TNPSC Thervupettagam

இலங்கையில் அழிக்கப்படும் தமிழர் அடையாளங்கள்

February 2 , 2024 345 days 264 0
  • நாற்பது வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இனக்கலவரம் ஏற்பட்டது. அந்தக் கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். அப்போது ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இன்னும் பலராலும் மீண்டு எழ முடியவில்லை. தங்கள் சொந்த இடங்களை இழந்தவர்கள், வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள், சொத்துகளை இழந்தவர்கள், ரத்த உறவுகளை பறிகொடுத்தவர்கள் என்று இனக்கலவரத்தின் துயரங்கள் சொல்ல முடியாத வேதனையை தந்து கொண்டு இருக்கிறது. 
  • இப்போது மீண்டும் தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்படும் சூழல் அங்கு உருவாகியுள்ளது. தமிழர்களின் ஊர்ப்பெயர்கள் அழிக்கப்பட்டு, அந்த ஊர்களுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டப்படுகின்றன. அந்த ஊர்களில் சிங்களர்கள் குடியேற்றம் செய்யப்படுகிறார்கள். புத்த விகாரங்கள் அமைக்கப்பட்டு, புத்தபிக்குகள் குடியேற்றம் உருவாக்கப்படுகிறது. புத்த விகாரங்களில் வழிபட, ராணுவத்தினரும், சிங்களரும் அழைத்து வரப்படுகிறார்கள். 
  • தமிழர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட நிலங்கள் இதுவரை திருப்பித் தரப்படவே இல்லை. மாறாக, அவ்விடங்களில் சிங்களர்கள் குடியேற்றம் அமைக்கப்பட்டு, அரசு இடங்களை சிங்களர்களுக்கு தானமாக வழங்குகின்றனர். தொடர்ந்து இன அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருவது தமிழர்களின் பண்பாட்டை சிதைக்கக் கூடிய செயலாகக் கருதப்படுகிறது. 
  • கண்டி நகரம் ஊரடங்கு சட்டம் போடப்பட்ட பின்னர் கொழுந்து விட்டு எரிந்ததை நாம் மறந்து விட முடியாது. ராணுவத்தினரும், காவல்துறையினரும் கைகோத்துக் கொண்டு இலங்கைத் தமிழர்களின் மீது தாக்குதலைத் தொடுத்தது, "வேலியே பயிரை மேய்ந்ததைப் போல' ஆனது. அரசியலை நகர்த்துவதற்காகவோ, பொருளாதார ரீதியில் தமிழர்கள் எழுந்து விடக்கூடாது என்பதற்காகவோ, தமிழர்களின் கல்வியையும், பண்பாட்டையும் அழித்து விட வேண்டும் என்பதற்காகவோ வன்முறை தூண்டப்பட்டது. 
  • சிங்கள அரசியலும், பெüத்த இனவாத அரசியலும் கைகோத்துக் கொண்டபோது மனிதாபிமானம் காணாமல் போனது. ஒட்டுமொத்த தமிழர்களையும் அடிமைப்பொருளாக வைத்திருக்க வேண்டும் என்பதற்கான நடந்த அந்தத் தாக்குதலை நாம் எளிதில் கடந்து செல்ல முடியாது. 
  • 1983-ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த வன்முறை வெறியாட்டம் பல்வேறு பகுதிகளில் இன்னமும்கூட நடந்து கொண்டுதான் இருக்கிறது. வடக்குப் பகுதி, கிழக்குப் பகுதி மட்டுமல்ல, மலையகப் பகுதியும் அதன் பாதிப்பில் இருந்து மீள முடியாத துயரத்தை சுமந்து நிற்கிறது. 
  • 1983-ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சி செய்தார். இன்று 40 வருடங்கள் கடந்த நிலையில், அவரது மருமகன் ரணில் விக்ரமசிங்க அதிபராகப் பதவி வகிக்கிறார். பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் சிக்கியிருந்த மக்கள், கடந்த ஆண்டுகளில் வீதிகளில் இறங்கிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 
  • போராட்டங்களை அடக்குவதற்கு, ராணுவத்தினர் ஏவி விடப்படுகின்றனர். எதிர்த்தரப்பு கருத்தை அறிவதற்குக்கூட அதிபர் ரணில் விக்ரமிங்க முன்வரவில்லை. 
  • 1983-ஆம் ஆண்டு கலவரத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூர்ந்து கொழும்பு பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்ட போது, ஒரு குழு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்று கூறுவது தவறு. இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை எனவும், மாறாக விடுதலைப்புலிகளை ராணுவம் அழித்ததாகவும் அங்கு வருகை தந்த எதிர்தரப்பினர் கோஷம் இட்டனர். இதனால் அங்கு  பதற்றம் உருவானது. 
  • நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், திட்டமிட்ட வகையில், தமிழினத்தை அழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட சிங்கள பேரினவாத முயற்சிகளை எல்லோரும் அறிவார்கள். கொழும்பு மற்றும் தென் பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகள், சொத்துகள் என அனைத்தையும் அழிக்கும் செயல்பாடாக அன்று வன்முறை தலைவிரித்தாடியது. 
  • சிங்கள ராணுவம், ஒவ்வொரு பகுதிக்கும் சென்று தமிழர்களைத் தேடித் தேடி தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாது, ஏராளமான தமிழர்கள் பலியாவதற்கும் காரணமானது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர், தமிழ் மக்கள் மீது பலமுறை தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தாலும், 1983-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல் மறக்க முடியாத கொடுநிகழ்வாக இன்னும் தமிழர்கள் மனதில் காட்சி தருகிறது. 
  • 2023 அக்டோபர் மாதம் இலங்கைத் தமிழர்களை அழித்தொழிக்க வேண்டுமென்று சுமணரத்தின தேரர் என்ற புத்த பிக்கு கருத்து தெரிவித்த நிலையில், அங்கு இனவாதம் மீண்டும் தலைதூக்கியது. இலங்கையில் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டது. 
  • இலங்கை இன பிரச்னைக்குத் தீர்வாக இந்தியாவின் உதவியுடன் கொண்டுவரப்பட்ட அரசமைப்பின் 13-ஆவது திருத்தத்தை அமல்படுத்த அதிபர் ரணில் விக்ரமசிங்க திட்டமிட்ட நிலையில், பெரும்பான்மையான சிங்களர்கள் அந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 
  • 13-ஆவது திருத்தம் அமல்படுத்தப்பட்டால் அது நாட்டைப் பிரிக்கும் எனவும், இதனால் இனவாத பிரச்னை வலுப்பெறும் எனவும் பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர். இலங்கையின் அரசமைப்பு மற்றும் நடைமுறையில் பெüத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுவது வழக்கம். அதனால், புத்த பீடங்களில் உள்ள மகாநாயக்க தேரர்களின் தீர்மானங்கள் அரசாங்கத்தின் தீர்மானங்களாகவே இயல்பாக அமைந்து விடுகிறது. 
  • நிலைமை இவ்வாறாக இருக்க 13-ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று புத்த பீடங்கள் வலியுறுத்துகின்றனர். நாடு எதிர்நோக்கும் பல்வேறு பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு 13-ஆவது திருத்தத்தை அமல்படுத்துவது தவிர்க்கப்பட்டுள்ளது.  
  • பொருளாதார நெருக்கடிகளினால் பெரும் சரிவைச் சந்தித்திருக்கிற இலங்கையில், உலக வல்லரசுகளின் ஒத்துழைப்பைப் பெற, சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இது ஒருபுறமிருக்க, நாட்டின் ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு 13-ஆவது திருத்தத்தை நிராகரிக்க வேண்டும் என்று புத்த பீடங்கள் வலியுறுத்தி வருகின்றன. 
  • இலங்கையின் ஆட்சி மொழியாக சிங்கள மொழி 1956-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. எனினும் நாட்டில் ஏற்பட்ட குழப்பமான நிலை காரணமாக 1958-ஆம் ஆண்டு இந்தச் சட்டம் திருத்தப்பட்டாலும், இது தமிழர்களுக்கு அழிவை ஏற்படுத்தும் சட்டமாகவே கருதப்படுகிறது. தமிழர் மொழிக்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும் பெரும் அச்சுறுத்தலை இந்தச் சட்டம் தந்து கொண்டிருக்கிறது. 
  • இந்தச் சட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தல்கள் தொடர்ந்தாலும் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. தனி சிங்கள சட்டமானது தமிழ் - சிங்கள மக்களிடையே இன பிரச்னை ஏற்படுவதற்கான முதலாவது காரணியாக சொல்லப்படுகிறது. ஒற்றையாட்சி அரசமைப்பிற்குள் புத்த தேசியவாதம், புத்த தேசியவாதத்திற்குள் ஒற்றையாட்சி அரசமைப்பு என்ற கட்டமைப்பு காணப்படும்வரை தமிழர்கள் பிரச்னைக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது என்பது தெளிவாகத் தெரிகிறது. 
  • 1994-ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அதிபர் சந்திரிக பண்டாரநாயக குமாரதுங்க, இனபிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று நேர்மையாகக் கூறி இருந்தார். எனினும் ஆட்சிக்கு வந்த பின்னர் அரசமைப்பு கட்டமைப்பை மீறி தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறியிருக்கிறார். இதே நிலைதான் தற்போதும் நிலவுகிறது. 
  • தற்போதைய அதிபர் சர்வதேசத்தை சமாளிக்கின்றார். 13-ஆவது திருத்தத்தை அவர் ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்றால், எதிர்காலத்தில் தன் மீது எவருக்கும் கோபம் வரக்கூடாது என்பதால்தான். இந்தியாவும், அமெரிக்காவும் ரணிலுக்கு நிச்சயம் அழுத்தம் கொடுக்காது. ஏனென்றால், புத்த பிக்குகள் எதிர்ப்பு காரணமாக அவரால் இதனைச் செய்ய முடியாது என்பது தெரிந்ததே. 
  • ரணில் தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, சர்வதேசத்துக்கும் நல்ல பிள்ளையாக இருக்கின்றார். அதனால் சர்வதேசத்திடம் இருந்து பண உதவிகள் பெறலாம். ஆகவே, 13-ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ரணில் முயற்சிக்க மாட்டார். ஒரு பக்கம் புத்த பிக்குகளை வைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றார். 
  • ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழர்களுக்குத் தீர்வு என்று வருகிறபோது புத்த பிக்குகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். நார்வேயின் சமாதானப் பேச்சுவார்த்தை குழுவினர்கூட, புத்த பிக்குகளின் ஆர்ப்பாட்டத்தினால் குழம்பிப் போனார்கள். 
  • சிங்களத் தலைவர் எவருமே இந்த ஒற்றையாட்சி கட்டமைப்பை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. அதற்கு புத்த பிக்குகளின் எதிர்ப்பைக் காரணமாகக் கூறுகிறார்கள். 
  • ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு சிம்லாவில் ஒரு கூட்டம் நடைபெற்றது, அப்போது இந்தியாவைச் சேர்ந்த ஒரு தீவாகத்தான் இலங்கை இருந்தது. அதையும் இந்தியாவுடன் சேர்த்துக் கொள்ள மவுன்ட்பேட்டன் யோசனை தெரிவித்தார் என்றும், அதற்கு பண்டித நேருவும், சர்தார் படேலும் உடன்படவில்லை என்றும் கூறப்பட்டது. 
  • இலங்கையில் சிங்களர்களின் எண்ணிக்கைக்கு இணையாக இருந்த தமிழர்களின் குடியுரிமை மறுக்கப்பட்டது. காவல்துறை, அரசு நிர்வாகம் அனைத்தும் சிங்களர்களின் ஆதிக்கம். தங்களின் பிரச்னைகளுக்கு விடையே கிடைக்காத நிலையில் தமிழர்கள் அங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். வடகிழக்கு மாகாணங்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்படுவதும், முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் நேர்மையான விவாதம் நடத்தப்பட வேண்டியதும் காலத்தின்  கட்டாயமாகும்.

நன்றி: தினமணி (02 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories