TNPSC Thervupettagam

இஸ்ரோ வானத்தை அளந்த கதை

August 19 , 2019 1971 days 1140 0
  • அந்த மனிதருக்கு ஒரு கனவு இருந்தது. அது தரையில் மட்டுமே சஞ்சரிக்கும் கனவு அல்ல, விண்வெளியில் சஞ்சரிக்கும் கனவு. விண்வெளியில் சஞ்சரிப்பதால் தரையைப் பற்றிய அக்கறையை விட்டுவிட்ட கனவல்ல. தரை மீதான அக்கறைதான் அவரை விண்வெளி பற்றி கனவு காணச் செய்தது. அந்த மனிதர் இந்திய விண்வெளித் திட்டங்களின் தந்தை என்று அழைக்கப்படும் விக்ரம் சாராபாய். அவருடைய கனவைப் புரிந்துகொண்ட இன்னொரு மனிதர், அதுவும் உச்சபட்ச அதிகாரத்தில் இருப்பவர் கிடைத்தால் வேலை இன்னும் சுலபமல்லவா! ஆம், சாராபாய்க்கு இருந்த கனவைப் புரிந்துகொண்டவர் அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு.
  • தற்போது 50-வது ஆண்டைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் இஸ்ரோ எனும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு முன்னோடியான ‘விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசிய கமிட்டி’ இவர்களின் கூட்டு முயற்சியில் 1962-ல் தொடங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக 1969 இந்திய சுதந்திர தினத்தன்று ‘இஸ்ரோ நிறுவனம்’ உருவாக்கப்பட்டது. அதன் முதல் தலைவர் விக்ரம் சாராபாய். ஒரு நாடு விண்வெளிக்குச் செல்வது என்பது அந்தக் காலத்தில் அதன் அந்தஸ்தை மற்ற நாடுகளிடம் பீற்றிக்கொள்வதற்கான செயலாகவே இருந்தது. சோவியத் ரஷ்யாவும் அமெரிக்காவும் அப்படித்தான் போட்டிபோட்டுக்கொண்டிருந்தன. விண்வெளிக்கு மனிதரை ரஷ்யா முதலில் அனுப்பியதைத் தாங்க முடியாமல்தான் பதிலடியாக நிலவுக்கு அமெரிக்கா மனிதர்களை அனுப்பியது. இந்தியாவின் அணுகுமுறையே வேறு.

இஸ்ரோவின் வழிகாட்டு வாக்கியம்

  • விண்வெளி யுகத்தில் இந்தியா கால்வைத்தது தன்னைப் பற்றித் தம்பட்டமடித்துக்கொள்வதற்கு அல்ல. “வளர்ந்துவரும் ஒரு நாடு, விண்வெளி விவகாரங்களில் ஈடுபடலாமா என்றெல்லாம் சிலர் கேள்வி கேட்கலாம்.
  • நிலவிலோ மற்ற கோள்களிலோ ஆராய்ச்சி மேற்கொள்வதில் அல்லது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதில் பணக்கார நாடுகளுடன் போட்டியிடும் எண்ணமெல்லாம் எங்களுக்கு இல்லை.
  • ஆனால், தேசிய அளவிலும் தேசங்கள் அளவிலும் அர்த்தமுள்ள பங்களிப்பை எங்களால் செய்ய முடியுமென்றால் மனிதர்களும் சமூகமும் நம் தேசத்தில் எதிர்கொள்வதைப் போன்ற உண்மையான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் எந்த நாட்டுக்கும் நாங்கள் பிந்தியவர்களல்ல என்று உறுதியாக நம்புகிறோம். நமது பிரச்சினைகளுக்காக உயர் தொழில்நுட்பத்தையோ வழிமுறையையோ பயன்படுத்துவதையும் படாடோபமான திட்டங்களை முன்னெடுப்பதையும் ஒன்றாக வைத்துப் பார்த்துக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
  • ஏனெனில், படாடோபமான திட்டங்களெல்லாம் பொருளாதாரரீதியிலும் சமூகரீதியிலும் அளவிடப்படும் வளர்ச்சிக்காக அல்லாமல் பெருமையடித்துக்கொள்வதற்கானவை” என்று விக்ரம் சாராபாய் அன்று கூறியது இஸ்ரோவின் 50 ஆண்டுகளுக்கு வழிகாட்டு வாக்கியமாக இருந்திருக்கிறது. சாதாரண மனிதரைக் கண்டடைய வேண்டும் என்பதுதான் விக்ரம் சாராபாய் கனவுகண்ட இஸ்ரோவின் இலக்கு.
  • நாஸாவுடன் இணைந்து 1975-ல் இஸ்ரோ செயல்படுத்திய ‘சேட்டிலைட் இன்ஸ்ட்ர்க்ஷனல் டெலிவிஷன் எக்ஸ்பெரிமண்ட்’ இந்தியாவின் மூலைமுடுக்குகளில் எல்லாம் தொலைக்காட்சியைக் கொண்டுசேர்த்தது.
  • உலக அளவிலான இதுபோன்ற முயற்சிகளில் இதுவே பெரியது. அது மட்டுமல்ல ஒளிபரப்பு, தகவல்தொடர்பு, வானிலை முன்னறிவிப்பு, பேரிடர் மேலாண்மை, புவியிடமறிதல், தொலைமருத்துவம், தொலைதூரக் கல்வி என்று சாதாரண மனிதர்கள் அனைவருக்கும் தொடர்புடைய சேவைகளை இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்கள் சாதித்திருக்கின்றன.

இஸ்ரோவின் பிரம்மாண்ட வளர்ச்சி

  • ராக்கெட்டின் உதிரிபாகங்களை மாட்டு வண்டியிலும் சைக்கிளிலும் கொண்டுசென்ற காலம் ஒன்று உண்டு. இந்தியா இன்று விண்வெளித் துறையில் முதல் ஐந்து இடங்களில் இருக்கிறது.
  • ஆனால், இன்னுமே வளர்ந்துவரும் நாடாகவே இருந்துகொண்டு இந்த இடத்தை அடைந்திருப்பது அபாரமான விஷயம்.
  • இன்று இஸ்ரோ மற்ற நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்புகிறது. ஆனால், அதன் ஆரம்ப காலத்தில் பிற நாடுகளின் உதவியை நாட வேண்டிய நிலையே இருந்தது.
  • இந்தியாவின் முதல் விண்கலமான ஆர்யபட்டா இஸ்ரோவால் உருவாக்கப்பட்டது என்றாலும் அதை ஏவியது சோவியத் ஒன்றியம்தான். அங்கிருந்து இஸ்ரோ வெகு தூரம் இன்று வந்திருக்கிறது.
  • நிலவைச் சுற்றும் கலமான சந்திரயான்-12008-ல் இஸ்ரோ அனுப்பியது. 2013-ல் செவ்வாயைச் சுற்றுவதற்கு மங்கள்யானை அனுப்பியது.
  • இதில் சிறப்பு என்னவென்றால், செவ்வாயைப் பொறுத்தவரை தனது முதல் முயற்சியிலேயே இப்படி வெற்றிபெற்ற முதல் நாடு இந்தியாதான்.
  • 2016-ல் இஸ்ரோ 20 விண்கலங்களை ஒரே ஏவுகலத்தின் மூலம் ஏவியது. 2017-ல் ஒரே ஏவுகலத்தின் மூலம் 104 விண்கலங்களை இஸ்ரோ ஏவியது ஒரு உலக சாதனை. இந்த ஆண்டு சந்திரயான்-2 விண்கலனை இஸ்ரோ அனுப்பியிருக்கிறது. இவையெல்லாம் இஸ்ரோவின் மைல்கல்களுள் சிலதான்.
  • ஒவ்வொரு முறையும் இஸ்ரோ ஒரு விண்கலத்தை அனுப்பும்போது, முன்பு அது இந்திய அளவிலான நிகழ்வாகப் பார்க்கப்பட்டது. இப்போது அது உலக அளவிலான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இது இஸ்ரோ அடைந்திருக்கும் வளர்ச்சியின் அடையாளம்.
  • இதுவரை 101 விண்வெளித் திட்டங்கள், 72 ஏவு திட்டங்கள், 9 மாணவர் விண்கலங்கள், 2 மறுநுழைவுத் திட்டங்கள், கூடவே 32 நாடுகளின் 269 விண்கலங்கள் என்று இஸ்ரோவின் சாதனைப் பயணம் நீண்டுகொண்டிருக்கிறது. இஸ்ரோவின் இந்த முயற்சிகளுக்கெல்லாம் அடிப்படையானது தற்சார்பு.
  • இந்தத் தற்சார்புக்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, செலவு அதிகம் பிடிக்காத ஏவுகலங்கள் மிகவும் முக்கியம். அப்படி உருவாக்கப்பட்டதுதான் பி.எஸ்.எல்.வி. (போலார் சேட்டிலைட் லான்ச் வெஹிகில்).
  • இந்த ஏவுகலத்தையே பல நாடுகளும் தங்கள் விண்கலங்களை அனுப்ப நாடுவது இதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தும். ஜி.எஸ்.எல்.வி. (ஜியோசிங்க்ரோனஸ் சேட்டிலைட் லான்ச் வெஹிகில்) கனமான செயற்கைக்கோள்களை அனுப்புவதற்காக உருவாக்கப்பட்டது.

கற்பனையை விஸ்தரிக்கும் இஸ்ரோ

  • கற்பனையை வளர்ப்பதும் கற்பனையை வசீகரிப்பதும் அறிவியலின் அடிப்படைகளுள் ஒன்று. அந்த விதத்தில் இந்திய மக்களின் கற்பனைக்கும் இஸ்ரோவுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இது பரஸ்பர உறவு. மக்களின் கற்பனையை இஸ்ரோ விஸ்தரிக்கிறது. இஸ்ரோவின் செயல்திட்டங்களை மக்களின் கற்பனை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறது.
  • அதனால்தான், இஸ்ரோ தொடர்பான எந்த ஒரு செய்தியும் தலைப்புச் செய்தியாக பத்திரிகைகளில் இடம்பிடிக்கின்றன. இது அப்படியே மாணவர் அளவில் செல்லும்போது,
  • அவர்கள் தங்களுக்கான அறிவியல் உந்துதல்களுள் ஒன்றாக இஸ்ரோவைக் கருதும் அளவுக்கு உருவாகிறது. இஸ்ரோவின் மகத்தான சாதனைகளுள் இதுவும் ஒன்று. மேலும் இந்தியாவுக்கு அப்துல் கலாம் என்ற குடியரசுத் தலைவரையும் தந்திருக்கிறது இஸ்ரோ.
    அடிப்படைகள் மாறவில்லையென்றாலும், சில விஷயங்களில் விக்ரம் சாராபாய் காலத்திலிருந்து இஸ்ரோ நகர்ந்துவந்திருக்கிறது.
  • இஸ்ரோ என்பது இன்று இந்தியாவின் வல்லமையை உலகின் முன் நிரூபிக்கும் அடையாளங்களுள் ஒன்று. எனினும், அது அடைந்திருக்கும் வளர்ச்சி அசாதாரணமானது.
  • “இதுவரையிலான இஸ்ரோவின் காலம் என்பது முதல் கட்டம். இனி வருவது இரண்டாவது கட்டம். இப்போதும் சாதாரண மனிதர்களே எங்கள் அடிப்படை, விக்ரம் சாராபாய்க்கு இருந்ததுபோல். ஆனால், சாதாரண மனிதர்களின் பிரச்சினை இப்போது மாறிவிட்டது, இனியும் மாறிக்கொண்டிருக்கும். எதிர்காலத்தின் பிரச்சினைகள் என்பவை நீரும் எரிபொருள் பற்றாக்குறையும்தான். நமது தற்போதைய ஆய்வுகளால் அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முயன்றுகொண்டிருக்கிறோம்” என்று இஸ்ரோவின் தலைவர் சிவன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
  • அறிவியலின் ஒரு கை சாதாரண மனிதரைப் பிடித்துக்கொண்டு இன்னொரு கை அண்டத்தையே துழாவினால் அது மானுட குலத்துக்குப் பெரும் வரம். அதில் இஸ்ரோ என்றும் தன்னை இணைத்துக்கொண்டிருக்கட்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (19-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories