TNPSC Thervupettagam

இந்திய நிலைப்பாட்டில் வரவேற்கத்தக்க மாற்றம்

December 21 , 2023 368 days 279 0
  • காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்கிற உலகளாவிய குரலில் இந்தியாவும் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது. அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நிகழ்த்திய தாக்குதலுக்கு எதிர்வினையாக காசா மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. இரண்டு மாதங்களாகத் தொடரும் இந்தத் தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் ஐ.நா. பொது அவையின் புதிய தீர்மானத்துக்கு 152 நாடுகளுடன் இந்தியாவும் ஆதரவளித்துள்ளது. ஐந்துக்கு நான்கு பங்கு பெரும்பான்மை ஆதரவுடன் டிசம்பர் 12 அன்று நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானம், காசாவில் உடனடிப் போர்நிறுத்தம், சர்வதேச மனிதநேயச் சட்டங்கள் பின்பற்றப்படுதல், பணயக் கைதிகளை நிபந்தனைகளின்றி விடுவித்தல், மனிதநேயச் சேவைகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளது.
  • முன்னதாக, அக்டோபர் 27 அன்று ஐ.நா. பொது அவை நிறைவேற்றிய போர்நிறுத்தத் தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்க மறுத்தது. அப்போது 8, பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருந்தனர். ஆனால், அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நிகழ்த்திய தாக்குதலை அக்டோபர் 27 தீர்மானம் வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை என்பதால் தீவிரவாதத்தைத் துளியும் சகித்துக்கொள்ளக் கூடாது என்னும் இந்திய அரசின் கொள்கையின் அடிப்படையில், அந்தத் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளிக்கவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. அதேவேளையில், டிசம்பர் 12 தீர்மானத்திலும் தீவிரவாதத் தாக்குதல் குறித்து நேரடியாக எதுவும் சொல்லப்படவில்லை என்றாலும் இந்தியா இந்த முறை தீர்மானத்துக்கு ஆதரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இந்த நிலைப்பாடு மாற்றத்துக்கு இந்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை. ஆனால், காசாவில் 90 பத்திரிகையாளர்கள் உள்பட 18,000 பேர் உயிரிழந்துள்ளனர், காசா மக்கள் 80%க்கு மேற்பட்டோர் வீடிழந்துள்ளனர். இஸ்ரேலின் நீண்ட காலக் கூட்டாளியான அமெரிக்கா, காசா மீது இஸ்ரேல் நிகழ்த்திய 29,000 வான்வழித் தாக்குதல்களில் சரிபாதி கண்மூடித்தனமாக வீசப்பட்ட ஏவுகணைகள் என்று கூறியுள்ளது. ஹமாஸ் சிறைப்பிடித்துள்ள இஸ்ரேலியர்களை மீட்டு அந்த அமைப்பைச் செயலிழக்கச் செய்வதற்காக காசா மீதான தாக்குதலைத் தொடங்கியிருப்பதாக இஸ்ரேல் கூறியது. ஆனால், இப்போது அதைத் தாண்டி காசாவை முற்றிலும் முடக்கிப்போட்டிருப்பதோடு, அங்கு தனது ஆக்கிரமிப்புகளையும் அதிகரித்துள்ளது.
  • இன்றுவரை நூற்றுக்கு மேற்பட்ட இஸ்ரேலியர்கள் ஹமாஸின் பணயக் கைதிகளாகத்தான் உள்ளனர். இந்தப் பின்னணியில் உலக நாடுகளின் பரிவு காசாவை நோக்கி நகர்ந்துவிட்டது. இவற்றை முன்வைத்து பாலஸ்தீனமும் வளைகுடா நாடுகளும் இந்த விவகாரத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கும்பட்சத்தில், இந்தியாவால் அதை நிராகரித்திருக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. டிசம்பர் 12 போர்நிறுத்தத் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளித்திருப்பதை வைத்து, ஹமாஸ்-இஸ்ரேல்-காசாவை உள்ளடக்கிய ஒட்டுமொத்த விவகாரத்தில் இந்தியா தனது முந்தைய நிலைப்பாட்டை முற்றிலும் மாற்றிக்கொண்டுவிட்டதாகக் கூறிவிட முடியாது. அதே நேரம், ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியபோது இஸ்ரேலுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த இந்திய அரசு, காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் கைவிடுவதில் காத்திரமான பங்களிப்பை ஆற்ற முடியும். இஸ்ரேலுடனான தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளில் போர்நிறுத்தத்தை வலியுறுத்துவது உள்ளிட்ட அனைத்து வழிகளையும் இந்தியா கைக்கொள்ள வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (21 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories