TNPSC Thervupettagam

ஈரநிலங்களின் பாதுகாப்பு ஏன் அவசியம்

January 27 , 2024 178 days 213 0
  • மனிதர்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் தம் தேவைக்காகப் பல வகையான சூழலியல் மண்டலங்களைச் சார்ந்துள்ளன. ஏரி, குளம், ஆறு போன்ற அத்தகைய சூழலியல் மண்டலங்களில், ஈரநிலங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. ஈரநிலங்கள் சுமார் 6 மீட்டர் ஆழத்துக்குக் குறைவான, நிரந்தரமாகவோ குறிப்பிட்ட காலத்திற்கோ முழுவதுமோ அல்லது பகுதியளவோ நீரால் நிரம்பிய நிலப்பகுதி.

ஈரநிலங்களின் வகைகள்

  • ஈரநிலங்கள் நன்னீர், உவர்நீர் என இரண்டு வகைப்படும். ஏரி, குளம் போன்றவை இயற்கையான நன்னீர் ஈரநிலங்கள்; அணைகள், பெரிய நீர்த்தேக்கங்கள் போன்றவை செயற்கையாக உருவாக்கப்பட்ட நன்னீர் ஈரநிலங்கள். அதைப் போலவே சதுப்புநிலங்கள், உப்பங்கழிகள், காயல்கள், கழிமுகப்பகுதி, கடற்கரை, அலையாத்திகள் போன்றவை இயற்கையான உவர்நீர் ஈரநிலங்கள்; உப்பளங்கள், மீன்-இறால் வளர்ப்புப் பண்ணைகள் போன்றவை செயற்கையாக உருவாக்கப்பட்ட உவர்நீர் ஈரநிலங்கள். வட இந்தியாவில் மட்டுமே இயற்கையான ஏரிகளும் குளங்களும் உள்ளன. தென்னிந்தியாவின் ஏரிகளும் குளங்களும் பெரும்பாலும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை.

ஈரநிலங்களின் முக்கியத்துவம்

  • நிலத்தடி நீரின் அளவை உயர்த்துதல், சுற்றுப்புற நிலப்பரப்பை வெள்ளத்திலிருந்து பாதுகாத்தல், மண் அரிப்பைத் தடுத்தல், சுற்றுப்புறக் காலநிலையை ஒழுங்குபடுத்துதல், நீர்ப்பறவைகள்-விலங்குகளுக்கு வாழிடமாகத் திகழ்தல், மண்வளத்தைப் பெருக்குதல், விவசாயத்துக்குத் தேவையான நீரைத் தேக்கிவைத்தல் ஆகியவற்றுடன் நில-நீர்வாழ் உயிரினங்களுக்கு இடையிலான ஒரு பாலமாகவும் ஈரநிலங்கள் திகழ்கின்றன.
  • இவை பல்வேறு வகையான தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்க் கூட்டத்தை உள்ளடக்கிய சிக்கலான உணவுவலைகளை ஆதரிப்பதோடு, உயிரினப் பன்மைக்கும் முக்கியப் பங்காற்றுகின்றன. மேலும், புதிய மண் உருவாவதற்கும், பல்லுயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அந்த மண்ணில் சேகரித்து, மகரந்த சேர்கையாளர்களையும் ஊக்குவிக்கின்றன.
  • ஈரநிலத்தின் செறிவூட்டப்பட்ட மண் அல்லது நிறைவுற்ற மண்ணின் தன்மைக்குக் காரணம் அதன் கரிம வளங்கள், அந்தக் கரிம வளங்கள் சிதைக்க உதவும் பாக்டீரியா, மேலும் ஆக்சிஜன் இல்லாத நிலை போன்ற அம்சங்கள்தாம். சாம்பல் நிறம், அழுகிய முட்டையின் வாசம் போன்றவை இந்த மண்ணை அடையாளம் காண உதவுகிறது.
  • இரும்பு, மாங்கனீஸ், கந்தகம், கார்பன் கலவை ஈரநில மண்ணுக்கான சிறந்த குறிகாட்டிகளாக உள்ளன. இத்தன்மை, தேவையற்ற கழிவை படியவைத்து நீரின் தன்மையையும் பராமரிக்க வழிகோலுகிறது.
  • இந்திய ஈரநிலங்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்: தேசிய ஈரநிலத் தொகுப்பு அட்டவணையின் படி (National Wetland Atlas), இந்தியாவில், 1,52,60572 ஹெக்டேர் அளவிலான ஈரநிலப்பகுதிகள் உள்ளன; இது இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 4.63%. புவியியல் தகவல் அமைப்பின் மூலம் தமிழ்நாட்டில் 24,684 ஈரநிலங்கள் வரைபடமாக்கப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த அளவு 9,02,534 ஹெக்டேர்; தமிழ்நாட்டின் பரப்பளவில் 6.92%.
  • ஈரநிலங்கள் பல்வேறு காரணங்களால் நம்ப முடியாத அளவுக்கு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன. வாழிடங்களுக்காகவும் அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சிக்காவும் சில இடங்களில் ஏரித்திட்டம் என்கிற பெயரிலேயே ஈரநிலங்கள் சூறையாடப்படுகின்றன.
  • பல்வேறு வகையான மாசுபாடு, அதிக மகசூலுக்காக அதிகப்படியான நீர்ப்பாசனம், காலநிலை மாற்றம் காரணமாக அங்குள்ள நீரியல் தன்மை - உயிரினங்களின் வாழிட மாற்றம், நீர்நிலைகளின் நீர் உள்நுழையும் - வெளியேற்றப்படும் வழிகளோடு, நீர்நிலைகளைச் சரியாகப் பராமரிக்கத் தவறுவது போன்ற காரணிகளும் ஈரநிலங்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.
  • அந்நிய நாட்டுத் தாவரங்களான சீமைக்கருவேலம், ஆகாயத் தாமரை போன்றவை நீர்நிலைகள் முழுவதும் பரவி, உள்நாட்டுத் தாவரங்களை அழித்து நீரின் தன்மையை மாற்றுவதும், அந்நிய நாட்டு மீன்களான ஆப்ரிக்கப் பெருங்கெளுத்தி போன்றவை வேகமாகப் பெருகி உள்நாட்டு மீன்களை வேட்டையாடுவதால் ஏற்படும் சூழலியல் மாற்றங்களும் ஈரநிலங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

ராம்சர் மாநாடும் ஈரநிலப் பாதுகாப்பு அமைப்பும்

  • உலகளவில் உள்ள ஈரநிலங்களைப் பாதுகாக்கும் நோக்கில், ஈரானில் உள்ள ராம்சர் எனப்படும் நகரில் 1971 பிப்ரவரி 2 அன்று கூடிய உலக நாடுகள், ஈரநிலங்களுக்கு அங்கீகாரமும் பாதுகாப்பும் கொடுப்பதற்கான ஒரு திட்டத்தை ஏற்றுக்கொண்டன.
  • ஈரநிலங்களின் மதிப்பைப் போற்றும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 2ஆம் நாள், உலக ஈரநில நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. ‘ஈரநிலங்கள்-மனித நல்வாழ்வுஎன்பது 2024ஆம் ஆண்டுக்கான ஈரநில நாளின் கருப்பொருள். இன்றைய நிலையில், ராம்சர் மாநாட்டில் மொத்தம் 172 நாடுகள் உறுப்பினராக உள்ளன.
  • இந்தியா, 1982 பிப்ரவரி 1 அன்று ராம்சர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தற்போது இந்தியாவில் மொத்தம் 75 ராம்சர் தளங்கள் உள்ளன; அவற்றில் அதிகபட்சமாக தமிழ் நாட்டில்தான் 14 ராம்சர் தளங்கள் உள்ளன. சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலம், கரிக்கிலி பறவைகள் சரணாலயம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், பிச்சாவரம் அலையாத்திக் காடுகள், கோடியக்கரை பறவைகள் சரணாலயம், மன்னார் வளைகுடா உயிர்கோளக் காப்பகம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் போன்றவை அவற்றுள் சில.
  • ராம்சர் தளமாக அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய விதிகளுள் ஒன்று, 20,000க்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகளை ஆதரிக்கும் ஒரு பகுதியாகவும் அது இருக்க வேண்டும் என்பது. இதனால், நிறைய பறவைகள்சரணா லயங்கள் ராம்சர் அங்கீகாரம் பெற்றுள்ளன.
  • சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஈரநிலங்களை நாம் முறையாகப் பராமரிக்கத் தவறினால், இந்த அங்கீகாரமும் வருங்காலத்தில் ரத்துசெய்யப்படும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லைஎனச் சூழலியல் நிபுணர்களானகேர் எர்த் டிரஸ்ட்நிறுவனத்தின் நிறுவனர்-அறங்காவலர்கள் டாக்டர் ரஞ்சித் டேனியல்ஸ், டாக்டர் ஜெய வெங்கடேசன் கூறுகின்றனர்.

ஈரநிலங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம்

  • ஈரநிலங்கள் உற்பத்தி மிகுந்த சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும். மேற்கூறியதுபோல் பல்வேறு உயிரினங்களுக்கு வாழ்விடமாகத் திகழக்கூடிய ஈரநிலங்களில் காணப்படும் பறவைகள், ஈரநிலங்களின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் ஒரு சுட்டிக்காட்டியாகவும் திகழ்கின்றன. நாம் ஈரநிலத்தைப் பாதுகாப்பது, அதனைச் சார்ந்துள்ள உயிரினப் பன்மையை மேம்படுத்தவும் வழிவகை செய்கிறது
  • உள்ளூர் ஈரநிலத்தைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பது, பறவைகள் நோக்கும் நிகழ்வுகளில் கலந்துகொள்வது, குப்பைகொட்டப்படுதல்-கழிவுநீர் கலப்பு ஆகியவற்றி லிருந்து ஈரநிலங்கள் மாசுபடாமல் இருப்பதை உறுதிசெய்தல், உள்ளூர்த் தன்னார்வலர்கள் ஈரநிலங்களைச் சுத்தம் செய்தல், ஈரநிலங்களைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புதல், அறிவியல் ரீதியாகத் திட்டமிட்டுத் தூர்வாரி மறுசீரமைத்தல் ஆகிய வழிமுறைகளில் நாம் ஒவ்வொருவரும் ஈரநிலங்களைப் பாதுகாக்கும் நாயகர்களாக மாற முடியும்!
  • (பிப் 2: உலக ஈரநிலங்கள் நாள்)

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories