TNPSC Thervupettagam

இருமொழிக் கொள்கைக்கு வயது 2000

May 18 , 2023 601 days 467 0
  • வரலாற்றாய்வாளர் வெ.வேதாசலம் தமிழகத் தொல்லியல் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர். பணி ஓய்வுக்குப் பிறகும் அயராமல் உழைப்பவர். தன்னுடைய பிரதான ஆய்வுக் களமாகப் பாண்டிய நாட்டைக் கொண்டிருந்தாலும், தமிழகத்தின் ஒட்டுமொத்த நிலம், ஆட்சியாளர்கள் சார்ந்தும் ஆழ்ந்த பார்வையைக் கொண்டவர். ‘பாண்டிய நாட்டு வரலாற்று முறை சமூக நிலவியல்’ இவருடைய நூல்களில் முக்கியமான ஒன்று. பண்டைய தமிழகத்தின் ஆட்சியாளர்களை எப்படிப் பார்க்க வேண்டும் என்றும் பண்டைய வரலாறு எந்த வகையில் சமகாலச் சமூகத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது என்றும் இங்கே பேசுகிறார்.

மூவேந்தர்களுடைய பங்களிப்பை நீங்கள் எப்படி மதிப்பிடுவீகள்?

  • நீண்ட வரலாற்றைக் கொண்டது தமிழ்நாடு. பரந்து விரிந்த நிலப்பரப்பு. அதனால், நம்முடைய வரலாற்றில் வந்து சென்ற ஒவ்வோர் ஆட்சியாளருமே முக்கியமானவர். ஏனென்றால், ஒவ்வோர் ஆட்சியாளரும் சமூகத்தின் ஒரு பிரிவு மக்களையும், ஒரு காலகட்டத்தையும் பிரதிபலிக்கிறார். ஏன் மூவேந்தர்களைப் பிரதானப்படுத்திப் பேசுகிறோம் என்றால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தது ஆயிரமாண்டுகள் மரபு இருக்கிறது. உலக அளவில் இது சிறப்பு மிக்கது. இந்தியத் துணைக் கண்டத்தில் பெரிய ஆட்சியாளர்களாகப் பேசப்படும் மௌரியர்களும் குப்தர்களும் எத்தனை ஆண்டு காலம் ஆண்டிருக்கிறார்கள்? இருநூறு ஆண்டுகள், முந்நூறு ஆண்டுகளுக்குக்கூட வரலாறு இல்லையே! பாண்டியர்களை எடுத்துக்கொண்டால், கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு அவர்களுக்குத் தொடர்ச்சி இருக்கிறது. இவ்வளவு நீண்ட காலம் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஓர் அரச மரபினர் ஆளும்போது அங்குள்ள சமூகத்தின் சகல அம்சங்களிலும் அவர்கள் கலந்துவிடுகிறார்கள்.
  • மூவேந்தர்களில் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இன்னொரு சிறப்பும் இருக்கிறது. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, இன்னும் பல பத்து நாடுகள் என்றிருந்த தமிழ் நிலத்தை முழுமையாக ஒரு கொடியின் ஆட்சிக்குக் கொண்டுவந்து ஒரு பெரிய சமூக ஒருங்கிணைப்பையும் அவர்கள் செய்கிறார்கள். முதலில் சோழர்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலே நெல்லூர் முதல் கீழே குமரி வரை ஒரே கொடியின் கீழ் ஆண்டார்கள். அடுத்தது, பாண்டியர்கள் அதேபோல அரை நூற்றாண்டுக்கு மேல் ஆண்டார்கள். கிட்டத்தட்ட இருநூறாண்டுகள், பல தலைமுறைகள் ஒரு கொடியின் கீழ் வாழப் பழகுகிறார்கள். பறந்தது சோழக் கொடியா, பாண்டியக் கொடியா என்பதல்ல விஷயம்; அடிப்படையில் அது தமிழ்க் கொடி.

மூவேந்தர்களுக்கும் இடையே ஏராளமான சிற்றாட்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்களுடைய பங்களிப்பு என்ன?

  • சிற்றாட்சியாளர்கள் மத்தியில் இருந்துதான் பேரரசுகள் எழுகின்றன. பேரரசுகள் நீடிக்கவும் சிற்றாட்சியாளர்கள் முக்கியமானவர்கள். அடிப்படையில் இது எல்லாமே அதிகாரப் பகிர்வுதான். மிகவும் சிறப்பு மிக்க சிற்றாட்சியாளர் மரபு நமக்கு இருக்கிறது. அசோகன் காலக் கல்வெட்டில் சேர, சோழ, பாண்டியர்களோடு அசோகனால் குறிப்பிடப்படும் இன்னொரு பெயர் சத்தியபுத்திரர்கள். இன்றைய தருமபுரி பகுதியை ஆண்ட அதியமான்களைத்தான் இப்படிக் குறிப்பிடுகிறார் அசோகன்.
  • காஞ்சிபுரம் பகுதியை ஆண்ட தொண்டைமான்கள். அங்கே தொண்டைமான் இளந்திரையன் முக்கியமான ஓர் அரசர்.  அதேபோல, திருக்கோவிலூர் பகுதியை ஆண்ட மலையமான்கள். இந்த அரச மரபிலிருந்து வந்த இளவரசிக்குப் பிறந்தவர்தான் ராஜராஜன். அங்கே மலையமான் திருமுடிக்காரி முக்கியமான ஓர் அரசர். புதுக்கோட்டை பகுதியை ஆண்டவர்கள் இருக்குவேளிர். அங்கே இருங்கோவேள் முக்கியமான ஓர் அரசர். பொதிகை மலையின் செங்கோட்டை பகுதியில் ஆண்டவர்கள் ஆய் அரசர்கள். அங்கே அண்டிரன் முக்கியமான ஓர் அரசர். இவர்களைப் போல பெரிதும் சிறிதுமாக ஏராளமான சிற்றரச மரபினர் இருந்திருக்கிறார்கள்.
  • மக்களோடு நெருங்கிய பிடிப்பு இவர்களுக்கு இருந்திருக்கிறது. அதனால்தான் கடையெழு வள்ளல்கள் என்று சொல்லும்போது சிற்றரசர்களைப் பட்டியல் இடுகிறது தமிழ் இலக்கிய மரபு. பல்லவர்கள் பிற்காலத்தில் தமிழ்நாட்டின் ஆட்சிமுறையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தவர்கள். ஆனால், இன்றைக்கும் பல்லவ மண்டலம் என்று அவர்கள் ஆண்ட பகுதியை யாரும் சொல்லவில்லை. பல்லவர்களுக்கு முன்பு காஞ்சிபுரம் பகுதியில் வேரூன்றிய தொண்டைமான்களின் பெயராலேயே தொண்டை மண்டலம் என்றே சொல்கிறோம். மக்கள் மனதில் அப்படி அவர்கள் நிலைத்திருக்கிறார்கள்.

பண்டைய வரலாற்றைப் பேசுவது இப்போது தேவைதானா என்று ஒரு கேள்வி இங்கே இருக்கிறது. முந்தைய கால ஆட்சியாளர்களைப் பற்றிப் பேசுவது பழம்பெருமையைப் பேசுவது என்ற பார்வையும் இருக்கிறது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

  • தவறான பார்வை. வரலாற்றைப் பேசுவதில் இரண்டு முக்கியமான கட்டுமானங்கள் இருக்கின்றன. முதலாவது கட்டுமானம், ஆட்சியாளர்களையும் அரசையும் மையப்படுத்திய ஆய்வுகளும் பேச்சுகளும்; இரண்டாவது கட்டுமானம் சம்பந்தப்பட்ட காலகட்டத்தின் சமூகத்தையும் செயல்பாட்டையும் மையப்படுத்திய ஆய்வுகளும் பேச்சுகளும். முதல் கட்டுமானத்தின் மீதுதான் இரண்டாவது கட்டுமானத்தை எழுப்ப முடியும்.
  • பாண்டியர்களை நாம் எடுத்துக்கொள்வோம். பொது ஆண்டு ஆறாம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் தொடங்கும் குடைவரைக் கோயில் மரபில் பல்லவர்களுக்கு இணையாகப் பாண்டியர்கள் பங்களித்திருக்கின்றனர். மகேந்திரப் பல்லவனுடைய காலத்துக்கு முன்பே பாண்டிய நாட்டில் எடுப்பிக்கப்பட்ட குடைவரைக் கோயில் பிள்ளையார்ப்பட்டி கோயில். பல்லவ அரசர் மகேந்திரன் மண்டகப்பட்டில் குடைவரைக் கோயில்களை எடுப்பித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் பாண்டிய அரசர் செழியன்சேந்தன் மலையடிக்குறிச்சியில் குடைவரைக் கோயில்களை எடுப்பித்துக்கொண்டிருக்கிறார். பல்லவர்களின் மாமல்லபுர ரதக் கோயில் ஒரு கட்டுமானச் சாதனை என்றால், மலை மேலிருந்து கீழாகக் குடைந்து எடுக்கப்பட்டதான, பாண்டியர்களின் கழுகுமலை வெட்டுவான் கோயிலும் ஒரு சாதனை. ராஷ்டிரகூடர்களின் எல்லோரா கைலாசநாதர் கோயிலுக்குச் சமகாலத்தியவை இக்கோயில்கள்.
  • இப்படி நான் பேசும்போது, மகேந்திரன், செழியவேந்தன்; பல்லவர்கள், பாண்டியர்கள், ராஷ்டிரகூடர்கள் இந்தப் பெயர்கள் எல்லாமே குறியீடுகள்தான். இந்தக் கோயில்களை எல்லாம் கட்டியவர்கள் யார், இந்த அரசர்களா? இவர்கள் காலத்துப் பொறியாளர்கள், சிற்பிகள், கட்டுமானத் தொழிலாளர்கள். அப்படியென்றால், ஒவ்வோர் அரச மரபினரின் பெயருக்குப் பின்னணியிலும் ஓர் இடமும், ஒவ்வோர் அரசரின் பெயரின் பின்னணியில் காலமும் ஒளிந்திருக்கின்றன. குறிப்பிட்ட காலகட்டத்தில் அந்தச் சமூகம் என்ன நிலையில் இருந்தது, அதன் அறிவுநுட்பம் என்னவாக இருந்தது என்பதையெல்லாம் இதன் வழியாகத்தான் அறிகிறோம்.
  • அரசர்களை மையப்படுத்திப் பேசுவதன் மீதான விமர்சனம் மேற்கில் தொடங்கியது. அது நியாயமானதும்கூட. ஏனென்றால், காலனியாதிக்க நாடுகளிலிருந்துபுறப்பட்ட விமர்சனம் அது. தமிழ்ச் சமூகம் அழுத்தப்பட்டிருக்கும் ஒரு சமூகம். ஒட்டுமொத்த வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு சமூகம். திருக்கோவிலூரில் உள்ள ஒரு பள்ளி மாணவருக்கு மௌரியப் பேரரசைப் பற்றித் தெரியும்; அவனுடைய மண்ணை ஆண்ட மலையமான்களைப் பற்றித் தெரியாது என்பதே நம்முடைய நிலைமை.

அமெரிக்கா இன்று உலகிலேயே முன்னிலையில் உள்ள நாடு. நவீன வளர்ச்சிதான் அவர்களை இந்த இடத்தில் அமர்த்தியிருக்கிறது. ஆனால், உலகிலேயே அதிகமான அருங்காட்சியகங்கள் உள்ள நாடுகளில் ஒன்று அமெரிக்கா. வரலாறு தேவையில்லை என்றால், அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்?

  • வரலாறு ஏன் தேவைப்படுகிறது என்றால், நாம் கடந்து வந்திருக்கக்கூடிய பாதையில், நமக்கு எத்தகைய ஏற்றம் இருந்திருக்கிறது அல்லது இறக்கம் இருந்திருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள அது உதவுகிறது. ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவ்வளவு செழுமையான பண்பாடு இருந்திருக்க கூடிய ஒரு சமூகம்; இவ்வளவு பெரிய பேரரசுகளைக் கொண்டிருந்த சமூகம் எப்படி இடையிலே கீழே சரிந்தோம் என்ற ஒரு கேள்வி இருக்கிறது.
  • அந்தக் கேள்விக்கு விடை காண்பதன் வழியாகத்தான் நாம் இனி அதே தவறைச் செய்யாமல் இருக்க முடியும். அதற்குத்தான் வரலாற்றைப் பேசுகிறோம். அந்த வரலாற்றிலிருந்து படிப்பினைகளைப் பெறுகிறோம். வரலாற்றிலிருந்து பலத்தையும் பெறுகிறோம்.

சமகாலத்துக்கு வரலாற்றிலிருந்து கிடைக்கும் பாடங்களுக்கு ஓர் உதாரணம் தரலாமா?

  • வரலாற்றில் நமக்குக் கிடைக்கும் முதல் தரவு என்ன? பிராமி எழுத்துகள். அது சொல்லும் செய்தி என்ன? இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதியில் கிடைக்கும் எழுத்துகளும் பிராகிருதத்தை வெளிப்படுத்தினால், இங்கே தமிழகத்தில் மட்டும் அந்தக் குறியீடுகள் தமிழை வெளிப்படுத்துகின்றன. வரலாறு இங்கே மொழியோடுதான் பிணைந்திருக்கிறது.
  • தமிழ் ஆட்சியாளர்களை விடுங்கள். வெளி மண்ணிலிருந்து இங்கு வந்த எத்தனை ஆட்சியாளர்கள் இதுவரை ஆண்டிருக்கிறார்கள்? களப்பிரர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள், பிரிட்டிஷார்… எல்லாவற்றையும் கூட்டினால், கிட்டத்தட்ட 1,500 ஆண்டுகள் வரும்; இந்த நெடிய வரலாற்றில் எந்த ஓர் ஆட்சியாளராலும் இங்கே பொதுமக்கள் பயன்பாட்டிலிருந்து தமிழ் என்ற மொழியை நீக்க முடியவில்லை.
  • உள்ளூர் மொழி எப்போதும் தமிழ்தான். இரண்டாவது இடத்தில்தான் தொடக்கத்தில் தமிழோடு பிராகிருதம், அதற்கு அடுத்து தமிழோடு சம்ஸ்கிருதம், அதற்கடுத்து தமிழோடு ஆங்கிலம். இந்த இரண்டாவது மொழி தமிழ்ச் சமூகத்துக்கும் தேவைப்பட்டது; தமிழ் நிலத்துக்கு வெளியே உறவாடுவதற்கு.
  • ஆனால், தமிழுக்கு இணையாக உட்கார வேண்டும் என்றால், அந்த இரண்டாவது மொழி ஓர் அந்தஸ்தோடும் இருக்க வேண்டி இருக்கிறது. தமிழ் எப்போதும் அதே இடத்தில் இருக்கிறது; இரண்டாவது மொழி மாறிக்கொண்டே இருக்கிறது. மூன்றாவதாக ஒரு மொழி நுழையவே முடியவில்லை.
  • பல்லவர்களும், நாயக்கர்களும் சில இடங்களில், அரசாணைகளில் ஆரம்ப கட்டத்தில் தெலுங்கைப் பயன்படுத்துகிறார்கள்; பிறகு, அவர்களே அதை நிறுத்திவிட்டு முழுமையாக இங்கே நீடிக்கும் இரு மொழிப் பாதைக்குத் தங்களை மாற்றிக்கொண்டுவிடுகிறார்கள். மிக விரைவில் அவர்களும் தமிழ்நாட்டோடு ஐக்கியம் ஆகிவிடுகிறார்கள்.
  • இந்த வரலாற்றை நீங்கள் தெரிந்துகொள்ளும்போது அறிந்துகொள்ளும் பாடம் என்ன? இந்த மண்ணுக்கு வரும் எவரையும் இந்த மொழி மாற்றிவிடும்; அப்படி மாறாவிட்டால் தூக்கி எறியும்.

இது ஓர் அரசியல் பாடம் இல்லையா? சமகாலத்துக்கும் இதற்கும் தொடர்பு இல்லையா?

  • உள்ளபடி நாம் வரலாற்றுக்கு நிறையக் கவனம் கொடுக்க வேண்டியுள்ளது. அரசர்களைப் பற்றியே நாம் இன்னமும் எழுதி முடித்தபாடில்லை. அதைவிட, மக்களைப் பற்றி நிறைய எழுத வேண்டியிருக்கிறது. வரலாற்றில் இதுவரை பேசப்படாத சமூகங்களைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது!

சரி, சாமானிய மக்களுக்கு வரலாறு என்னவாக இருக்கிறது?

  • மக்கள் எதையெல்லாம் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதே வரலாற்றில் ஒரு சுவாரஸ்யமான விஷயம்தான். நீண்ட வரலாற்றைத் தரவுகளாக மக்கள் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. ஒரு காலகட்டத்தில் வரலாற்றில் எதுவெல்லாம் அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கடத்தப்பட வேண்டுமோ அவற்றையெல்லாம் விழுமியங்களாக மாற்றி விடுகிறார்கள். இந்த விழுமியங்களை ஒரு சின்ன கருத்துக்குள் அல்லது கதைக்குள் அடக்கிவிடுவார்கள். பின்னர் அதைத் திரும்பத் திரும்ப அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்துவார்கள். கடையெழு வள்ளல்கள் கதை அப்படித்தான் தோன்றுகிறது. அண்ணன்மார் கதையும் அப்படித்தான் தோன்றுகிறது. அரசர்களின் நற்செயல்களை மட்டும் அல்லாது, கொடுஞ் செயல்களையும் சேர்த்தே கதையாகப் பேசுகிறார்கள். ஆனால், இந்தச் சமூகம் தன்னுடைய அத்தனை கதைகள் வழியாகவும் அறத்தையே திரும்பத் திரும்பப் பேசுகிறது!

நன்றி: அருஞ்சொல் (18 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories