TNPSC Thervupettagam

இந்திய வனப் பகுதிகள்

January 8 , 2020 1835 days 1542 0
  • 2019-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் வனங்கள் குறித்த அறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டிருக்கிறது. 2017-ஆம் ஆண்டுக்கான அறிக்கையுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் வனப் பரப்பு 0.56% அதிகரித்திருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. நமது மொத்த நிலப் பரப்பில் 33% அளவுக்கு வனப் பரப்பை அதிகரிப்பது இலக்கு என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் அறிவித்திருக்கிறார்.
  • அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் காணப்படும் புள்ளிவிவரங்கள் விவாதத்துக்குரியவை. அடர்ந்திருக்கும் மரங்களின் பகுதிகளை செயற்கைக்கோள் படம் பிடித்துக் காட்டுவதன் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதில் அடர்த்தியான காடுகள்,  காடுகளுக்கும் மலைகளுக்கும் வெளியே புதிதாக நடப்பட்டிருக்கும் மரங்கள், தேயிலை, காபி, ரப்பர் தோட்டங்கள் ஆகியவை தனித்தனியாக பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுவதில்லை. அதனால், செயற்கைக்கோள் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு கையாண்டிருக்கும் முறை துல்லியமானது என்று ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆய்வறிக்கை 

  • இந்திய வனப் பகுதி ஆய்வறிக்கை, 10% அடர்த்திக்கும் அதிகமாகக் காணப்படும் ஒரு ஹெக்டேர் நிலப் பரப்பை "வனம்' என்று கருதுகிறது. அந்தப் பகுதியின் உரிமையாளர் குறித்தோ அதில் காணப்படும் மரங்கள் குறித்தோ ஆய்வு கவலைப்படுவதில்லை. அதனால் பனை மரங்களும், யூகலிப்டஸ் தோட்டங்களும், சவுக்குத் தோப்புகளும், "ப்ளாண்டேஷன்' என்று அழைக்கப்படும் ஏனைய பயிர்த் தோட்டங்களும் இந்திய வனப் பகுதி அறிக்கையில் காடுகளாகக் கருதப்படுகின்றன. இதைச் சரியான ஆய்வாக ஏற்றுக்கொள்ள முடியாது. 
  • அடர்ந்த காடுகளும் மலைப் பகுதிகளும் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உதவுவதுபோல ஆங்காங்கே புதிதாக உருவாக்கப்படும் தோப்புகளும், ப்ளாண்டேஷன்களும் எந்தவிதத்திலும் பங்களிப்பதில்லை. புதிதாக உருவாக்கப்படும் தோப்புகள் நூற்றாண்டு காலமாகக் காணப்படும் காடுகளுக்கு மாற்றாக இருக்க முடியாது. அடர்த்தியான காடுகள் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு மட்டுமல்லாமல் சூழலியல் சமநிலைக்கும் மிகமிக அவசியமாகின்றன. 
  • இந்திய வனப் பரப்பின் ஆய்வறிக்கையின்படி, காடுகளும் சோலைகளுமாக நாட்டில் 8 கோடி ஹெக்டேர் நிலப் பரப்பு காணப்படுகிறது. இயற்கை வனங்களுக்கும் செயற்கை வனங்களுக்கும் தனித்தனியாக ஆய்வு எதுவும் நடத்தப்படவில்லை. அதிகரித்திருக்கும் ப்ளாண்டேஷன்களும், மரம் நடும் இயக்கங்களின் மூலமாக உருவாக்கப்பட்டிருக்கும் சமூக நலக் காடுகளும்போல, இயற்கை வனங்கள் அதிகரித்திருக்கின்றனவா என்பதைக் கண்காணிப்பதில்தான் வனப் பாதுகாப்பின் வெற்றி அடங்கியிருக்கிறது. 
    வனப் பாதுகாப்புக்காக இந்தியாவில் பல்வேறு சட்டங்கள் பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்திலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

இந்தியச் சட்டங்கள்

  • வனங்கள், வனப் பகுதி இவை இரண்டு குறித்தும் தெளிவான விளக்கமோ, பாகுபாடோ இந்திய வனச் சட்டம் 1927 மற்றும் வனங்கள் பாதுகாப்புச் சட்டம் 1980 இரண்டிலுமே இல்லை. இதுகுறித்த சட்டபூர்வமான வேறுபாடு உச்சநீதிமன்றத்தின் 1996 தீர்ப்பின் அடிப்படையில் பின்பற்றப்படுகிறது. "வனம் என்பது அகராதிகளில் காணப்படும் பொருளின் அடிப்படையில் அணுகப்பட வேண்டும். இந்த விளக்கம் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் 2-ஆவது பிரிவின் அடிப்படையிலான எல்லா அங்கீகரிக்கப்பட்ட காடுகளுக்கும் பொருந்தும். அகராதி விளக்கத்தின்படியிலான காடுகளை மட்டுமல்லாமல் அரசு ஆவணங்களால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் தனியார் உடைமைகளுக்கும் வனப் பரப்பு என்கிற விளக்கம் பொருந்தும்' என்கிறது உச்சநீதிமன்றத் தீர்ப்பு. 
    அந்தத் தீர்ப்புக்குப் பிறகும் தெளிவான விளக்கம் இல்லாததால், தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி வசதிக்கேற்ப ஒரு பகுதியை வனப் பகுதி என்றும், வனப் பகுதி அல்லாதது என்றும் அரசு அறிவித்துக்கொள்ள முடிந்தது. இது ரப்பர், தேயிலை, காபி போன்ற ப்ளாண்டேஷன் உரிமையாளர்களைப் பாதித்தது.
  • எப்போது வேண்டுமானாலும் அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்தவொரு ப்ளாண்டேஷனையும் அரசின் உடைமையாக மாற்றிவிட முடியும் என்கிற நிலைமை இருந்தது. அதன் காரணமாக மத்திய அரசு சில புதிய விளக்கங்களை அளித்தது. அதன்படி "வனம்' என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளும், அடர்த்தியான மரங்களைக் கொண்ட பகுதிகளும் மட்டுமே காடுகளாகக் கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

பொருளாதார வளர்ச்சி

  • வன அழிப்பில் பொருளாதார வளர்ச்சி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அரசு ஆவணங்களின்படி, 1980 முதல் 2016 வரை 6.33 லட்சம் ஹெக்டேர் வனப் பகுதி வளர்ச்சிப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தனியாருக்கு வன உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் 2008 முதல் 2018 வரை வழங்கப்பட்டிருக்கும் வனப் பரப்பையும் சேர்த்தால், சுமார் 19 லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன.
  • அழிக்கப்படும் அடர்ந்த காடுகளுக்கு, ஆங்காங்கே மரங்கள் நடப்படுவதும் சமூக நலக் காடுகள் உருவாக்கப்படுவதும் மாற்றாகிவிடாது. தெளிவான முழுமையான இந்திய வனப் பரப்பு ஆய்வறிக்கை உருவாக்கப்பட்டால் மட்டும்தான் காடுகள் கொள்ளை போவதைக் கண்காணிக்க முடியும்.

நன்றி: தினமணி (08-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories