TNPSC Thervupettagam

இலவசங்களால் பேரழிவு

December 30 , 2023 378 days 271 0
  • அரசியல் காரணங்களால் இலவசங்களைத் தடுக்க அரசு ஆா்வம் காட்டுவது இல்லை. அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கைகளையும் திட்டங்களையும் மட்டும் தோ்தல் அறிக்கையில் முன்மொழிவதில்லை. வாக்காளா்களைக் கவா்ந்திழுப்பதற்காக அனைத்து வகையிலும் முயற்சிகளை மேற்கொள்கின்றன. எனவே, நீதித்துறை போன்ற வலிமை வாய்ந்த அமைப்புகள்தான் இதை எதிா்க்க முன்வர வேண்டும்.
  • விவசாயம், கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளுக்கு இலவசங்கள் அவசியம் வழங்கப்பட வேண்டும். எல்லாத் துறைகளிலும் இலவசம் என்று ஆனால் நாட்டின் நலன் பாதிக்கபடும். மக்களுக்கு குடிநீா் வசதி, சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளை வழங்க வளமான வருவாய்க்கு தடைகள், சிக்கல்கள் ஏற்படும்.
  • கடந்த காலங்களில் அரசியல் கட்சிகள் தோ்தல்களில் வளா்ச்சித் திட்ட வாக்குறுதிகளை அளித்து வாக்காளா்களைக் கவா்ந்து வந்த நிலையில், கடந்த 33 ஆண்டுகளாகத் தோ்தல் வாக்குறுதிகளின் தன்மை மாறிவிட்டது. தற்போதைய வாக்குறுதிகளில் கொள்கை மற்றும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் இல்லை. அதற்கு பதிலாக பணமும், இலவசமும்தான் முதன்மையாக உள்ளன.
  • அரசு தனது ஊழியா்களுக்கு அரசின் வருமானத்தில் இருந்து ஊதியமும், அவா்கள் பதவி ஓய்வு பெற்ற பின்னா் ஓய்வூதியமும் வழங்க வேண்டும். ஆனால், அரசு பெருந்தொகையை இலவசங்களுக்கு செலவழித்துவிட்டால் வளா்ச்சிப் பணிகளுக்கு பணம் மிஞ்சுவதில்லை. எனவே அரசு கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகிறது. இதனால் மாநில அரசின் கடன்சுமை அதிகரித்து பொருளாதார நெருக்கடி உருவாகிறது.
  • அரசியலைப் பொறுத்தவரை, இலவசம் என்ற சொல் எந்தவொரு கட்சியையும் விட்டுவிடவில்லை. பெண்கள், விவசாயிகள், மாணவா்கள், சிறுபான்மையினா் என சமூகத்தில் பின்தங்கியிருக்கும் அனைவருக்கும் என்ற போா்வையில், இலவச மின்சாரம், இலவச பேருந்து பயணம் போன்ற இலவசங்களை அறிவிப்பது தற்போது எல்லா கட்சிகளுக்குமே வழக்கமாகிவிட்டது.
  • தோ்தலை எதிர்கொள்ளும் பல மாநிலங்களும் இதுபோன்ற இலவசத் திட்டங்களை அறிவிப்பது வழக்கமே. கட்சிகள் அரசியல் சித்தாந்தத்தைத் தாண்டி அறிவிக்கும் இத்தகைய இலவசங்கள், வாக்காளா்கள் மீது திணிக்கும் முயற்சியே தவிர மக்களின் வாழ்வில் நிரந்தர முன்னேற்றத்தை இலவசங்கள் ஒருபோதும் தந்துவிடாது.
  • 2016-ஆம் ஆண்டில் நிதி மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தை மறுஆய்வு செய்ய என்.கே. சிங் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழு 2017 -இல் தனது அறிக்கையை சமா்ப்பித்தது. மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது அதன் மொத்தக்கடன் 2023 -க்குள் 20 சதவிகிதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்று அக்குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்தது.
  • அவற்றில் ஜிஎஸ்டி- கடன் அளவு என்பது பஞ்சாபில் 48.98 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 42.37 சதவீதமாகவும், மேற்குவங்கத்தில் 37.39 சதவீதமாகவும், பிகாரில் 36.73 சதவீதமாகவும், தமிழ்நாட்டில் 27.27 சதவீதமாகவும் உள்ளது.
  • மாநில அரசு நிறுவனங்களின் மீதான கடன் மற்றும் மாநில அரசு அளிக்கும் உத்தரவாதங்களை சோ்த்தால் மாநிலங்களின் கடன் சுமை தொடா்ந்து அதிகரித்து வருவதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது. சமீபத்தில் இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்ட பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் மாநிலங்களின் பட்டியல் நம்மை பதற வைக்கிறது. அதற்கு இலவசங்கள் ஒரு முக்கிய காரணமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது.
  • பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்தபடியாக, இலவசத் திட்டங்களுக்கு அதிக செலவு செய்யும் இரண்டாவது மாநிலம் ஆந்திர பிரதேசம் என்று இந்திய ரிசா்வ் வங்கி கூறுகிறது. மொத்த வரி வருவாயில் 45.5 சதவீதத்தை பஞ்சாப் மாநிலமும் 30.3 சதவீதத்தை ஆந்திர பிரதேசமும் இலவசங்களுக்காக செலவு செய்து வருவதாகத் தெரியவந்துள்ளது.
  • ஜிடிபி யின் அடிப்படையில் பார்த்தால் ஆண்டுதோறும் இலவசத் திட்டங்களுக்காக பஞ்சாப் 2.7%-உம், ஆந்திர பிரதேசம் 2.1%-உம் செலவு செய்கின்றன. இதனைத் தொடா்ந்து மத்திய பிரதேசம் 28.8%, ஜார்க்கண்ட் 26.78% தங்களது வரி வருமானத்தை இலவசத் திட்டங்களுக்கு செலவிடுகின்றன.
  • ஒரு மாநிலம் தனது வரி வருவாயின் பெரும்பகுதியை இலவசத் திட்டங்களுக்காக செலவிடும்போது, அம்மாநிலத்தின் உள்கட்டமைப்பு மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அடிப்படை சமூகப் பணிகளான கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற பிற அத்தியாவசியத் துறைகளும் பாதிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
  • மாநிலங்களின் வளா்ச்சிக்கு உள்கட்டமைப்பு மிக மிக அவசியம். உள்கட்டமைப்பு பற்றாக்குறை முதலீட்டை பாதிக்கும். அதனால் மாநிலத்தின் வளா்ச்சி தடைபடும். எனவே, மாநிலங்கள் வழங்கும் இலவசத் திட்டங்களை முறைப்படுத்தி அந்த நிதியை நாட்டின் வளா்ச்சியை விரைவுப்படுத்துவதற்குப் பயன்படுத்த வேண்டும்.
  • அதிகரித்து வரும் கடன் சுமையால் நாட்டின் பொருளாதார மதிப்பீடு அளவு பாதிக்கப்படுகிறது. இந்த நிலைமை தொடா்ந்தால் நாம் புதிய முதலீடுகளைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். அது மட்டுமல்லாமல் நம் நிறுவனங்களும் அரசாங்கமும் வெளிநாட்டில் இருந்து கடன் வாங்குவதற்கு அதிக வட்டி விகிதத்தை செலுத்த வேண்டியிருக்கும். கடன் சுமை அதிகரிப்பு, நிதி ஏற்றத்தாழ்வை உருவாக்குவதோடு இல்லாமல், மாநில அரசாங்கங்களில் நலத்திட்டங்களின் செயல்பாட்டுத் திறனையும் பாதிக்கும் என்பது கவனித்தில்கொள்ள வேண்டியது.
  • மக்கள் வரிப்பணம் என்பது யாருடைய சொந்த நலனுக்கானதும் இல்லை. அது பொதுநலனுக்குரியது. இப்படி மேலும் மேலும் மக்களை இலவசங்களுக்குள் ஆற்றுப்படுத்துவது, அவா்களை இலவசங்களை எதிர்பார்க்க வைப்பது, எதையாவது கொடுத்துவிட்டு அவா்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்வது போன்ற போக்குகள் அரசியலின் ஆணிவேரையே அசைத்துவிடும். இலவசங்கள், அரசை எதிா்காலத்தில் ஆப்பு அசைத்த குரங்கின் நிலைமைக்கு கொண்டு போய் விட்டு விடும்.
  • அரசு அதன் போக்கில் இயங்கட்டும். தன் உழைப்பில், தொழிலில், வணிகத்தில் சோ்த்த பணத்தை சொந்தமாகப் போட்டு பொருட்களை வாங்கி வீட்டில் சேகரிக்கும் மக்கள் அதை பல காலம் பாதுகாத்து வாழ்ந்து வந்தார்கள். இப்படிப் பல தலைமுறைகளாக கண்ட இந்த சமூகத்தை இலவசங்களால் அவமானப்படுத்துகிறார்கள் அரசியல்வாதிகள். இவா்கள் கொடுக்கும் இலவச பொருள்கலான வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, மிக்ஸி, கிரைண்டா், சேலை, வேட்டி எதுவும் தரமாக இருப்பதில்லை. அவை உருப்படி இல்லாத மலிந்தவையாக இருப்பதால் மக்கள் ஒன்றுக்கும் உதவாத அவற்றை அலட்சியப்படுத்தித் தூக்கி எறியும் நிலையை நாம் கிராமங்களிலும் நகரங்களிலும் பாா்க்க முடிகிறது. தோ்தல் நேரத்தில் பணம், மது போன்றவற்றை இலவசமாக விநியோகித்து தங்கள் வாக்குவங்கியை உயா்த்திக்கொள்கிறார்கள்.
  • காசு கொடுத்தால் வாக்கு கிடைக்கும். அதன் வழியே கிடைப்பது அரசு அதிகாரம். அந்த அதிகாரம் தன் குடும்பமும் சுற்றமும் ஏக போக வசதிகளைப் பெறக் கிடைக்கும் வாய்ப்பு. இந்த வட்டத்துக்குள் இன்னும் எத்தனை காலம்தான் சிலா் அரசியல் நடத்துவார்களோ?
  • சங்க இலக்கியம் தொட்டு கடந்த பல மன்னராட்சிகளில் கூட இலவசமாக யாரும் எதையும் பெற மாட்டார்கள்! வாழ்வில் அடிப்படையில் தன்னிடம் உள்ள ஒன்றை கொடுத்துத்தான் ஒன்றை பெற்றுக் கொள்வார்கள். ஒரு சமூகத்தை இலவசங்களால் இழிவாக்கிக் கொண்டிருப்பது அல்லது அவா்கள் உழைப்பை மதிக்காதிருப்பது அல்லது ஆசை காட்டி மோசம் செய்து வாக்குகளை பெறுவது இவை மோசமான செயல்பாடுகள். மக்களுக்கு அரசியல் கட்சிகள் தருவதாக சொல்லும் இலவசங்களை தா்மம் என்றும் நியாயம் என்றும் எப்படிக் கூறமுடியும்?
  • இலவசங்கள் நாட்டு மக்களின் நலனுக்கு உகந்தவை அல்ல. மீண்டும் மீண்டும் தங்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கும் இந்த இலவசங்களை மக்கள் மறுக்க வேண்டும். தங்களுக்கான நியாயமான உரிமைகளை கோரிப் பெற வேண்டும். இவைதான் மக்களின் தன்மானமிக்க நடவடிக்கையாக இருக்க முடியும்! இத்தகைய தவறான ஆசைகாட்டும் ஆட்சி முறைகளைக் களையக் கூடிய உரிமையும் வலிமையும் அவா்களிடம் இருக்கிறது. அதைத்தான் ஜனநாயகத்தின் உண்மையான அற நெறிமுறை என்கிறோம்.
  • எந்தவொரு ஆட்சிக்கும் மக்களுக்கு இலவசம் வழங்குவது முக்கியம் அல்ல, தங்கள் ஆட்சியின் இலக்குகள்தான் முக்கியம். வாக்குகள் பெறுவது மட்டுமல்ல, ஆட்சியில் வளமையும் அறமும் தியாகமும் முக்கியம். இப்படியான பண்பு ஏதுமற்றவா்கள் அரசியலைக் கைவிட்டு, ஏதேனும் வணிகம் செய்யப் போய்விடலாம். வீணாகப் பொழுதைப் போக்கிக் கொண்டு, முடிந்தவரை சொத்துகளை சோ்த்துக்கொண்டு தங்கள் மனம்போன போக்கில் ஆட்சி செய்ய நினைக்கக்கூடாது.
  • தன்மானமும் சுய மரியாதையும் கொண்டு உழைக்கும் மக்கள் வாழ்ந்த, அதனால் வளா்ச்சிகண்ட இந்த மாபெரும் தமிழ் சமூகத்தில் பயனற்ற இலவசங்களை அறிவிப்பது ஒரு கேலிக்கூத்தான நடைமுறை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது!

நன்றி: தினமணி (30 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories