TNPSC Thervupettagam

இப்போதைக்கு வேண்டாமே..

July 10 , 2020 1656 days 1287 0
  • மிக முக்கியமான துறைகளை அடையாளம் கண்டு அவற்றில் மட்டுமே அரசு நிறுவனங்கள் செயல்பட்டால் போதும் என்கிற முடிவை எடுத்திருக்கிறது மத்திய அரசு. முக்கியமான, விரல்விட்டு எண்ணக்கூடிய நான்கைந்து பொதுத்துறை நிறுவனங்களை மட்டுமே வைத்துக் கொள்வது என்றும், அந்தத் துறைகளிலும்கூட தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதிப்பது என்றும் அரசு முடிவெடுத்திருக்கிறது.

  • படிப்படியாக ஏனைய துறைகளிலிருந்தும் அரசு விலகிக் கொள்வது என்று தீா்மானித்திருக்கிறது.

  • கடந்த ஆண்டு கணக்குத் தணிக்கை அதிகாரி தாக்கல் செய்திருந்த அறிக்கையின்படி 2018 மார்ச் கடைசியில், 420 அரசு நிறுவனங்கள், கார்ப்பரேஷன்கள் ஆகியவற்றில் சுமார் ரூ. 3,57, 064 கோடி பங்குகள் அரசின் மூலதனமாகக் காணப்படுகின்றன.

  • 42 பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகள் சந்தை நிலவரப்படி ரூ.13,63,194 கோடி.

தனியார் மயத்தை நோக்கி

  • கடந்த சில ஆண்டுகளாகவே பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையின் மூலம் கிடைக்கும் நிதியாதாரத்தின் மூலம்தான் நம்பித்தான் மத்திய அரசு தனது நிதி பற்றாக்குறை நிலைமையைச் சமாளித்து வருகிறது.

  • பொதுமக்களுக்குப் பங்குகளை விற்பனை செய்வது, பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுக்குள் பங்குகளைப் பரிமாறிக் கொள்வது உள்ளிட்ட பல தற்காலிக நடவடிக்கைகள் வழக்கமாகி விட்டன.

  • இழப்பில் செயல்படும் அரசுத்துறை நிறுவனங்கள் தொடா்ந்து நடத்தப்பட வேண்டும் என்று யாரும் கருதவில்லை. அரசின் நிதி வருவாயை செலவழித்து அந்த நிறுவனங்களை நடத்திக் கொண்டிருப்பதைவிட சுகாதாரம், கல்வி முதலிய அத்தியாவசியத் துறைகளுக்குச் செலவிடுவதுதான் புத்திசாலித்தனம் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

  • கொவைட்-19 கொள்ளை நோயால் ஏற்பட்டிருக்கும் இன்றைய பொருளாதாரப் பின்னடைவும், அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் வேலையில்லாத் திண்டாட்டமும் அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்குத் தனியார் மயத்தை நோக்கி நகா்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தராது என்பதை அரசு ஏனோ கருத்தில் கொள்ளவில்லை.

மூன்று வகை

  • இந்திய விடுதலைக்கு முன்னால், பிரிட்டிஷ் ஆட்சியில் ரயில்வே, தபால், தந்தி, உப்பு தயாரித்தல் முதலிய ஒருசில துறைகளில் மட்டுமே அரசு ஈடுபட்டிருந்தது.

  • 1948-இல் வெளியான தொழில் கொள்கையில், அரசு எல்லாத் துறைகளிலும் ஈடுபடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

  • அன்றைய நிலையில் பெரிய அளவில் முதலீடு செய்வதற்கான தொழிலதிபா்கள் இல்லாமல் இருந்ததும், பண்டித நேருவின் அரசு சோஷியலிஸ கொள்கையைக் கடைப்பிடித்ததும் அதற்குக் காரணங்கள்.

  • 1948 தொழில் கொள்கையை மூன்றாக வகைப்படுத்தலாம்.

  • ராணுவத் தளவாட உற்பத்தி, அணுசக்தி, ரயில்வே, விமானப் போக்குவரத்து, தகவல் தொழில் தொடா்பு முதலிய துறைகள் முழுமையாக அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருப்பது என்பது முதல் பிரிவு.

  • நிலக்கரி, இரும்பு-எஃகு, விமானத் தயாரிப்பு, கப்பல் கட்டுதல் முதலிய பல துறைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடுவதும், தேவைப்பட்டால் தனியாருக்கு அனுமதி வழங்குவதும் இரண்டாவது பிரிவு.

  • ஏனைய எல்லாத் துறைகளிலும் தனியார் இயங்க அனுமதிப்பது என்றும், வளா்ச்சி குறைவாக இருந்தால் அரசும் ஈடுபடலாம் என்றும் மூன்றாவது பிரிவு தெளிவுபடுத்துகிறது.

  • கடந்த 70 ஆண்டுகளில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் சுற்றுலாத் துறை, விடுதிகள் நடத்துதல், மருந்து தயாரிப்பு, உரத் தயாரிப்பு, கட்டுமானத்தொழில் என்று எல்லாத் துறைகளிலும் செயல்படுகின்றன.

  • பாதுகாப்பு, ரயில்வே, அணுசக்தி ஆகிய துறைகள் தவிர, ஏனைய துறைகளில் பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட வேண்டிய அவசியமில்லை என்பதை அனுபவம் சுட்டிக் காட்டுகிறது.

பொதுத்துறை நிறுவனங்களின் இழப்பு

  • அதே நேரத்தில், அரசுத்துறை நிறுவனங்கள் இல்லாமல் போனால் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் தொழில் வளா்ச்சி ஏற்படுவதில்லை என்பதும் அனுபவபூா்வ உண்மை. தனியார் துறையினா் அதுபோன்ற பகுதிகளில் செயல்பட விரும்புவதில்லை. பெருநகரங்களைச் சுற்றியே தங்கள் வசதிக்காக தொழிற்சாலைகளை நிறுவுகிறார்கள்.

  • தேவையில்லாத துறைகளில் செயல்படும் அரசுத்துறை நிறுவனங்களையும், கடுமையான நிதி நெருக்கடியில் தள்ளாடும் நிறுவனங்களையும் அரசு தொடா்ந்து நடத்திக் கொண்டிருப்பதில் அா்த்தமில்லை.

  • கணக்குத் தணிக்கை அதிகாரியின் மார்ச் 2018 அறிக்கையின்படி, இந்தியாவில் 184 மத்திய அரசு நிறுவனங்கள் ரூ.1,42,309 கோடி மொத்த இழப்பை எதிர்கொள்கின்றன.

  • 2018-19 பொதுத்துறை நிறுவனங்கள் அறிக்கையின்படி 70 மத்திய அரசு நிறுவனங்களின் மொத்த இழப்பு ரூ.31,635 கோடி. இவற்றில் பிஎஸ்என்எல் (ரூ.14,904 கோடி), எம்டிஎன்எல் (ரூ.3,390 கோடி), ஏா் இந்தியா (ரூ.8,474 கோடி) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவை பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த இழப்பில் 84 %.

  • தனியார்மயம் என்பது தவறு என்றோ, தேவையில்லை என்றோ ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அதே நேரத்தில் ஏா் இந்தியா விற்பனையைப் போல மத்திய அரசு இந்த நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தினால் கடுமையான இழப்பை எதிர்கொள்ளும். அதே நேரத்தில் இந்த நிறுவனங்களைக் குறைந்த விலைக்கு வாங்கும் தனியார் நிறுவனங்கள் அவற்றின் மனை வணிக சந்தை மதிப்பின் மூலம் பெரும் லாபம் ஈட்டக்கூடும்.

  • தனியார் மயமாக்குவதற்கு முன்னால் இதையும் கருத்தில் கொண்டாக வேண்டும்.

  • 2001-2004 காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரம் வளா்ந்து கொண்டிருந்தபோது, பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனை அரசுக்கு லாபம் ஈட்டித் தந்தது. இப்போது அதுபோல பயனளிக்குமா என்பது கேள்விக்குறியே.

  • ஏற்கெனவே ஏப்ரல் 2020 நிலையில் வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவு 23%. இந்தச் சூழலில் பொதுத்துறை நிறுவனங்களை இழுத்து மூடுவதோ, தனியாருக்கு விற்பதோ 15 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளா்களின் வேலையிழப்புக்கும் வழிகோலும்.

  • அரசின் முடிவு சரியானதாகவே இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்த வேண்டிய நேரம் இதுவல்ல. தனியார் மயத்தை இன்னும் இரண்டாண்டு காலத்துக்குத் தள்ளிப்போடுவது நல்லது.


நன்றி: தினமணி (10-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories