TNPSC Thervupettagam

இந்திய வாக்காளர்களே...

March 16 , 2019 1938 days 1180 0
  • உலக நாடுகளிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா.
  • பல கோடிக்கணக்கான வாக்காளர்களைக் கொண்டு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடாளுமன்ற பொதுத் தேர்தலையும், பல மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களையும் தவறாது நடத்துவது என்பது பெரும் சாதனையாகும்.
  • பல போராட்டங்களில் ஏராளமான உயிர்களைப் பலிகொடுத்து, பல லட்சம் பேர்  சிறைவாசம் செய்து பெற்ற சுதந்திரத்தின் பெரும்பலனாக  விளங்குவது நாம் பெற்றிருக்கும் வாக்குரிமை ஆகும்.
  • இவ்வாறு பெற்ற வாக்குரிமையினை எவ்வாறு நாம் பயன்படுத்தியிருக்கிறோம் என்ற  சில விவரங்களைப்  பார்ப்போம்.
  • சுதந்திரத்துக்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில், குறிப்பிட்ட அளவு சொத்துரிமை உள்ளவர்களும்,  படித்தவர்களும் என  மக்கள்தொகையில் வெறும் 12  சதவீதத்தினர் மட்டுமே வாக்குரிமை பெற்றிருந்தனர்.
  • ஆனால், சுதந்திரம் அடைந்தவுடன், குறிப்பிட்ட வயது வந்த எல்லோரும், கல்வியறிவு-சொத்துரிமை என்ற தளைகள் எதுவுமற்ற, வாக்காளர்களாக உரிமை பெற்றனர்.
  • 1951-இல் நடைபெற்ற   முதல் பொதுத்தேர்தலில், 46 சதவீத மக்கள் மட்டுமே வாக்களித்தனர்.
  • ஆனால், 60 ஆண்டுகள் கழித்து, 2014 தேர்தலில் 66 சதவீத மக்கள் மட்டுமே வாக்களித்திருக்கின்றனர்.
  • இந்தப் புள்ளிவிவரத்தின் ஊடே தொக்கி நிற்கும் மிக முக்கியமான கேள்வி, நமக்கு வாக்குரிமை  இருந்தும்,  வாக்களிக்கும்  கடமையை முறையாகச் செய்கிறோமா?  என்பதுதான்.
  • வாக்காளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வாக்களிக்காத போது, தேர்ந்தெடுக்கப்படும் அரசு மக்களை பரிபூரணமாகப்  பிரதிநிதித்துவப் படுத்துகிறதா  என்ற  கேள்வி எழுவதையும் மறுப்பதற்கில்லை.
  • 1951 தேர்தலின்போது, நம் மக்களின் கல்வியறிவு விகிதம் 18 சதவீதம் மட்டுமே இருந்தது; அப்போது 46 சதவீதம் வாக்களிப்பு நிகழ்ந்தது என்றாலும் 2014-இல் கல்வியறிவு  75  சதவீதமாக உயர்ந்த பின்னரும், வாக்களிப்போர் விகிதம் 66 சதவீதம் மட்டுமே என்பது  ஒரு விசித்திர முரண் ஆகும்.
  • கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் வளர்ந்த நாடான அமெரிக்காவில் கூட, குடியரசுத் தலைவர் தேர்தலில் 60 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே பதிவாகின்றன.
  • வாக்கு அளிப்பவர்கள் சதவீதத்துக்கும், கல்வியறிவு பெற்றோர் சதவீதத்துக்கும் பெரும் தொடர்பு உள்ளதாகவும், கல்வியறிவு குறைவாக உள்ள நாடுகளில் மட்டுமே வாக்களிப்போர் சதவீதம் குறையும் எனப் பொதுவெளியில் நிலவும் கருத்தினையும்  இது தகர்க்கிறது.
  • உலகில் தற்போது 22 நாடுகள் தேர்தலில் வாக்களிப்பதைக் கட்டாயமாக்கியுள்ளன.
  • ஆஸ்திரேலியாவில், நியாயமான காரணங்களின்றி வாக்களிக்கத் தவறுவோர் அபராதம் செலுத்த நேரிடும்.
  • கல்வி, பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவை விடப் பின்தங்கியிருக்கும் ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டிலும், இத்தகைய கட்டாய வாக்களிப்பு நடைமுறையில் இருக்கிறது.
  • இந்தியாவுடன் ஒப்பிடுகையில் மக்கள்தொகையும், மக்கள் தொகை அடர்த்தியும் மிகக் குறைவாக உள்ள ஆஸ்திரேலியா, காங்கோ போன்ற நாடுகளில் இந்தக்  கட்டாய வாக்களிப்பு  முறை  சாத்தியமாகிறது.
  • வாக்களிப்போர் எண்ணிக்கையை அதிகரிக்கும் வழிமுறைகளை அமெரிக்கா ஆராய்ந்து கொண்டிருக்கிறது.
  • அங்கு பணப் பரிவர்த்தனை, பொருள்கள் வாங்குதல் ஆகியவை செல்லிடப்பேசி மூலம் நிகழ்கிறது; அதற்குரிய பாதுகாப்பும், ரகசியத் தன்மையும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
  • எனவே, அதன் நீட்சியாக, தேர்தலிலும் செல்லிடப்பேசி மூலம் மக்கள் வாக்களிப்பதை பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்துகிறது. அதன்  முதல் படியாக, சில மாகாணங்களில்  உள்ளாட்சித் தேர்தலில் செல்லிடப்பேசி மூலம் வாக்களிக்க வழிவகைச்  செய்யப்படுகிறது; பின்னாள்களில் இது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவும் வாய்ப்பு உள்ளது.
  • நம் நாட்டில், இவை நடைமுறைக்கு வர பல ஆண்டுகள் ஆகலாம்.
  • ஆனால், ஆராயப்பட வேண்டிய முக்கிய விஷயம், நமது தேர்தல்களில் வாக்களிப்பு குறைவதற்கான காரணங்கள் எவை என்பதுதான்.
  • வாக்களிக்காமல் இருப்பதற்கு வாக்காளர்களின் சில பிரச்னைகள் ஏற்கத் தக்கவை.
  • உதாரணமாக, தேர்தலன்று ஊரில் இல்லாதிருப்பது, முதுமை, நோய் போன்றவை காரணமாக வாக்களிக்கத் தவறுவது  ஓரளவு  ஏற்றுக்கொள்ளப் படக்கூடியது.
  • ஆனால், தேர்தல் குறித்த அலட்சியம், வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வின்மை மற்றும் தேர்தல் மீது  அவநம்பிக்கை போன்றவை ஏற்றுக் கொள்ள முடியாதவை ஆகும்.
  • வாக்களித்தல் குறித்த அறிவூட்டலில் ஈடுபடுவது மக்களிடம் ஓரளவேனும் விழிப்புணர்வினையும், அதைத் தொடர்ந்து மக்கள் வாக்களிப்பதையும் அதிகரிக்கும்.
  • இதில், ஊடகங்களின் - குறிப்பாக தொலைக்காட்சி ஊடகங்களின் பங்களிப்பு முக்கியமானதாகும்.
  • கணிசமான வாக்காளர்கள், தங்களது வாக்கு அரசியல் கட்சிகளின் போக்கினை மாற்றாது என்றும்  தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மீது எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற அவநம்பிக்கையையும் கொண்டுள்ளனர்  என்பது இன்னொரு முக்கியக்  காரணம் ஆகும்.
  • இந்த அவநம்பிக்கைக்கு ஒரு மாற்று மருந்து, வாக்காளர்களுக்கு இருக்க வேண்டிய சரியான புரிதலும் தளராத நம்பிக்கையும் ஆகும்.
  • அரசியல் கட்சிகளை  நெறிப்படுத்தும் வாய்ப்பும் பொறுப்பும் உள்ளது என்பதையும், அதற்குரிய வலிமை தங்களது வாக்குக்கு உள்ளது என்பதையும் ஒவ்வொரு வாக்காளரும் நினைவில் கொள்ளவேண்டும்.
  • அனைவரும் வாக்களிப்பது என்பது, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல நல்ல மாற்றங்களை அரசியல் கட்சிகள் மீது ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகும்.
  • வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வாக்காளர்கள் அனைவருக்கும் வலியுறுத்தும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு பிரசார நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருவதும் பாராட்டுக்குரியது.
  • வலிமை வாய்ந்த வாக்கு என்பது, வாக்காளர்கள் பெற்றிருக்கும் உரிமை மட்டுமல்ல; முறையாக செய்ய வேண்டிய  சமுதாயக்  கடமையும் ஆகும்.
  • அத்தகைய புரிதல்  ஓர் அமைதிப் புரட்சிக்கு வித்திடும் என்பதை சர்வ வல்லமை படைத்த வாக்காளர்கள் உணர வேண்டும்.

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories