கரோனா போரில் லண்டனின் 9 நாள் மருத்துவமனை
- லண்டனில் ஒன்பதே நாட்களில் பிரிட்டன் அரசால் கட்டப்பட்ட ‘என்எச்எஸ் நைட்டிங்கேல்’ மருத்துவமனை கரோனாவுக்கு எதிரான போரில் புதிய நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. 87,328 சமீ பரப்பளவில் 80 வார்டுகளோடு, 4,000 படுக்கைகளைக் கொண்டுள்ள இதை பிரிட்டன் ராணுவத்தின் ராயல் ஆங்ளியன் ரெஜிமென்ட், ராயல் கூர்க்கா ரைஃபிள்ஸ் படையைச் சேர்ந்த வீரர்கள் அன்றாடம் 200 பேர் என்று சேர்ந்து கட்டியிருக்கின்றனர். ஒவ்வொரு படுக்கையும் வென்டிலேட்டர் வசதி கொண்டது. கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் எளிதில் வந்துசெல்ல போதிய இடைவெளி; நோயாளிகள் இறந்தால் நோய் தொற்றாமல் உடல்களை வைப்பதற்குத் தனி இடம்; இந்த மையத்துக்கு ரயில், பேருந்து, கார் என்று எதில் வேண்டுமானாலும் எளிதில் வந்து செல்லத்தக்க வசதி என்று நல்ல இடவவசதியுடன் வடிவமைத்திருக்கிறார்கள். பிரிட்டனின் இந்தத் தனி மருத்துவமனை மாதிரியை கனடா, ஆஸ்திரேலியா நாட்டு சுகாதாரத் துறைகள் கேட்டு வாங்கியுள்ளன.
இரு வாரங்களில் 25 கோடி மாத்திரைகள்
- மலேரியா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ‘ஹைட்ராக்ஸி குளோரோகொய்ன்’ மாத்திரைகளை கரோனா தடுப்புக்குப் பயன்படுத்தலாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரிந்துரைத்ததும் அந்த மருந்துக்குப் பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இத்தனைக்கும் இந்த மருந்தானது பொதுமக்களுக்குப் பரிந்துரைக்கப்படவில்லை. கரோனா வைரஸ் சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் தற்காப்புக்காகவே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது இந்த மாத்திரைகள் 1.5 கோடி எண்ணிக்கையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்தியா இந்த மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு விதித்துள்ள தடையை நீக்க ட்ரம்ப் வலியுறுத்தியுள்ள நிலையில், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் மேலும் 25 கோடி மாத்திரைகளைத் தயாரிக்க இந்திய மருந்து நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. அமெரிக்காவுக்கே 25 கோடி மாத்திரைகள் தேவைப்படுகின்றன என்றால், அதுபோல நான்கு மடங்கு மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவுக்கு 1.5 கோடி மாத்திரைகள் போதுமா; நமக்குக் கையிருப்பு இன்னும் கூடுதலாக வேண்டாமா என்ற கேள்வியும் எழுகிறது இல்லையா? இந்த இடத்தில்தான் ராகுல் காந்தியின் எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. உயிர் காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்கு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்று பேசியிருக்கிறார். இதுபோல என்னென்ன மருந்துகள் தேவைப்படலாம்; ஒருவேளை இந்தியாவின் தேவை அடுத்தடுத்த வாரங்களில் எகிறினால் அதற்கேற்ப முன்கூட்டித் திட்டமிட்டு இப்போதே தயாராக வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
முன்னுதாரண திருப்பதி!
- ஆந்திரக் கோயில்கள் ஒரு புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளன. தொற்று உள்ளவர்களோடு தொடர்பில் இருந்தவர்களைத் தனிமைப்படுத்தத் தங்களது கதவுகளைத் திறந்துவிட்டுள்ளன. இதில் முன்னிலையில் இருப்பது திருப்பதி. பக்தர்கள் தங்கும் விடுதிகளான பத்மாவதி நிலையம், விஷ்ணுவாசம் ஆகியவற்றைத் தனிமைப்படுத்தும் மையங்களாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்திருக்கிறது. இவ்விடுதியின் ஒவ்வொரு அறையிலும் குளியலறை வசதியும் இருப்பதால் தனிமைப்படுத்தலுக்கு மிகவும் வசதியாக அமைந்துள்ளன. திருப்பதியைப் போலவே காளஹஸ்தி, கணிபாக்கம் வரசித்தி விநாயகர் கோயில்களின் விடுதிகளும் தனிமைப்படுத்தும் மையங்களாக மாறிவருகின்றன.
நன்றி: தி இந்து (08-04-2020)