இறப்பிலும் மனிதர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்!
- ‘இறுதி ஊர்வலத்தின்போது ஊராட்சிக்குச் சொந்தமான தெருக்கள், சாலைகள் போன்றவற்றைச் சாதி, மத, இன வேறுபாடின்றி அனைவரும் பயன்படுத்தலாம்; இதில் பாகுபாடு கற்பிப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது’ என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அளித்திருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அதேநேரம் அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 75 ஆண்டுகள் ஆன நிலையிலும் பொது மயானம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்குக்கூட ஒடுக்கப்பட்டோர் இன்னும் போராடிக்கொண்டிருப்பது வேதனையானது.
- விருதுநகர் மாவட்டம் பனையடிப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த கம்மவார் சமூக நலச் சங்கத்தின் செயலாளர் மகாலட்சுமி என்பவர், இறுதி ஊர்வலத்தின்போது தங்களது தெருக்களைச் சிலர் பயன்படுத்தக் கூடாது எனவும் பொதுச் சாலையையோ வழக்கமான பாதையையோ அவர்கள் பயன்படுத்த உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுவைச் சமர்ப்பித்திருந்தார்.
- இந்த மனு, நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஏ.டி.மரிய கிளிட் அடங்கிய அமர்வு முன் நவம்பர் 6 அன்று விசாரணைக்கு வந்தது. “இறுதி ஊர்வலத்தைத் தங்களது தெருக்கள் வழியாக நடத்தக் கூடாது என்று சொல்வது அரசமைப்புச் சட்டக்கூறு 15க்கு எதிரானது. தங்களது தெருக்களின் வழியாக இறுதி ஊர்வலம் நடத்துவதால் பொது அமைதி கெடுவதாக மனுதாரர் தெரிவித்திருப்பது ஏற்புடையதல்ல.
- தங்களது சங்க உறுப்பினர்களின் நலன் சார்ந்து செயல்படாமல் பாகுபாட்டைத் தூண்டிவிடும் இதுபோன்ற மனுக்கள் மூலம் தங்களைத் தரம் தாழ்த்திக்கொள்ளக் கூடாது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றால் அது கிராம மக்களின் நல்லிணக்கத்துக்கு எதிரானதாக ஆகிவிடும்” எனக் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அத்துடன், மனுதாரருக்கு ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.
- எந்தவிதமான பாகுபாடும் ஒடுக்குமுறையும் இல்லாத இடமாக மயானங்கள் பொதுவாகக் கருதப்பட்டாலும் அந்த மயானங்களிலேயே பாகுபாடு உண்டு என்பதுதான் நிதர்சனம். இறுதி ஊர்வலத்தைப் பொதுத் தெருக்களின் வழியாகக் கொண்டுசெல்லக் கூடாது என்று தடைவிதிப்பதை எதிர்த்துப் பன்னெடுங்காலமாகத் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றபடிதான் இருக்கின்றன. பல வழக்குகளும் தொடரப்பட்டு, அவற்றில் சிலவற்றுக்கு இதுபோன்ற நம்பிக்கையளிக்கும் தீர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
- அருந்ததியரின் சடலத்தை அடக்கம் செய்வது தொடர்பான வழக்கு ஒன்றில், “தமிழகத்தில் உள்ள மயானங்களில் உள்ள சாதிப்பெயர்ப் பலகைகளைத் தமிழக அரசு அப்புறப்படுத்த வேண்டும். அனைத்துக் கிராமங்களிலும் அனைத்துச் சாதியினரும் பயன்படுத்தும் வகையில் பொது மயானங்களை அமைக்க வேண்டும். பொது மயானங்களைப் பயன்படுத்த அனைத்துச் சாதியினருக்கும் உரிமை உண்டு. இதை மீறுவோருக்கு அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கும் வகையில் உரிய விதிகளைத் தமிழக அரசு உருவாக்க வேண்டும்” என 2021 டிசம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது.
- தீர்ப்பு வழங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இறுதி ஊர்வலம் தொடர்பான பிரச்சினைகள் எழுவது, இந்த விஷயத்தில் அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும் என்பதையே உணர்த்துகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் மின்மயானங்கள் அனைத்துச் சாதியினருக்கும் பொதுவானவையாக இருக்கின்றன.
- ஆனால், சாதியக் கட்டுமானங்கள் நிறைந்திருக்கும் சில கிராமங்களில் இன்றும் சாதியின் அடிப்படையில் பொதுத் தெருக்களில் இறுதி ஊர்வலம் செல்லத் தடைவிதிப்பது, சாதிக்கொரு மயானம் போன்றவை கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றன.
- மனித உரிமைக்கு எதிரான இதுபோன்ற நடைமுறைகளை அரசு தடைசெய்வதோடு இவற்றைச் செயல்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கிராமங்கள்தோறும் பொது மயானங்கள் அமைப்பதை உறுதிசெய்ய வேண்டும். இறப்பிலும் மனிதர்களின் கண்ணியம் காக்கப்படுவதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 12 – 2024)