TNPSC Thervupettagam

இன்றைய தேவை: இந்த முக்கோணம்!

October 31 , 2024 9 hrs 0 min 21 0

இன்றைய தேவை: இந்த முக்கோணம்!

  • நம்​முடைய சமூக அமைப்பில் மூன்று முக்கியக் கூறுகள் இருக்​கின்றன. ஒன்று, மக்களாகிய நுகர்​வோர்; இன்னொன்று, அவர்களுக்குத் தேவையானவற்றை உற்பத்​தி ​செய்யும் தொழில​கங்கள்; மூன்றாவது, தொழில​கங்களை நடத்து​வதற்குத் தேவையான மனித சக்தியைத் தயாரிக்கும் கல்விக்​கூடங்​கள்​.
  • இந்த மூன்றும் ஒன்றுக்​கொன்று இணைந்​திருக்க வேண்டும். ஆனால், துரதிர்​ஷ்ட​வசமாக இன்றைய நிலையில் சமூகம் எப்படி இருக்​கிறது என்று தொழிற்​சாலைகளுக்குத் தெரிவ​தில்லை; தொழிற்​சாலைகளுக்குத் தேவையான மனித சக்தி என்ன என்று கல்விக்​கூடங்​களுக்குத் தெரிய​வில்லை; கல்விக்​கூடங்​களில் உற்பத்​தி​யாகும் மாணவர்​களுக்குத் தொழிற்​சாலையும் தெரிவ​தில்லை; சமூகமும் தெரிவ​தில்லை. இந்த மூன்றும் இணைந்​திருக்காத ஒரே காரணத்​தினால்தான் சமூக விரோத சக்தி​களாலும், நம்மைத் தவறாக வழிநடத்த நினைக்​கின்ற​வர்​களாலும் வெகு எளிதாக எல்லோரையும் திசைதிருப்ப முடிகிறது. இதனை எப்படிச் சரிசெய்வது?

தொழில​கங்கள் - கல்விக்​கூடங்கள்:

  • இந்தப் பிணைப்பு மிக அடிப்​படை​யானது. மாணவர்​களுக்கு இணையவழியாக உலக விஷயம் தெரிந்த அளவுக்கு அவர்களைச் சுற்றி எத்தனை தொழிற்​சாலைகள் இருக்​கின்றன என்று தெரிவ​தில்லை. அந்தந்த மாவட்​டத்தில் இருக்கும் தனியார் - அரசுசார் தொழிற்​சாலைகளுக்குப் போயிருக்​கிறார்களா? அவர்களை அழைத்​துச்​செல்லப் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் முயற்சி எடுத்​திருக்​கின்​றனவா? தொழிற்​சாலைகள் எப்படிச் செயல்​படு​கின்றன என்கிற அடிப்படை மாணவர்​களுக்குத் தெரியாத காரணத்​தினால்​தான், தொழிற்​சாலைகளின் செயல்​பாட்டால் பிரச்​சினைகள் ஏற்படும் என்று சொல்லி முடக்கும் முயற்சிகள் நடைபெற்று​வரு​கின்றன.
  • உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பதுதான் நம்முடைய மரபு. மாணவர்​களுக்கு உழவு எப்படி நடக்கிறது, தொழில் எப்படி நடக்கிறது என்கிற அடிப்படை தெரிய வேண்டும். அப்போதுதான் இவை ஒன்றை ஒன்று பாதிக்​கின்ற விஷயங்கள் அல்ல என்கிற உண்மை அவர்களுக்குத் தெரிய​வரும். இனிமேலும் பாதிக்காத வண்ணம் செயல்பட நவீனத் தொழில்​நுட்​பங்களை இன்னும் கண்டு​பிடிக்க வேண்டும் என்கிற உத்வேகமும் வரும்.
  • அதற்கு அருகில் இருக்​கின்ற தொழில் வளாகங்​களுக்குப் போக வேண்டும். இந்த நிறுவனங்கள் மாணவர்​களுக்காக ஆலைப் பயிற்சி (In-plant training), கோடைக்​காலப் பயிற்சி (Summer Training), தொழில் பயிற்சி (Apprentice Training), பணியிடப் பயிற்சி (Internship) போன்ற​வற்றை வழங்கு​கின்றன. தொழிற்​சாலையைச் சுற்றிப்​பார்க்கும் வசதியும் (Industrial visit) செய்துதரு​கின்றன. ஆய்வுத்​திட்டம் (Project) செய்ய நினைத்தால் அதற்கு வழிகாட்டு​கின்றன. இவற்றையெல்லாம் மாணவர்கள் சரியாகப் பயன்படுத்​திக்​கொண்​டால், பல முன்னேற்​றங்கள் சாத்தி​ய​மாகும்.

தொழில​கங்கள் – சமூகம்:

  • இவை இரண்டும் ஒன்றிணைய வேண்டும். முன்பெல்லாம் தொழில​கங்கள் தனி அமைப்பாக, தன்னிச்​சையாக இயங்கிவந்தன. இப்போது கார்பரேட் சமூகப் பொறுப்பு​ணர்வுத் திட்டம் (Corporate social responsibility -CSR) என்கிற பெயரில் சமூகத்​துடன் ஏதாவது ஒரு வகையில் இணைந்து செயல்​பட்டாக வேண்டும் என்கிற சட்டமே வந்து​விட்டது. அதன்படி, எந்தத் தொழிலகமாக இருந்​தா​லும், அவர்களுடைய லாபத்தில் ஒரு பகுதியைச் சமூகத்தின் மேம்பாட்டுக்​காகச் செலவழித்தாக வேண்டும்.
  • மருத்​துவ​மனை​களில் குடிநீர் வழங்கும் இயந்திரங்கள், மருத்துவ முகாம்கள், பல பள்ளி​களில் வகுப்​பறைகள் / கழிப்​பறைக் கட்டிடங்கள், மருத்​துவ​மனை​களுக்குத் தேவையான கருவிகள், பல இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள், கிராமங்​களில் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள், சீரமைக்​கப்பட்ட குளங்கள், படித்​துறைகள், விபத்துகள் நடக்க வாய்ப்புள்ள புறவழிச்​சாலைச் சந்திப்பு​களில் உயர்கோபுர மின்விளக்​குகள், பேருந்து நிறுத்​தங்​களில் நிழற்​குடைகள், பொது சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள், சிறிய கிராமப் பகுதி​களில் சமுதாய நலக் கூடங்கள் என்று கோடிக்​கணக்கான ரூபாய்க்குத் திட்டங்கள் பல்வேறு நிறுவனங்​களால் செயல்​படுத்​தப்​பட்டு வருகின்றன.

கல்விக்​கூடங்கள் – சமூகம்:

  • மாணவர்கள் எப்போ​தாவது காவல் நிலையங்​களுக்குச் சென்று அங்குள்ள அதிகாரி​களுடன் பேசி இருக்​கிறார்களா? உறவினர்​களுக்கான உடல்நலப் பிரச்சினை இல்லாத நிலையைத் தாண்டி, அரசு பொது மருத்​துவ​மனை​களுக்குள் சென்றிருக்​கிறார்களா? எத்தனை வகை நோயாளிகள் வருகிறார்கள்; அவர்களைச் செவிலியர்​களும் மருத்​துவர்​களும் எப்படிப் பார்த்​துக்​கொள்​கிறார்கள் என்று கவனித்​திருக்​கிறார்களா? முதியோர் இல்லங்​களுக்கு, சிறப்புக் குழந்தைகள் இருக்கும் பள்ளி​களுக்குப் போயிருக்​கிறார்களா? உழவு நடக்கும் இடங்களுக்குப் போய் விவசா​யிகளிடம் பேசி இருக்​கிறார்களா? இவை எல்லாம் எந்த அளவுக்கு அவர்களுடைய வாழ்க்கையின் எதிர்​காலத்​துக்கு ஒரு பாதை போட்டுத் தருவதற்கான விஷயங்கள் என்பது அவர்களுக்குச் சொல்லித் தரப்பட்​டிருக்​கிறதா? இன்னும் சொல்லப்​போனால் அவர்களில் எத்தனை பேர் கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்காகப் படிவம் நிரப்புவது தவிர, வேறு காரணங்களுக்காக வங்கி​களுக்குச் சென்றிருக்​கிறார்கள்?
  • மாணவப் பருவத்​திலேயே இவற்றையெல்லாம் பழகிக்​கொண்​டால், கல்வி முடித்து வெளியே வரும்போது மலைப்போ அச்சமோ இல்லாமல் ‘எனக்குத் தெரிந்த சமூகம்தானே’ என்கிற ஒரு ஒட்டுதல் வரும். இதில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஓரளவுக்கு முடிவுசெய்திருப்​பார்கள்; அதற்குப் பிறகு எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிப்பது அவர்களுக்கு எளிதாக இருக்கும்.
  • இவற்றைச் செய்து​வைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் கல்விக்கூட நிர்வாகத்​துக்கு இருக்​கிறது. குறைந்​த​பட்சம் தொழில​கங்​களி​லிருந்து யாரையாவது மாதம் ஒரு முறையாவது அழைத்து ஒரு வகுப்பு நடத்துவது அவசியம். தொழில் சார்ந்த ஒரு விஷயம் குறித்து மாணவர்​களிடம் அவர்கள் உரையாற்ற வேண்டும்; விளக்கிச் சொல்ல வேண்டும். அப்போது சமூகப் பற்றுடன் கூடிய மாணவ சமூகம் உருவாகும். இந்த மூன்று அங்கங்​களையும் ஒன்றிணைப்​பதில் அனைத்துத் தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (31 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories