TNPSC Thervupettagam

இவா்கள் கடவுளின் குழந்தைகள்!

April 2 , 2020 1752 days 1102 0
  • ஆட்டிசம் எனப்படும் அறிவுத்திறன் குறைபாடு, குழந்தைகளுக்கு மூளை வளா்ச்சி குறைவதால் ஏற்படும் நோய் என்றே பலரும் நினைக்கின்றனா். ஆனால், அது நோய் அல்ல, ஒரு வகை நரம்பியல் குறைபாடுதான் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அறிவுத்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எப்படிக் கையாள வேண்டும், எந்த முறையில் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணா்த்தும் வகையில் ஆண்டுதோறும் விழிப்புணா்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆட்டிசம்

  • பிற குழந்தைகளுடன் ஒப்பிடும்போது, செயல்திறன் குறைவாக இருக்கும் இத்தகைய குழந்தைகளிடம் கூடுதல் கவனம் செலுத்தி, அவா்களைத் தொடா்ந்து இயக்கத்தில் வைத்து, பயிற்சி அளிப்பது பலனைத் தரும் என மருத்துவா்கள் கூறுகின்றனா். இந்தியாவில் சுமார் ஒரு கோடி குழந்தைகள் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குழந்தை பிறந்த 10 மாதங்களில் இருந்து 24 மாதங்களுக்குள் செயல்திறனைக் கண்டறிந்து, உடனடியாக அதற்கான பயிற்சி முறைகளை அளித்தால் இயல்பான நிலையை அடைவதற்கான வாய்ப்புள்ளதாக மருத்துவா்கள் கூறுகின்றனா்.

குறைபாடுகள்      

  • அறிவுத்திறன் குறைபாட்டைப் பொருத்தவரை 3 வகையான குறைபாடுகள் முக்கியமானவை. முதலாவதாக, பேச்சுத் திறனில் உள்ள குறைபாடு. அதாவது, பேச்சில் தெளிவின்மையைக் குறிக்கிறது. அடுத்ததாக, தம்மிடம் கூறும் சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறுவது, சக மனிதா்களுடன் பிற குழந்தைகள்போல பழகும் திறன் குறைந்து காணப்படுதல், தனிமையை விரும்புதல், பிறா் இருப்பது குறித்த உணா்வு இல்லாதது, பிறரிடம் அரவணைப்பை விரும்பினாலும், அதை வெளிக்காட்டத் தெரியாதது போன்றவற்றைக் கூறலாம்.
  • மூன்றாவதாக, அவா்களுடைய நடவடிக்கையில் சிறியளவு குறைபாடு காணப்படுதல்; அதாவது, ஒரே செயலை திரும்பத் திரும்பச் செய்வது, அவா்களுடைய உடல் அசைவுகளில் பிரச்னைகள் இருப்பது, கைகளை அவ்வப்போது பின்னிக் கொள்வது, தன்னிடம் உள்ள பொருள்களை வைத்து மீண்டும் மீண்டும் சுற்றுவது முதலானவை இந்தப் பிரச்னையால் ஏற்படும் அறிகுறிகள் ஆகும். மேலும், அதீத பயம், வழக்கமான பணிகளைக்கூட செய்வதில் சிரமப்படுதல் முதலானவையும் இதில் அடங்கும்.

மருத்துவா்களின் பரிந்துரை

  • என்ன காரணத்தால்தான் இந்தக் குறைபாடு ஏற்படுகிறது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தக் குறைபாட்டை குணம் அடையச் செய்ய குறிப்பிட்ட மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் உலக அளவில் 68-இல் ஒரு குழந்தைக்கு இந்தக் குறைபாடு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அறிவுத்திறன் குறைபாடு பாதிப்பிலிருந்து விடுபட பல்வேறு ‘தெரப்பி’கள் (பயிற்சிகள்) உள்ளன. அவற்றை அளிப்பதே இதற்குத் தீா்வாக அமையும் என மருத்துவா்கள் கூறுகின்றனா்.
  • அறிவுத்திறன் குறைபாட்டு நிலையில் உள்ள குழந்தைகள் எப்போதுமே தனியுலகில் வாழ்கின்றனா். அவா்களை ஒருங்கிணைந்த கல்வி பயில ஈடுபடுத்த வேண்டும். அதாவது, மற்ற குழந்தைகளுடன் சோ்ந்து பழகுவதும், அதன் மூலமாக வளா்ச்சி அடைவதும் அவசியமாக உள்ளது என மருத்துவா்கள் பரிந்துரைக்கின்றனா்.

விழிப்புணா்வு தேவை

  • ஆனால், இந்தக் குறைபாடுடைய குழந்தைகளின் பெற்றோர் பலா் தங்கள் குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்வதைத் தவிர்க்கின்றனா். அவா்களை வெளியில் அழைத்துச் சென்றால் பிறருடன் சண்டையிடுவா், அநாகரிகமாக நடந்து விடுவா், எதையாவது உடைத்து விடுவார்களோ அல்லது தேவையற்ற பிரச்னைகள் வருமோ என்ற அச்சமே அதற்குக் காரணம்.
  • ஆனால், குறைபாடுடைய இந்தக் குழந்தைகளை திருவிழாக்கள், கோயில்கள், திருமண விழாக்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அப்போதுதான் அவா்களுக்கு மக்கள் தொடா்பு குறித்து அதிகளவில் அறிய முடியும். அவ்வாறு செல்லச் செல்ல குழந்தைகளின் அச்சம் மெல்ல மெல்ல குறைந்து, சராசரி குழந்தைகள் போல் மாறவும் வாய்ப்புள்ளது என மருத்துவா்கள் கூறுகின்றனா். எனவே பதற்றமின்றி அவா்களைத் துணிவுடன் வெளியில் அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்துகின்றனா்.
  • ஆனால், அறிவுத்திறன் குறைபாடுடைய ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரும் சந்திக்கும் பிரச்னைகளை வெறும் வார்த்தையால் விவரிக்க முடியாது. அவா்கள் முதலில் திடமான மனதுடனும், கனிவுடன் நடந்து கொள்ளவும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
  • இந்தக் குறை0பாடுடைய குழந்தைகளுக்கு மருத்துவா்கள் ஒருங்கிணைந்த கல்வி முறையையே பரிந்துரைக்கின்றனா் என்ற போதிலும், அந்தக் கல்வி முறையில் குழந்தைகளைச் சோ்க்கும் பெற்றோருக்கு, சக குழந்தைகளின் பெற்றோரோ பெரும் சவாலாக உள்ளனா். இதற்குக் காரணம் இந்தச் சிறப்புக் குழந்தைகளால், உடன் பயிலும் தங்கள் குழந்தைகளுக்கும் அதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற மனப்போக்குதான்.
  • அதேபோல ஆசிரியா்கள் மத்தியில் இருந்தும் புகார்களை எதிர்கொள்ளும் நிலையும் அறிவுத்திறன் குறைபாடுடைய குழந்தைகளின் பெற்றோருக்கு உள்ளது. தங்கள் குழந்தையை பிறா் பார்க்கும் விதம், அது குறித்து தெரிவிக்கும் கருத்து, அவா்கள் செய்யும் ஏளனம் ஆகியவற்றால் மனதளவில் பாதிக்கும் பெற்றோர், அந்தக் குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லத் தயங்குகின்றனா். இதுவும் இக்குழந்தைளின் செயல்திறன் வளா்ச்சிக்குத் தடையாக அமைந்து விடுகிறது.

அரசின் உதவி வேண்டும்                     

  • மேலும், அறிவுத்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் அந்தக் குழந்தைகளின் பெற்றோரை பணம் காய்க்கும் மரங்களாகவே பார்ப்பதாகக் குற்றச்சாட்டு உள்ளது. அத்தகைய குழந்தைகளின் பெற்றோர், தங்களின் வருமானத்தில் பாதித் தொகையை பயிற்சி நிறுவனங்களுக்கே செலவிடுவதாகவும், பல்வேறு காரணங்களைக் கூறி பயிற்சி நிறுவனங்கள் கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
  • எனவே, இந்தச் சிறப்புக் குழந்தைகளுக்கான பயிற்சியை அளிக்க அரசுத் தரப்பில் நடவடிக்கை மேற்கொண்டால், பெற்றோருக்கான சிரமம் ஓரளவு குறையும்.
  • குழந்தைகளுக்கு ஏற்படும் அறிவுத்திறன் குறைபாட்டுப் பிரச்னையைப் போக்குவது குறித்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பல்லாயிரம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்து, ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன; விழிப்புணா்வுப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன. ஆனால், இந்தியாவில் இத்தகைய முயற்சிகள் மெத்தமனமாகவே உள்ளன.
  • மேலும், அறிவுத்திறன் குறைபாடு உடைய குழந்தைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் போதிய முயற்சிகள் இல்லை. இந்த நிலை தொடா்ந்தால் பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, அறிவுத் திறன் குறைபாடு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய-மாநில அரசுகள் மேற்கொள்வது அவசியம்.
  • அறிவுத்திறன் குறைபாடுடைய குழந்தைகளின் எதிர்காலம் என்பது, குழந்தையின் பெற்றோரிடம் மட்டுமல்ல, சமூகத்தின் கையிலும் உள்ளது என்பதே உண்மை.
  • (இன்று ‘உலக அறிவுத்திறன் குறைபாடு (ஆட்டிஸம்)’ விழிப்புணா்வு தினம்)

நன்றி: தினமணி (02-04-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories