உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்ந்து பிரச்னைக்குள்ளாகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் "கொலீஜியம்' பரிந்துரைக்கும் சில பெயர்கள் அரசுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருப்பது மட்டுமே அதற்குக் காரணம் என்று கூறிவிட முடியாது.
கொலீஜியம்
உத்தரகண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி கே.எம்.ஜோசப், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு "கொலீஜியம்' பரிந்துரைத்தபோது, அரசு சற்று தயக்கம் காட்டியது.
பரிந்துரையை மறுபரிசீலனை செய்யும்படி திருப்பி அனுப்பியது. அவருக்குப் பதவி உயர்வு தரப்பட்டேயாக வேண்டும் என்று "கொலீஜியம்' பிடிவாதமாக இருந்ததால், மத்திய அரசு அந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு வழிகோலியது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் சர்ச்சைக்குள்ளானது. உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பிரதீப் நந்திரஜோகையும், தில்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனனையும் முந்தைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான "கொலீஜியம்' கடந்த டிசம்பர் மாதம் பரிந்துரைத்திருந்தது.
பரிந்துரை
தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பதவியேற்றதைத் தொடர்ந்து, அந்தப் பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டு, கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரியையும், தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னாவையும் பரிந்துரைத்தது. மத்திய அரசும் வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டு அவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இப்போது, மீண்டும் ஒரு "கொலீஜியம்' பரிந்துரை சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அடங்கிய "கொலீஜியம்', ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அனிருத்தா போûஸயும், குவாஹாட்டி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.எஸ்.போபண்ணாவையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப் பரிந்துரைத்திருந்தது.
அந்தப் பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்யும்படி உச்சநீதிமன்றத்தை அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. எதிர்பார்த்தது போலவே, அரசின் வேண்டுகோளை "கொலீஜியம்' நிராகரித்திருக்கிறது.
நீதிபதி கே.எம்.ஜோசப் பிரச்னை போலவே, உச்சநீதிமன்ற "கொலீஜிய'த்தின் முடிவுக்குக் கட்டுப்பட்டு, அதன் பரிந்துரைகளை இந்த முறையும் அரசு ஏற்றுக்கொள்ளும் என்று நம்பலாம். ஆனால், எத்தனை காலம்தான் நீதித் துறையும், சட்ட அமைச்சகமும் இதுபோல பரிந்துரைகளைப் பந்தாடிக் கொண்டிருக்கப் போகின்றன என்கிற கேள்வி எழுகிறது.
உலகிலேயே நீதிபதிகளை நீதிபதிகளே தேர்ந்தெடுத்து நியமித்துக் கொள்ளும் விசித்திரமான நடைமுறையைப் பின்பற்றும் ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.
காரணம்
இப்போது இருக்கும் நீதிபதிகளில் பலரும், நீதிபதிகளாகவும், தலைமை நீதிபதிகளாகவும் உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் இருந்தவர்களின் வாரிசுகள் என்பதிலிருந்து, திறமை மட்டுமே அவர்களது நியமனத்துக்குக் காரணமல்ல என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதனால்தான் நீதிபதிகள் நியமனத்துக்கான "கொலீஜியம்' முறை அடிக்கடி விவாதத்துக்கும், விமர்சனத்துக்கும் உள்ளாகி வருகிறது.
உயர்நீதிமன்றங்களிலும், கீழமை நீதிமன்றங்களிலும் நூற்றுக்கணக்கில் நீதிபதிகள் இடம் நிரப்பப்படாமல் இருக்கின்றன. கடந்த மாத இறுதி நிலவரப்படி, உயர்நீதிமன்றங்களில் மட்டும் 396 நீதிபதிகள் இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
ஜார்க்கண்ட், குவாஹாட்டி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் மட்டுமல்லாமல், ஹிமாசல பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட "கொலீஜிய'த்தால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நான்கு நியமனங்களும் மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 31 நீதிபதிகள் இடங்களும் நிரப்பப்பட்டுவிடும்.
"கொலீஜியம்' நீதிபதிகள் நியமன முறை என்பது, 1993-இல் இரண்டாவது நீதிபதிகள் வழக்கில் உச்சநீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட வழிமுறை. இதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் கிடையாது.
அரசியல் சாசனத்தில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் "கலந்தாலோசித்து' நீதிபதிகளை அரசு நியமனம் செய்யும் என்றுதான் சட்டப்பிரிவு 124, 127-இல் கூறப்பட்டுள்ளது. "கலந்தாலோசித்து' என்பதற்கு "பரிந்துரையின் அடிப்படையில்' என்கிற புதிய விளக்கத்தை, 1993 இரண்டாவது நீதிபதிகள் வழக்கில் வழங்கி, நீதிபதிகளை நியமித்துக் கொள்ளும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் தனக்குத்தானே எடுத்துக் கொண்டுவிட்டது.
தேசிய நீதிபதிகள் நியமனச் சட்டம்
அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய நீதிபதிகள் நியமனச் சட்டமும், உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக் கொள்ளும் "கொலீஜியம்' முறை தொடரத்தான் வேண்டுமா; அப்படித் தொடர்வதாக இருந்தால், நீதிபதிகள் நியமனத்தில் அரசுக்குத் தொடர்போ, தலையீடோ இருக்கவே கூடாதா; நியமனம் குறித்த வெளிப்படைத்தன்மை இல்லாமல் இதேபோலத்தான் தொடரப் போகிறதா போன்ற கேள்விகள் எழுகின்றன.
அரசியல் சாசன அங்கீகாரம் பெற்ற நீதிபதிகள் நியமன அமைப்பு ஏற்படுத்தப்படுவதுதான் இதற்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும். தன்னிச்சையாகவும் வெளிப்படைத்தன்மை இல்லாமலும் நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக் கொள்வது தவறு! நீதிபதிகள் நியமனம் அரசின் வசம் ஒப்படைக்கப்படுவதும் தவறு! நீதிபதிகள் நியமனம் இதுபோல அடிக்கடி விவாதப் பொருளாவது மிகப் பெரிய தவறு!