- "அவருடைய புகழைப் பற்றி எழுதுவதற்கு எனக்கு ஒரு தங்கப் பேனா கொடுங்கள். அவருடைய பெயரை உச்சரிப்பதற்கு எனக்கு ஒரு தங்க நாக்கைக் கொடுங்கள்' என்று ஒரு பாரசீகக் கவிதை கூறுகிறது. இது மறைந்த பாரத ரத்னா ஆ.ப.ஜெ. அப்துல் கலாமுக்கும் மிகப் பொருத்தமாகும்.
- இந்தியர்களின் இதயங்களில் சிகரமாக உயர்ந்து நின்றவர். இந்தியாவின் மற்றொரு மகாத்மாவாக எளிமைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர்.
- "கனவு காணுங்கள்' என்று இந்திய இளைஞர்களையும், மாணவர்களையும் தட்டி எழுப்பியவர்.
அப்துல் கலாம்
- எளிய குடும்பத்தில் பிறந்தாலும் ஏற்றம் பெற முடியும் என்று புதிய நம்பிக்கையை விதைத்தவர். ஜாதியும், சமயமும் இல்லாத வீதியையும், விதியையும் உருவாக்கியவர். பட்டம், பதவிகளைத் தேடி அலையாதவர். புகழுக்கும், பாராட்டுக்கும் மயங்காதவர்.
- 2020-ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னதாகவோ ஒரு வளர்ந்த இந்தியா உருவாகும் என்பது வெறும் கனவு அல்ல. அது இந்தியர் பலரின் உள்ளங்களில் இருக்க வேண்டியதோர் தொலைநோக்குகூட அல்ல, ஒரு பணி இலக்கு. அதனை நோக்கி நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து செயல்படுவோம். வெற்றி காண்போம் என்பதே அவரது நோக்கமாக இருந்தது.
- "எங்கே மனதில் பயமின்றி தலைநிமிர்ந்து நிற்கிறார்களோ, எங்கே அறிவுடைமை அனைவருக்கும் பொதுவில் உள்ளதோ, எங்கே துண்டுதுண்டாக சிதறாத உலகம் உள்ளதோ, எனது தந்தையே, அங்கே எனது தேசம் விழித்தெழட்டும்' என்றார் கவிஞர் தாகூர். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அதே வழியில் தேசத்தின் முன்னேற்றத்தையே தம் முன்னேற்றமாக நினைத்தார்.
விண்வெளி ஆராய்ச்சித் துறை
- விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இந்தியாவைத் தூக்கி நிறுத்திய ஏவுகணை மனிதராக அவர் விளங்கினார். உலகத்தின் பார்வையை இந்தியாவின் பக்கம் திரும்பச் செய்த அறிவியல் மேதை.
- விண்வெளி ஆராய்ச்சி நிறுவனப் பணியிலிருந்து 1982-ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தின் இயக்குநராகப் பதவி ஏற்றார். நாட்டின் மிக முக்கியத் துறையான பாதுகாப்புத் துறையில் பல மாறுதல்களைச் செய்தார்.
- அந்நிய தாக்குதலிலிருந்து நாட்டைப் பாதுகாக்க புதிய ஏவுகணைத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்தார்.
- இந்தியப் பாதுகாப்பிற்காக இவர் வகுத்த ஒருங்கிணைந்த நெறிப்பட்ட ஏவுகணைத் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.388 கோடி நிதி ஒதுக்கியது. திட்டக் குழுவின் முடிவின்படி ஐந்து புது ரக ஏவுகணைத் திட்டத்துக்கு விஞ்ஞானி அருணாசலம் தலைமையில் 1983 ஜூலை 27-இல் தொடக்க விழா நிகழ்ந்தது.
திரிசூல் ஏவுகணை
- 1985 செப்டம்பர் 16 இந்திய ஏவுகணை வரலாற்றில் புதிய மைல்கல். ஸ்ரீஹரிகோட்டா தளத்திலிருந்து திரிசூல் ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. ரஷிய நாட்டின் எஸ்.ஏ.6 ரக ஏவுகணைக்கு நிகரான 55 கிலோ ஆயுதங்களை சுமார் 25 கி.மீ. தொலைவில் வீசும் திறன் கொண்டது. வானில் பறந்து செல்லும் விமானத்தைத் தரையிலிருந்து பறந்து சென்று குறி தவறாமல் தாக்கும் திறன் கொண்டது.
- இந்தியாவின் குடியரசுத் தலைவராக 2002 முதல் 2007 வரை பதவி ஏற்றுச் சிறப்பித்தார். ஐந்தாண்டு காலமும் எளிமையின் சின்னமாய்த் திகழ்ந்தார். விருந்து மற்றும் வீண் ஆடம்பரங்களைத் தவிர்த்தார். அந்த உயரிய பதவிக்கு ஒரு மரியாதையை உருவாக்கினார். இரண்டே பெட்டிகளுடன் குடியரசுத் தலைவர் மாளிகைக்குக் குடிபெயர்ந்து, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதே இரண்டு பெட்டிகளுடன் வெளியேறிய ஒரே குடியரசுத் தலைவர் கலாம் மட்டுமே.
- குடியரசுத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய பின் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றி, கோடிக்கணக்கான மாணவர்களைச் சந்தித்து, அவர்களைச் சிந்திக்க வைத்தார்.
மாணவர்களுக்கு அவர் கூறிய அறிவுரைகளில் தலையாயது, கனவு காணுங்கள் என்பது.
கனவு
- "கனவு என்பது தூங்கும்போது வருவதல்ல. நம்மைத் தூங்க விடாமல் செய்வதே கனவு' என்றார். கனவு காணுங்கள். அதிலிருந்து எண்ணங்கள் வெளிப்படும். எண்ணத்திலிருந்து செயல்கள் பிறக்கும்.
- நாடு சுதந்திரம் அடைய வேண்டும் எனப் பெரியவர்கள் கண்ட 90 ஆண்டுக் கனவு எண்ணங்களாகி 1947-இல் செயல்வடிவம் பெற்றது.
- நாட்டின் தென்கோடியான ராமேசுவரத்தில் எளிய குடும்பத்தில் 1931 அக்டோபர் 15-இல் பிறந்து, இடைவிடாத முயற்சியால் முன்னுக்கு வந்து தமது வாழ்க்கையையே நாட்டுக்காக அர்ப்பணித்தவர், வடகோடியான மேகாலயத்தின் தலைநகரான ஷில்லாங்கில் அவருக்குப் பிடித்தமான மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி அவர் உயிர் பிரிந்தது.
- நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.
- நாடெங்கும் கலாமின் மறைவுக்காகக் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளில் மேற்காணும் அவரது வாசகங்களே இடம்பெற்றன.
இந்தியா
- "இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு. வருங்காலத்தில் இந்தியாவின் முன்னேற்றம் உலக நாடுகள் அதிசயிக்கும் வகையில் இருக்கும். அதுபோன்ற சமயத்தில் மீண்டும் இந்தியாவில் நான் பிறக்க வேண்டும்' என்று ஒரு நேர்காணலில் அப்துல் கலாம் கூறினார். அப்துல் கலாமுக்கு சொந்த வீடு கிடையாது.
- அவர் ராமேசுவரம் வரும் போதெல்லாம் தனது அண்ணன் வீட்டில் தங்குவார். அவர் தன்னைப் பற்றிச் சிந்திக்காமல் தம் நாட்டு மக்களைப் பற்றியே அதிகம் சிந்தித்தார். அவர் தனக்காக எந்தச் சொத்தையும் சேர்க்கவில்லை. அவர் தனது சொத்தாக மாணவர்களையும், இளைஞர்களையுமே சேர்த்து வைத்தார்.
கவிதை
- உங்களுக்கு இறக்கைகள் உள்ளன தவழ முயற்சிக்காதீர்கள் பறக்கக் கற்றுக் கொள்ளுங்கள் உச்சத்திற்குப் பறந்து செல்லுங்கள் என்பது அவரது கவிதை. மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இது ஒரு பாடம்; வாழ்க்கைக்கான பாடம்; வெற்றிக்கான பாடம்.
- அப்துல் கலாம் பன்முகத் திறன் கொண்டவராக விளங்கினார். அறிவியல் அறிஞர் மட்டுமல்லாமல் இலக்கிய நாட்டம் கொண்டவராகவும் திகழ்ந்தார். எழுத்தாளராகவும், கவிஞராகவும், இசை வல்லுநராகவும் அவரால் எப்படி இருக்க முடிந்தது? இதற்காக அவரால் எப்படி நேரம் ஒதுக்க முடிந்தது? பலரது கேள்வி இதுதான்.
- புத்தகங்கள் எனது நெருங்கிய நண்பர்கள் என்று கூறுவார். ஏராளமான புத்தகங்களைப் படிக்கும் இவர், புத்தகங்களை நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும் என்று மாணவர்களிடம் கூறுவார்.
- கண்ணீரைத் துடைப்பதற்கும், மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவும் புத்தகங்கள் துணையாக இருப்பதாகக் கூறினார்.
- அப்துல் கலாம் சிறந்த எழுத்தாளர். அவர் 19 நூல்கள் எழுதியுள்ளார். "அக்னிச் சிறகுகள்' மற்றும் "இந்தியா 2020' நூல்கள் பலராலும் பலமுறை படிக்கப்பட்டு பாராட்டப்பட்டவை.
அக்னிச் சிறகுகள்
- "அக்னிச் சிறகுகள்' கலாமின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூலாகும். "இந்தியா 2020' என்னும் நூலில் இந்தியா உலகின் 4-ஆவது பெரிய வல்லரசு நாடாக மலரும் என்று தெரிவித்துள்ளார்.
- இந்தியா வல்லரசு நாடாகவும், வளர்ந்த நாடாகவும் மாறுவதற்கு உரிய வரைவுத் திட்டத்தையும் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
- அப்துல் கலாமுக்கு பத்மபூஷண் (1981), பத்ம விபூஷண் (1990), பாரத ரத்னா (1997) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் அவருடைய சிறந்த சேவை மதிக்கப்பட்டது; விருதுகளுக்குப் பெருமை சேர்த்தார்.
- முயற்சியின் முன்மாதிரியாக அப்துல் கலாம் விளங்கினார். தன்னலம் சிறிதும் இல்லாத வாழ்க்கைப் பயணத்தை நாட்டுக்காகவே செலவழித்தார். அவர் திருக்குறளை நேசித்தார். அதனையே பின்பற்றினார். "உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்' என்ற குறள் வழியை எல்லோருக்கும் எடுத்துரைத்தார். அடுத்த தலைமுறைக்கும் அறிவுறுத்தினார்.
எடுத்துகாட்டு
- எங்கு பேசினாலும் திருக்குறளை எடுத்துக்காட்டாகக் கூறியே நிறைவு செய்தார்."முடியும் என்று நம்பும் மனிதனால்தான் வரலாறுகள் படைக்கப்பட்டுள்ளன. கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. ஆங்கில ஆதிக்கத்தை எதிர்க்க முடியாது என்று நினைத்திருந்தால் நமக்குச் சுதந்திரம் கிடைத்திருக்காது' என்றார் அவர்.
- வாழ்நாள் முழுவதும் அவர் மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தார். நிகழ்ச்சி ஒன்றில் குத்துவிளக்கு ஏற்றுவதற்கு முன்பு அவர் கூறிய விளக்கம் சிந்திக்கத்தக்கது: "குத்துவிளக்கு இந்துக்களின் அடையாளம். அதற்கு ஒளிதரும் மெழுகுவர்த்தி கிறிஸ்தவர்களின் அடையாளம். அதை ஏற்றும் நான் இஸ்லாமியன். இதுதான் எங்கள் இந்தியா' என்றார் கலாம்.
- மாமனிதர்கள் எப்போதோ ஒருமுறை தோன்றுகிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தோன்றாமலேயே பல நூற்றாண்டுகள் கழிந்து போவதும் உண்டு. முதலில் அவர் வாழ்ந்து காட்டுகிறார். பிறகு மற்றவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று கூறுகிறார். பேச்சுக்கும், செயலுக்கும் வேற்றுமை இல்லாமல் வாழ்கிறவர்களையே உலகம் தேடுகிறது.
- "குத்துவிளக்கு இந்துக்களின் அடையாளம். அதற்கு ஒளிதரும் மெழுகுவர்த்தி கிறிஸ்தவர்களின் அடையாளம். அதை ஏற்றும் நான் இஸ்லாமியன். இதுதான் எங்கள் இந்தியா''-- அப்துல் கலாம்.
நன்றி: தினமணி (15-10-2019)