TNPSC Thervupettagam

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலுக்கு இறுதித் தீர்வுதான் என்ன

December 15 , 2023 392 days 332 0
  • எல்லாப் போர்களுக்கும் முடிவு உண்டு. இஸ்ரேல்-ஹமாஸ் போரும்கூட முடிவுக்கு வந்துவிடும். எப்போது, எப்படி என்பதுதான் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால், போர் விரைவில் முடிவுக்கு வந்தாக வேண்டியது அவசியம். ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியில் வசித்துவந்த 23 லட்சம் பேரில், 13 லட்சம் பேர் - மக்கள்தொகையில் ஏறத்தாழ பாதி- இடம்பெயர்ந்துவிட்டதாகவும், மொத்தம்உள்ள வீடுகளில் ஏறத்தாழப் பாதி வீடுகள் சேதமடைந்திருக்கின்றன அல்லது உருக்குலைக்கப்பட்டிருக்கின்றன என்றும் ஐ.நா. அவை தெரிவித்திருக்கிறது. பொதுவாகவே, ஒரு போரின் மூலம் இரு தரப்புக்கும் ஏதேனும் பலன்கள் கிடைத்தாக வேண்டும். இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் அப்படியான சூழலில்தான் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.
  • ராணுவரீதியாக இஸ்ரேல் வென்றுவிடும். அதில் சந்தேகமே இல்லை. ஆனால், மேற்குக் கரைப் பகுதி உள்பட வாழும் அரபு மக்களின் மகத்தான ஆதரவை ஹமாஸ் வென்றெடுக்கும் என்றே தெரிகிறது. 30 ஆண்டுகளாக மேற்குக் கரையை ஆட்சிசெய்துவரும் பாலஸ்தீன அரசு, பெருமளவில் செல்வாக்கை இழந்திருப்பதுடன் ஊழல் மலிந்ததாகவும் ஆகிவிட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேலின் நம்பிக்கையைப் பெற்றவரும், மிகுந்த மிதவாதத்தன்மை கொண்ட பாலஸ்தீனத் தலைவருமான அதிபர் மஹ்மூத் அப்பாஸ், மேற்குக் கரையில் ஒரு பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கான பணிகளில் முற்றிலுமாகத் தோல்வியடைந்திருக்கிறார். ‘பயங்கரவாதி’களை வேட்டையாடுவதில் இஸ்ரேலுடன் இணைந்து அவர் செயல்படுவதாகவே தெரிகிறது. அமைதி முயற்சி என்றைக்கோ மரித்துவிட்டது.

தவறாகப் பயன்படுத்தப்படும் தற்காப்பு ஆயுதம்

  • 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் உள்ளபடியே கண்டிக்கத்தக்கதும் வெறுப்புக்குரியதும் ஆகும் எனக் கூறியிருக்கும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டர்ஸ், இந்தத் தாக்குதல் காரணமின்றி நிகழ்ந்ததல்ல என்பதையும் சர்வதேசச் சமுதாயத்துக்கு நினைவூட்டியிருக்கிறார். ஐ.நா. சாசனத்தின் 51ஆவது கூறின் கீழ், தற்காப்புக்கான உரிமையை இஸ்ரேல் கைக்கொண்டுவிட்டது. ஆனால், தற்காப்பு எனும் பெயரில் நடவடிக்கை எடுத்த பின்னர், சம்பந்தப்பட்ட அரசு, அந்நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தில் அறிக்கை அளித்தாக வேண்டும். ஆனால், இஸ்ரேல் விஷயத்தில் அது இதுவரை நடக்கவில்லை என்றே தெரிகிறது. எந்த வகையில் பார்த்தாலும், தற்காப்பு என்னும் பெயரில் சமமற்ற அல்லது பாரபட்சமான வகையில் ராணுவத்தைப் பயன்படுத்த எந்த ஓர் அரசும் அனுமதிக்கப்படவில்லை.
  • இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் காசாவின் இறப்புகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 15,000 ஆகும்; இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளும்தான். இந்த நூற்றாண்டில் இதற்கு மிகச் சில முன்னுதாரணங்களே இருக்கின்றன. தற்காப்பு தொடர்பாக நிலவும் வழக்கநெறிச் சட்டங்களை அப்பட்டமாக மீறிய செயல் இது. இந்தப் போரில் இஸ்ரேலுக்கு ஹமாஸ் அடிபணிந்துவிட்ட பின்னர் என்ன நடக்கும் என்பதுதான் இதில் மிக முக்கியமான, கவலைக்குரிய பிரச்சினை. ஹமாஸின் இடத்தை இட்டு நிரப்பப்போவது எது? சாதகமான சூழல் உருவானதும், ரமல்லா நகரை மையமாகக் கொண்டு இயங்கும் பாலஸ்தீன அரசானது, காசா பகுதியின் நிர்வாகத்தைக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட சிலர் யோசனை தெரிவிக்கின்றனர்.
  • காசாவை மறுகட்டமைக்கும் பணிகளுக்காக நிதி வழங்குமாறு ‘பணக்கார அரபு நாடுகள்’ என ஊடகங்களால் குறிப்பிடப்படும் நாடுகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்படும். ஆனால், மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான அரசு, காசாவில் மட்டுமல்லாது வேறு எங்குமே ஆட்சி நடத்துவதைப் பாலஸ்தீனர்கள் விரும்பவில்லை என்பதுதான் இதில் இருக்கும் ஒரே பிரச்சினை. நிலைமை சீரான பின்னர், சர்வதேசக் கண்காணிப்பில் காசாவிலும் மேற்குக் கரையிலும் புதிதாகத் தேர்தல் நடத்துவதுதான் ஒரே தெரிவு. இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய அவற்றின் எல்லையில் ஓர் அமைதிப் படையை ஐ.நா. நிறுத்திவைக்க வேண்டும். காசாவை முடக்கியிருக்கும் தடைகள் முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். இஸ்ரேல் ஐ.நா-வை விரும்புவதில்லை. ஐ.நா. பொதுச் செயலாளரையோ கொஞ்சம்கூட விரும்புவதில்லை. இத்தனைக்கும், இஸ்ரேல் உருவெடுக்க உதவியதும், ஆரம்பகட்டத்தில் அதற்குச் சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கியதும் ஐ.நா. அவைதான் என்பதை நினைவுகூர்வது அவசியம். இவ்விஷயத்தில், ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தில் அமெரிக்கா முன்னணியில் நின்று செயல்பட வேண்டும்.

இரண்டு நாடுகள்’ தீர்வு

  • இதற்கிடையே, இஸ்ரேலையும் பாலஸ்தீனத்தையும் இரண்டு தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பது தொடர்பாக நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டுவரும் ‘இரண்டு நாடுகள் தீர்வு’ (two-state solution) குறித்த பேச்சு இப்போது மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது. எல்லோருமே அந்த மந்திரத்தை மீண்டும் உச்சரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், இன்றைய சூழலில்அந்தக் கருத்தாக்கத்தின் சாத்தியக்கூறுகள் யாவை? பாலஸ்தீனம் என்பது மேற்குக் கரையை மையமாகக் கொண்டது என 1993 ஆஸ்லோ ஒப்பந்தம் (Oslo Accord) கருதியது. இன்றைக்கோ, மேற்குக் கரையில் இஸ்ரேலியக் குடியேறிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. சமீபத்திய கணக்கெடுப்பில் அந்த எண்ணிக்கை 4.50 லட்சம் எனத் தெரியவந்திருக்கிறது. எந்த ஒரு இஸ்ரேல் அரசாலும், அங்கிருந்து திரும்பிச் செல்லுமாறு குடியேறிகளை வலியுறுத்த இயலாது.
  • அதற்கு ராணுவரீதியிலான அழுத்தம் தேவைப்படும். அந்த நிலப் பகுதி தற்போது நன்கு திட்டமிடப்பட்ட எண்ணற்ற யூதக் குடியிருப்புகளையும் சாலைகளையும் கொண்டுள்ளது. இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, பாலஸ்தீனம் என்று ஒரு நாடு உருவாவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார். நிலைமை சீரானதும், ‘இரண்டு நாடுகள்’ பரிந்துரையில், எவையெல்லாம் சாத்தியமானவை, எவை சாத்தியமற்றவை என்பதைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது அவசியம். இரு தரப்புக்கும் இடையே, நிலப் பகிர்வு உள்ளிட்ட வலிமிகுந்த சமரசங்கள் தேவை. மேலும், இரு தரப்பும் தங்கள் உறுதிமொழிகளை முறையாகக் கடைப்பிடிக்கின்றனவா என்பதைக் கண்காணிக்கும் அமைப்பு ஒன்றும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அமைதிக்கான இறுதி வழி

  • மேற்குக் கரையில் தனது ஆக்கிரமிப்பைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, பாலஸ்தீன அரசு உருவாக வழிவகுப்பது இஸ்ரேல் முன் இருக்கும் நிரந்தரமான தீர்வு. இஸ்ரேல் தனது மக்களின் பாதுகாப்பு குறித்த நியாயமான அக்கறையை உறுதிசெய்வதற்கு, புதிய தேசமானது ராணுவமயமற்றதாக இருத்தல் அவசியம். இஸ்ரேலியர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ள வேறு வழிகளைப் பரிசீலிக்க வேண்டும். இஸ்ரேல் அருகில் உள்ள அரபு நாடுகளும் இந்தப் பணியில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும்.
  • ஆப்ரஹாம் ஒப்பந்தம் (இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையில் 2020இல் கையெழுத்தானது) இதற்கு ஓர் அடித்தளத்தை வழங்கும். மத்தியக் கிழக்குப் பிராந்தியத்தில் தனது அரபு அண்டை நாடுகளுடன் இணக்கமாக வாழ வேண்டும் என இஸ்ரேல் கருதினால், இதுதான் ஒரே வழி. அது நடந்துவிட்டால், இஸ்ரேலுக்கு எதிரான தனது கோபத்துக்காக முன்வைத்துவரும் தர்க்க நியாயத்தை ஈரான் இழந்துவிடும். அதேபோல, ஹெஸ்புல்லா அமைப்பும், இஸ்ரேலை அச்சுறுத்துவதற்கான தனது முக்கியமான வாதத்தை இழக்கும்.
  • பல தசாப்தங்களாக, மரணம், அழிவு, துயரம் எனும் முடிவிலா வட்டத்துக்குள் சிக்கியிருக்கின்றன இஸ்ரேல்-பாலஸ்தீன உறவுகள். தற்போது காசாவில் நடைபெற்றுவரும் போர், இவ்வட்டத்தின் சமீபத்திய சுற்று. இதுவே கடைசியாக இருக்க வேண்டும். மத்தியக் கிழக்குப் பிராந்தியம் அப்போதுதான் நிலையான அமைதியையும் பாதுகாப்பையும் அனுபவிக்க முடியும்.
  • சின்மயா கரேகான் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதராகவும், மத்தியக் கிழக்குப் பிராந்தியத்துக்கான இந்தியாவின் சிறப்புத் தூதராகவும் பணியாற்றியவர்; கார்ல் எஃப். இண்டர்ஃபர்த் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கான அமெரிக்காவின் துணைத் தூதராகவும், தெற்காசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை உதவிச் செயலாளராகவும் பணியாற்றியவர்.

நன்றி: தி இந்து (15 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories