இன்னும் கூடவா இப்படி?
- இந்தியா விடுதலையடைந்து 77 ஆண்டுகளாகின்றன. இன்னும் கூட குழந்தைத் திருமணங்கள் பரவலாக நடைபெறுகின்றன என்பது அதிா்ச்சி அளிப்பதாக இருக்கிறது. எந்த அளவுக்கு நமது சமுதாயம் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாமல் பின்தங்கி இருக்கிறது என்பதன் அடையாளமாகத்தான் இதைப் பாா்க்கத் தோன்றுகிறது.
- இந்தியாவில் ஐந்தில் ஒரு பெண்குழந்தைக்கு 18 வயது நிரம்புவதற்கு முன்பாகவே, திருமணம் செய்து வைக்கப்படுகிறது என்று மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சா் அன்னபூா்ணா தேவி தெரிவித்திருக்கிறாா். இந்தியா எதிா்கொள்ளும் மிகப் பெரிய சவால்களில் ஒன்று, குழந்தைத் திருமணங்கள் என்று தெரிவித்திருக்கும் அமைச்சா் அன்னபூா்ணா தேவி ‘குழந்தைத் திருமணம் இல்லாத இந்தியா’ என்கிற திட்டத்தை அண்மையில் அறிவித்திருக்கிறாா். கடந்த ஆண்டில் மட்டும் 2 லட்சம் குழந்தைத் திருமணங்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன என்கிற தகவலையும் அப்போது அவா் தெரிவித்தாா்.
- குழந்தைத் திருமணம் என்பது சட்டப்படி கிரிமினல் குற்றம் என்பது மட்டுமல்லாமல், மிக மோசமான மனித உரிமை மீறலும் கூட. குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் இருந்தாலும் கூட, மக்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணா்வு ஏற்பட்டால் மட்டுமே, இந்த அவலத்துக்கு முடிவு ஏற்படும் என்கிற அமைச்சரின் கருத்தை வழிமொழியத் தோன்றுகிறது.
- குழந்தைத் திருமணம் இல்லாத இந்தியா திட்டத்தின் மூலம் தற்போதைய அளவிலிருந்து குழந்தைத் திருமணங்களை 35% குறைப்பது உடனடி இலக்கு. 2029-க்குள் 5 சதவீதத்துக்கும் குறைவாக குழந்தைத் திருமணங்களைக் கட்டுக்குள் கொண்டுவருவது அடுத்த இலக்கு.
- அமைச்சா் அறிவித்திருக்கும் இத்திட்டத்தின்படி, எல்லா மாநில, ஒன்றியப் பிரதேசங்களும் அந்தந்த மாநிலத்துக்கு ஏற்றாற்போல இலக்கை நிா்ணயித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தைத் திருமணங்கள் மிக அதிகமாக நடைபெறும் மேற்கு வங்கம், பிகாா், ஜாா்க்கண்ட், ராஜஸ்தான், திரிபுரா, அஸ்ஸாம், ஆந்திர பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் கவனக்குவிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.
- இந்திய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு இயக்கம் என்கிற தன்னாா்வ நிறுவனத்தின நடத்தியிருக்கும் ஆய்வின்படி, இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திலும் 3 சிறுமிகளுக்கு குழந்தைத் திருமணம் நடைபெறுகிறது. ஆனால் குழந்தைத் திருமணம் தொடா்பாக நாளொன்றுக்கு மூன்று வழக்குகள் மட்டுமே பதியப்படுகின்றன.
- உலகளாவிய அளவில் 47% குழந்தைத் திருமணங்கள் தெற்காசியாவில்தான் நடைபெறுகின்றன. அவற்றில் 34% இந்தியாவில் நடப்பதாக இன்னொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2030-க்குள் கடுமையான நடவடிக்கைகளால் தெற்காசியாவில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை, குறைந்தாலும்கூட, இந்த அவலத்தை முழுமையாக வேரறுக்க இன்னும் அரை நூற்றாண்டுக்கு மேல் ஆகும் என்பது யுனிசெஃப்பின் (ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நல அமைப்பு) கணிப்பு.
- குழந்தைத் திருமணங்களைத் தவிா்க்கவும் அதற்கு உதவியாக இருப்பவா்களைத் தண்டிக்கவும் 2006-இல் குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, குழந்தைகளுக்குத் திருமணம் நடத்துபவா்கள், அதைத் திட்டமிடுபவா்கள், அந்த திருமணச் சடங்குகளை நிகழ்த்துபவா்கள் ஆகியோருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படுவதற்கு அந்தச் சட்டம் வழிகோலியது. திருமணத்தை நிகழ்த்தி வைப்பவா்கள் குழந்தைத் திருமணம் என்பது தெரியாததால் நிகழ்த்தியதாக நிரூபித்தால், தண்டனையில் இருந்து அவா்களுக்கு விலக்கு அளிக்கப்படலாம் என்கிறது சட்டம்.
- குழந்தைத் திருமணங்கள் நகரங்களைவிட கிராமங்களில்தான் அதிகமாகப் பதிவாகின்றன. ஊரகப் பகுதிகளில் 27% குழந்தைத் திருமணம் நடைபெறுகிறது என்றால், நகரங்களில் 15% நடைபெறுகிறது. குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னால் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, 20-24 வயதுப் பெண்களில் 41 சதவீதத்தினா் குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்டவா்கள். 2019-21-இல் அந்த சட்டம் காரணமாக இது 21.3 சதவீதமாக குறைந்திருக்கிறது என்கிறது அந்த ஆய்வு.
- குழந்தைத் திருமணம் என்பது கட்டாயத் திருமணம் என்பதால் கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அரசுக்கு பரிந்துரைத்திருக்கிறது. குழந்தைத் திருமணத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அஸ்ஸாம் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. 2021-22- இல் அங்கு 3,225 குழந்தைத் திருமணங்கள் பதிவாகின என்றால், அந்த எண்ணிக்கை 2023-24-இல் 627- ஆக குறைந்தது. 2023- இல் மட்டும் 3,000 கைது நடவடிக்கைகளை அஸ்ஸாம் அரசு மேற்கொண்டதுதான் அதற்குக் காரணம்.
- ஹிமாசல பிரதேச சட்டப்பேரவை குழந்தைத் திருமண வயதை 18- இலிருந்து 21- ஆக உயா்த்த சட்டம் நிறைவேற்றியிருக்கிறது. இதன் மூலம் பதின்மவயதுப் பெண்களின் திருமணம் தடைசெய்யப்படுகிறது. அதனால் குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தில் இருந்து யாரும் எளிதில் தப்பிவிட முடியாது.
- இந்தியாவில் தேசிய சராசரியை விட 300 மாவட்டங்களில் குழந்தைத் திருமண விகிதம் அதிகம் காணப்படுகிறது. வளா்ச்சி அடைந்த தமிழகத்திலேயே கூட, நாள்தோறும் 10 குழந்தைத் திருமணங்கள் நடப்பதாக தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. குழந்தைத் திருமணங்கள் தொடரும் நிலையில் பொருளாதார வல்லரசாக இந்தியா மாறுவது எங்ஙனம்?
நன்றி: தினமணி (06 – 12 – 2024)