TNPSC Thervupettagam

இந்திய ராணுவ தயாரிப்பில் ஒரு மைல்கல்!

November 4 , 2024 21 days 122 0

இந்திய ராணுவ தயாரிப்பில் ஒரு மைல்கல்!

  • இந்தியாவின் முதல் தனியார் ராணுவ விமான தயாரிப்பு ஆலை குஜராத்தின் வதோரா நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை, பிரதமர் மோடியும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸும் அண்மையில் தொடங்கி வைத்தனர்.
  • நாட்டின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மற்றும் விண் வெளித் துறைக்கு இது ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும் உள்ளூரில் தயாரிப்போம், உலகுக்காக தயாரிப்போம் திட்டத்தை இது வேகமாக முன்னெடுத்துச் செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
  • டாடா குழுமம் மற்றும் ஏர்பஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்டுள்ள சி-295 ராணுவ விமான தயாரிப்பு ஆலை உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியில் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (டிஏஎஸ்எல்) இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.
  • ராணுவம் கனரக போக்குவரத்துக்கான விமானங்களை விரும்பினாலும், இந்த சி-295 விமானம் என்பது நடுத்தர வகையை சார்ந்தது. இது, நெருக்கடி காலங்களில், துருப்புகளின் போக்குவரத்து, உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விநியோகம், கடல் ரோந்து பணிகளை திறமையாக செய்ய உதவும். செப்பனிப்படாத மற்றும் குறுகிய ஓடுபாதைகளில் இருந்துகூட செயல்படும் திறன் கொண்டது.
  • கடற்படையில் பயன்படுத்தப்படும் பழைய அவ்ரோ-748 விமானங்களுக்கு பதிலாக சுமார் ரூ.22 ஆயிரம் கோடியில் 56 நவீனரக சி-295 விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்ட நிலையில், 16 விமானங் கள் ஸ்பெயினில் இருந்து ஏர்பஸ் நிறுவனம் மூலம் நேரடியாக சப்ளை செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது. அதேநேரம். மீதமுள்ள 40 விமானங்களை இந்தியா வில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. வரும் 2026 செப்டம் பருக்குள் முதல் விமானத்தை தயாரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதே இலக்கு.
  • 2001-ம் ஆண்டு வரை தனியார் நிறுவனங்கள் பாதுகாப்பு தளவாட பொருட்களை உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. அதேநேரம், பிற நாடுகளின் தனியார் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை இந்தியாவுக்கு விற்கலாம் என்ற முரண்பாடான நிலை நிலவியது. அடல் பிஹாரி வாஜ்பாய் அரசு பாதுகாப்பு உற்பத்தியை உள்நாட்டு தனியார் நிறுவனங்களுக்கு திறந்துவிடும் முடிவை அறிவிக்கும்போது இந்த முரண்பாடு அப்போது சுட்டிக்காட்டப்பட்டது.
  • இந்த 20 ஆண்டு கால பயணத்தில் சி-295 ராணுவ விமான தயாரிப்பு ஆலை என்பது மிக முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், இது இந்தியாவின் திறனை எடுத்துக்காட்டுவதுடன், நாட்டின் சுயசார்பு திட்டத்தையும், பொருளாதாரத்தையும் வலுவுள்ளதாக்கும். ஏனெனில் இப்போதும் உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா உள்ளது. 2019-2023 மொத்த உலகளாவிய இறக்குமதியில் நமது பங்கு 9.8 சதவீதமாக உள்ளது. சி-295 விமான தயாரிப்பில் 18,000 பாகங்கள் தேவைப்படும் என்பதால் அது நாடு முழுவதும் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டவும்,உலகளவில் ஆர்டர்களைப் பெறவும், வேலைவாய்ப்புகளை கணிசமாக அதிகரிக்கவும் நல்ல வாய்ப்பாக அமையும்.
  • அடுத்த பத்தாண்டுகளில் 15 உயர் திறன் ஆயிரம் வேலைவாய்ப்புகளையும், கூடுதலாக 10 ஆயிரம் மறைமுக வேலைவாய்ப்புகளையும், 125-க்கும் மேற்பட்ட எம்எஸ்எம்இ ஒத்துழைப்பையும் இந்த திட்டம் உள்ளடக்கும் என்பதால் இந்தியாவின் விநியோக சங்கிலியை இது மேலும் வலுப்படுத்தி பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
  • டிஏஎஸ்எல் ஆலை ராணுவ போக்குவரத்து விமானங்களை தயாரிப்பது மட்டுமல்ல, அது நாட்டின் விமானப் போக்குவரத்து மற்றும் விண்வெளித் துறை பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாய்ச்சலை, மாற்றத்தை உருவாக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (04 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories