- சமூக நீதி மண் என நாம் பெருமிதப்படும் தமிழ்நாட்டில், அந்தப் பெருமிதத்தைக் குலைக்கும் வகையிலான சம்பவங்கள் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பட்டியல் சாதியைச் சேர்ந்த பள்ளி மாணவர், ஆதிக்க சாதியைச் சேர்ந்த சக மாணவர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம், அதன் ரத்த சாட்சியமாக அமைந்திருக்கிறது.
- நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த அந்த மாணவர், ஆகஸ்ட் 9 ஆம் தேதி இரவு கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளானார். அதைத் தடுக்க முயன்ற அவரது தங்கையும் வெட்டப் பட்டிருக்கிறார். சம்பவத்தை நேரில் பார்த்த அவரது உறவினர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்.
- இது தொடர்பாக, மூன்று பள்ளி மாணவர்கள் உள்பட ஏழு பேர் கைது செய்யப் பட்டிருக்கின்றனர். இந்தத் தாக்குதல், இதுவரை அந்த மாணவருக்கு இழைக்கப்பட்டுவந்த கொடுமைகளின் உச்சம் என்றே செய்திகள் சுட்டுகின்றன. ஆசிரியர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்த அந்த மாணவரைச் சாதிரீதியாகச் சில மாணவர்கள் துன்புறுத்தி வந்திருக்கிறார்கள்.
- யாரிடமும் அதைப் பகிர முடியாத அளவுக்கு அச்சுறுத்தப்பட்டிருந்த அந்த மாணவர், ஊரைவிட்டே வெளியேறிவிட நினைத்திருந்த நேரத்தில், விஷயத்தைத் தெரிந்துகொண்ட ஆசிரியர்கள் அவரிடம் எழுத்துபூர்வமான புகாரைப் பெற்றனர். இதன் காரணமாக அவரைத் தாக்கியிருக்கிறார்கள் சக மாணவர்கள்.
- நாங்குநேரி பகுதியில் சாதியக் கொடுமைகளுக்கு உள்ளாகி ஊரைவிட்டே பல குடும்பங்கள் வெளியேறிய செய்தியும் தற்போது வெளியாகியிருக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு என முன்னேற்றப் பாதையில் செல்லும் பட்டியல் சாதியினர் / பழங்குடியினருக்கு, சாதிய இழிவு, வன்முறை மூலம் முட்டுக்கட்டைகளை ஏற்படுத்துவதை ஆதிக்க சாதியினர் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். தலித் சமூகத்தினரின் வீடுகள், வாகனங்கள், இதர பொருள்களைச் சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
- இந்த வன்மத்துக்கு வயது வித்தியாசமும் இருப்பதில்லை. 2012இல் தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாயில் தலித் குடியிருப்புகள் மீது தாக்குதல் நிகழ்த்திய ஆதிக்க சாதி கும்பலில் பள்ளி மாணவர்களும் இடம்பெற்றது ஓர் உதாரணம். சாதிக் கயிறுகள் கட்டிக்
- கொள்வது தொடங்கிப் பல்வேறு வகைகளில் தத்தமது அடையாளங்களை வெளிப்படுத்திக் கொள்வது மாணவர்களிடையே அதிகரித்திருக்கிறது.
- கல்வியாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் எனப் பல்வேறு தரப்பினர் கவலையுடன் சுட்டிக்காட்டிய பின்னரும் இந்த அவலம் முடிவுக்கு வரவில்லை. இன்றைக்கும் சில இடங்களில் தலித் மக்கள் கோயில்களுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. சில அரசியல் தலைவர்கள், சாதி அமைப்பினர் வெவ்வேறு ஆதாயங்களுக்காக இந்த விஷச் சூழல் வளர்வதை அனுமதிக்கின்றனர்.
- இந்த விஷயத்தில் அரசு நிறுவனங்கள், நீதிமன்றங்களின் பொறுப்பு மிக முக்கியமானது. பாதிக்கப் பட்ட மாணவரை அமைச்சர்கள் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கின்றனர்; மாணவரின் தாயாருடன் முதல்வர் பேசியிருக்கிறார்; மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகள் வகுக்க நீதியரசர் கே.சந்துரு தலைமையில் ஒருநபர் குழு அமைக்கப் பட்டிருக்கிறது.
- அதேவேளையில், இவை வெறும் அடையாள நிமித்தமான நடவடிக்கைகளுடன் நின்றுவிடக் கூடாது. தவிர, இப்படியான சம்பவங்கள் நிகழும்போது முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை நிகழ்விடத்துக்கு உடனடியாகச் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதியான ஆதரவு வழங்குவது அவசியம். அரசியல் கணக்குகளைத் தாண்டி சமரசமற்ற நடவடிக்கைகளை எடுக்க அரசு இனியும் தயங்கக் கூடாது. எல்லாவற்றையும் தாண்டி, சாதிரீதியிலான ஒடுக்கு முறைகளுக்கு முடிவுகட்ட சமூக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியம்.
நன்றி: இந்து தமிழ் திசை (14– 08 – 2023)