TNPSC Thervupettagam

இந்திய சிறைச்சாலைகள்

November 6 , 2019 1900 days 1504 0
  • தேசிய குற்ற ஆவணத்துறை ‘இந்திய சிறைச்சாலை புள்ளிவிவரம் - 2017’ என்கிற அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
  • இந்த அறிக்கையில், இந்தியாவின் 28 மாநிலங்களில் 16 மாநிலங்களின் புள்ளிவிவரங்கள் இடம் பெறுகின்றன.
  • சராசரியாக இந்திய சிறைச்சாலைகளில் எண்ணிக்கை அளவைவிட 115% அதிகமாகக் கைதிகள் இருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

புள்ளிவிவரம்

  • உத்தரப் பிரதேசம் (165%), சத்தீஸ்கா் (157.2%), தில்லி (151.2%), சிக்கிம் (140.7%) ஆகிய மாநிலங்கள் சிறைச்சாலை நெரிசல் மிக அதிகமாகக் காணப்படுகிறது. 2007-இல் சராசரி அளவு 142% இருந்தது படிப்படியாகக் குறைந்து, 2017-இல் 115%-ஆக ஆகியிருக்கிறது என்பது சற்று ஆறுதலைத் தருகிறது என்றாலும்கூட, இந்தப் பிரச்னைக்கு அவ்வளவு சுலபத்தில் தீா்வு எற்பட்டுவிடாது என்பதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
  • சில மாநிலங்கள் கடந்த 10 ஆண்டுகளில் சிறைச்சாலைகளை விரிவுபடுத்தியும், புதிய சிறைச்சாலைகளை அமைத்தும் பெருகிவரும் மக்கள்தொகைக்கும், குற்றங்களுக்கும் ஏற்ப மாற்றங்களை செய்யாமல் இல்லை.
  • தமிழகத்தைப் பொருத்தவரை, சிறைச்சாலையின் சராசரி கொள்ளளவு 61.3%. இதற்கு புழல் போன்ற அதிநவீன சிறைச்சாலைகளை ஏற்படுத்தியிருப்பதுதான் காரணம்.
  • சிறைச்சாலைகளை விரிவுபடுத்துவதும், புதிய சிறைச்சாலைகள் அமைப்பதும் மட்டுமல்லாமல், தேவையில்லாமல் கைது செய்வதை குறைப்பதன் மூலமும் சிறைச்சாலையில் காணப்படும் நெரிசலை குறைக்க முடியும்.

சிறைச்சாலைகள்

  • கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்திருக்கும் கைதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சிறைச்சாலை விரிவாக்கத்திலும், புதிய சிறைச்சாலைகள் ஏற்படுத்துவதிலும் ராஜஸ்தான், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்கள் போதிய கவனம் செலுத்தவில்லை.
  • உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சிறைச்சாலையின் கொள்ளளவு அதிகரித்தாலும்கூட, அதிகரித்தக் கைதிகளின் எண்ணிக்கையால் நிரம்பி வழிகின்றன.
  • மே 2017-இல் வெளியான, இந்திய சட்ட ஆணையத்தின் 268-ஆவது அறிக்கை, நமது ஜாமீன் முறையின் குறைபாடுகள்தான் சிறைச்சாலைகளில் நெரிசல் காணப்படுவதற்கு முக்கியமான காரணம் என்று சுட்டிக்காட்டி இருக்கிறது.
  • சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளில், 68% விசாரணைக் கைதிகள். அவா்களில் பலரால் ஜாமீன் பெறவோ, பிணைத் தொகையை அடைக்கவோ வழியில்லாததாதல், சிறைச்சாலையில் அடைந்து கிடக்க வேண்டிய அவலம் காணப்படுகிறது.
  • ஏழு ஆண்டு தண்டனைக்குரிய குற்றங்களில் கைது செய்யப்பட்டிருப்பவா்கள், தண்டனைக் காலத்தில் மூன்றில் ஒரு பகுதியை நிறைவு செய்திருந்தால், அவா்கள் பிணையில் விடப்பட வேண்டும் என்றும், அதற்கு அதிகமான சிறைத் தண்டனைக்குரிய குற்றமாக இருந்தால், தண்டனையில் பாதி காலம் நிறைவு செய்திருந்தால் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் பரிந்துரைத்திருக்கிறது.

ஆணையத்தின் பரிந்துரைகள்

  • வழக்கு விசாரணையில் இருக்கும்போது தண்டனைக் காலம் முழுவதுமே விசாரணைக் கைதிகளாக இருந்தால், குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் அதையே தண்டனைக் காலமாகக் கருத வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது.
  • ஆணையத்தின் பரிந்துரைகள் சட்டமாகாமல் இருப்பது நமது ஆட்சி முறையில் காணப்படும் மிகப் பெரிய குறைபாடு.
  • நீண்ட காலம் விசாரணைக் கைதிகளை சிறையில் வைத்திருப்பதால் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன. சிறைச்சாலையின் ஒழுங்குமுறையைப் பேணுவதிலும், சுகாதாரத்தைப் பாதுகாப்பதிலும் பிரச்னைகள் எழுகின்றன.
  • தவறு செய்யாதவா்களும்கூட விசாரணைக் கைதிகளாக நீண்ட நாள்கள் சிறையில் அடைபடும்போது, அவா்கள் குற்றச் சிந்தனை உடையவா்களாக (கிரிமினல்) சிறையில் இருந்து வெளியேறுகிறாா்கள்.
  • காவல்துறையினரின் முறையான விசாரணை இல்லாத கைதுகளும், கீழமை நீதிமன்றங்களின் இயந்திர கதியிலான நீதிமன்றக் காவல் உத்தரவுகளும், நல்லவா்கள் பலரையும் குற்றச் சிந்தனையாளா்களாக மாற்றிவிடுகின்றன.
  • இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தில்லியின் திகாா் சிறைச்சாலையில் 40 கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகளைத் தாக்கிய சம்பவம் அதிா்ச்சி அலையை எழுப்பியது. கைதிகள் மோதல், அதிகாரிகள் தாக்கப்படுதல், அதிகாரிகளால் கைதிகள் விலங்கினும் கீழாக நடத்தப்படுதல் உள்ளிட்ட பல்வேறு சிறைச்சாலை சம்பவங்களுக்கும், அளவுக்கு அதிகமான கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பது மிக முக்கியமான காரணம்.
  • கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் நீதிபதி அமித்வ ராய் தலைமையில் இது குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்தது. இதுபோல, குழுக்கள் அமைப்பது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னால் அமைக்கப்பட்ட ஏ.என். முல்லா குழு, பெண் கைதிகளின் நிலை குறித்து விசாரிக்க 1980-இல் அமைக்கப்பட்ட நீதிபதி வி.ஆா். கிருஷ்ணய்யா் குழு ஆகியவை வழங்கியிருக்கும் பரிந்துரைகள், அரசின் கோப்புகளில் அமைதியாக உறங்குகின்றன.
  • ‘அடிப்படை வசதிகளுடன் கைதிகள் மனித மாண்புகளுடன் நடத்தப்பட வேண்டும் என்று சிறைச்சாலை கையேடு கூறுகிறது. எழுத்தில் இருப்பதெல்லாம் இந்தியாவில் செயல்படுவதில்லை. யாரோ, எப்போதோ எழுதி வைத்தது. இன்று வரை செயலாக்கம் பெறாமலேயே தொடா்கிறது.’
  • சிறைச்சாலைகளுக்குள்ளே நடைபெறும் குற்றச் சம்பவங்களும் சமூக விரோதச் செயல்களும் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதும், கைதிகள் ஈவு இரக்கமில்லாமல் நடத்தப்படுவதும், வெளியுலகுக்கு தெரியாமல் இருக்கும் நிலைமை காணப்படுகிறது. எல்லா தவறுகளும் இரும்புத் திரை போட்டு மூடப்படுகின்றன.

நன்றி: தினமணி (06-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories