TNPSC Thervupettagam

இன்ஃப்ளூயன்சர்’களின் தொழில் எதிர்காலம்

August 8 , 2023 393 days 262 0
  • இணையம் இந்தியாவுக்குள் கால் பதித்து 25 ஆண்டுகளைக் கடந்துவிட்டாலும், டிஜிட்டல் மார்க்கெட்டிங் இப்போதுதான் உச்சத்தில் இருக்கிறது. 2010க்குப் பிறகு சமூக வலைத்தளங்கள் மெதுவாக வளரத் தொடங்கின. சமூக வலைத்தளங்களின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து டிஜிட்டல் மார்க்கெட்டிங்கும் பேசுபொருளானது.
  • குறிப்பாக இன்ஸ்டகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளத்தின் வளர்ச்சியால் கடந்த சில ஆண்டுகளாக ‘இன்ஃப்ளூயன்சர்’கள் எனப்படும் சமூக வலைத்தளப் பிரபலங்களைப் போன்றவர்களுக்கான மார்க் கெட்டிங் சார்ந்த பணிகள் அதிக கவனம் ஈர்க்கத் தொடங்கின. இந்தச் சூழலில் விளம்பரத் துறையின் முக்கிய அங்கமாக மாறியிருக்கும் ‘இன்ஃப்ளூயன்சர்’ மார்க்கெட்டிங் பணிகளில் இளைஞர்கள் பலரும் ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறார்கள்.

சாமானியரின் மார்க்கெட்டிங்

  • எந்த ஒரு வியாபாரமாக இருந்தாலும் விளம்பரப்படுத்துவது மிகவும் அவசியம். எந்தவொரு பொருளையும், நிறுவனத்தையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது புதுமையான விளம்பர உத்திகள்கள்தான். இந்த விளம்பர உத்திகளும் காலத்துக்கு ஏற்ப மாறி வந்திருக்கின்றன.
  • ‘இன்ஃப்ளூயன்சர்’ மார்க்கெட்டிங்கைப் பொறுத்தவரை சமூக வலைத்தளங்களில் அதிக எண்ணிக்கையிலான ஃபாலோயர்ஸைக் கொண்டவர்கள் விளம்பரப்படுத்துதலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
  • பிரபலமான ஒருவர்தான் ‘இன்ஃப்ளூயன்ச’ராக இருக்க வேண்டுமென்பதில்லை. சாமானியரும் கூட ‘இன்ஃப்ளூயன்சர்’ ஆகலாம். ஆனால், உங்களுக்கான ஃபாலோயர்கள் சற்று அதிகமாக இருக்க வேண்டும். சினிமா, கல்வி, மருத்துவம், ஃபேஷன் எனக் குறிப்பிட்ட ஏதாவதொரு துறையில் தொடர்ந்து இயங்குபவராக இருப்பது அவசியம்.
  • விளம்பரங்களை இன்ஸ்டகிராம் ரீல்ஸ்களாக, போஸ்டர்களாக துறைச் சார்ந்த தகவல்களைப் பகிர வேண்டும். இந்த அம்சங்கள் இருந்தால் ‘இன்ஃப்ளூயன்சர் என்கிற அந்தஸ்தைப் பெற்றுவிடலாம். நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே ஒரு பாலமாக இயங்கும் இந்த இன்ஃப்ளூயன்சர்களின் முக்கியப் பணியே விளம்பரப்படுத்துவதுதான்.

என்ன படிக்கலாம்?

  • பெரும்பாலான ‘இன்ஃப்ளூயன்சர்’கள் முழு நேரப் பணியாக மார்க்கெட்டிங் பணியில் இயங்குவதில்லை. பகுதிநேர வேலையாக மட்டும் இதை அணுகும் இவர்கள், சமூக வலைத் தளத்தின் பயன்பாட்டைச் சுயமாகக் கற்றுக்கொள்கிறார்கள். அதன் மூலம் வருமானம் ஈட்டுகிறார்கள்.
  • ‘இன்ஃப்ளூயன்சர்’களாக இருக்கக் குறிப்பிட்ட படிப்பு இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. எனினும், இத்துறையில் இயங்குபவர்களுக்கு ‘டிஜிட்டல் மார்க்கெட்டிங்’ சார்ந்த அறிவு இருக்க வேண்டும். எனவே, டிஜிட்டல் மார்க்கெட்டிங் சார்ந்த படிப்புகள் தேவை எனவும், அவை கூடுதல் பலனளிக்கும் எனவும் சொல்கின்றனர் இத்துறையில் புழங்குவோர்.
  • இந்தக் காலகட்டத்தில் முன்னணி கல்வி நிறுவனங்கள் இணைய வழிக் கல்வியாக டிஜிட்டல் மார்க்கெட்டிங், சமூக வலைத்தள மார்க்கெட்டிங் போன்ற தலைப்புகளில் சிறப்பு சான்றிதழ் படிப்புகளை வழங்குகின்றன. மார்க்கெட்டிங் துறையில் இயங்க விரும்புவோர் இந்தப் படிப்புகளைத் தேர்வுசெய்து படிக்கலாம்.
  • படிப்பைத் தவிர திட்டமிடுதல், புதிய உத்திகளைப் புகுத்துதல், சிறந்த பேச்சாற்றல், தலைமைப் பண்பு, மார்க்கெட்டிங் உத்தியைக் கண்டறிதல், சமூக வலைத்தளத்தை திறம்படக் கையாளுதல் போன்ற கூடுதல் திறன்கள் இத்துறையில் நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத் தரும்.

எதிர்காலம் எப்படி?

  • ‘இன்ஃப்ளூயன்சர்’ மார்க்கெட்டிங் என்பது தனிநபர் சார்ந்த வேலைதான். எனவே, இன்று ‘இன்ஃப்ளூயன்சர்’கள் பெருகி வருகின்றனர். போட்டி மிகுந்த சூழலில் பணி வாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொள்ள உத்தரவாதம் இல்லை.
  • வானொலி, தொலைக்காட்சி போன்ற பாரம்பரியத் தளங்களில் விளம்பரப்படுத்த சில விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதுபோன்ற விதிமுறைகள் சமூக வலைத்தள மார்க்கெட்டிங்கில் இல்லை. ஏற்கெனவே அமலில் உள்ள டிஜிட்டல் மார்க்கெட்டிங் சார்ந்த விதிமுறைகளும் போதுமானதாக இல்லையென டிஜிட்டல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.
  • எனவே, அதிக வதந்திகள் பரவும் தள மாகவும் இது உள்ளது. ஆக, பிரபலமாகவும் வருமானம் ஈட்டுவதற்காகவும் மட்டும் ‘இன்ஃப்ளூயன்சர்’ மார்க்கெட்டிங் துறையைத் தேர்வு செய்தால் இதில் நிலைத்து நிற்கும் வாய்ப்பு மிகக் குறைவு.
  • ‘இன்ஃப்ளூயன்ச’ராக இயங்கும் ஒவ்வொருவரும் நிறுவனங்களைத் தேர்வு செய்வதில் கவனமுடன் செயல்பட வேண்டும். மேலும், நம்பகமான தகவல்களை மட்டும் மக்களிடம் பகிர்வது நல்லது. இத்துறையின் எதிர்காலத்துக்கு இதுவே ஆரோக்கியமான பாதையை வகுக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (08  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories