TNPSC Thervupettagam

இஸ்ரேல் எப்படிப் போரிடுகிறது?

October 13 , 2024 6 hrs 0 min 22 0

இஸ்ரேல் எப்படிப் போரிடுகிறது?

  • நவீனத் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் உதவியுடன் மத்திய கிழக்கில் ஓராண்டாகப் போரிட்டுவருகிறது இஸ்ரேல். கடந்த செப்டம்பர் மாதம் ஆயிரக்கணக்கான பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்து லெபனானில் மிகப் பெரிய உயிரிழப்புகளையும் ஆயிரக்கணக்கானோருக்குக் காயங்களையும் ஏற்படுத்தியது. அந்தத் தாக்குதலை நடத்த அதற்கும் சில மாதங்களுக்கு முன்பிருந்தே திட்டமிட்டு செயல்படுத்தியது இஸ்ரேல்.
  • கடந்த ஆண்டு அக்டோபர் 7இல் ‘ஹமாஸ்’ இயக்கம் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க புறப்பட்ட தனது வேகத்தையும் குறைத்துக்கொள்ளவில்லை, தாக்கும் இலக்குகளையும் அதிகரித்துக்கொண்டேவருகிறது. இப்போது லெபனானில் ‘ஹெசபொல்லா’ அமைப்புடனும் ‘காஸா’ நிலப்பரப்பில் ‘ஹமாஸ்’ இயக்கத்தவருடனும் ஏமனில், ‘ஹூதி’ அமைப்புடனும் போரிட்டுவருகிறது. ‘ஹமாஸ் இயக்கத்தவரை மட்டும்தான் குறிவைத்துத் தாக்குகிறோம், இலக்குகள் மீது துல்லியமாக குறிவைக்கிறோம்’ என்று இஸ்ரேல் கூறிக்கொண்டாலும் அப்பாவி பொதுமக்கள் உடன் இறப்பது அதிகரித்துவிட்டது.
  • காஸாவில் இதுவரை 41,000க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர், ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், மக்களுக்கு உணவு – குடிநீர் வழங்கும் இடங்கள் என்று எதுவுமே இந்தத் தாக்குதலில் விட்டுவைக்கப்படவில்லை. தாக்க வேண்டிய இலக்குகளை இஸ்ரேல் ராணுவம் எப்படித் தேர்வுசெய்கிறது, தாக்குதலுக்கு அது எப்படிப்பட்ட தொழில்நுட்பங்களைக் கையாள்கிறது?

முதலாவது ‘எண்ம’ போர்

  • இஸ்ரேல் ராணுவத்தின் கணினி, தகவல்தொடர்பு அலகு உள்ள மையத்தின் தலைமை (பெண்) தளபதி ரச்சேலி டெம்பின்ஸ்கி, இந்தத் தாக்குதல்களை ‘முதலாவது எண்ம (டிஜிட்டல்) போர்’ என்கிறார். “காஸாவில் நாங்கள் நடத்திய தாக்குதல்களை இந்த மையத்திலிருந்து மிகச் சில ராணுவ வீரர்களே மடிக்கணினி (லேப்-டாப்) உதவியுடன் செய்தனர்” என்கிறார்.
  • டெம்பின்ஸ்கி வெளியிட்டுள்ள யூட்யூப் காணொலியில் மிகப் பெரிய பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனங்களின் இலச்சினைகள் தெரிகின்றன. மைக்ரோசாஃப்ட் அசூர், கூகுள் கிளவுட், அமேசான் வெப் சர்வீசஸ் (ஏடபிள்யுஎஸ்) அதில் சில; மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒப்பந்தம்செய்துகொண்டு பல நாடுகள், மனிதர்கள் பற்றிய தரவுகளைப் பெற்று இந்தப் போரை நடத்துகிறது இஸ்ரேல். தரவுகளைச் சேமித்துவைக்கும் இடத்தை ‘கிளவுட்’ என்று அழைக்கின்றனர். வெவ்வேறு ‘கிளவுட்கள்’ பயன்படுத்தப்படுகின்றன. பாலஸ்தீனர்களைக் கண்காணிக்கவும் தேவைப்பட்டால் தாக்கவும் இந்தத் தரவுகளைப் பயன்படுத்துகிறது ராணுவம்.

எளிதில் சிக்காத ‘8200’ பிரிவு

  • எதிரி நாடுகளைக் கண்காணிக்க மிகவும் ரகசியமாகச் செயல்படும் ‘8200’ என்ற அலகை இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்துகிறது. இது ‘சைபர்’ தொழில்நுட்பத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றது. இஸ்ரேலுக்குத் தேவைப்படும் தகவல்களில் 90% இந்த ‘8200’ மூலமே பெறப்படுகிறது என்று ‘ஃபோர்பஸ்’ அறிக்கை தெரிவிக்கிறது. இந்த உளவுப்படையின் ஆதிக்கம், பக்கத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் விரிந்து பரந்திருக்கிறது.
  • ‘8200’ என்பதற்கு ஹீப்ரு (யூத) மொழியில், ‘ஷுமோன் மதாயிம்’ என்று பொருள். இது இஸ்ரேலிய ராணுவ உளவு இயக்குநரகத்தின் கீழ் வேலை செய்கிறது. லெபனானில் ஆயிரக்கணக்கில் பேஜர்கள் வெடித்த பிறகுதான் இந்த அமைப்பு மீது அனைவரின் கவனமும் குவிந்தது. இந்த அலகின் வேலைகள் மிகவும் ரகசியமானவை. இது தங்களுக்குள் சங்கேதமான குறிப்புகளைப் பரிமாறிக்கொள்வதுடன் எதிரிகள் தொடர்பான அனைத்துத் தரவுகளையும் எல்லா இடங்களிலிருந்தும் கறந்துவிடும். தேவைப்பட்ட நேரத்தில் நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் துல்லியமாகத் தாக்கும் என்கிறது ‘ராய்ட்டர்ஸ்’.

ஆட்கள் தேர்வு

  • இந்தப் பிரிவுக்கு மிகவும் இளவயதில் உள்ளவர்கள்தான், குறைந்த எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். உயர்நிலை பள்ளிக்கூடங்களில் படிக்கும்போதே யாரெல்லாம் அறிவியல்-தொழில்நுட்பத்தில் ஆர்வமும் நல்ல தேர்ச்சியும் பெற்றுத் திகழ்கிறார்கள் என்று கல்வித் துறை உதவியுடன் அடையாளம் கண்டு ராணுவத்துக்குத் தேர்வுசெய்கிறார்கள். இந்தப் போர் முடிந்ததும் இந்த இளைஞர்கள் உயர்தொழில்நுட்பங்களைப் படிக்க அனுப்பப்படுவார்கள், ‘சைபர்’ பிரிவு பாதுகாப்புப் பணியில் அதன் பிறகு நிரந்தரமாக்கப்படுவார்கள்.
  • “பாலஸ்தீனத்தில் தாக்குவதற்கான இலக்குகளைச் செயற்கை நுண்ணறிவு உதவியுடன்தான் தேர்ந்தெடுத்தோம்” என்று இந்தப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “மோதல்கள் தொடங்கிய உடனேயே ‘ஹமாஸ்’ இயக்க உறுப்பினர்கள் தப்பிவிடாதபடிக்குச் சிக்கவைக்க ‘லாவண்டர்’ என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு வழிமுறையைக் கடைப்பிடித்து மடக்கினோம்” என்றார் அவர்.

லாவண்டர் செய்த வேலை

  • ‘ஹமாஸ்’ இயக்கத்துடன் மோதல் தொடங்கிய உடனேயே ‘லாவண்டர்’ முடுக்கிவிடப்பட்டது. அது கோடிக்கணக்கான தகவல்களைத் தன்னுள்ளே வைத்திருக்கிறது. ராணுவம் தாக்க வேண்டிய இலக்குகளை அது ஆயிரக்கணக்கில் கொட்டத் தொடங்கியது. முதலில் இஸ்ரேலிய தரைப்படை எங்கெல்லாம் தாக்க வேண்டும் என்பதை அது தெரிவித்தது. அதுவரை இருந்திராத வகையில் ‘காஸா’ நிலப்பகுதி மீது ஏவுகணைகள், பீரங்கிகள் மூலம் பெரிய தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
  • ஒரு பாலஸ்தீனருக்கும் ஹமாஸுக்கும் இடையிலான நெருக்கம் எப்படிப்பட்டது என்பதைத் தெரிவிக்க, ஒன்று முதல் நூறு வரை ஒவ்வொருவருக்கும் எண் தரப்பட்டது. எண் குறைவாக இருந்தால், அவர் அவ்வளவு நெருக்கமில்லை என்று பொருள்.
  • அதிக எண்ணிக்கை உள்ளவர்களைக் கொல்ல முடிவெடுப்பதற்கு ‘லாவண்டர்’ உதவியது. ‘ஹமாஸ்’ இயக்கத்துடன் மேலோட்டமான தொடர்பில் இருந்தவர்கள், தொடர்புகொள்ளாமலேயே இருந்தவர்களையும் ‘லாவண்டர்’ தரவுகளாகத் திரட்டிவைத்தது. காரணம் ஒரே பெயரில் பலர் இருந்ததால், நெருங்கிய தொடர்புள்ளவரை விட்டுவிட்டு தொடர்பில்லாதவரைக் கொன்றுவிடக் கூடாது என்று இந்த முறை கடைப்பிடிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

90% துல்லியம்

  • ஹமாஸுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்களை, இந்தத் தரவுகள் மூலம் 90% துல்லியமாகத் தேர்வுசெய்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியிருக்கிறது. (ஆனால் ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள், அப்பாவிகள்தான் இறந்துள்ளனர்). 2021 முதலே ஹமாஸ் போன்ற இயக்கங்களுடன் தொடர்புள்ளவர்கள் குறித்த தரவுகளை ஒருநாளைக்கு 100 பேர் என்று பதிவிறக்கம் செய்துகொண்டதாக, அவிவ் கொச்சாவி என்ற இஸ்ரேலிய ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
  • ‘லாவண்டர்’ இல்லாமல், இஸ்ரேலிய ராணுவத்தால் ஒருநாளைக்கு 50 பேரைப் பற்றிய தரவுகளைத்தான் அதற்கும் முன்னால் பதிவிறக்கம் செய்ய முடிந்திருக்கிறது. ‘லாவண்டர்’ அந்த வேகத்தை இரட்டிப்பாக்கியிருக்கிறது. பாலஸ்தீனர்களின் முகம் உள்ளிட்ட உடல் அமைப்புகள், அவர்கள் வசித்த வீடு, அவர்கள் சென்றுவரும் பாதை, அவர்கள் அடிக்கடிச் செல்லும் இடங்கள், அவர்கள் சந்திக்கும் நபர்கள், அவர்கள் தொடர்புகொண்ட முகமைகள், முகாம்கள், மையங்கள் ஆகியவையும் தொகுக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவர்களுடைய தொலைபேசி உரையாடல் போன்ற தகவல்தொடர்புகளும் இடைமறித்து ஒட்டுக் கேட்கப்பட்டன.

நிபுணர்கள் ஏற்க மறுப்பு

  • செயற்கைத் தொழில்நுட்பம் உள்ளிட்டவை மூலம் ‘ஹமாஸ்’ இயக்கத்தவர்களை மட்டும்தான் இலக்கு வைத்துக் கொன்றோம் என்று இஸ்ரேலிய ராணுவம் கூறுவதில் உண்மையில்லை என்று இத்துறையைச் சேர்ந்த பிற நாட்டு நிபுணர்கள் கூறுகின்றனர். ‘ஹமாஸுக்கு இலக்கு வைத்தபோது அருகில் வசித்தவர்களும்கூட கொல்லப்பட்டுள்ளனர். அப்பாவி மக்களுடைய உயிர்ச் சேதம் குறித்து சிறிதும் கவலைப்படாமல் ஏராளமான குடும்பங்களைப் பூண்டோடு அழித்துவிட்டது இஸ்ரேல்’ என்று ‘ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்’ தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறது.
  • ‘ஒவ்வொரு வீதியாக குண்டுவீசி எல்லா வீடுகளையும் தரைமட்டமாக்கியிருக்கிறது, அவற்றில் வசித்த எல்லோருமே இறந்திருக்கின்றனர் அல்லது படுகாயம் அடைந்துள்ளனர், பொதுமக்கள் மீண்டும் அப்பகுதியில் வசிக்கவே முடியாத அளவுக்கு அடித்தளக் கட்டமைப்பு அனைத்துமே திட்டமிட்டு அழிக்கப்பட்டுவிட்டது’ என்கிறது ‘ஆம்னஸ்டி’ அறிக்கை. ராணுவ இலக்குகளைத்தான் குறிவைத்தோம் என்கிறது இஸ்ரேல், அது தாக்குதல் நடத்தியபோது ஒருவர்கூட அதை எதிர்த்து சண்டையிட்டதற்கான அடையாளமே இல்லை என்றும் ஆம்னஸ்டி சாடுகிறது.

ஹப்ஸோரா

  • ‘லாவண்டர்’ மட்டுமல்ல, ‘ஹப்ஸோரா’ என்ற செயற்கை நுண்ணறிவு சாதனத்தையும் பயன்படுத்தியது இஸ்ரேல். யூத மொழியில் ‘ஹப்ஸோரா’ என்றால் ‘நற்செய்தி’ என்று பொருள். ‘லாவண்டர்’ என்பது ‘ஹமாஸ்’ இயக்கத்துடன் தொடர்புள்ள தனிநபர்கள் பற்றியது, ‘ஹப்ஸோரா’ என்பது ‘ஹமாஸ்’ இயக்கம் தொடர்பாக தாக்கப்பட வேண்டிய கட்டிடங்கள், வீடுகள், வளாகங்கள் போன்றவை.
  • இவ்விரு சாதனங்களும் இருந்தாலும் ஏன் மற்றவர்களும் தொடர்பில்லாதவர்களும் தாக்கப்பட்டார்கள் என்ற கேள்வி எழலாம். ‘தஹியா’ என்ற இஸ்ரேல் ராணுவக் கொள்கையே அதற்குக் காரணம்.
  • மக்களுடைய பயன்பாட்டுக்கான அடித்தளக் கட்டமைப்புகளை (குடிநீர், மின்சாரம், போக்குவரத்து வசதி, எரிபொருள், உணவு, மருத்துவ வசதி) போன்றவற்றை அழித்தால்தான் மக்கள், இஸ்ரேலிய ராணுவத்தை எதிர்ப்பதைவிட உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் அல்லது பாலஸ்தீன ஆட்சியாளர்கள் மீது தங்களுடைய கோபத்தையும் அதிருப்தியையும் திருப்புவார்கள் என்பதற்காக இதைச் செய்திருக்கிறது.
  • இதை இஸ்ரேலிய ராணுவமும் ஒப்புக்கொண்டிருக்கிறது. மோதல்கள் தொடங்கிய உடனேயே தாக்கப்பட வேண்டிய இலக்குகளை ‘ஹப்ஸோரா’ வேகமாக அடையாளம் காட்டியது, துல்லியமாகவும் அதிக எண்ணிக்கையிலும் உடனே தாக்குவதும் அவசியமாயிற்று என்று அது தெரிவித்தது.

செலவைக் குறைக்க சிக்கனம்

  • ‘எல்லா இலக்குகளையும் இப்படி நவீனத் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, அதிக விலைக்கு விற்கப்படும் ஏவுகணைகளைக் கொண்டு தாக்கிவிடவில்லை. சில பகுதிகளில் வழிகாட்டல்களே இல்லாத ஏவுகணைக் குண்டுகளையும் பயன்படுத்தினோம், விலை குறைவான இவற்றால் ராணுவச் செலவை ஓரளவுக்குக் குறைத்தோம்’ என்று ஓர் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
  • ‘ஹமாஸ்’ இயக்கத்துடன் தொடர்புள்ள, அதேசமயம் முக்கியமில்லாதவர்களைக் கொல்லும்போது அந்த இடத்தில் சிவிலியன்கள் இருந்தால் அவர்களும் இறக்கக்கூடும் என்பதால் தலைமைக்குத் தெரிவித்து ஒப்புதல் பெற்ற பிறகே சாதாரண குண்டுகளால் தாக்கினோம். சில இடங்களில் எங்களுடைய இலக்குடன் 15 முதல் 20 பேர் வரை சிவிலியன்களும் சேர்ந்தே இறந்தனர் என்கிறார் அந்த அதிகாரி. விலை அதிகமான குண்டுகள் பற்றாக்குறையாகவே இருக்கிறது என்றும் இன்னொரு அதிகாரி குறிப்பிட்டார்.

‘அப்பா எங்கே?’

  • இஸ்ரேலிய ராணுவத்தின் உளவுப்பிரிவின் சேவை தனிநபர்கள், கட்டிடங்கள் குறித்து தகவல்கள் சேகரித்ததுடன் நிறுத்தவில்லை. முக்கியமான சில பாலஸ்தீனர்களை அவர்களுடைய வீட்டு அடையாளத்துடன் தரவுகளைப் பதிந்துவைத்திருக்கிறது. அந்தத் தரவுகளுக்கு ‘வேர் ஈஸ் டாடி?’ (அப்பா எங்கே) என்று சங்கேதப் பெயர். பாலஸ்தீனப் பகுதியில் வாழ்ந்தவர்களுக்கு ‘ஹமாஸ்’ இயக்கத்துடன் உள்ள தொடர்பு எப்படிப்பட்டது என்று வகைப்படுத்தினார்கள் என்று பார்த்தோம், அப்படி ஒவ்வொருவரையும் அடையாளம் காண, அவர்கள் வசிக்கும் வீட்டையும் குடும்பத்தையும் சேர்த்து தரவுகளில் பதிவிட்டார்கள். அந்தப் பதிவுக்குத்தான் ‘அப்பா எங்கே?’ என்று பெயர்.
  • தொலைவிலிருந்து தாக்குவதற்கு மட்டுமல்ல, ராணுவத்தினர் வீடு வீடாக நுழைந்து தேடுதல் வேட்டை நடத்தும்போது, அந்த வீட்டில் இருந்திருக்க வேண்டியவர் அங்கில்லை என்றாலும், ‘அப்பா எங்கே?’ என்று கேட்டு குடும்பத்தினரிடம் தகவல் பெற இந்தச் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டது.

மக்கள் உயிரிழப்பு தடுக்கப்பட்டதா?

  • ‘ஹமாஸ்’ இயக்கத்தவருடன் தொடர்புள்ளவர்களைத் தாக்கும்போது அப்பாவிகள் இறப்பதைத் தடுக்க என்ன செய்தீர்கள் என்று ‘கார்டியன்’ நிருபர் கேட்டார்.
  • பெருந்தாக்குதலுக்கு முன்னால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் ஆங்காங்கே அறிவிப்புகள் செய்தோம், வீட்டைக் காலிசெய்துவிட்டு பாதுகாப்பான இடம் நோக்கிச் செல்லுங்கள், இன்ன இடம் நோக்கிச் செல்லுங்கள் என்றெல்லாம் அறிவித்துவிட்டுத்தான் தாக்கினோம். அந்த அறிவிப்புகளுக்குப் பிறகு ஆயிரக்கணக்கானவர்கள் வாகனங்கள் மூலமும் நடந்தும் வெளியேறினார்கள் என்று ஓர் அதிகாரி பதிலளித்தார். இது உண்மையல்ல என்று பலரும் மறுக்கின்றனர். செயற்கை நுண்ணறிவு உதவியுடன் துல்லியமாகத் தாக்கினோம் என்பதும் பொய்யே என்றும் அவர்கள் சாடுகின்றனர்.
  • தான் கூறியதற்கு மாறாக, ராணுவம் அல்லாத இலக்குகள் மீதும் தாக்கும் அளவுக்கு இலக்குகளை விரிவுபடுத்தியவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்திலேயே ஒப்புக்கொண்டுமிருக்கிறது.

மேலும் பல திட்டங்கள்!

  • இஸ்ரேலிய ராணுவம் இந்தத் தாக்குதல்களுக்கு மேலும் பல செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களைக் கையாள்கிறது

1. பிராஜெக்ட் நிம்பஸ்:

  • 120 கோடி டாலர்கள் மதிப்புள்ள திட்டம்தான் ‘பிராஜெக்ட் நிம்பஸ்’. ‘விலக்கப்பட்டவர்களுக்கு எந்தத் தொழில்நுட்பமும் கிடையாது’ என்ற அமைப்பைச் சேர்ந்த 28 தகவல் தொழில்நுட்ப நிபுணர்களை ‘கூகுள்’ நிறுவனம் வேலையைவிட்டு நீக்கியபோதுதான், இந்தத் திட்டம் குறித்து தெரியவந்தது. இஸ்ரேலிய ராணுவத்துக்காக இஸ்ரேலிய அரசுக்குத் தேவைப்பட்ட தரவுகளை (கிளவுட் சர்வீஸ்) தருமாறு கூகுள், அமேசான் நிறுவனங்களுடன் 2021இல் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.
  • இது தொடர்பாக டெம்பின்ஸ்கி தனது காணொலியில் ஒரு தகவலைத் தெரிவித்திருக்கிறார். சேகரிக்கப்படும் தரவுகள் செயற்கை நுண்ணறிவுடன் இலக்குகளைத் தாக்கவும், ஆளில்லாமல் ஏவப்படும் ஏவு கருவிகள் (டிரோன்களைப் போல) இலக்கை நோக்கி சரியாகச் செல்கிறதா என்று கண்காணிக்கவும் பயன்படுத்தப்படும் என்கிறார்.
  • இந்த நிறுவனங்கள் தரவுகளைத் தருவதுடன் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட, தாக்க வேண்டிய இடம் இப்போது எப்படி இருக்கிறது என்று புகைப்படங்களாகவும் வரைபடங்களாகவும்கூட தகவல்களைத் தெரிவித்தது என்கிறது ‘கார்டியன்’. மைக்ரோசாஃப்டின் ‘மைக்ரோசாஃப்ட் அசூர்’ என்ற தொழில்நுட்பம் ஒருவருடைய முகத்தைத் திரையில் காட்டினாலே, அவர் யாரென்று அடையாளம் காட்டிவிடும்.

2. பிராஜெக்ட் சிரியஸ்:

  • இதுவும் ‘நிம்பஸ்’ உடன் தொடர்புள்ளது, ஆனால் எந்தத் தொழில்நுட்ப நிறுவனத்துடனும் ஒப்பந்தம் இறுதிசெய்யப்படவில்லை. ராணுவத்தின் தரவுகளை நிம்பஸுடன் இணைக்க நிபுணர்களைத் தேடிக்கொண்டிருக்கிறது இஸ்ரேல். இஸ்ரேலிய ராணுவப் பயன்பாட்டுக்கு மட்டும் தனியாக வைத்துக்கொள்ளப்படும் ‘சிரியஸ்’.

3. இஸெட்-ட்யூப்:

  • யூட்யூபைப் போல இஸ்ரேலிய ராணுவத்துக்கு, ராணுவத் தொழில்நுட்பம் தொடர்பான தரவுகளுக்கானது. காஸாவில் இந்த நேரம் எந்தெந்த ராணுவ சாதனங்கள் எங்கெங்கு உள்ளன என்று இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் தெரிந்துகொள்ள இஸெட்-ட்யூப் உதவும்.

4. மாப்ல்(ட்):

  • உயிருள்ள இலக்குகளை இஸ்ரேலிய ராணுவர்கள் தேர்வுசெய்தவுடன், அந்த இலக்கு எங்கே இருக்கிறது என்று வரைபடத்தில் காட்ட இந்த மாப்ல்ட் உதவும்.
  • ஆனால், ‘ஜெருசலேம் போஸ்ட்’ என்ற பத்திரிகை, இஸ்ரேலிய ராணுவம் (தரைப்படை) ரகசியமானதொரு ஜிபிஎஸ் முறையைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.

5. ஹண்டர்:

  • காஸா பகுதியில் தாக்க வேண்டிய இலக்குகளை அடையாளமிடவும் அவை எப்படி மாறுகின்றன என்று செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் ‘ஹண்டர்’ பயன்படுத்தப்படுகிறது என்று ‘+972’ என்ற பத்திரிகைத் தெரிவிக்கிறது. ‘கூகுள் மேப்’ என்ற செயலியில் ஒருவருடைய வீடு எங்கே இருக்கிறது, எந்த வழியாகப் போகலாம் என்றெல்லாம் பார்க்கிறோம். இதுவும் அதேபோலத்தான், ஆனால் உளவு வேலைக்கு உதவும்.
  • சிறுவர்கள் கைப்பேசியில் பொழுதுபோக்குக்கு, ஓர் இலக்கைத் தேடிச்சென்று துப்பாக்கியால் சுடுவதைப் போன்ற விளையாட்டை விளையாடுவார்கள். இப்போது இஸ்ரேலிய ராணுவத்தின் மைய கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் ராணுவ வீரர்களும் அதைப் போலவே செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தங்களுடைய இலக்குகளைத் தேடி அழிக்கின்றனர் என்கிறது ‘டைம்ஸ் நவ் வேர்ல்ட்’.

நன்றி: அருஞ்சொல் (13 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories