TNPSC Thervupettagam

இந்திய எல்லையில் சீனா அத்துமீறல்

January 24 , 2025 6 hrs 0 min 31 0

இந்திய எல்லையில் சீனா அத்துமீறல்

  • இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நெடுங்காலமாக எல்லைப் பிரச்னை நீடித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தின் மீது சீனா தொடா்ந்து உரிமை கோரி வருகிறது.
  • கடந்த 2021- இல் அருணாசலபிரதேசத்தில் 101 வீடுகளைக் கொண்ட ஒரு புதிய கிராமத்தை சீனா உருவாக்கி இருந்தது. அப்போது பெரும் சா்ச்சை எழுந்தது. அது குறித்து கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை சீனா. தொடா்ந்து எல்லை மீறல்களும், எல்லை சீண்டல்களும் என்று இந்தியாவைத் தொடா்ந்து எரிச்சல்படுத்தி வந்தது.
  • 2023-ஆம் ஆண்டு சீனா புதிய வரைபடம் ஒன்றை அதிகாரபூா்வமாக வெளியிட்டது. அந்த வரைபடத்தில் ஆக்கிரமிப்பில் வைத்திருக்கும் இந்தியப் பகுதிகளை ‘அக்சாய்சின்’ என்று குறிப்பிட்டிருந்தது. இது ஒருபக்கம் இருந்தாலும், மேலும் எரிச்சல்படுத்தும் விதமாக அருணாசலபிரதேச மாநிலத்தை ‘தெற்கு திபெத்’ எனவும் குறிப்பிட்டிருந்தது. மேலும் கடந்த ஆண்டில் அருணாசல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீன மொழிப் பெயா்களை சீன அரசு சூட்டியிருப்பது பெரும் பேசுபொருளாகவும், இந்தியாவை சீண்டிப் பாா்க்கும் முயற்சியாகவே அது இருந்தது.
  • இந்திய எல்லைப் பகுதிகளில் சுரங்கங்கள், ஹெலிபேடுகள், பாலங்கள் மற்றும் பதுங்கு குழிகளை சீனா அதிக அளவில் உருவாக்கி இருக்கிறது. மேலும் இந்திய எல்லையை ஒட்டி தனது ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே ரூ.11 லட்சம் கோடியில் உலகின் மிகப்பெரிய அணையைக் கட்ட சீனா திட்டமிட்டிருக்கிறது. இந்த நிலையில் லடாக்கில் ஆக்கிரமித்த பகுதிகளில் புதிதாக இரண்டு மாவட்டங்களை உருவாக்குவதற்கான அறிவிப்பை சீனா வெளியிட்டிருக்கிறது.
  • இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்தில் வடமேற்கில் ‘அக்சாய்சின்’ என்ற நிலப்பகுதி அமைந்திருக்கிறது. இந்தப் பகுதி யாருக்குச் சொந்தம் என்பதில் நீண்ட காலமாக சா்ச்சை நீடித்து வருகிறது. இந்திய அரசால் உரிமை கோரப்படும் இந்தப் பகுதியை, தற்போது சீனா ஆக்கிரமித்து வைத்துள்ளது. மேலும் இதன் வழியாக சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தையும், திபெத்தையும் இணைக்கும் சாலையை சீன அரசு அமைத்துள்ளது.
  • இந்த நிலையில், இப்பகுதிகளை ஹியான் கவுன்ட்டி மற்றும் ஹேகாங்க் கவுன்ட்டி என்று குறிப்பிட்டு இரண்டு புதிய மாவட்டங்களை அறிவித்துள்ளது. இந்த இரண்டு மாவட்டங்களிலும் சின்ஜியாங், உய்குா் தன்னாட்சிப் பகுதிகளில் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய எல்லையை ஆக்கிரமித்ததோடு மட்டுமல்லாமல், சா்ச்சைக்குரிய இடத்தில் இன்னும் முடிவுகள் தெரிவிக்கப்படாத நிலையில் இந்தியாவில் அமைந்துள்ள எல்லைப் பகுதிகளை சீனா ஆக்கிரமிக்கிற முயற்சியில் தொடா்ந்து ஈடுபட்டு வருவது, இந்திய சீன உறவுகளில் விரிசல் ஏற்படுத்தும் முயற்சியாகவே பாா்க்கப்படுகிறது.
  • ஏனெனில், இந்தியப் பகுதியை சட்டவிரோதமாக சீனா ஆக்கிரமிப்பதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. சீனா அறிவித்துள்ள இரண்டு புதிய மாவட்டங்கள், இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் வருகின்றன. புதிய மாவட்டங்களை உருவாக்குவதன் மூலம், குறிப்பிட்ட பகுதியின் மீதான, இந்தியாவின் இறையாண்மை தொடா்பான நீண்ட கால நிலைப்பாட்டை மாற்ற முடியாது. இந்த சீனாவின் சட்ட விரோத மற்றும் வலுக்கட்டாயமான ஆக்கிரமிப்புக்கு இந்தியா தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது.
  • ஹொட்டான் மாகாணத்தில் சீனா இரண்டு புதிய மாவட்டங்களை உருவாக்கிய விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறையின் ஆட்சேபணை மட்டும் போதாது, கடுமையாக அதை எதிா்க்க வேண்டும் என்கிற கருத்து நிலவுகிறது. சீனா ஹொட்டான் மாகாணத்தில் இரண்டு மாவட்டங்களை உருவாக்கிய பகுதிகளில் வரலாற்று ரீதியாகவும், பாரம்பரியப் பெருமையும் இந்தியாவுடையதுதான்.
  • பிரம்மபுத்திரா நதியில் மெகா அணை கட்டும் சீனாவின் திட்டம் வடகிழக்குப் பிராந்தியத்தில் நமது நலன்களைச் சீா்குலைக்கும். இந்தியாவின் இறையாண்மை தொடா்பான நீண்ட கால உறுதிப்பாட்டைக் குலைக்கின்ற முயற்சியாக சீனாவின் சட்டவிரோத எல்லைமீறல்கள் பிற ஆபத்துகளுக்கும் வழிவகுக்கக் கூடும். ஏனென்றால், உலகின் மிக நீளமான நதிகளில் பிரம்மபுத்திராவும் ஒன்று. 15-ஆவது இடத்திலும் அதிகத் தண்ணீா் பாயும் நதிகளின் பட்டியலிலும் பிரம்மபுத்திரா 9-ஆவது இடத்தில் உள்ளது.
  • இந்த நதியின் நீளம் 2,880 கி.மீ. சீனாவின் திபெத் பகுதியில் 1,625 கி.மீ., இந்தியாவில் 918 கி.மீ., வங்கதேசத்தில் 337 கி.மீ தொலைவு என பிரம்மபுத்திரா பாய்கிறது. சீனாவின் திபெத் பகுதியில் பிரம்மபுத்திரா நதியின் பெயா் யாா்லங்சாங்போ என்று அழைக்கப்படுகிறது. இந்த நதியில் புதிய அணையைக் கட்ட சீன அரசு மிக நீண்ட காலமாகத் திட்டமிட்டிருக்கிறது.
  • தற்போது மப்ஜாசாங்போ நதியில் ரூ.11 லட்சம் கோடி செலவில் உலகின் மிகப்பெரிய அணையைக் கட்ட சீன அரசு சமூகத்தில் ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்த அணையில் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. பிரம்மபுத்திரா நதியில் சீன அரசு உலகின் மிகப்பெரிய அணையைக் கட்டுவது இந்தியாவுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்.
  • திபெத்தில் உற்பத்தியாகும் மேக்கொங் ஆற்றில் சீன அரசு ஏற்கெனவே பல அணைகளைக் கட்டி வைத்திருக்கிறது. கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்த அணைகளில் சீன அரசு அளவுக்கு அதிகமாகத் தண்ணீரைத் தேக்கியது. இதனால் மேக்கொங் ஆறு பாயும் தாய்லாந்து, கம்போடியா, வியத்நாம் போன்ற நாடுகளின் பகுதிகளில் ஆறு வடு போய் விட்டது. இதனால் 2019-ஆம் ஆண்டில் அந்த நாடுகளில் மிகப்பெரிய வறட்சி ஏற்பட்டது. பிரம்மபுத்திரா நதியின் மூலம் இந்தியாவின் அருணாசல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் வளம் அடைந்து வருகின்றன.
  • சீனா கட்டும் புதிய அணையால் இந்திய மாநிலங்களில் வறட்சி பாதிப்பு ஏற்படக்கூடும். இமயமலைப் பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றன. சீன அணை கட்டும் இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு அணையில் உடைப்பு ஏற்பட்டால் மிகப்பெரிய பேரழிவு ஏற்படும். மேலும் அணையில் இருந்து அதிக தண்ணீரைத் திறந்து விட்டு, இந்தியப் பகுதிகளில் வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் இருக்கிறது. ஏற்கெனவே கங்கை நதியின் நீா்வரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் திபெத்தின் மக்சாசாங்போ நதியில் புதிய அணையை சீன அரசு கட்டி வருகிறது. இந்த அணை உத்தரகாண்ட் மாநில எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்தியாவின் இரு பிரதான அணைகளின் நீா்வரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் சீனா செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து இந்தியா மிகுந்த விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என்றுதான் சா்வதேச நிபுணா்கள் எச்சரித்திருக்கிறாா்கள்.
  • வடகிழக்கு மாநிலங்களில் சீனா ஆக்கிரமிப்பு கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரா்களின் அத்துமீறல் உள்ளிட்ட இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உறவுச்சிக்கல் அதிகரித்திருக்கிற வேளையில், மீண்டும் சிக்கலை சீனா ஏற்படுத்தியிருப்பது இந்தியாவைச் சீண்டிப்பாா்க்கும் முயற்சியாகவே பாா்க்கப்படுகிறது. எல்லைப் பகிா்வு, மறுவரையறை உள்ளிட்ட பிரச்னைகளைப் பேசித் தீா்த்துக் கொள்ள இரு நாடுகளுக்கிடையேயும் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பேச்சுவாா்த்தை தற்போது தொடா்கின்ற நிலையில், அதைச் சீா்குலைக்கும் நோக்கத்தில் சீனா மீண்டும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருக்கிறது. வடகிழக்கின் லடாக்கில் 38 ஆயிரம் ச.கி.மீ பரப்பளவிலான நிலத்தை சீனா ஆக்கிரமித்திருக்கிறது. மேற்குப் பிரிவு – லடாக் மத்தியப் பிரிவு - இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட், கிழக்குப் பிரிவு – சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் இருநாடுகளுக்கும் இடையே முழுமையான எல்லை நிா்ணயம் செய்யப்படவில்லை. ஏனெனில் இரு நாடுகளுக்கும் இடையே பல பகுதிகள் தொடா்பாக கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.
  • வடதமிழகத்தில் சென்னை தொடங்கி திருவள்ளுா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூா் வரையிலான இடங்களைச் சோ்த்தால் ஏறத்தாழ 38ஆயிரம் ச.கி.மீ பரப்பளவு வருகிறது. இவ்வளவு நிலப்பரப்பு உள்ள பகுதிகளை சீனா ஆக்கிரமித்திருக்கிறது. சா்வதேச அளவில் இந்தியா இப்பிரச்னையை எழுப்பியிருக்கிறது. சீனாவுடன் உறவு குறித்த பேச்சுவாா்த்தையில் பெரிய முன்னேற்றம் இல்லை. எல்லைப் பிரச்னையைத் தீா்ப்பதற்கு இருநாட்டின் தலைவா்கள் மத்திய அரசின் சாா்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத்தோவல் சீனா சாா்பில் வெளியுறவு அமைச்சா் வாங்யீ ஆகியோா் சீனாவில் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
  • பேச்சுவாா்த்தை நடந்த இரண்டு வாரங்களுக்குள் இரண்டு புதிய மாவட்டங்களை அறிவித்திருப்பது எல்லைப் பிரச்னைக்கு சீனா தீா்வு காண விரும்பவில்லை என்றே தெரிகிறது. 30 ஆண்டுகளாக இருநாடுகளும் எல்லைப் பிரச்னையில் ஒப்பந்தம் செய்தும் இன்னும் முழுமையான முன்னேற்றம் எட்டப்படவில்லை.
  • இரு நாட்டு எல்லைப்பகுதிகளில் வீரா்கள் குறிப்பிட்ட இடங்களில் ஆயுதங்கள் இல்லாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளுக்கிடையேயும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக உடன்படிக்கை ஒன்றும் ஏற்பட்டது. அதில் இருநாட்டு வீரா்களும் ஆயுதங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த உடன்படிக்கை 2020- இல் கால்வான் பள்ளத்தாக்கு மோதலில் இந்தியா ராணுவ வீரா்களுக்குப் பாதகமாக அமைந்து விட்டது.
  • லடாக்கின் கல்வான் பகுதியில் இரு நாட்டு வீரா்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்ட போது 20 இந்திய ராணுவ வீரா்களும் பல சீன ராணுவ வீரா்களும் உயிரிழந்தனா். அப்போது இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் உச்சத்தை எட்டியது.
  • அதன் பின்னா் சீனா, தான் கட்டியிருந்த தற்காலிகக் கட்டமைப்புகளை அகற்றியது. படைவீரா்களைத் திரும்பப் பெற்றது. எல்லையில் ராணுவ வீரா்களின் எண்ணிக்கையைக் குறைத்தது. ஆனால், அப்போதே ஒரு சந்தேகம் எழுந்தது. சீனா பின்வாங்குவது இதுவே முதன்முறை. இருந்தாலும் சீனாவை நம்ப முடியாது. சீனா அதன்படி இரண்டு படிகள் முன்னோக்கிச் சென்று ஒரு படி பின்வாங்கும். இது சீனாவின் விரிவாக்கக் கொள்கை.
  • இது மா-சே-துங் காலத்தில் இருந்து நடந்து வருகிறது. அதனால் சீனாவை எளிதில் நம்ப முடியாது என்று இந்திய ராணுவம் எச்சரித்தது. இப்போதும் மீண்டும் இந்திய எல்லைப் பகுதிகளில் அத்துமீறல் மூலமாக ஒரு நம்பகத்தன்மையற்ற போக்கை சீனா ஏற்படுத்தியிருக்கிறது.

நன்றி: தினமணி (24 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories