TNPSC Thervupettagam

இனி ஆங்கிலத்திலும் தமிழ் மணக்கட்டும்!

June 17 , 2020 1678 days 1326 0
  • தமிழ்நாட்டிலுள்ள 1,018 ஊர்களின் பெயர்கள் தமிழில் எப்படி உச்சரிக்கப்படுகின்றனவோ அப்படியே ஆங்கிலத்திலும் உச்சரிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அரசாணை வரவேற்புக்குரியது.
  • ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது தம் மொழியில் உச்சரிப்பதற்கு ஏற்ற வகையில் தமிழகத்தின் ஊர்ப் பெயர்களில் செய்துகொண்ட மாற்றங்கள் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிய பின்பும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. தூத்துக்குடி ‘டூட்டிகொரின்’ என்றும், எழும்பூர் ‘எக்மோர்’ என்றும், திருவல்லிக்கேணி ‘ட்ரிப்ளிக்கன்’ என்றும், வேலூர் ‘வெல்லூர்’ என்றும், செஞ்சி ‘ஜிஞ்சி’ என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டுவருகின்றன.
  • ராயப்பேட்டை, சைதாப்பேட்டை என்று தமிழில் குறிப்பிடுவதைவிட ‘ராயப்பேட்’, ‘சைதாபேட்’ என்று ஆங்கில பாணியில் அந்த ஊர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதும் தொடந்துவருகிறது.
  • காலனியாதிக்கத்தின் எச்சங்களுள் ஒன்றான இந்த உச்சரிப்பு வழக்கத்தை மாற்றியமைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்திருப்பதும், மாவட்ட ஆட்சியர்கள் அளவிலும் கலக்கப்பட்ட இதற்கான ஆலோசனைகளில் சில ஊர்களில் தமிழ் எழுத்தாளர்களின் யோசனைகளும்கூடப் பெறப்பட்டிருப்பதும் மிகுந்த பாராட்டுக்குரியது.

வேறுபடுத்தக் குறியீடுகள் தேவை

  • ஆயினும், பல ஊர்களுக்கு இந்தத் திருத்தம் சரியாக அமைந்தாலும், சில ஊர்களுக்கு அப்படி அமையவில்லை.
  • ஓர் உதாரணம், வேலூரானது ‘வெல்லூர்’ என்பதிலிருந்து, இப்போது ‘வீலூர்’ ஆகியிருக்கிறது. தமிழில் ஒரு சொல்லிலுள்ள எழுத்துகளின் ஒலி தனித்தும் சேர்ந்தும் பெரிதும் மாறுபடாமலேயே இருக்கும்.
  • ஆனால், ஆங்கிலம் அப்படியல்ல. ஒவ்வொரு எழுத்தும் தனியாக உச்சரிக்கப்படும்போது ஒரு ஒலியையும் சொல்லில் இடம்பெறும்போது வேறு ஒலியையும் கொண்டிருக்கும்.
  • எனவே, தமிழ் ஊர்ப் பெயர்களுக்குத் துல்லியமான ஆங்கில உச்சரிப்பைக் கொடுப்பது கடினமே. இந்தப் பிரச்சினை தற்போதைய பட்டியலிலும் பிரதிபலித்துள்ளது.
  • நெடில் எழுத்துகளையும் வல்லின எழுத்துகள் மிகுவதையும் தனித்துக்காட்டிட ஆங்கிலத்தில் ஒரே எழுத்து இரண்டு முறை இடம்பெற்றுள்ளது. ஆனால், அனைத்து ஊர்களுக்கும் அந்த முறை பொதுவாகப் பின்பற்றப்படவில்லை.
  • குறிப்பாக ‘ஊர்’, ‘சேரி’ என்பன போன்ற ஊர்ப்பெயர் விகுதிகள் வெவ்வேறு விதமாக எழுதப்படுவது உச்சரிப்பில் குழப்பங்களை உருவாக்கக்கூடும். ஊர்ப் பெயர்களில் இடம்பெற்றுள்ள ழகர எழுத்துகளும் வெவ்வேறு வகைகளில் ஒலிபெயர்க்கப்பட்டுள்ளன.
  • இப்படி தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் உள்ள இடைவெளிகளைச் சரிசெய்து இந்தப் பட்டியலை மேம்படுத்த வேண்டும்.
  • இப்படி மேம்படுத்துகையில், குறில் - நெடில் வேறுபாட்டுக்கும், மெய்யெழுத்துகள் பயன்பாட்டுக்கும் ‘வேறுபடுத்தக் குறியீடுகள்’ (diacritic marks or accent) இடலாம் என்கிற யோசனையும்கூட முன்வைக்கப்படுகிறது; உதாரணமாக, ‘Vélúr’ என்று எழுதிடல்.
  • எல்லாவற்றையும் பரிசீலிக்கலாம். முடிவெடுப்பதில் ஒரு தர நிர்ணயத்தை மட்டும் இறுதியாகக் கொள்ளுதல் முக்கியம். இன்னும் பல நூறு ஊர்களின் ஆங்கிலப் பெயர்களிலும் மாற்றங்கள் வேண்டியிருக்கிறது.
  • மாநிலத்தின் ஆங்கிலப் பெயரையே கூட மாற்ற வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கையும்கூட மிச்சம் இருக்கிறது. அதற்குத் தற்போதைய பட்டியல் ஒரு முன்னோடியாக இருக்கட்டும்!

நன்றி: தி இந்து (17-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories