TNPSC Thervupettagam

இனி எப்படி இருக்கும் இந்தியப் பொருளாதாரம்? | தேர்தல் எதிர்பார்ப்புகள்

April 5 , 2024 252 days 233 0
  • ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களின் சாதனைகளை முன்னிலைப்படுத்திக் கொள்ளவும், நாட்டின் எதிர்காலப் பொருளாதாரப் பாதைக்கான பார்வையை மீண்டும் உருவாக்கவும் வாய்ப்பளிப்பவை தேர்தல்கள். கூடவே, அரசியல் கட்சியினரின் பொருளாதாரப் பார்வையை மதிப்பிடுவதற்கும், அவர்களின் அரசியல் தேர்வுகள் குறித்து மறுபரிசீலனை செய்வதற்கும் வாக்காளர்களுக்கும் வாய்ப்பளிக்கிறது தேர்தல் களம்.
  • இந்தியப் பொருளாதாரத்தின் நிலை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, 2047-க்குள் ‘விக்ஷித் பாரத்’ (வளர்ச்சியடைந்த இந்தியா) என்ற தொலைநோக்குப் பார்வையில் தனது சாதனைகளை முன்வைத்துள்ளது.
  • இத்திட்டத்தின் நோக்கம் பொருளாதார வளர்ச்சி, நிலையான வளர்ச்சி இலக்குகள், எளிதான முறையில் வணிகம், உள்கட்டமைப்பு, சமூக நலன் ஆகியவற்றை மையமாகக் கொண்டது. 2027-க்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாகவும், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகவும் மாற்றுவது இந்தத் தொலைநோக்குப் பார்வையின் மிக முக்கியமான இலக்குகளில் ஒன்றாகும்.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சியைப் பார்த்தால், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தின் கூட்டு ஆண்டு வளர்ச்சி (CAGR) விகிதம் 7%ஆக இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்று அதிர்ச்சி 2020-2022இல் பொருளாதாரத்தை மோசமாகப் பாதித்தது. ஆனால், பெருந்தொற்றுக்குப் பிந்தைய பொருளாதாரம் மீண்டுள்ளதாகத் தெரிகிறது.
  • மேலும், கோவிட் நெருக்கடியைத் தொடர்ந்து உலகளாவிய நிச்சயமற்றதன்மையை எதிர்கொள்ளும் வகையில் இந்தியப் பொருளாதாரம் வலுவான நிலையில் இருப்பதாகப் பாராட்டப்பட்டது. சர்வதேச நாணய நிதியம் (IMF) அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 6.1% வளர்ச்சி அடையும் என்று கணித்துள்ளது. இவை அனைத்தும் பொருளாதார வளர்ச்சியில் சாதகமான அம்சங்களாகும்.

மாறிய திசை

  • இச்சூழலில் இரண்டு கேள்விகளைப் பேரியல் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பகுப்பாய வேண்டும். முதலாவது, நீண்டகால வளர்ச்சியின் இயக்கி(கள்) யாவை? இரண்டாவது, இத்தகைய உயர் வளர்ச்சிப் பாதை, பொருளாதாரத்தின் கட்டமைப்பு மாற்றத்துக்கு உதவுமா? முதல் கேள்விக்குப் பதிலளிக்க, 1991இன் கட்டமைப்புச் சீர்திருத்தங்களை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும்.
  • 1991இல் வெளிவர்த்தகப் பற்று வரவு நெருக்கடி (Balance of Payments crisis [BOP crisis]) பொருளாதாரத்தின் பாதையை மாற்றியது. பொருளாதாரக் கொள்கைச் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டு, பொருளாதாரத்தைத் தாராளமயமாக்கல் (Liberalization) பாதையில் கொண்டுசென்றது.
  • தாராளமயமாக்கல் கொள்கை, சந்தைகளின் முதன்மையை வலியுறுத்தி அரசாங்கத்தின் பங்கைக் குறைத்தது. இந்தச் சீர்திருத்தங்களின் நோக்கம் வர்த்தகத்தில் போட்டித்திறன், உலகப் பொருளாதாரம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைப்பை அதிகரிப்பதாகும். தாராளமயமாக்கலின் பொருளாதார-அரசியல் நோக்கமானது குறைந்தபட்ச அரசாங்கம் மற்றும் அதிகபட்ச சந்தைகளைப் பரிந்துரைக்கும் பணவியல் (Monetarist) சித்தாந்தத்தால் உந்தப்பட்டது.
  • இந்தச் சீர்திருத்தங்கள் இந்தியப் பொருளாதாரத்தைச் சர்வதேச வர்த்தகத்துக்குத் திறந்து, பொருளாதாரத்தை உலக வர்த்தகத்துடன் நெருக்கமாக இணைத்தன. ஏற்றுமதியை முதன்மையாகக் கொண்ட வளர்ச்சி தனியார் வியூக முதலீட்டைத் தூண்டி, 21ஆம் நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்களில் பொருளாதார வளர்ச்சியின் முக்கியக் கருவியாக மாறியது.
  • இந்தியப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டதால், 2000களில் தனியார் முதலீட்டின் அதிகரிப்பு உள்நாட்டு தேவை-சொத்து விலை ஏற்றம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு சுய-வலுவூட்டும் இயக்கத்தைக் கட்டவிழ்த்துவிட்டது.

நிதர்சனம் என்ன?

  • இதைப் புரிந்துகொள்ள, பல்வேறு துறைகளில் மொத்த மதிப்புக் கூட்டல் (Gross Value Added - GVA) வளர்ச்சியை நாம் பகுப்பாய்வு செய்யலாம். இந்தியப் பொருளாதாரத்தில் விவசாயம் அல்லாத துறைகளில் (உற்பத்தி-சேவைகள்) மொத்த மதிப்புக் கூட்டலின் ‘தசாப்த வளர்ச்சி விகிதம்’ 1990களின் பத்தாண்டுகளைவிடவும் 2000 மற்றும் 2010களின் பத்தாண்டுகளில் அதிகமாக இருந்தது என்பதைப் புள்ளிவிவரத் தரவு தெளிவாகக் காட்டுகிறது.
  • கடந்த பத்தாண்டுகளில் பொருளாதார வளர்ச்சியானது வெளிநாட்டின் தேவையால் உந்தப்பட்டு, விவசாயம் அல்லாத துறைகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சியைவிட உற்பத்தித்திறன் (productivity) அதிகரிப்பால் வருகிறது என்பதைப் புள்ளிவிவரத் தரவுகள் கோடிட்டுக் காட்டுகின்றன.
  • இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டுக்கு இது மிகப்பெரிய பிரச்சினை. புதிய அரசாங்கம் தீர்க்க வேண்டிய கடினமான சவால்களில் இதுவும் ஒன்று. இப்போது நாம் சென்றுகொண்டிருக்கும் உயர்ந்த வளர்ச்சிப் பாதை, உலகின் மூன்றாவது பணக்கார தேசம் என்கிற பெருமிதத்தை 2027இல் அளிக்கவிருக்கிறது என்றாலும், அதே பாதை நம்மை வேலையின்மை நெருக்கடிக்கும் சமமற்ற பொருளாதாரத்துக்கும் இட்டுச் செல்கிறது என்பதுதான் நிதர்சனம்.

குறைந்தபட்ச அரசாங்கம்

  • இந்த வேலையின்மை வளர்ச்சிப் புதிரின் மையத்தில் செயலற்ற கட்டமைப்பு சார்ந்த மாற்றத்தின் பிரச்சினையும் உள்ளது. செயலற்ற கட்டமைப்பு சார்ந்த மாற்றத்தின் மையப் பிரச்சினைகளில் ஒன்று, வளர்ச்சியின் இயந்திரமாக இருக்க வேண்டிய உற்பத்தித் துறை நீண்ட காலத் தேக்கநிலையில் இருப்பது.
  • உற்பத்தியைச் செயல்படுத்துவதற்கான சில திட்டங்கள், அதாவது ‘மேக் இன் இந்தியா’, உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ)ஆகியவை இந்தத் துறையைத் தூண்டவில்லை. ஏனெனில், உலகளாவிய உற்பத்தி வலைப்பின்னல்கள் மிகவும் பரவலாக்கப்பட்டன; மதிப்பு சார்ந்த சங்கிலிகள் உலகம் முழுவதும் பரவியுள்ளன. அதன் ஒரு பகுதிதான் இந்தியப் பொருளாதாரம்.
  • எனவே, உற்பத்தித் துறையை அதன் சரிவிலிருந்து மீட்டெடுக்கத் தேவையான முதலீட்டு அளவைத் தனியார் மூலதனத்தால் மட்டும் உருவாக்க முடியாது என்பது தெளிவாகிறது. உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் அளவுக்கு அரசின் முதலீடும் போதுமானதாக இல்லை. உள்கட்டமைப்பு மூலதனச் செலவில் சமீபத்திய அதிகரிப்பு இருந்தபோதிலும், அரசாங்கத்தின் சராசரி மூலதனச் செலவினம் ஜிடிபி விகிதத்தில் கடந்த 10 ஆண்டுகளாக 2% மட்டுமே உள்ளது.
  • இது குறைந்தபட்ச அரசாங்கம் என்கிற முழக்கத்துக்கு அடித்தளமாக இருக்கும் நவீன பணவியல் (Modern Monetarist) சித்தாந்தத்தின் நேரடித் தாக்கமாகும். நிதி பொறுப்பு - பட்ஜெட் மேலாண்மை (FRBM) சட்டத்தின்படி நிதி ஒழுங்குத்தன்மையை அமல்படுத்துவதன் மூலம் குறைந்தபட்ச அரசாங்கம் என்ற முழக்கம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

எது முக்கியம்?

  • இந்திய வளர்ச்சி முறை தனித்துவமானது; இது சேவைத் துறையை முதன்மையாகக் கொண்ட வளர்ச்சி என்று பொருளியல் வல்லுநர்கள் வர்ணித்துள்ளனர். ஆனால், சேவையின் அடிப்படையிலான வளர்ச்சியின் வடிவமும் அதன் விளைவாகக் கட்டமைப்பு மாற்றமின்மையும் இந்த தசாப்தத்தில் நாம் காணும் வேலையின்மை வளர்ச்சிக்குக் காரணியாக இருக்கிறது.
  • எனவே, தேர்தலுக்கு முன் கட்சிகளுக்கான தேர்வு தெளிவாக உள்ளது: நாம் உலகுக்குச் சித்தரிக்க விரும்புவது ஒரு பணக்கார நாட்டின் கௌரவம்- அந்தஸ்தைப் பற்றியதா அல்லது இந்தியாவில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரம், வாழ்வாதாரம் பற்றியதா?
  • இந்தியாவுக்குத் தேவைப்படுவது கிராமப்புற - நகர்ப்புற வேலைவாய்ப்பு உருவாக்கத்துடன் இணைந்துசமூக உள்கட்டமைப்பு சார்ந்த திறன் உருவாக்கம் மற்றும் வலுவூட்டலுக்கான ஒரு ‘பெரும் உந்துதல்’ (Big Push) முதலீடு ஆகும். இத்தகைய உத்தி ஒரே நேரத்தில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, உள்ளடக்கிய வளர்ச்சியைத் தூண்டும்.
  • முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தேர்தலில், பொருளாதாரத்தைப் பெருமளவு உள்ளடக்கிய, நிலையான பாதையில் கொண்டுசெல்வதற்கான விவேகத்தையும் தைரியத்தையும் நம் கட்சிகள் வெளிப்படுத்துமா?

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories