இளம்வயதினர் தற்கொலைகள் இனியும் தொடரக் கூடாது!
- கடந்த ஆண்டில் இந்தியாவில் 1,71,000 பேர் தற்கொலை செய்து கொண்டதாக அண்மையில் வெளியான தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் கூறுகின்றன. அவர்களில் 41% பேர் இளைஞர்கள் என்பது கூடுதலாக வேதனை அடையச் செய்கிறது. 2018-2022இல் பதிவான தற்கொலைகள், அதற்கு முந்தைய காலக்கட்டத்தைவிட 27% அதிகம் என மேற்கண்ட தரவுகள் தெரிவிக்கின்றன. இக்கால இடைவெளியில் நிகழ்ந்த தற்கொலைகளில் 67% இளைஞர்கள், நடுத்தர வயதினர் சம்பந்தப்பட்டவை.
- 2024இலும் இதே நிலை நீடித்துள்ளதைக் காண முடிகிறது. தற்கொலை செய்துகொண்ட 41% பேர் 30 வயதுக்கு உட்பட்டோர். இவர்களில் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமானது. கடந்த பத்தாண்டுகளில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது இரு மடங்கு ஆகியுள்ளது. குறிப்பாக, இந்தத் துயர நிகழ்வுகள் ஆண்டுக்கு 4% என அதிகரித்துவருகின்றன.
- ஒருவரது ஆளுமையை உருவாக்கும் படிப்பு, அவரது திறனை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் வேலை ஆகிய இரண்டுமே பதற்றத்துக்கும் மன நெருக்கடிக்கும் இடையே நிகழ வேண்டியதாகத் தற்காலத்தில் மாறியிருப்பதை யாரும் மறுக்க இயலாது. குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்துக் கல்வி பயிலவும் வேலைவாய்ப்பைப் பெறவும் வளர்த்தெடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை, தேவைக்கு அதிகமாகவே போட்டி உணர்வைத் தோற்றுவித்துவிட்டது.
- பல வகை வாய்ப்புகளை மறுதலித்து ஒரே விதமான படிப்பு, வேலை ஆகியவற்றின் பின்னால்தான் எல்லோரும் ஓட வேண்டும் என்கிற நிலை நிலவுகிறது. வெற்றி தோல்வி குறித்து மிகக் கூடுதலான கவனம் கொண்டிருப்பவர்களாக இன்றைய இளைய தலைமுறையினர் மாற்றப்பட்டுள்ளனர். இயந்திரத்தனமான கல்விச்சூழலிலோ, பணிச்சூழலிலோ அவர்களால் பொருந்த இயலாத நிலையில், தனித்துவிடப்பட்டவர்களாகத் தங்களை உணர்கின்றனர்.
- விமர்சனங்களுக்கு அஞ்சுபவர்களாகவும் சிக்கல்கள் தற்காலிகமானவையே என்கிற புரிதல் அற்றவர்களாகவும் உள்ளனர். எனவே, அவர்கள் மிக எளிதாகத் தற்கொலை முடிவை நோக்கித் தள்ளப்படுகின்றனர். மாணவர் தற்கொலைகளில் 60%க்கும் மேலானவை படிப்புசார்ந்த நெருக்கடியாலும் தோல்வி பயத்தாலும் நிகழ்வதாக இந்திய உளமருத்துவவியலுக்கான பருவ இதழ் கூறுகிறது.
- கல்விக்காகவும் வேலைக்காகவும் இளம் வயதினர் புலம்பெயர்வது தற்கொலை அதிகரிப்புக்கு இன்னொரு காரணம். கடந்த பத்தாண்டுகளில் மாநகரங்களில் ஒற்றை உறுப்பினர் குடியிருப்புகள் 40% அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் கூறுகிறது.
- குடும்பத்தினரைப் பிரிந்து வெளியூர்களில் தஞ்சம் புகும் அவர்களை நெருக்கடிகளின்போது ஆற்றுப்படுத்த உறவுகள் அமைவதில்லை. தகவல்தொடர்பை முன்பைவிட எளிதாக்க அறிமுகமான சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்ப வசதிகள், சக மனிதர்களிடமிருந்து தனிமைப்படுதல் என்கிற சிக்கலையும் உருவாக்கியிருக்கின்றன.
- மாணவப் பருவத்தைக் கடந்த இளம் வயதினர்கூட நெருக்கடி நேரத்தில் வாழ்க்கையைத் தக்க வைத்துக்கொள்வதை ஊக்குவிக்கும் சூழலை இழந்துள்ளனர். வணிக, தொழில் நிறுவனங்களின் குரலாகச் செயல்படும் ‘அசோசெம்’ அமைப்பு நடத்திய ஓர் ஆய்வில், இளம் பணியாளர்களில் 45% பேர் பணியிடங்களில் சக ஊழியர்களோடு தொடர்பற்ற நிலையில் இருப்பதாக உணர்வது தெரியவந்துள்ளது.
- சமூக வலைத்தளங்களில் அளவுக்கு அதிகமான நேரத்தைச் செலவழிப்பதும் அவற்றில் பகடிகள், கடுமையான விமர்சனங்கள் போன்றவற்றுக்கு உள்ளாவதும் இளம் வயதினரின் தற்கொலை முடிவுக்குக் காரணமாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஒருவர் தனது வாழ்வை முடித்துக்கொள்வது ஒட்டுமொத்தச் சமூகத்தின் தோல்வி என்றே கூறலாம்.
- கல்வி நிறுவனங்களிலும் பணியிடங்களிலும் இளம் வயதினரின் மன நலனைத் தக்கவைக்கிற, மேம்படுத்துகிற நடவடிக்கைகள் அவசியம் என்பதையே சூழல் உணர்த்துகிறது. தற்கொலைகளைத் தடுக்க அரசுகளும், சமூகத்தின் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைய வேண்டும். தற்கொலை எந்தப் பிரச்சினைக்கும் தீர்வல்ல என்பதை அனைவர் மனதிலும் அழுத்தமாகப் பதிவுசெய்ய வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (27 – 02 – 2025)