TNPSC Thervupettagam

இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்ஆர்ஐ அனுப்பும் பணம்!

February 24 , 2025 2 days 24 0

இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்ஆர்ஐ அனுப்பும் பணம்!

  • வேலை நிமித்தமாக தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் (என்ஆர்ஐ), தாங்கள் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்கு அனுப்புவதை ரெமிட்டன்ஸ் என சர்வதேச நிதியம் (International Monetary Fund வரையறை செய்துள்ளது.
  • கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து உலக அளவில் புலம்பெயர்ந்தவர்களால் அனுப்பப்படும் பணத்தை பெறும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. உலக வங்கியின் சமீபத்திய ஆய்வறிக்கை, இந்திய பொருளாதாரத்தில் என்ஆர்ஐ அனுப்பும் பணத்தின் பங்களிப்பை தெளிவாக எடுத்துக்காட்டி உள்ளது.

இந்திய ஜிடிபியில் 3.4%

  • உலக வங்கியின் தரவுகளின்படி, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் 2024-ம் ஆண்டில் ரூ.10.7 லட்சம் கோடியை (129 பில்லியன் டாலர்) தாயகத்துக்கு அனுப்பி உள்ளனர். இதன்மூலம் இந்தியா முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த தொகை இந்தியாவின் ஜிடிபியில் 3.4 சதவீத பங்கு வகிக்கிறது. மேலும் உலகம் முழுவதும் வசிக்கும் வெளிநாட்டினர் தங்கள் தாயகத்துக்கு அனுப்பிய ஒட்டுமொத்த தொகையில் 14.3% இந்தியாவுக்கு வந்துள்ளது.
  • கடந்த 2020-ம் ஆண்டு கரோனா பெருந்தொற்று நெருக்கடியால் 83 பில்லியன் டாலரை மட்டுமே பெற்ற இந்தியா, 2022-ம் ஆண்டில் 100 பில்லியன் டாலர்களை (ரூ.8.6 லட்சம் கோடி) பெற்று சாதனை படைத்தது. 2023-ம் ஆண்டில் ரூ.8.95 லட்சம் கோடியை பெற்றது. இதுதவிர சட்டபூர்வமற்ற வழிகளின் மூலமாக அனுப்பப்படும் பணத்தையும் சேர்த்து கணக்கிட்டால் இந்த தொகை மேலும் அதிகமாகவே இருக்கும் என உலக வங்கி கூறுகிறது.
  • அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அதிக அளவில் தாயகத்துக்கு பணம் அனுப்புகின்றனர். உலக வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின்படி இந்தியாவுக்கு அடுத்தபடியாக மெக்சிகோ (68 பில்லியன் டாலர்), சீனா (48 பில்லியன்), பிலிப்பைன்ஸ் (40 பில்லியன்), பாகிஸ்தான் (33 பில்லியன்) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
  • இந்தியா பெற்றுள்ள 129 பில்லியன் டாலர்கள் என்பது பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரண்டு நாடுகளின் ஒரு ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்புக்கு சமமானதாகும். இரண்டாம் இடத்தில் உள்ள மெக்சிகோ பெறும் தொகையைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்காகும்.
  • கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் இதுவரை இந்தியா பெற்றுள்ள அந்நிய நேரடி முதலீடு 62 பில்லியன் டாலர் மட்டுமே. ஆனால், கடந்த பத்து வருடங்களில் புலம்பெயர்ந்தவர்கள் இந்தியாவுக்கு அனுப்பும் சேமிப்பு பணம் 57% வளர்ச்சி அடைந்துள்ளது. 2014 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு ட்ரில்லியன் டாலர்களை இந்தியா பெற்றுள்ளது. மேலும் கடந்த வருடத்தில் பாதுகாப்பு துறைக்காக மேற்கொள்ளப்பட்ட பட்ஜெட் செலவைவிட 55 பில்லியன் டாலர்கள் அதிகமாக வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகத்துக்கு அனுப்பி உள்ளனர்.

உலக அளவில்..

  • கடந்த பத்து வருடங்களில் உலக அளவில் அனுப்பப்படும் பணம் உயர்ந்து வரும் நிலையில், உலக அளவில் மேற்கொள்ளப்படும் அந்நிய நேரடி முதலீட்டின் அளவு 41% ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாயகத்துக்கு அனுப்பும் பணம் பல நாடுகளின் நிதி நிலைமையை வலுப்படுத்தும் உயிர் நாடியாக விளங்குகின்றன. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கி போன்ற பன்னாட்டு அமைப்புகள் மூலம் பெறப்படும் அதிகாரப்பூர்வ வளர்ச்சி நிதி உதவியைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக புலம்பெயர்ந்தவர்களின் சேமிப்பு பணம் இந்த நாடுகளுக்கு கிடைத்து வருகிறது.
  • குறைந்த வருமானம் உள்ள நாடுகளின் ஜிடிபி-யில் புலம்பெயர்ந்தவர்கள் அனுப்பும் பணத்தின் பங்கு அதிகமாக உள்ளது. தஜிகிஸ்தான் ஜிடிபியில் 45%, லெபனானில் 27%, நிகரகுவாவில் 27% ஆக உள்ளது. இது அந்நாடுகளின் நிதி பற்றாக்குறையை சமாளிக்க பெரிதும் உதவியாக உள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உடைய நாடுகள் 2024-ம் ஆண்டில் 685 மில்லியன் டாலர்களை பெற்றுள்ளதாகவும் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் பெற்ற பணம் 11.8% வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் புள்ளி விவரம் கூறுகிறது.
  • 2010-ம் ஆண்டில் 10%-க்கும் அதிகமாக பெற்ற சீனா, 2024-ம் ஆண்டில் 5.3% மட்டுமே பெற்றுள்ளது சீனாவின் துரிதமான பொருளாதார வளர்ச்சியும் வயதானவர்களை அதிகமாகக் கொண்ட மக்கள் தொகையின் காரணமாகவும் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
  • பொருளாதார கூட்டுறவு வளர்ச்சி அமைப்பின் உறுப்பு நாடுகளில் உருவாகியுள்ள அதிகப்படியான வேலைவாய்ப்புகள், குறிப்பாக அமெரிக்காவில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் கரோனா பெருந்தொற்று காலலாக் டவுனுக்கு முந்தைய காலகட்ட அளவைவிட 11% அதிகரித்துள்ளது.
  • இதன் காரணமாக மெக்சிகோ மற்றும் கவுதமாலா ஆகிய நாடுகளின் வழியாக வரக்கூடிய ஈக்வடார், கியூபா, சீனா, இந்தியா, வெனிசுலா, நிகரகுவா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை கூடுவதால் அதிக அளவில் இந்நாடுகளுக்கு பணம் கிடைக்கிறது என அமெரிக்காவின் சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் கரோனா பாதிப்புக்குப் பிறகு மீண்டு வரும் உலகப் பொருளாதார சூழல்கள் குறிப்பாக வளைகுடா நாடுகளின் பொருளாதார மீட்சி ஆகியவற்றின் காரணமாக வெளிநாட்டவர்கள் தாயகத்துக்கு அனுப்பும் பணம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

வளைகுடா நாடுகளுக்கு..

  • 1970-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட கச்சா எண்ணெய்விலை உயர்வின் காரணமாக வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளில் உள்கட்டமைப் புத் துறைகளிலும் வாணிபத் துறையிலும் பொருளாதார எழுச்சி ஏற்பட்டது. இதன் விளைவாக இந்தியாவிலிருந்து திறன் சாராத தொழிலாளர்கள் உடல் உழைப்பு சார்ந்த வேலைகளில் சேர்வதற்கு அந்த நாடுகளை நோக்கி அதிக அளவில் சென்றனர். இதன் பின்பு ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியின் காரணமாக தொழில்நுட்ப சேவைகளில் பணியாற்றுவதற்காக படித்த திறன்மிக்க தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்தனர்.
  • உலக அளவில் புலம்பெயர்ந்துள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 1.8 கோடி ஆகும். கணினி துறை சார்ந்த பொறியாளர்கள், சுகாதாரத் துறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் போன்ற உயர்திறன் ஊழியர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள் உள்ளிட்ட திறன் குறைந்த தொழிலாளர்கள் என பல்வேறு வகையைச் சேர்ந்தவர்கள் புலம்பெயர்ந்து வேலை செய்து வருகின்றனர். இதனால் அவர்கள் அனுப்பும் பணம் அதிகரித்து வருகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து செல்வோர் அதிகம்:

  • சமீப காலங்களில் புலம்பெயர்தலில் அடிப்படை மாற்றம் ஏற்பட்டு, வழக்கமாக செல்கின்ற வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளுக்கு பதிலாக மேம்பட்ட திறனுடன் அதிக வருமானம் கிடைக்கின்ற அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் இந்தியர்கள் புலம்பெயர்ந்து வருகின்றனர்.
  • அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பணிபுரியும் உயர்திறன் ஊழியர்கள் அனுப்பும் சேமிப்பு பணம் இந்தியா பெறும் மொத்த தொகையில் 36% ஆகும். வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளில் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் இருந்து 18%, சவுதி அரேபியா, குவைத், ஓமன், கத்தார் ஆகிய நாடுகளில் இருந்து மொத்தமாக 11% தொகையை இந்தியா பெறுகிறது. வளைகுடா நாடுகளில் திறன் குறைந்த இந்திய தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர்.

குடும்ப வருவாய் உயர்கிறது:

  • புலம்பெயர்ந்தவர்கள் அனுப்புகின்ற பணத்தைப் பெறுகின்ற அவர்களது குடும்பங்களின் வருமானம் உயர்ந்து, வாங்கும் சக்தி அதிகரிக்கிறது. அதிக வருமானம் பெறுகின்ற நிலையில் குடும்பங்களின் சேமிப்பு உயர்ந்து நாட்டில் முதலீட்டில் வளர்ச்சி ஏற்படுகிறது. மக்கள் தொகை வளர்ச்சியின் போக்கு, வருமான இடைவெளி மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றால் மக்கள் அதிக அளவில் புலம்பெயரவே செய்வார்கள்.
  • அதனால் வெளிநாட்டவர்கள் தாயகத்துக்கு பணம் அனுப்புவது தொடர்ந்து அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, இந்த தொகையை சரியான வழிகளில் கையாண்டு வறுமை ஒழிப்பு, சுகாதார மேம்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றை அடைய நாடுகள் முயல வேண்டும் என்று உலக வங்கி அறிவுறுத்த உள்ளது.
  • திறன்மிக்கவர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்று விடுவதால் உள்நாட்டில் மருத்துவம், கல்வி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தேவைப்படும் ஊழியர்கள் போதிய அளவில் கிடைப்பதில் சிக்கல்கள் இருந்தாலும் புலம்பெயர்ந்தவர்கள் அனுப்பும் சேமிப்பு பணம் அவர்களின் குடும்ப வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோடு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
  • இதனால் என்ஆர்ஐ அனுப்பும் பணத்தை ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு பயன் படுத்துவதற்கு உண்டான வழி வகைகளை அரசு ஆராய்வதோடு புலம்பெயர்ந்தவர்கள் வேலை செய்யும் நாடுகளில் சந்திக்கும் பிரச்சினைகளை களைவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories