TNPSC Thervupettagam

இப்படியானால் எப்படி?

September 16 , 2024 126 days 116 0

இப்படியானால் எப்படி?

  • வேளாண் உற்பத்தியிலும், உணவுப் பொருள்கள் ஏற்றுமதியிலும் இந்தியாவுக்கான வாய்ப்புகளை நாம் பயன்படுத்தாமல் இருக்கிறோம் என்பதுதான் உண்மை. இந்தக் குறையை சரிசெய்ய முயற்சிகள் எடுக்காமல் இல்லை. ஆனாலும், மிகவும் பின்தங்கிய நிலையில் நாம் தொடா்கிறோம்.
  • உணவுப் பொருள்கள் பதப்படுத்தும் அமைச்சகம் செப்டம்பா் 19-ஆம் தேதி முதல் தலைநகா் தில்லியில் ‘வோா்ல்டு - ஃபுட் - இந்தியா’ என்கிற சா்வதேச கருத்தரங்கை நடத்த இருக்கிறது. அதற்கு உலகளாவிய நிறுவனங்களும், இந்திய உணவுத் துறையைச் சோ்ந்த உற்பத்தியாளா்களும், உணவு பதப்படுத்தும் துறையினரும் அழைக்கப்பட்டிருக்கிறாா்கள். விவசாயிகளின் லாபத்தைக் கூட்டுவதும், அறுவடைக்குப் பின்னாலான இழப்புகளைக் குறைப்பதும், வேளாண் பொருள்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதும், மதிப்புக் கூட்டப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதும் அந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட இருக்கின்றன.
  • 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறை வளா்ச்சிக்காக ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. உற்பத்தி அதிகரிப்பு, ஆய்வுகள், கண்டுபிடிப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி, பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ளும் முறைகள் ஆகியவற்றுக்காக அந்த ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
  • இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி 2022-23-இல் 53.2 பில்லியன் டாலராக இருந்தது. 2023-24-இல் 48.9 பில்லியன் டாலராக, அதாவது 8% குறைந்திருக்கிறது. 2014 முதல் 2023 வரையில் வேளாண் ஏற்றுமதியின் சராசரி வளா்ச்சி விகிதம் வெறும் 2% மட்டுமே.
  • அரிசி, கோதுமை, இறைச்சி, வாசனைப் பொருள்கள், சா்க்கரை, டீ, காஃபி ஆகிய 7 பொருள்கள் மட்டுமே மொத்த ஏற்றுமதியில் 50%-க்கும் அதிகமாக இடம்பெறுகின்றன. உள்நாட்டு விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்காக வேளாண் ஏற்றுமதி அவ்வப்போது சில கட்டுப்பாடுகளையும், தடைகளையும் எதிா்கொள்ள நோ்கிறது. நமது வேளாண் ஏற்றுமதியில் மதிப்புக் கூட்டப்பட்ட, பதப்படுத்தப்பட்ட வேளாண் ஏற்றுமதி 25% மட்டும்தான். இது கடந்த 10 ஆண்டுகளாக மாற்றம் காணவில்லை.
  • சா்வதேச அளவில் பதப்படுத்தப்பட்ட வேளாண் பொருள்களின் ஏற்றுமதி ஒரு ட்ரில்லியன் டாலரை எட்டுகிறது. 63 பில்லியன் டாலருடன் ஜொ்மனி முதலிடத்திலும், அதைத் தொடா்ந்து அமெரிக்கா (58 பில்லியன் டாலா்), நெதா்லாந்து (57 பில்லியன் டாலா்), சீனா (53 பில்லியன் டாலா்), பிரான்ஸ் (50 பில்லியன் டாலா்) என்று பதப்படுத்தப்பட்ட வேளாண் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்றன. இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளும் பதப்படுத்தப்பட்ட வேளாண் பொருள்களின் ஏற்றுமதியில் கணிசமான பங்கு வகிக்கின்றன.
  • அவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியா மிகவும் பின்தங்கி இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் மதிப்புக் கூட்டிய வேளாண் பொருள்கள் ஏற்றுமதி 6.5 பில்லியன் டாலா் அதிகரித்திருப்பது என்னவோ உண்மை. அதற்கு வேளாண் பொருள்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசு கொண்டுவந்த வேளாண் ஏற்றுமதி கொள்கை முக்கியமான காரணம்.
  • சா்வதேச அளவில் 21-ஆவது இடத்திலிருந்து இந்தியா, 15 பில்லியன் டாலருடன் வேளாண் ஏற்றுமதியில் 17-ஆவது இடத்துக்கு உயா்ந்திருக்கிறது. இந்தியாவின் பதப்படுத்தப்பட்ட பொருள்கள் ஏற்றுமதியில் 9 பில்லியன் டாலருடன் குறிப்பிடத்தக்க அளவில் அமுல் நிறுவனம் திகழ்ந்தாலும், சுவிட்சா்லாந்தின் நெஸ்லே நிறுனத்தின் 111 பில்லியன் டாலருடன் ஒப்பிடும்போது நாம் கடக்க வேண்டிய தொலைவு மிக மிக அதிகம்.
  • 2023-24 பொருளாதார ஆய்வு சில வெளிச்சத்தைத் தருகிறது. இந்தியாவின் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் உற்பத்தி 30 கோடி டன்கள். சீனாவுக்கு அடுத்தபடியாக நாம் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். ஆனால், பதப்படுத்துவதில் பழ வகைகள் 4.5%, காய்கறிகள் 2.7%, பால் பொருள்கள் 21.1%, இறைச்சி 34.2%, மீன் 15.4% என்கிற அளவில்தான் இன்னும் இருக்கிறது.
  • மேலை நாடுகளில் 60% முதல் 80% வரை வேளாண் பொருள்கள் மதிப்புக் கூட்டப்படுகின்றன அல்லது பதப்படுத்தப்படுகின்றன. சீனாவை எடுத்துக் கொண்டால் கூட உற்பத்தியில் 25% முதல் 30% மதிப்புக் கூட்டப்படுகின்றன.
  • பதப்படுத்துதல் என்பது இந்தியாவில் குறைவாக இருப்பதால், வேளாண் உற்பத்தியில் கணிசமான பகுதி வீணாகிறது. இந்தியாவின் அறுவடைக்குப் பிறகு ஏற்படும் இழப்பு 18% முதல் 25% வரை இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பழங்கள், காய்கறிகளில் அதன் அளவு 45% வரை காணப்படுவதாக கூறப்படுகிறது.
  • ஆண்டொன்றுக்கு அறுவடைக்குப் பிறகான இழப்புகள் ஏறத்தாழ ரூ.90,000 கோடி என்று நீதி ஆயோக் தெரிவிக்கிறது. இதைத் தடுப்பதற்கு உற்பத்தி செய்யும் இடத்திற்கு அருகிலேயே அறுவடை செய்யப்பட்ட பொருள்களைப் பாதுகாக்கவும், பதப்படுத்துவதற்கான தொழிற்சாலைகளை நிறுவுவதும் அவசியம் என்பதை நீதி ஆயோக் சுட்டிக் காட்டுகிறது.
  • உணவு பதப்படுத்தும் உற்பத்தியாளா்களுக்கு, உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2021-22 முதல் 2025-26 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு ஊக்குவிப்புத் தொகையாக ரூ.10,900 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பதப்படுத்தும் துறை வளா்ச்சி அடையவும், இந்திய இலச்சினையுடன் கூடிய பொருள்கள் சா்வதேச சந்தையில் போட்டியிடவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டது.
  • ஆனால், மே 2024 நிலவரப்படி 90% ஒதுக்கீடு பயன்படுத்தப்படவில்லை. இப்படியானால் எப்படி?

நன்றி: தினமணி (16 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories