- சென்னை உள்ளிட்ட நான்கு வட மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய அதிர்வுகள் இன்னும் முழுமையாக விலகாத நிலையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. ஓர் ஆண்டின் சராசரி மழைப்பொழிவுக்குரிய அளவு, ஒரே நாளில் பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் காயல்பட்டினத்தில் பதிவான 94.6 செ.மீ. மழைப்பொழிவு, அத்தகைய ஓர் அரிய நிகழ்வுதான். முற்றிலும் எதிர்பாராத இந்த நிலை, மக்களை மட்டுமல்ல, அரசாங்கத்தையும் திகைக்கச் செய்திருக்கிறது. தென் மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம், டிசம்பர் 14இல் முன்னறிவிப்பு வெளியிட்டது; அந்த முன்னறிவிப்பு, அதி தீவிர கனமழையாக (21 செ.மீ.க்கு மேல்) 24 மணி நேரத்துக்கு முன்னதாக மாறியது.
- வங்கக் கடலில் உருவான வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் 39 இடங்களில் அதி கனமழை பதிவாகியிருக்கிறது. பொதுவாகவே, வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சியால் கனமழை பொழிவதில்லை. ஆனால், இதுவரை பதிவாகியிராத அளவுக்கு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடங்கி திங்கள்கிழமை வரை இடைவிடாமல் கனமழை நீடித்தது. 8 அமைச்சர்கள், 10 ஐஏஎஸ் அதிகாரிகள் மேற்பார்வையில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 20) நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். தமிழ்நாட்டின் மழைப்பொழிவில் 40%, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்குப் பருவமழைக் காலத்தில்தான் கிடைக்கிறது.
- வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், வழக்கமாக 42 செ.மீ. மழையே பதிவாகும் நிலையில், இந்த ஆண்டு இதுவரை 44 செ.மீ. மழை பதிவாகியுள்ளது; இது வழக்கத்தைவிட 5% அதிகமாகும். காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்டுத் தீவிரமடைந்துவரும் வெப்பமண்டலப் புயல்கள், பெருமழை ஆகியவை சமீபத்திய ஆண்டுகளில் புதிய இயல்பாக மாறியிருக்கின்றன. உயிர், உடைமையில் ஏற்படும் பெரும் சேதங்கள் தொடர்கதையாகிவிட்டன. காலநிலை மாற்றத்தின் விளைவுகள் எங்கோ கண்காணாத இடங்களில் நடக்கின்றன என்பது பொதுவான புரிதல். ஆனால், காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட நிகழ்வுகள், நம் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டதையே சமீபத்திய ஆண்டுகளில் தமிழ்நாடு எதிர்கொண்ட வானிலை நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
- மேலும், மழைப்பொழிவின் அளவு, முன்னறிவிப்புகளைவிடவும் வெகுவாக வேறுபட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. மழை குறித்த வானிலை முன்னறிவிப்பு ஏமாற்றம் தருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் வெளிப்படையாகவே விமர்சித்திருக்கிறார். ஆனால், கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் இயன்றவரை துல்லியமாக வானிலையைக் கணித்துவருவதாக வானிலை ஆய்வு மையம் விளக்கமளித்திருக்கிறது. இந்தப் பிரச்சினை தொடரக் கூடாது. குறிப்பாக, பேரிடர் கால மீட்புப் பணிகளுக்காக, தென்தமிழகக் கடலோரப் பகுதிகளில் முறையான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்கிற தமிழ்நாடு அரசின் நீண்ட காலக் கோரிக்கைக்கு மத்திய அரசு இனியாவது செவிமடுக்க வேண்டும்.
- காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தணிக்கும் செயல்திட்டங்கள்-வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில், முதலமைச்சர் தலைமையிலான ‘காலநிலை மாற்ற நிர்வாகக் குழு’ போன்ற முன்னெடுப்புகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இயற்கை நம் கணிப்புக்கும் கட்டுப்பாட்டுக்கும் அப்பாற்பட்டது என்பதை உணர்ந்து, போதாமைகளுக்கு இடங்கொடுக்காமல் உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்வது ஒன்றே பேரிடர்களில் இருந்து தற்காத்துக்கொள்ளும் ஒரே வழி!
நன்றி: இந்து தமிழ் திசை (20 – 12 – 2023)