TNPSC Thervupettagam

இரு மாநிலத் தேர்தல்கள்: ஒரு குறுக்குவெட்டுப் பார்வை

November 27 , 2024 8 hrs 0 min 15 0
  • 2024 மக்களவைத் தேர்தலில் நேரிட்ட பின்னடைவுக்கும், கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதற்குமான கணக்கைத் தீர்க்கும் படலத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிவருகிறது பாஜக. மகாராஷ்டிரத்தில் விஸ்வரூப வெற்றியை ருசித்திருக்கும் பாஜக, இடைத்தேர்தல்களிலும் கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஜார்க்கண்ட் தோல்விக்கு வெவ்வேறு காரணிகள் இருக்கும் நிலையில், மகாராஷ்டிர மகா வெற்றியைத் தனது அடுத்தகட்டப் பயணத்துக்கான அச்சாரமாக பாஜக பயன்படுத்தத் திட்டமிட்டிருப்பதுதான் இந்தத் தேர்தல்களின் முக்கிய விளைவாகப் பார்க்கப்படுகிறது.

ஹேமந்த் சோரனின் சாதனை:

  • ஜார்க்​கண்ட் சட்டமன்றத் தேர்​தலில் மொத்தம் உள்ள 81 இடங்​களில் 34 தொகு​தி​களில் வென்று ஜார்க்​கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி​யைத் தக்க​வைத்​துக்​கொண்​டிருக்​கிறது. ஹேமந்த் சோரனின் அரசு அமல்​படுத்​தி​யிருந்த மையா சம்மான் யோஜனா திட்​டத்​தின்​கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்​கப்​பட்டு​வந்​தது.
  • அதை ரூ.2,500 ஆக உயர்த்து​வதாக இண்டியா கூட்டணி அளித்த வாக்​குறுதி பெண்​களைக் கவர்ந்​த​தில் வியப்​பில்லை. கூடவே, அரசுப் பணிகளில் பெண்​களுக்கு 33% இடஒதுக்​கீடு, செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் அதிகரிக்​கப்​படும் என்பன உள்ளிட்ட வாக்​குறு​திகள் பெண்களின் வாக்​குகளை அள்ளித் தந்திருக்​கின்றன.
  • ஜார்க்​கண்ட்​டில் உள்ள 28 எஸ்டி தனித்​தொகு​தி​களில் 27ஐ ஜார்க்​கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வென்​றெடுத்​திருப்​பதன் பின்னணி​யில், பழங்​குடி மக்கள் மத்தி​யில் ஹேமந்த் சோரனுக்கு இருக்​கும் தனிப்​பட்ட செல்​வாக்​கு​தான் காரண​மாகச் சொல்​லப்​படு​கிறது. வங்கதேச ஊடுரு​வல்​காரர்​களுக்கு ஹேமந்த் சோரன் அரசு ஆதரவாக இருப்​பதாக பாஜக முன்னெடுத்த பிரச்​சாரம் எடுபட​வில்லை. கூட்​ட​ணிக் கட்சியான காங்​கிரஸ் 16 இடங்​களில் வென்​றது. ஆனால், மகாராஷ்டிரத்​தில் காங்​கிரஸ் அங்கம் வகிக்​கும் மகா விகாஸ் அகாடிக்​குக் கிடைத்​திருப்பதோ படுதோல்வி.

மலைக்​க​ வைத்த மகாயுதி:

  • ராகுல் காந்​தி​யின் நீதி யாத்​திரை, மக்கள​வைத் தேர்​தலின்​போது ஹரியாணா, மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்​களில் பாஜக​வின் வெற்றிப் பயணத்​துக்கு முட்டுக்​கட்டை போட்​டது. இந்நிலை​யில், ஹரியாணா சட்டமன்றத் தேர்​தலில் மொத்தம் உள்ள 90 இடங்​களில் 48ஐ வென்று ஆட்சி​யைத் தக்க​வைத்​துக்​கொண்டது பாஜக. அதிர்ச்​சித் தோல்​வியடைந்த காங்​கிரஸ் மகாராஷ்டிரத் தேர்​தலில் மகா விகாஸ் அகாடி​யின் சக கூட்​டாளி​களுடன் இணைந்து பதிலடி கொடுக்​கும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது.
  • ஆனால், மொத்தம் உள்ள 288 தொகு​தி​களில் 235ஐக் கைப்​பற்றி இமாலய வெற்றி பெற்றிருக்​கிறது மகாயுதி கூட்​டணி. மக்கள​வைத் தேர்​தலில் 30 இடங்களை வென்ற மகா விகாஸ் அகாடி கூட்​டணி, சட்டமன்றத் தேர்​தலில் 50 இடங்​களைக்​கூடத் தொட முடிய​வில்லை. எதிர்க்​கட்சி அந்தஸ்​துக்கு 29 இடங்கள் தேவைப்​படும் நிலை​யில், மகா விகாஸ் அகாடி​யின் ஒரு கட்சிக்குக்கூட அந்தத் தகுதி இல்லை என்பது கவனிக்​கத்​தக்​கது.
  • இதற்கு முக்​கியக் காரணம், மக்கள​வைத் தேர்தல் பின்னடைவுக்​குப் பின்னர் மகாயுதி கூட்டணி அரசு கொண்டு​வந்த லட்கி பஹின் யோஜனா திட்​டம்​தான். ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலையைச் சமாளிக்க மத்தியப் பிரதேச பாஜக அரசு 2023இல் கொண்டு​வந்த ‘லாட்லி பெஹ்னா யோஜனா’ திட்​டத்​தின் நீட்சி இது. பெண்​களுக்கு மாதம் ரூ.1,500 வழங்​கும் இந்தத் திட்டத்தை, தேர்தல் வெற்றிக்​குப் பின்னர் ரூ.2,100 என விஸ்​தரிக்க​விருப்​பதாக மகாயுதி கொடுத்த வாக்​குறுதி அதிகமான பெண்​களைக் கவர்ந்​தது.
  • இதன் முக்​கி​யத்து​வத்தை உணர்ந்​து​கொண்ட மகா விகாஸ் அகாடி கூட்டணி ‘மகாலட்​சுமி திட்​டம்’ என்ற பெயரில் ரூ.3,000 வழங்​கப்​படும் என வாக்​குறுதி அளித்​தது. ஆனால், கர்நாடகம், தெலங்​கானா மாநிலங்​களில் கொடுத்த வாக்​குறு​தி​களை காங்​கிரஸ் நிறை வேற்​ற​வில்லை என்று பாஜக முன்​வைத்த குற்​றச்​சாட்டு நன்றாக எடுபட்​டிருக்​கிறது.
  • மகா விகாஸ் அகாடி ஆட்சிக்கு வந்தால், லட்கி பஹின் யோஜனா திட்​டத்தை நிறுத்​தி​விடும் என்றும் பாஜக எச்சரித்து​வந்​தது. அதேவேளை​யில், இந்தத் திட்​டத்தை நடைமுறைப்​படுத்​திப் பெண்​களிடம் ஆதரவு திரட்டு​வதற்கான அவகாசத்தை அளிக்​கும் வகையில், மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு தள்ளிவைக்​கப்​பட்​ட​தாக காங்​கிரஸ் முன்​வைக்​கும் குற்​றச்​சாட்டு புறந்​தள்​ளத்​தக்கது அல்ல.

பிற காரணிகள்:

  • விவசா​யிகள் பிரச்​சினை நிலவும் விதர்பா பகுதி​யில் உள்ள மொத்தம் 62 தொகு​தி​களில் 53ஐ மகாயுதி கூட்டணி கைப்​பற்றி​யிருப்​பதும் இந்தத் தேர்​தலின் முக்கிய அம்சம். 2024 மக்கள​வைத் தேர்​தலில், விதர்பா பகுதி​யில் உள்ள 10 தொகு​தி​களில் 7ஐ மகா விகாஸ் அகாடி கைப்​பற்றி​யிருந்​தது. காங்​கிரஸின் கோட்​டையான விதர்​பா​வில் இம்முறை பாஜக கூட்டணி வென்​றதன் பின்னணி​யில் விவசா​யிகளின் பிரச்​சினை​களுக்கு அவசர​மாகத் தீர்வு காண ஷிண்டே அரசு முனைந்தது ஒரு காரண​மாகச் சொல்​லப்​படு​கிறது.
  • மகாராஷ்டிரத்​தில் எஸ்சி, எஸ்டி தனித்​தொகு​தி​களில் மகாயுதி கூட்​ட​ணி​தான் அதிக இடங்​களில் வென்​றிருக்​கிறது. அரசமைப்புச் சட்டப் புத்​தகத்​தைக் கையில் ஏந்தி, “இடஒதுக்​கீட்டை பாஜக ஒழித்து​விடும்” என்று காங்​கிரஸ் தலைவர்கள் முன்னெடுத்த பிரச்சார உத்தி எடுபட​வில்லை என்ப​தற்கு இது ஒரு சான்று. மகாராஷ்டிரத்​தில் ராகுல் காந்தி, பிரி​யங்கா காந்தி, மல்லி​கார்ஜுன கார்கே போன்ற மூத்த தலைவர்கள் குறைவான தேர்தல் பிரச்​சாரக் கூட்​டங்​களில் பங்கேற்​றதும் ஒரு விமர்​சனமாக முன்​வைக்​கப்​படு​கிறது.
  • முஸ்​லிம்​களுக்கு எதிராக, யோகி ஆதித்​ய​நாத்​தும், பிரதமர் மோடி​யும் முன்​வைத்த முழக்​கங்கள் மகாயுதி கூட்​ட​ணிக்​குள்​ளேயே சங்கடங்​களைக் கிளப்​பி​னாலும், இந்த முழக்​கங்கள் ஓபிசி சமூகத்​தினரை அணிதிரட்டு​வ​தில் பாஜக​வுக்​குக் கைகொடுத்​திருக்​கின்றன. வாக்கு​வங்​கிக்காக முஸ்​லிம் சமூகத்​தினரை மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆதரிப்​பதாக பாஜக முன்​வைத்த குற்​றச்​சாட்டும் பலனளித்​திருக்​கிறது.
  • இன்னொரு புறம், மக்கள​வைத் தேர்​தலில் மகா விகாஸ் அகாடி கூட்​ட​ணிக்​குப் பலம் சேர்த்த முஸ்​லிம்​களின் வாக்​குகள் இந்தத் தேர்​தலில் சிதறியதும் ஒரு காரண​மாகச் சொல்​லப்​படு​கிறது. அசதுதீன் ஒவைஸி​யின் ஏ.ஐ.எம்​.ஐ.எம். கட்சி 16 இடங்​களில் போட்​டி​யிட்டு ஒரே ஒரு இடத்​தில் வென்​றிருக்​கிறது. முஸ்​லிம்கள் கணிசமான எண்ணிக்கை​யில் வாழும் தொகு​தி​களில் - குறைந்​த​பட்சம் 6 தொகு​தி​களில் - மகா விகாஸ் அகாடி வேட்​பாளர்​களின் வெற்றி​வாய்ப்பை ஏ.ஐ.எம்.ஐ.எம். குறைத்து​விட்​ட​தாகக் கூறப்​படு​கிறது.
  • பட்​னவீஸின் முயற்​சி​யால் இந்த முறை ஆர்எஸ்​எஸ்​சின் முழு​மையான ஒத்துழைப்பு கிடைத்​தது. 60,000 சிறு கூட்​டங்களை ஆர்.எஸ்​.எஸ் நடத்​தி​யிருக்​கிறது. தலித், பழங்​குடி​யினர், மராத்​தாக்​கள், இதர பிற்​படுத்​தப்​பட்ட சமூகத்​தினர் எனப் பல்வேறு தரப்​பினரிட​மும் ஆர்.எஸ்​.எஸ். ஆதரவு திரட்​டியது.

பாஜக​வுக்கான சவால்கள்:

  • பாஜக 132 இடங்​களில் வென்​றிருக்​கும் நிலை​யில், இயல்​பாகவே ஒரு பெரியண்ணன் அந்தஸ்து அக்கட்சிக்கு வந்து​விட்​டது. அதனால்​தான் தேவேந்திர ஃபட்​னவீஸ் மீண்​டும் முதல்​வ​ரா​வார் என்று உறுதியாக எதிர்​பார்க்​கப்​படு​கிறது. நிலை​மையை உணர்ந்​து​ கொண்ட அஜித் பவார் அதற்கு ஆதரவு தெரி​வித்து​விட்​டார்.
  • ஆனால், பிஹாரில் பாஜக அதிக இடங்​களில் வென்​றிருந்​தா​லும் குறைந்த இடங்​களில் வென்ற நிதீஷ் குமாருக்கு முதல்வர் பதவி வழங்​கப்​பட்​டது ​போல, மகாராஷ்டிரத்​தி​லும் வழங்​கப்பட வேண்​டும் என்று ஷிண்டே தரப்பு வலியுறுத்து​கிறது. மகாயுதி கூட்டணி அரசின் செயல்​பாடுகள் மீது வாக்​காளர்கள் வைத்​திருந்த நம்பிக்கை குலை​யக்​கூடும் என்னும் வாதத்​தை​யும் ஷிண்டே ஆதரவாளர்கள் முன்​வைக்​கிறார்​கள்.
  • தாங்கள் துரோகிகள் அல்ல; கட்சி​யின் அசல் தலைவர்கள் என ஏக்நாத் ஷிண்​டே​வும், அஜித் பவாரும் நிரூபித்து​விட்ட நிலை​யில், உத்தவ் தாக்​கரே, சரத் பவாரின் அரசியல் எதிர்​காலம் கேள்விக்கு உரிய​தாகி​யிருக்​கிறது. கைவசம் இருக்​கும் எம்எல்​ஏ-க்​களுக்​கும் பாஜக வலைவிரிக்கும் என இப்போதே ஊகங்கள் வெளி​யாகிவரு​கின்றன.
  • இந்துத்துவா கட்சியான சிவசே​னா​வின் பிரதான ஆதரவாளர்​கள், ஷிண்டே புண்​ணி​யத்​தில் பாஜக முகாம் பக்கம் முன்பே சென்​று​விட்​டார்​கள். அவர்களை மீட்​டெடுத்​துக்​கொள்​ளும் முயற்​சி​யில் சிவசேனா (யுபிடி) தோல்வி அடைந்​து​விட்​டது. அதேவேளை​யில், ஷிண்​டேயைப் பயன்​படுத்​திக்​கொண்டு வென்ற பின்னர், அவருக்கு முதல்வர் பதவியை வழங்​காமல், தவிர்த்​தால் பாஜகவைக் கடுமையாக விமர்​சிக்க உத்தவ் தாக்கரே தயாராக இருக்​கிறார்.
  • ஹரியாணா​விலும் மகாராஷ்டிரத்​தி​லும் அதிக எண்ணிக்கை​யில் வென்​றிருப்​பதன் மூலம், மாநிலங்​கள​வைத் தேர்​தலில் பாஜக​வின் பலம் அதிகரிக்​கும். இது அக்கட்​சிக்​குக் கிடைக்க​விருக்​கும் இன்னொரு அனுகூலம். நாடாளு​மன்​றத்​தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை எதிர்​கொள்​வதற்கான அரசியல் வலிமை இண்டியா கூட்​ட​ணிக்​குக் குறைந்​திருப்​ப​தாகவே கருதப்​படு​கிறது. ஒட்டுமொத்​தமாக இந்த வெற்றி மோடி​யின் கரத்தை வலுப்​படுத்​தி​யிருக்​கிறது. “தேர்​தலில் நி​ராகரிக்​கப்​பட்​ட​வர்​கள் ​நா​டாளு​மன்​றத்தை ​முடக்கு​கிறார்​கள்” என அறச்​சீற்​றத்​துடன் மோடி குற்​றம்​சாட்​டியிருப்​பதன்​ சூட்​சுமம்​ இது​தான்​!

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories