TNPSC Thervupettagam

இவள் தேசம் காக்கும் சக்தி

June 1 , 2019 2056 days 1363 0
  • இன்றைக்கு ஏறத்தாழ 2,400 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கத்திலிருந்து அரசியல் காரணங்களுக்காக இந்தியா வந்த புவியியலாளர் மற்றும் பயண விரும்பியான மெகஸ்தனிஸ் நம் தேசம் எங்கும் பயணம் செய்து தனது அனுபவங்களையும் பயணத்தில் தான் கண்டவற்றையும் நான்கு தொகுதிகள் கொண்ட இண்டிகா என்னும் நூலாகத் தொகுத்துத் தந்திருக்கிறார். இந்நூல் முழுமையாக தற்போது கிடைக்கவில்லை என்ற போதிலும், கிடைத்திருக்கும் அளவில் அவர் கூறும் செய்திகள் நமது தேசத்தின் இயற்கை வளங்களை, கலாசார மாண்புகளை, பண்பாட்டு விழுமியங்களை பறைசாற்றுவதாக அமைந்திருக்கின்றன. பாண்டிய நாட்டைப் பற்றி பல குறிப்புகளை தன்னுடைய நூலில் எழுதியிருக்கிறார் மெகஸ்தனிஸ்.
பெண்கள்
  • அதில் மிக முக்கியமாக கடல் அரணாக அமைந்த பாண்டிய நாட்டைப் பெண்களே ஆண்டு வந்தனர் என்று குறிப்பிட்டிருப்பதைக் காண்கிறோம். தேசம் ஆளும் பணியில் அதிகாரத்தில் பெண்கள் தலைமைப் பொறுப்பேற்று இருந்ததை அவரது இண்டிகா நூல் உறுதி செய்திருக்கிறது.
  • அதேபோல மெகஸ்தனிஸின் மற்றொரு மிகச் சிறந்த பதிவு, பெண் மெய்க்காவலர்கள் சந்திரகுப்த மெளரியரைப் பாதுகாக்கும் படையில் இருந்தனர் என்று அவர் எழுதி இருக்கும் குறிப்பு நம் தேசத்தில் 2,400 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் அரசியலில், ராணுவத்தில் கொண்டிருந்த பங்கை உலகிற்கு எடுத்துச் சொல்வதாக அமைந்திருக்கிறது. பெண்கள் வீராங்கனைகளாக மன்னரைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த செய்தி நம்மைப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது.
  • மெகஸ்தனிஸ் மட்டுமல்லாது இன்னும் பல்வேறு காலகட்டங்களில் பெண்கள் வீராங்கனைகளாகப் போர்க்களத்தில் முன்நின்ற சம்பவங்களை வரலாறு அடுக்கிச் செல்கிறது. ரிக் வேதத்தில் வர்ணிக்கப்படும் போர்க்களக் காட்சியில் தலைமை ஏற்று  போரில் பெண்கள் முன் நின்றதைக் காண்கிறோம். வத்ரிமதி, விஷ்வவரா இருவரும் போர்க்களத்தில் தங்கள் அங்கங்களை இழந்த போதிலும் இரும்புக்கால், தங்கக்கை பொருத்திக் கொண்டு மேலும் மேலும் முன்னேறி தலைமை ஏற்றுப் போரிட்டதாக ரிக் வேதம் விவரிக்கிறது.
ஆற்றல்
  • ஈட்டி எறியும் கலையில் ஆற்றல் மிக்க பெண்கள் இருந்ததாகவும் அவர்கள் சக்திகி என்று அழைக்கப்பட்டதாகவும் பதஞ்சலி முனிவரின் மகாபாஷ்யம் கூறுகிறது. வில் அம்புகளுடன் போரிடும் திறமை வாய்ந்த பெண்கள் மௌரியப் படையில் இருந்ததாக அர்த்தசாஸ்திரம்  குறிப்பிடுகிறது. அலெக்சாண்டருக்கும் புருஷோத்தமனுக்கும் இடையே நடைபெற்ற போரில் புருஷோத்தமனின் சார்பில் பெண்கள் படையும் ஈடுபட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன.
  • புராணங்கள், இதிகாசங்கள் என்று எடுத்துக் கொண்டாலும் போர்க்களத்தில் ரதம் ஓட்டுவதில் தொடங்கி பல்வேறு நிலைகளில் பெண்கள் பங்கேற்றதைக் காண்கிறோம்.  ஆக, வேதகாலம் தொடங்கி சுதந்திரப் போராட்டம் வரை வரலாற்றின் பல காலகட்டங்களில் போர்க்களத்தில் பெண்களின் பங்களிப்பு இந்தியாவைப் பொருத்தவரை எப்போதும் இருந்து வந்திருக்கிறது.
காரணங்கள்
  • பல வரலாற்றுக் காரணங்கள் எல்லாத் துறைகளிலும் மேன்மையும் முதன்மையும் பெற்றிருந்த பெண்களை அந்நிலையிலிருந்து தாழச் செய்ததைப் போலவே ராணுவம் மற்றும் போர்க்களத்திலும் பெண்களை ஏறத்தாழ இல்லாமல் செய்துவிட்டது. எனினும், சாதகமான கால மாற்றம் ஏற்படும்போது உறங்கிக் கிடக்கும் மரபணுக்கள் மீண்டும் புத்துயிர் பெற்று தன்னை நிரூபித்துக் கொள்கின்றன. அந்த வகையில் தற்போது ராணுவத்தில், பாதுகாப்புப் படைகளில் பெண்களின் பங்களிப்பு மீண்டும் துளிர்க்கத் தொடங்கியுள்ளது.
  • மிக வேகமான வளர்ச்சியும் கண்டு வருகிறது. சுதந்திர இந்தியாவில் 1992 -ஆம் ஆண்டு வரை  ராணுவத்தில் பெண்கள் பங்கேற்க அனுமதி இல்லை. ராணுவத்தில் பணியாற்ற பெண்களுக்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என்று பெண்கள் தரப்பில் இருந்து எழுப்பப்பட்ட கேள்விதான் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து ராணுவத்தில் இன்றைய சாதனைப் பெண்களை உருவாக்கியிருக்கிறது.
  • ராணுவத்தில் போர்க்  கைதிகளாக எதிரி நாடுகளால் பிடிக்கப்படும் வீரர்கள் கொடுமைகளுக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக நேரிடும். இதை மனதில் கொண்டே நெடுங்காலமாக முப்படைகளின் உயர்நிலைக் குழு இந்திய ராணுவத்தில் பெண்கள் நேரடி போர் படைகளில்  ஈடுபடுத்துவதைப் பரிந்துரைக்காமல் இருந்து வந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல பிரிவுகளிலும் அவர்கள் முன்னிலை வகிக்கவும் தொடங்கியிருக்கிறார்கள்.
முப்படைகளில்
  • முப்படைகளில் அரசின் புள்ளிவிவரக் கணக்குப்படி இதுவரை ஏறத்தாழ 13 சதவீத பெண்கள் விமானப்படை மற்றும் கடற்படையில் பணி புரிகின்றனர். உடல் ரீதியான பயிற்சி ஆயுதத்தைக் கையாளுதல், தலைமைப் பண்புக்கான பயிற்சி, தந்திர பயிற்சி, மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு பயிற்சி என்று பல்வேறு பயிற்சிகளில் தேர்ச்சி பெற்று பெண் அதிகாரிகள் ராணுவப் பணியில் ஈடுபடுகின்றனர்.
  • 2010 -ஆம் ஆண்டு வரை ராணுவ கல்விப் படையிலும் நிர்வாகப் பிரிவிலும் மட்டுமே பெண்கள் நிரந்தரப் பணிகளில் ஈடுபட்டு இருந்தார்கள். தற்போது ஆண்களைப் போலவே 14 ஆண்டுகள் வரை பெண் அதிகாரிகளும் பணியில் ஈடுபடுகின்றனர். லெப்டினன்ட் கர்னல் பதவி வரை விமானப்படை மற்றும் கடற்படைகளிலும் அதற்கு இணையான பதவிகள் வரை பெண்கள் பணியாற்றுகின்றனர். கடந்த 2015-ஆம் ஆண்டில் குடியரசு தின அணிவகுப்பில் சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் 2010-ஆம் ஆண்டு சிறந்த வீராங்கனையாக வீரவாள் பரிசு பெற்ற 25 வயது நிரம்பிய கேப்டன் திவ்யா அஜித் 154 பெண் அதிகாரிகள் அடங்கிய குழுவுக்குத் தலைமை தாங்கியது பெருமையாகப் பார்க்கப்பட்டது.
  • எத்தகைய கடின சூழ்நிலையையும் எதிர்கொண்டு சற்றும் தளராது இலக்கை நோக்கிய தங்கள் முன்னேற்றத்தைக் களத்தில் நிரூபித்த இந்திய ராணுவத்தின் சிறப்புமிக்க படையான  IASC (Indian Army Service Corps)படைக்கு முதன்முறையாக பெண் அதிகாரி ஒருவர் தலைமை வகித்தது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு.
  • இந்த ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி இந்திய ராணுவ தினத்தன்று 144 ஆண் அதிகாரிகள் அடங்கிய படைக்கு லெப்டினன்ட் பாவன கஸ்தூரி தலைமை வகித்தார். ஜனவரி 26-இல் குடியரசு தினத்தன்றும் லெப்டினன்ட் பாவன கஸ்தூரி ஆண்கள் பங்கு கொண்ட படைக்கு முதன்முறையாக  தலைமை தாங்கி வழி நடத்தியதைக் கண்டபோது தேசமே பெருமிதம் கொண்டது.
  • அதேபோல 33 ஆண்கள் அடங்கிய ராணுவத்தின் டேர்டெவில்ஸ்   மோட்டார் சைக்கிள் அணிக்கு கேப்டன் ஷிக்கா தலைமைப் பொறுப்பேற்றார். குடியரசு தின அணிவகுப்பில் விதவிதமான சாகசங்களைச் செய்தபடி வந்த டேர்டெவில்ஸ் மோட்டார் சைக்கிள் அணியின் வியப்படைய வைத்த சாகசங்கள் மக்களை உவகை கொள்ளச் செய்த அதேவேளையில், அந்தப் படைக்குத் தலைமை ஏற்று,  மோட்டார் சைக்கிளில் நின்றபடி குடியரசுத் தலைவருக்கு கேப்டன் ஷிக்கா மரியாதை செலுத்தியபோது தேசமே சிலிர்த்து நின்றது.
  • இது ஒருபுறமிருக்க, சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக தற்போது நக்சல் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் பெண் கமாண்டோக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் இதற்கென்று 30 பெண் கமாண்டோக்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
கமாண்டோ
  • பஸ்தர் தண்டேவாடா பகுதிகளில் இந்த கமாண்டோ படையினர் களத்தில் இறங்கிப் பணியாற்றுகின்றனர். தண்டேஸ்வரி ஃபைட்டர்ஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தக் குழு முற்றிலும் பெண்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட படை என்பதே அதன் தனிச் சிறப்பு.
  • ஓராண்டுக்கு முன் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க பஸ்தாரியா பட்டாலியன் என்ற இளைஞர்கள் படையை மத்திய பாதுகாப்புப் படை ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது தண்டேஸ்வரி ஃபைட்டர்ஸ் என்ற பெண் கமாண்டோ படையும் பாதுகாப்புப் பணியில் இடம் பெற்றுள்ளது. இந்திய ராணுவத்தின் பல பிரிவுகளில் பணியாற்ற பெண்கள் வாய்ப்புப் பெற்றிருக்கிறார்கள் என்ற போதிலும் இதுவரை சிப்பாய் படைக்கு அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், முதன்முறையாக தற்போது படை வீரர் பணிக்கும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு சென்ற மாதம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ராணுவத்தில் ராணுவ போலீஸ் படையில் பெண்கள் இணைவதற்கான வாய்ப்பும் தற்போது திறந்திருக்கிறது.
  • இதற்கான விண்ணப்ப விவரங்களை joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பெறலாம். வரும் காலங்களில் பெண் படை வீரர்கள் தனி முத்திரை பதித்து தங்கள் திறனை நிரூபிக்கப் போவதையும் தேசம் காணப் போகிறது. இந்த ஆண்டு ராணுவத்தில் பாதுகாப்புப் படையில் என்று பல நிலைகளிலும் பெண்களின் பங்களிப்பு நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. சரியான பாதையில் நாம் நடை போடுகிறோம் என்பதற்கான உதாரணங்கள் தோன்றியிருக்கின்றன.
  • எந்தத் துறையிலும் பெண்கள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்த முடியும் என்பதற்கு லெப்டினன்ட் பாவன கஸ்தூரியும் கேப்டன் ஷிக்காவும் உதாரணங்களாக மிளிர்கின்றனர். மீண்டும் பாரத தேசமும் பாரதப் பெண்களும் தங்கள் பெருமைகளை மேன்மைகளை மீட்டெடுத்து உன்னத நிலையை அடைவோம் என்பதற்கான நம்பிக்கை ஒளி தென்படத் தொடங்கியிருக்கிறது.

நன்றி: தினமணி (01-01-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories