- தமிழகத்திலுள்ள பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக நிகழும் விபரீத நிகழ்வுகள், கல்வியாளர்களின் மனதில் கவலையையும் வேதனையையும் ஏற்படுத்தி வருகின்றன. வருங்காலத் தலைமுறையை வடிவமைக்கும் நாற்றங்கால் பருவத்தில் இருக்கும் பள்ளி மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவதும், தற்கொலைகளில் இறங்குவதும் எதிர்காலத்துக்கு ஏற்றம் அளிப்பவை அல்ல.
- பள்ளி மாணவர்கள் பலரின் சிகை அலங்காரம் முகம் சுளிக்க வைப்பதாக இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் ஆடை விதிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு ஆசிரியர்கள் அறிவுரை கூறுவதே சிரமமாகி விட்டது.
- 2022 ஜூலை 13-இல் கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அடுத்து அப்பள்ளி சூறையாடப்பட்டது. அதையடுத்து, மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும், 77 வழிகாட்டுதல்களுடன் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை 2022 ஜூலை 25-இல் வெளியிட்டது.
- அதன்படி பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பல வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. அதையடுத்து மாணவ - மாணவியரின் ஆடை, அலங்காரக் கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்தது.
- ஆனால், தற்போதைய அரசுப் பள்ளி மாணவர்களில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களில் பலர் அருவருப்பை ஏற்படுத்தும் வகையில் சிகையலங்காரத்துடன் பள்ளிக்கு வருவது வாடிக்கையாகி இருக்கிறது. இதற்கு "புள்ளிங்கோ கட்டிங்' என்று சிறப்புப் பெயரும் சூட்டப்பட்டிருக்கிறது.
- இதுபோன்ற நிகழ்வை புதுக்கோட்டை மாவட்டம், மச்சுவாடியில் ஆசிரியர்கள் கண்டித்த போது, அதனால் மனமுடைந்த மாணவர் ஒருவர் கடந்த சனிக்கிழமை (செப். 23) தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அதையடுத்து அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
- அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலோர் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பிற்பட்டவர்களாக இருக்கின்றனர். அவர்களது குடும்பச்சூழல், பெற்றோர் கண்டித்துத் திருத்தக்கூடிய வகையில் இருப்பதில்லை. தவிர, அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்திக் காட்டுவதற்காக தேர்வுத்தர மதிப்பீடுகள் குறைக்கப்பட்டுவிட்டதால், அவர்களின் கல்வித்தேடலும் குறைந்துவிட்டது.
- இவையல்லாது, வளரிளம்பருவச் சிக்கல்கள், குடும்பங்களில் நிலவும் சமூகச் சிக்கல்கள், போதை மருந்துப் பயன்பாடு, மதுவின்ஆதிக்கம் ஆகியவையும் மாணவர்களைத் தடம்மாறச் செய்கின்றன. வீட்டில் பெற்றோராலும் பள்ளியில் ஆசிரியராலும் கண்டித்து வளர்க்கப்படாத மாணவன் ஒழுக்கமுள்ளவனாக வளர வாய்ப்பில்லை. தமிழகத்தின் சில பகுதிகளில் நிகழ்ந்துள்ள மோசமான நிகழ்வுகளை இங்கு நினைவுகூர்வது, நாம் எத்தகைய ஆபத்தை நோக்கிப் பயணிக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும்.
- விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் மதுபோதையில் பள்ளிக்கு வந்து மாணவிகளை கேலி செய்த மாணவரைக் கண்டித்த தலைமை ஆசிரியர் தலையில் தாக்கப்பட்டார் (2022 நவ. 22). அதையடுத்து அந்த மாணவன் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டான்.
- தருமபுரி மாவட்டம், அமானி மல்லாபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியின் வகுப்பறை மேஜை, நாற்காலிகளை மாணவ - மாணவிகள் உடைத்து சேதப்படுத்திய அநாகரிக நிகழ்வு காரணமாக, ஐந்து மாணவர்கள் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர் (2023 மார்ச் 9).
- திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையிலுள்ள தனியார் பள்ளியில் ஏழு மாணவிகள் பள்ளியிலேயே மது அருந்தி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் (2023 செப். 3).
- திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் பட்டியலின மாணவர் ஒருவரையும் அவரது சகோதரியையும் பிற்பட்ட ஜாதி மாணவர்கள் சிலர் வீடு புகுந்து தாக்கி அரிவாளால் வெட்டியது பரபரப்புச் செய்தியானது (2023 ஆக. 9). இது மாணவர்களிடையே நிலவும் ஜாதி வேற்றுமைகளையும் ஆதிக்க உணர்வையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. இதுகுறித்து ஆராய நீதிபதி சந்துரு தலைமையில் தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது.
- இந்த நிகழ்வுகள் மாதிரிக்கு மட்டுமே. இவை போன்ற மோசமான நிகழ்வுகள் தமிழகப் பள்ளிகளில் தொடர்ந்து நிகழ்வது நிச்சயமாக, மாபெரும் சமூக நோயின் அறிகுறி. சமுதாயத்தின் கண்ணாடியே நமது குழந்தைகள். பள்ளிகளில் பயிலும் நமது குழந்தைகளின் இயல்பு சரியில்லை என்றால் நமது சமுதாயம் சரியில்லை என்றே பொருள்.
- நமது குழந்தைகளைத் திருத்தி அமைக்க வேண்டிய ஆசிரியப் பெருமக்களின் கைகளைக் கட்டுவதாக பள்ளிக் கல்வித்துறையின் நடவடிக்கைகள் அமைந்துவிடக் கூடாது. மாணவர்களின் தற்கொலைக்காக, எந்த விசாரணையும் இன்றி உடனடியாக ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவது, அவர்களது பணித்திறனையும், கற்பித்தல் ஆர்வத்தையும் வலுவிழக்கச் செய்துவிடும்.
- அதேபோல எந்த ஒரு விஷயத்திற்கும் தற்கொலை தீர்வல்ல. நீட் தேர்வுக்கான எதிர்ப்பின் போது, சில மாணவர்களின் தற்கொலை பெருவாரியாக விவாதிக்கப்பட்டதும்கூட மாணவர்களின் மனதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை.
- இன்றைய மாணவர்களின் உளவியல் நெருக்கடியை எதிர்கொள்ள, அரசு, பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகிய நான்கு பிரிவினரும் இணைந்து செயல்பட வேண்டும். அதற்கான வழிமுறைகளை உருவாக்கும் தலையாய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
நன்றி: தினமணி (28 – 09 – 2023)