர்கொள்வது இந்திய ஊடகங்களின் பொறுப்பும் தேசிய கடமையுமாகும்.

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories