தேர்தலில் தோற்பவர்கள் திரும்பவும் நின்று வெற்றி பெற நினைக்கிறார்கள். ஆனால், தேர்வில் தவறியவர்கள் துவண்டு போகிறார்கள். நம்பிக்கை இழக்கிறார்கள். வாழ்க்கையின் விளிம்புக்கே போய்விடுகிறார்கள். தனக்குப் பற்றிக்கொள்ள எதுவுமே இல்லை என்று உடல் பற்றிக் கொண்டிருக்கும் உயிரைத் துறக்கிறார்கள்.
கைவிடப்பட்ட மனநிலையில் தனித்து விடப்பட்ட உணர்வில் தனிமை விரட்டத் தற்கொலைக்குப் போகிறார்கள். அறிவியல் புரட்சியும் தொழிற்புரட்சியும் வளர்த்த மனிதகுலம், தொழில்நுட்பப் புரட்சியில் தற்கொலையிலிருந்து விடுபட அல்லாடுகிறது.
தற்கொலையாளர்களின் தன்னம்பிக்கையை அழிப்பது எது? உயிர் வாழ விரும்பாமல் அவர்களை விரட்டுவது எது? உயிரை விடுவதற்குக் காரணம் சொல்லவும் எழுதிவைக்கவும் தெரிந்தவர்களுக்கு வாழ்வதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லையே ஏன்?
பள்ளி
பள்ளிக்குப் போவதற்கு வீட்டைப் பிரிய வேண்டியிருக்கிறது. கல்லூரிக்குப் போக ஊரைப் பிரிய வேண்டியிருக்கிறது. வேலைக்குப் போக நாட்டைப் பிரிய வேண்டியிருக்கிறது.
இந்தத் தலைமுறைக்கு எந்த ஊர் என்பது கேள்வியாக இருக்கிறது. கேட்டால் சொல்வதற்கு யோசிக்க வேண்டியிருக்கிறது. ஆனாலும், தனிமனிதச் சுதந்திரம் கிடைத்திருக்கிறது. எங்கு வேண்டுமானாலும் குடியிருக்கலாம். தன் விருப்பத்திற்கு ஏற்ப வாழலாம்; பொருளாதாரம் அனுமதிப்பதற்கு ஏற்ப வாழலாம்.
அதில் ஊர்க் கட்டுப்பாடு தலையிட முடியாது. கண்டிப்பதற்குக் கூட்டுக் குடும்பத்திற்கு அதிகாரம் இல்லை. உடம்புக்கு ஒன்று என்றால் கவனிக்கக் குடும்பம் தேவை இல்லை; நாள் முழுவதும் கவனிக்க ஆள்வைத்துக் கொள்ளலாம். வயதான காலத்தில் காப்பாற்றக் குழந்தைகள் தேவையில்லை; எந்நேரமும் மருத்துவ வசதியுடன் பாதுகாப்பாக இருக்க வில்லாஸ் கூப்பிடுகிறது. என்ன உடுத்த வேண்டும், சாப்பிட வேண்டும் என்பதைச் சொல்லச் சந்தை விளம்பரங்கள் இருக்கின்றன. ஆனாலும், தற்கொலைகள் நாளுக்குநாள் பெருகிவருகின்றன.
உலக அளவிலான புள்ளிவிவரம் அதிர்ச்சி அளிக்கிறது. உலகில் ஆண்டுதோறும் 10 இலட்சம் பேர் தற்கொலையில் இறக்கிறார்களாம். அதாவது, மக்கள்தொகையில் ஒரு இலட்சம் பேருக்கு ஒருவர் என்ற அளவில் தற்கொலையில் உயிர் விடுகிறார்களாம். 40 விநாடிக்கு ஒருவர் வீதம் தற்கொலை நடக்கிறதாம். 2020-இல் 20 விநாடிக்கு ஒருவர் வீதம் தற்கொலை நடக்குமாம்!
தற்கொலை
தற்கொலை செய்துகொண்டவர்கள் இவ்வளவு பேர் என்றால் தற்கொலை செய்துகொள்ள முயன்றவர்கள் இறந்தவர்களைப் போல 20 மடங்காம். வயதானவர்களைப் பிடித்திருந்த தற்கொலை மனம், இப்போது இளைஞர்களைப் பிடித்து ஆட்டத் தொடங்கியிருக்கிறது.
2000-ஆம் ஆண்டில் போர்களில் இறந்தவர்கள் 3,10,000 பேர்; கொடூரமான குற்றங்களால் இறந்தவர்கள் 5,20,000 பேர்; ஆனால், தற்கொலை செய்து கொண்டவர்கள் 8,15,000 பேர். உலகில் 30% தற்கொலைகள் இந்தியாவிலும் சீனாவிலும் மட்டும் நடக்கின்றனவாம். இந்தியாவில் 2016-இல் 2,30,314 பேர் தற்கொலையில் இறந்து போயிருக்கிறார்கள்.
மக்கள் தொகை
உலக மக்கள்தொகையில் 17% இந்திய மக்கள்தொகை. ஆனால், உலகத் தற்கொலையில் 5% இந்தியர்கள். இந்தியாவிலும் தற்கொலை செய்துகொள்பவர்கள் வரிசையில் முதல் இடங்களில் தென்மாநிலங்களும் கிழக்கு மாநிலங்களும் இருக்கின்றன. அதிலும் தமிழ்நாடு முதலிடம். 2012-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி தற்கொலை செய்து கொள்பவர்களில் மேற்கு வங்கத்தில் 11.0%, மகாராஷ்ட்டிரத்தில் 11.9%, தமிழ்நாட்டில் 12.5%. இரண்டு ஆண்களுக்கு ஒரு பெண் எனும் விகிதத்தில் தற்கொலைகள் நடக்கின்றன.
உலகில் தற்கொலை செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு ஆறாவது இடம்; ஆண்களுக்கு 22-ஆவது இடம். 2014- ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி அவ்வாறு இறந்தவர்களில் 32,308 பேர் மாணவர்கள். இந்தியாவில் ஒரு இலட்சத்துக்கு 37 பேர் அளவில் தற்கொலையில் இடம் பிடித்திருக்கிறது புதுச்சேரி; மிகக் குறைந்த இடத்தில் இருப்பது பிகார் மாநிலம்.
தற்கொலையில் 33% பேர் நஞ்சுண்டும் 26% பேர் தூக்கிட்டும் 9% பேர் தீயிட்டுக் கொண்டும் 32% பேர் பிற வகையிலும் இறக்கிறார்களாம். படிக்காதவர்களைவிடப் படித்தவர்களே அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்களாம். இந்தியாவில் படித்தவர்கள் 74% பேர் என்றால் தற்கொலை செய்து கொள்பவர்களில் 80% பேர் படித்தவர்களாம்.
இந்தியாவின் 53 மாநகரங்களிலும் 2012-இல் தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை 19,120. அவர்களில் சென்னை மாநகர் முதல் இடத்தில் உள்ளது (2,183 பேர்). அடுத்தது பெங்களூரு (1,983 பேர்). அடுத்தது தில்லி (1,397 பேர்). அடுத்தது மும்பை (1,296 பேர்). தமிழ்நாட்டின் தலைநகராக மட்டுமின்றி இந்தியாவின் தற்கொலை மாநகராகவும் சென்னை இருக்கிறது.
தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுத் தப்பித்தவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கும் இந்தியக் குற்றவியல் சட்டம் 309-ஆம் பிரிவிற்கு 2017-இல் திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
சட்டம்
(மனநல பாதுகாப்புச் சட்டம் 2017).
ஊரிலிருந்தும் சமூகத்திலிருந்தும் கூட்டுக் குடும்பத்திலிருந்தும் மக்கள் தனிமையாகிறார்கள். ஆனால் தனிமனிதச் சுதந்திரம் வேண்டி வந்தவர்களை அரசும் ஊடகமும் கட்டுப்படுத்துகின்றன. உலக வாழ்வுக்கு மக்களின் கூட்டுழைப்பு தேவைப்படுகிறது. மக்கள் கூட்டாக இல்லை. ஆனால், அவர்களின் உழைப்பில் கூட்டு தேவைப்படுகிறது.
ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு பாகம் தயார் செய்து ஓரிடத்தில் கட்டமைத்துச் சந்தைக்குப் பொருள் வருகிறது. அதில் பலநாட்டு முகம் அறியா மக்களின் கூட்டுழைப்பு அடங்கியிருக்கிறது. கூட்டுழைப்பைப் பெறுவதற்கும் தயாராகும் பொருள்களை விற்பதற்கும் முகம் அறியா மக்கள் ஒன்று சேரும் கற்பனைச் சமுதாயத்தைச் சமூக ஊடகங்கள் கட்டமைக்கின்றன. அவற்றுக்கேற்ப அரசுகள் தனிமனிதர்களைக் கட்டுப்படுத்துகின்றன. கட்டுப்பாடுகள் தரும் மன அழுத்தங்களின் இடிதாங்கியாக இருந்த ஊர், சமூகம், கூட்டுக்குடும்பங்கள் இப்போது காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன.
மனபாரத்தை இறக்கிவைத்து ஆறுதல் பெறத் தொழில்நுட்ப யுகத்தில் இடமின்றி மனிதர்கள் தவிக்கிறார்கள். என்ன செய்வது?
சங்க காலத்தில் முல்லைக்குத் தேர் தந்தவன் பாரி; மூவேந்தரும் ( சேரர், சோழர், பாண்டியர்) பாரியின் மகளிரை மணப்பதற்குப் போட்டிபோட்டனர். பாரி மறுத்தான். முற்றுகை இட்டனர்; வஞ்சனையால் பாரியை வீழ்த்தினர். பாரியின் மறைவுக்குப் பின் ஊர் ஊராகப் பாரி மகளிரை அழைத்துக் கொண்டு கபிலர் அலைந்திருக்கிறார். 300 ஊர்களைப் பரிசாகத் தந்த பாரியின் மகளிருக்கு இருக்க ஓர் இடம் இல்லை. ஆனாலும், அவர்கள் தற்கொலை செய்துகொள்ள நினைக்கவில்லை.
பாரியை வீழ்த்த, மூவேந்தரும் பறம்பு மலையை முற்றுகையிட்டிருந்த காலத்தில் மலையின் மேலிருந்து கீழே மலையடிவாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மூவேந்தர்களின் யானை, குதிரை, தேர்களை எண்ணிக் கொண்டிருந்தவர்கள் தற்போது ஊர் ஊராக அலைகிறபோது அங்கிருந்த குப்பை மேட்டில் ஏறி நின்றுகொண்டு அவ்வழியே போகும் உப்பு வண்டிகளை எண்ணிக் கொண்டிருப்பதைப் பார்த்து மனம் கலங்குகிறார் கபிலர்.
வானில் முழு நிலா; கடந்த மாத முழுநிலவில் தந்தையோடு பறம்புமலை மீதிருந்து மகிழ்ந்த நினைவு வருகிறது. அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில் எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார். இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின், வென்றெறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே என்று பாடுகின்றனர்.
இந்தப் பாடலில் தந்தையையும் மலையையும் சமமாகச் சொல்கிறார்கள். அவர்களை வளர்த்தது பெற்றோர் மட்டுமில்லை; அந்த நிலமும்தான்; மலையும்தான். அதனால் பாடலில் முதலில் தந்தையைச் சொன்னவர்கள் அடுத்த பகுதியில் பகைவர் கைப்பற்றிய மலையைச் சொல்லி அதன்பின் தந்தையைச் சொல்கிறார்கள்.
அதில் எங்கள் தந்தை இப்போது இல்லை;
ஆனால் எங்களை வளர்த்த நிலம்-மலை இருக்கிறது. அதுவும் பகை அரசரிடம் சிறைபட்டுக் கிடக்கிறது. அதை மீட்டெடுக்க எங்கள் தந்தை இல்லை; அதனால் நாம் வாழ வேண்டும் என்று தற்கொலை உணர்வை விரட்டி இருப்பார்களோ? அப்படித்தான் வாழ்வதற்கான காரணத்தைக் கண்டுபிடித்திருப்பார்களோ? அப்படியெனில் வாழ்வதற்கான உலகம் இருக்கிறது என்ற நம்பிக்கை தற்கொலையைத் தவிர்க்குமெனில், தற்கொலைக்குத் தூண்டும் இன்றைய மன இருட்டுக்குச் சங்கக் காலப் பாரி மகளிரின் அவ்வெண் நிலவு வழிகாட்டக் கூடுமோ?