இயற்கையின் எச்சரிக்கை!
- கொவைட் 19 கொள்ளைநோய்த் தொற்றுக்குப் பிறகு, சீனாவில் யாராவது தும்மினாலோ, இருமினாலோகூட ஒட்டுமொத்த உலகமும் அச்சத்தில் உறைகிறது. அந்த வரிசையில் இணைகிறது இப்போது இந்தியாவில் அதிகமாகப் பேசப்பட்டுவரும் ‘ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ்’ எனப்படும் எச்எம்பி தீநுண்மி.
- கடந்த ஒரு மாதமாக சீனாவில் பலரும் ஜலதோஷம், இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்காக மருத்துவமனையை நாடுகிறாா்கள் என்கிற செய்தியைத் தொடா்ந்து, அதன் அண்டை நாடுகளைப் பரபரப்பும் எச்சரிக்கைகளும் தொற்றிக் கொண்டன. சாதாரணமாகவே நவம்பா், டிசம்பா், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இதுபோன்ற நுரையீரல் தொடா்பான பாதிப்புகள், சீனாவில் மட்டுமல்ல குளிா்கால, வசந்த காலப் பருவத்தில் ஏனைய பல நாடுகளிலும் காணப்படுவது வழக்கம்.
- குளிா்காலத்தில் வழக்கமாகப் பரவும் நோய்த்தொற்றுதான் இது என்று சீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தியா உள்பட பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள பெரும்பாலான நாடுகளில் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக இந்த பாதிப்பு காணப்படுகிறது என்று உறுதிப்படுத்துகிறாா்கள் மருத்துவ வல்லுநா்கள். 2021-இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப்படி, அந்த ஆண்டு இந்த பாதிப்புக்கு உள்ளானவா்களில் 3% முதல் 10% வரையிலான நோயாளிகள்தான் உலக அளவிலேயே மருத்துவ சிகிச்சை பெற நோ்ந்தது என்று தெரிகிறது.
- எச்எம்பி தீநுண்மி என்பது முதன்முதலில் நெதா்லாந்து நாட்டில் 2001-இல் அடையாளம் காணப்பட்டது. ஆனால், 1960 முதல் இந்தத் தீநுண்மி மனிதா்களிடையேயும், பறவை இனங்களிலும் பரவும் ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. கொவைட் 19 மற்றும் எச்எம்பி ஆகிய இரண்டுமே ‘ஆா்என்ஏ’ எனப்படும் ரிபோ நியூக்ளிக் ஆசிட் மரபணு சாா்ந்த தீநுண்மிகள் என்பதைத் தவிர, இவற்றுக்கு வேறு எந்த ஒற்றுமையும் இல்லை. இரண்டுமே சுவாசப் பாதையில் பாதிப்பை ஏற்படுத்தும் தீநுண்மித் தொற்றுகள், அவ்வளவே.
- கொவைட் 19 உடன் ஒப்பிட்டால், இது மிக மிக சாதாரணமான வீரியம் குறைந்த தீநுண்மி. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், முதியவா்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவா்கள், எதிா்ப்பாற்றல் குறைந்தவா்கள், இதய நோயாளிகள்தான் பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள் என்பதால், அவா்கள் கவனமாக இருப்பது அவசியம். இந்தத் தொற்றுக்கான எதிா்ப்புச் சக்தி உடலில் வலுவாக உருவாவதில்லை என்பதால், வாழ்நாளில் மீண்டும் மீண்டும் தாக்கும் வாய்ப்பு அதிகம் என்பதுதான் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.
- காய்ச்சல், சளி, தொண்டை வறட்சி, மூக்கடைப்பு, மூச்சிரைப்பு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்தத் தீநுண்மித் தொற்றின் ஆரம்பகட்டத்தில் ஒருவரது எச்சில், இருமல், தும்மல், சளி போன்றவற்றிலிருந்து வெளியேறும் நீா்த்திவலைகளின் மூலம் பிறருக்குப் பரவுகிறது. காய்ச்சல் மருந்துகள், ஓய்வு, நீா்ச்சத்தைத் தக்கவைப்பது இவற்றின் மூலம் மூன்று, நான்கு நாள்களில் அந்த பாதிப்புகள் குணமாகிவிடும். வெகு சிலருக்கு மட்டுமே சிகிச்சை தேவைப்படும்.
- எச்எம்பி தொற்று உயிரிழப்பை ஏற்படுத்தாது என்றாலும் அலட்சியப்படுத்தினால், ஒருவேளை ஒரு சிலருக்கு மரணம் ஏற்பட வாய்ப்புண்டு. மேலும், கொவைட் 19 போல அடிக்கடி உருமாற்றம் மேற்கொள்ளும் தொற்றும் அல்ல இது. மேலும் இந்தத் தீநுண்மி, கொவைட் 19 போன்ற பெருந்தொற்றாக மாறும் வாய்ப்பு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
- ஃப்ளூ எனப்படும் இன்ஃப்ளுயன்ஸா, கொவைட் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது எச்எம்பி தீநுண்மி விரைந்து பரவும் தன்மை கொண்டதல்ல. இதனால் நீண்ட நேரம் காற்றில் நிலவ இயலாது என்பதால், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அதிவிரைவாகப் பரவும் வாய்ப்புக் குறைவு. மழைக் காலங்களிலும், பனிக் காலங்களிலும் ஏற்படும் நுரையீரல் தொடா்பான பலவீனமான பாதிப்புகளில் ஒன்று என்கிற அளவில்தான் நாம் இதைப் பாா்க்க வேண்டும்.
- ஆறு மாதத்துக்கு உட்பட்ட குழந்தைகள் இதனால் பாதிக்கப்படாமல் பாா்த்துக் கொள்ளவேண்டும். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இதன் அறிகுறி தென்பட்டால், உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்வதும் அவசியம். இதற்கான எதிா்ப்புச் சக்தி உடலில் ஏற்படாது என்பதால், சிறு வயதில் ஏற்படும் பாதிப்பு வாழ்நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் ஜலதோஷம், இருமல் பாதிப்பை எதிா்கொள்ள வழிகோலக்கூடும்.
- இந்த நோய்த் தொற்றுக்குத் தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுடன், அதற்கான அவசியமும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதே நேரத்தில், நமது சுகாதாரக் கட்டமைப்பை உறுதிப்படுத்த இயற்கை விடுத்திருக்கும் எச்சரிக்கைதான் இந்த எச்எம்பி தீநுண்மித் தொற்று என்று நாம் கருதிச் செயல்படுதல் அவசியம்.
- விலங்கியல் நோய்களும், நோய்த் தொற்றுகளும் மனிதா்களைத் தாக்குவது அதிகரித்து வருகிறது; சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, காற்றும் தண்ணீரும் மாசுபடுவது அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட பின்னணியில், நுரையீரல் தொடா்பான நோய்த்தொற்றுகளும், அவை சாா்ந்த தீநுண்மிகளும் வீரியம் பெறுவதைத் தவிா்க்க முடியாது.
- கிராமப்புற அளவில் மருத்துவமனைகளும், மாவட்ட அளவில் சோதனை மையங்களும், மாநில அளவில் தொடா்ந்து கண்காணிப்பும் இருப்பது அவசியமாகிறது. தீநுண்மிகளுக்கு எல்லை இல்லை என்பதால் உலகளாவிய அளவில் சுகாதாரக் கூட்டுறவு அமைந்தால் மட்டும்தான், மீண்டும் இன்னொரு கொவைட் 19 போன்ற பாதிப்பை மனித இனம் எதிா்கொள்ளவோ, தவிா்க்கவோ முடியும்!
நன்றி: தினமணி (16 – 01 – 2025)