TNPSC Thervupettagam

இயற்கை 24X7 - 60: இயற்கையின் அவசரச் செய்தி

April 9 , 2023 600 days 375 0
  • புத்தரின் சீடர் ஆனந்தா ஒருமுறை மன்னரைக் காண அரண்மனைக்குச் சென்றார். மன்னர் அங்கே இல்லை. ஆனந்தரை வரவேற்ற அரசி, அவர் கேட்ட ஐந்நூறு ஆடைகளை அன்பளிப்பாகத் தந்தார். மன்னர் திரும்பி வந்ததும் அதைக் கேள்விப்பட்டு, ‘ஒரு துறவி அத்தனை ஆடைகளையும் வைத்துக்கொண்டு என்ன செய்வார்? என்கிற ஐயத்துடன் புறப்பட்டு நேரே மடத்துக்குச் சென்றார்.
  • அங்கு நடை பெற்ற உரையாடல் இது: “நீங்கள் வாங்கிவந்த ஆடைகளை எல்லாம் என்ன செய்வீர்கள் துறவியே?”
  • இங்குத் துறவிகள் கிழிந்த ஆடைகளை அணிந்துள்ளனர். அவர்களுக்குத் தருவேன்.”
  • பழைய ஆடைகளை என்ன செய்வீர்கள்?”
  • அவற்றைப் படுக்கை விரிப்புகளாகப் பயன் படுத்துவோம்.”
  • அந்தப் பழைய விரிப்புகளை?”
  • தலையணை உறைகளாக மாற்றி விடுவோம்.”
  • பழைய உறைகள் என்னவாகும்?”
  • அவை தரை விரிப்புகளாகிவிடும்.”
  • பழைய விரிப்புகள்?”
  • வாசலில் மிதியடிகளாக மாறிவிடும்.”
  • பழைய மிதியடிகள்?”
  • தரைத் துடைக்க வைத்துக் கொள்வோம்.”
  • பழைய கந்தல் துணிகள்?”
  • அவற்றைக் கிழித்து சேற்றுடன் குழைத்து மடத்தின் சுவர்மீது பூசி சுவரை வலுப்படுத்துவோம்.”

பதிலுக்குக் கேட்டிருந்தால்

  • பொருள்களை மறுசுழற்சி செய்து எளிமையாக வாழவேண்டும் என்பதற்காக நமக்குக் கற்பிக்கப்படும் கதை இது. நல்லது, இந்த அறிவுரை மக்களுக்கு மட்டும்தானா? மன்னர் கேட்டது போலப் பதிலுக்கு ஆனந்தரும் மன்னரிடம் இப்படிக் கேட்டிருந்தால்…?
  • மன்னரே, இங்கு ஐந்நூறு பேர் ஆடைகள் இல்லாதிருக்க, உங்கள் சிறு குடும்பம் மட்டும் அவற்றை வழங்கும் நிலையில் இருப்பது எப்படி? நாங்கள் மண் குடிலில் வசிக்க உங்களுக்கு மட்டும் அரண்மனை கிடைத்தது எப்படி? எப்போதும் புதிய பொருள்களையே பயன்படுத்தும் உங்களுக்கு மறுசுழற்சி என்றால் என்னவென்று தெரியுமா?”
  • கேட்டிருந்தால் உறுதியாகத் துறவியின் தலை அவருடைய கழுத்தில் இருந்திருக்காது. இன்றைக்கு நம்முடைய நிலையும் இதுதான். அன்றைக்கு மன்னர் என்றால் இன்றைக்குப் பெருநிறுவனங்களும், அவர்களுக்குச் சாதகமான அரசுகளும் செயல்படுகின்றன. 2020ஆம் ஆண்டின் ஆக்ஸ்பாம் அறிக்கையின்படி உலகின் 99% மக்களின் செல்வத்தைப் போல இரண்டு மடங்கு செல்வத்தை உலகின் 1% பணக்காரர்கள் மட்டுமே வைத்துள்ளனர். ஆனாலும், பேராசை ஓய்வதில்லை.

பணத்தால் அளப்பது சரியா?

  • இயற்கையைத் தனியுடைமையாக்கும் திட்டம் ஒன்றை ‘பசுமைப் பொருளியல்’ (Green Economics) என்ற பெயரில் பவன் சுகதேவ் என்பவர் உரு வாக்கினார். இது 2012 ரியோ டி ஜெனிரா புவி உச்சி மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அனைத்துக்கும் ‘பசுமை’ லேபிள் ஒட்டும் உலகில், பொருளா தாரத்துக்கு ஒட்டுவது மட்டும் கடினமா என்ன?
  • பணம், உழைப்பைப் போன்று இயற்கையும் ஒரு மூலதனம் (Nature Capital) என்கிறது இத்திட்டம். அதன்படி ஆறுகள், கடல்கள், காடுகள், உயிரினங்கள் அனைத்தும் சந்தையில் வாங்கி விற்கும் சரக்குகளே. காட்டு மரங்களும் பவளத்திட்டுகளும் கரிவளியை உறிஞ்சி சேமிக்கின்றன. தேனீக்கள் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபட்டுக் காய்கனிகளை உருவாக்கு கின்றன. இனி இவை இயற்கை நிகழ்வல்ல. அனைத்தும் பணத்தால் மதிப்பிடப்படும் சேவைப் பொருளாதாரம்.
  • ஒரு கார்ப்பரேட் நிறுவனம் காட்டையோ பவளத் திட்டுப் பகுதியையோ விலைக்கு வாங்கினால் அதில் நடைபெறும் கார்பன் சேமிப்புக்கும் அந்நிறுவனமே உடைமையாளர். அதுபோல தேனீக்களின் மகரந்தச் சேர்க்கையால் உருவாகும் காய்கனிகள், தேன் ஆகியவையும் தேனீயின் சேவை.
  • எனவே, நிறுவனங்களுக்கு ‘சேவைக் கட்டணம்’ செலுத்த வேண்டும். இதுபோன்ற இயற்கைச் செயல்பாடுகளுக்கு ‘சூழல் பொருளியல் கணக்கீட்டு முறை’ (SEEA - System of Environmental Economic Accounting) என்ற பெயரில் பணமதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, ஓராண்டில் நடைபெறும் இயற்கை சேவையின் மதிப்பு 3,30,000 கோடி டாலர் என்று தோராயமாக மதிப்பிட்டுள்ளனர்.

புரிந்துகொள்ள வேண்டிய செய்தி

  • ஆனால், இயற்கையின் கணக்கில் பணம் என்பது வெறும் செல்லுலோஸ் மட்டுமே. இதை எவரும் உணர்வதில்லை. புவி, சேவைக் கட்டணம் எதுவுமின்றி ‘இயற்கை 24X7’ அலைவரிசையை நெடுங்காலமாக ஒலிபரப்பி வருகிறது.
  • அதன் வரலாற்றுடன் ஒப்பிடுகையில் பார்வையாளர்களாகிய மனித இனத்தின் காலம் என்பது வெறும் 0.0001 விழுக்காடே. எனவே, இயற்கையை வெறும் பணமாக மட்டுமே கணக்கிட்டுக் கொண்டிருக்கும் எந்தவொரு நொடியிலும் அதன் அலைவரிசையில் ஓர் அவசரச் செய்தி மின்னலாம்.
  • கண்ட திட்டுக்கள் திடீரென நெட்டி முறித்து ஆழிப்பேரலையாக உருவெடுக்கலாம். ஆழத்தில் குமுறும் லாவா வெடித்து எரிமலையாகச் சிரிக்கலாம். புடவியின் விண்கற்கள் புவிக்கோளை முத்தமிட வரலாம். உறங்கும் ஒரு நுண்ணுயிரி எந்நேரத்திலும் நம்மை விழித்துப் பார்க்கலாம்.

நன்றி: தி இந்து (09 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories