TNPSC Thervupettagam

இயற்கை 24X7 - 49: அசல் அறிவியலின் குரல்

April 9 , 2023 654 days 393 0
  • போலந்து நாட்டில் ஐ.நா.வின் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் பேராசிரியர் ஆண்டர்சன் என்பவரும் மார்க் மொரேனோ என்பவரும் கலந்துகொண்டனர். விவாதத்தின் போது மொரேனோ அடிக்கடி மூக்கைப் பொத்தியபடியே விவாதம் செய்தார். அதைக் கவனித்த ஆண்டர்சன் ‘அந்த நாற்றம் என்னிடம் இருந்துதான் வருகிறது. காலநிலை மாற்றத்துக்கு ஏதோ என்னால் முடிந்த தியாகம்’ என்றாராம். புரியவில்லையா?
  • காலநிலை மாற்றத்தைத் தவிர்க்கத் தனிநபரின் பொறுப்பாக, ஒருவர் தினமும் குளிக்கக் கூடாது என்கிற பரப்புரை ஐரோப்பிய நாடுகளில் நடக்கிறது. அதைத் தீவிரமாகப் பின்பற்றுபவர்தான் ஆண்டர்சன். குளிர் நாட்டிலேயே மூக்கைப் பிடித்துக்கொள்ள நேர்கிறது என்றால், வெப்ப மண்டலப் பகுதியில் என்னவாகும்? இப்படிச் செய்வது சூழலியல் ஆர்வலர்களின் மனதில் குற்றவுணர்வை உருவாக்கி, அவர்களை அடிப்படைவாதம் நோக்கித் தள்ளும் உத்தி. அதே நேரத்தில் நட்சத்திர விடுதிகளின் நீச்சல் குளங்கள் எதுவும் இழுத்துப் பூட்டப்பட மாட்டாது.

தொழில்நுட்பம் காப்பாற்றுமா?

  • இயற்கையைக் காப்பாற்றுகிறோம் என்கிற பெயரில் இதுபோன்ற ‘அடையாள’ செயல்பாடுகள் ஒருபுறம் என்றால், மறுபுறம் இதற்கு நேர் எதிராக இயற்கையைத் தொழில்நுட்பங்களால் காப்பாற்றிவிடலாம் என்கிற நம்பிக்கை.
  • எனவேதான், அனைத்துச் சுற்றுச்சூழல் சிக்கல்களையும் தொழில்நுட்பத்தால் தீர்த்துவிடலாம் எனப் பல அரசியல்வாதிகள் நம்புவது குறித்து வருந்துகிறார் ஜேம்ஸ் லவ்லாக். உலகைக் கடவுள் காப்பாற்றுவார் என்று நம்புவதுபோல, உலகை அறிவியல் காப்பாற்றி விடும் என்று நம்புவதும் மூடநம்பிக்கையே.
  • தனது ‘சூழலியல் புரட்சி’ என்கிற நூலில் பசுமை மார்க்சியச் சிந்தனையாளரான ஜான் பெல்லமி ஃபாஸ்டர் ‘முதலீட்டுக்குப் பின்னால்’ என்கிற நூலிலிருந்து அதன் ஆசிரியர் இஸ்ட் வான் மெசாரோஸ் கூறியதை எடுத்துக்காட்டியிருப்பார். “நம் அனைத்துச் சிக்கல்களையும் இறுதியில் அறிவியல் தொழில்நுட்பத்தால் தீர்த்துவிடலாம் என்று நம்புவது, பில்லி சூனியத்தை நம்புவதைவிடக் கேடு கெட்டது.”

வாழ்க்கையை விற்கிறோம்

  • இப்போது நாம் செலவழிப்பது பணமல்ல; நீர், நிலம், காற்று உள்ளிட்ட இயற்கை வளங்களையே. இறுதியாக, புவியில் நாம் வாழும் வாழ்க்கையையே விற்றுக்கொண்டிருக்கிறோம்” என்பார் எழுத்தாளர் எடுவார்டோ கலியானோ. நாம் இதை இன்னும் உணரவில்லை. இன்றைய தொழில்நுட்பங்கள் வரம்பின்றி இயற்கையைச் செலவழிக்கவே கற்றுத் தருகின்றன.
  • முதலில் ஒரு தொழில்நுட்பம் அறிமுகமாகிறது என்றால், அதன் நன்மைகள் யாருக்குச் செல்கிறது? தீமைகள் யாருக்குச் செல்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். நன்மை நிறுவனங்களுக்கும், தீமை மக்களுக்கும் செல்கின்றன என்றால் அதன் பெயர் தொழில்நுட்பம் அல்ல, அது சுற்றுச்சூழல் அரசியல்.

விபரீதத் தீர்வு

  • ஒரு நிகழ்வை இங்கு விளக்குவது பொருத்தமாக இருக்கும். மரபணு மாற்றம் ஏதோ கடுகிலும் கத்திரிக்காயிலும் மட்டுமே வரப்போகிறது என்று நம்மில் பலரும் நினைத்துக் கத்திக்கொண்டிருக்கிறோம். மரபணு மாற்றம் மனிதர்களுக்கு ஏற்படுத்தப்போகும் ஆபத்தை இன்னும் யாரும் அறியவில்லை.
  • ஒருமுறை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண பெர்க்லே பல்கலைக்கழகக் கருத்தரங்கு ஒன்றில் அறிஞர் ராமச்சந்திர குஹா கலந்துகொண்டார். அதில், பங்கேற்ற ஓர் அறிவியலாளர் நுகர்வைக் குறைக்க நவீன மரபணு வளர்ச்சியில் தீர்வு இருக்கிறது என்று பேசினார். என்ன தீர்வு தெரியுமா?
  • மனிதர்கள் சராசரியாக ஆறடி உயரமும் அறுபது கிலோ எடையும் உடையவராக இருப்பதால்தான் நுகர்வு அதிகமாகிறதாம். அதனால், மரபணு மாற்றத்தின் வழி மனிதர்களை இரண்டடி உயரமும், 20 கிலோ எடையோடும் கூடிய குறுமனிதர்களாக உருவாக்கிவிட்டால் போதுமாம்.
  • ஆனால், மூளை மட்டும் அதே ஆளுமை நுட்பத்தோடு இருக்குமாம். அத்தகைய குறுமனிதர்கள் குட்டிக் கார்களை மெலிந்த சாலைகளில் ஓட்டுவார்களாம். வசிப்பதற்கு புலிக்கூண்டு போன்ற வீடுகள் போதுமாம். இன்றைய அமெரிக்கர்கள் நுகரும் இயற்கை வளத்தில் ஒரு துளிப்பகுதியை மட்டுமே குறுமனிதர்கள் நுகர்ந்து உலகை இயக்குவார்களாம்.
  • ஆனால், அந்தக் குறுமனிதர் சாலையில் நடந்து செல்கையில் ஒரு ராஜபாளையம் நாய் அவர்மீது காலை தூக்கினால் என்னவாகும் என்பதைப் பற்றி அந்த அறிவியலாளர் கூறவில்லை. எங்கு அறைப் போட்டு அமர்ந்து இப்படியெல்லாம் யோசிப்பார்கள் என்பது விளங்கவில்லை.
  • நல்வாய்ப்பாக, மக்கள் சார்பாக அறிவியல் பேசும் ரேச்சல் கார்சன் போன்ற சிலரால்தான் அறிவியல் உலகின் அறம் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர் கூறுகிறார்: “ஓர் அறிவியல் அமைப்பு பேசும்போது அது யாருடைய குரலாக ஒலிக்கிறது. அறிவியலின் குரலையா? அல்லது ஆலையின் குரலையா என்று நாம் உற்றுக் கேட்கவேண்டும்”.
  • இதுவே நமது வழிகாட்டி. இதுவே இயற்கையின் குரல்.

நன்றி: தி இந்து (09 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories