TNPSC Thervupettagam

இருள் நீக்கும் பள்ளிக்கூடங்கள்

April 9 , 2024 282 days 237 0
  • கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே இருந்த அந்த ஒற்றைக் குடியிருப்பைத் தேடிச் சென்றிருந்தோம். போகும் வழியிலிருந்த தென்னை மரத்தடியில் மூன்று பெண் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் வயது எட்டிலிருந்து பதினொன்றுக்குள் இருக்கும்.
  • என்னை அழைத்துப்போன மேற்பார்வையாளரும் நானும் அந்தப் பெண் குழந்தைகளைக் கடந்து, தன்னந்தனியாக இருந்த அந்த ஒற்றை ஓட்டு வீட்டை நோக்கி நடந்துசென்றோம். வீட்டை அடையும்வரை என் பார்வையும் கவனமும் விளையாடிக்கொண்டிருந்த அந்த மூன்று பெண் குழந்தைகளின் மீதே இருந்தது.
  • என் பார்வையின் அர்த்தம் புரிந்த அந்த மேற்பார்வையாளர், “இந்த மூன்று பொட்ட பிள்ளைகளும் லட்சுமியோட குழந்தைங்க” என்று கூறியதும் என் துக்கம் உருளையாகத் திரண்டு தொண்டைக் குழிக்குள் சிக்கிக்கொண்டு திணறடித்தது. நாங்கள் வீட்டை நெருங்கியபோது வீட்டிலிருந்து ஒருவர் தன் சட்டையை மாட்டிக்கொண்டே வெளியே வந்தார்.
  • எங்களை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, கடந்து சென்றார். போகும்போது அந்தக் குழந்தைகளை அவர் பார்க்கிறாரா என்பதைக் கவனத்துடன் பார்த்தேன். நான் நினைத்ததுபோலவே அந்தப் பெண் குழந்தைகளை அவர் பார்த்த பார்வை என்னை அச்சப்படுத்தியது. லட்சுமி வெளியே வந்தார். எங்களைப் பார்த்ததும் “வாங்க மேடம்” என்று பரபரத்தார்.
  • “உட்காரச்சொல்ல ஒரு சேர் கூட இல்லையே” என்று அங்கும் இங்கும் தடுமாறியவர் ஓர் அன்னக்கூடையைத் தலைகீழாகக் கவிழ்த்து 'உட்காருங்கள்' என்றார். வீட்டின் வாசல் அருகே குத்த வைத்திருந்த ஆண் ஒருவரிடம் பணத்தைக் கொடுத்து, “டீ தண்ணி வாங்கியா” என்றார்.
  • "என் வாழ்க்கைதான் இப்படிச் சீரழிந்து போச்சு. நான் பெத்த பொம்பள பிள்ளைகளும் என் பாதைக்கே வந்துடுமோன்னு எனக்குப் பயமா இருக்கு மேடம். இதுகளுக்கு மட்டும் ஒரு வழிய காட்டிடு மேடம், உனக்குப் புண்ணியமா போகும்" என்று லட்சுமி கையெடுத்துக் கும்பிட்டதும், என்ன சொல்வது என்றே தெரியாமல் அலுவலகம் வந்துசேர்ந்தேன்.

மாறுபட்ட முயற்சி

  • எச்ஐவி-எய்ட்ஸ் திட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக அப்போது பணி செய்துகொண்டிருந்தேன். நோய்த் தடுப்பு பணிதான் திட்டத்தின் முதன்மை நோக்கம். அந்த மூன்று பெண் குழந்தைகளும் என்னை எந்த வேலையும் செய்ய விடாமல் நினைவுக்குள் புகுந்து என்னமோ செய்தனர்.
  • மேற்பார்வையாளர்களுக்கான அவசரக் கூட்டம் அன்றே ஏற்பாடானது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 2000 பாலியல் தொழில் செய்யும் பெண்களில் எத்தனை பேருக்கு பெண் குழந்தைகள் உள்ளனர் என்று கணக்கெடுப்பு எடுத்து அவசரமாகத் திட்டமிட்டோம்.
  • நிறுவன இயக்குநரின் உதவியுடன் தமிழகத்தில் யாரும் அதுவரை செய்யாத அந்தப் புது முயற்சியைச் செய்தோம். பாலியல் தொழில் செய்யும் பெண்களுடைய குழந்தைகளுக்கான கோடை சிறப்பு முகாம் மைசூரில் ஏற்பாடு செய்யப்பட்டது. பல்வேறு ஆளுமைகளை அழைத்து வந்து நாடகம், பாட்டு, கதை, விளையாட்டு, புத்தகம் என்று அறிமுகப்படுத்தினோம். மைசூரில் சிறந்த வசதியுடன் ஒரு வார உண்டு, உறைவிடப் பயிற்சியாக அது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
  • பயிற்சி முடிந்து வீடு திரும்பும்போது “நாங்கள் நிம்மதியாகச் சாப்பிட்டு, நிம்மதியாகத் தூங்கியது இந்த ஒரு வாரம் மட்டுமே. எங்களுக்கும் படிக்கணும் பெரிய ஆளா வரணும் என்று ஆசைகள் இருக்கு" என்று அந்தக் குழந்தைகள் கண்ணீரோடு குரல் உடைந்து கூறியது இன்றும் என் நெஞ்சுக் கூட்டை அரித்துக்கொண்டே இருக்கிறது.
  • இதுபோன்ற பின்புலத்துடன் பள்ளி வரும் குழந்தைகளைப் பள்ளி வாரியணைத்து வாய்ப்புகளையும் மகிழ்ச்சியையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டும். இது அரசின் தார்மீகக் கடமை. அரசுப் பள்ளிக்கு வரும் குழந்தைகளில் எத்தனை குழந்தைகள் இப்படியான பின்னணியிலிருந்து வருகிறார்கள் என்பதைப் பெரும்பான்மை ஆசிரியர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அரசுப் பள்ளியே வடிகால்

  • பாடம் நடத்துவதும் அவர்களைப் படிக்க வைத்து மதிப்பெண் வாங்கவைப்பது மட்டுமே ஆசிரியரின் கடமை என்று நினைத்து, அதைக் கண்ணும் கருத்துமாகச் செய்யும் ஆசிரியப் பெருமக்கள், மேற்கண்டது போன்ற உடைந்துபோன குடும்பச் சூழலிருந்து வரக்கூடிய குழந்தைகளின் மனதை நெருங்கிச்செல்லும் உரையாடல்களை வகுப்பறையில் நிகழ்த்தலாம்.
  • ‘நான் உங்களுக்காக இருக்கிறேன். உங்களின் வருத்தங்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளலாம்’ என்கிற நம்பிக்கையைக் குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்தி, அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதற்கு ஏதுவான சூழலை வகுப்பறையில் உருவாக்கலாம்.
  • ஆசிரிய மனோபாவத்தை நீக்கி குழந்தைகளை அன்பாக அணுகும்போது, எப்படிப்பட்ட குடும்பப் பின்னணியில் இருந்தும் மனக்கசப்போடு வரும் குழந்தைகள்கூட தொடர்ந்து பள்ளிக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். பொருளாதாரரீதியாக நலிவடைந்துபோன இந்தக் குழந்தைகளுக்கு அரசுப் பள்ளி ஒன்றே வடிகால்.
  • இப்போதெல்லாம் பள்ளிக்குத் திடீரென்று விடுப்பு எடுக்கும் பெண் குழந்தைகளை நினைத்தாலே அச்சமாக இருக்கிறது. அவர்களின் குடும்பப் பின்னணி தெரியவரும்போது, அது நம்மைக் கூடுதலாகக் கலவரப்படுத்துகிறது.
  • என்ன காரணத்துக்காகப் பள்ளியிலிருந்து அவர்கள் விலகிச் செல்ல முயல்கின்றனர் என்று நினைக்கும் போதெல்லாம், அன்றொரு நாள் தென்னை மரத்தடியில் நான் பார்த்த அந்த மூன்று பெண் குழந்தைகள்தாம் நினைவுக்கு வருகின்றனர். பேராசிரியர் ச.மாடசாமி சொன்னதுபோல ஆபத்தான குடும்பச் சூழலிலிருந்து வரும் இந்தக் குழந்தைகளைப் ‘பள்ளியின் நிழல் சுட்டு விடாமல் இருக்க வேண்டும்’.

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories