- உங்கள் உடலின் எடை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? நீங்கள் சாப்பிடும் உணவு மட்டும்தான் உங்கள் எடைக்குக் காரணமா? உங்கள் எடை கூடுவதற்கும் குறைவதற்கும் நீங்கள் வசிக்கும் இடமும் முக்கியக் காரணம்.
- நிறை (Mass) என்பதுதான் ஒரு பொருளின் உண்மையான அளவு. எந்த ஒரு பொருளும் அணுக்களால் ஆனது. அந்த அணுக்களில் இடம்பெற்றுள்ள புரோட்டான்கள், நியூட்ரான்களின் எண்ணிக்கையின் அளவுதான் நிறை. ஆனால், எடை (Weight) என்பது பொருளின் நிறையுடன் அதன் மீது ஆதிக்கம் செலுத்தும் புவி ஈர்ப்பு விசையின் அளவையும் சேர்த்துக் கணக்கிடுவது. உதாரணமாக ஒரு பொருளின் நிறை 40 கிலோ என்று வைத்துக்கொள்வோம்.
- பிரபஞ்சம் முழுவதும் அணுக்களின் நிறை ஒன்றாகவே இருப்பதால், அந்தப் பொருளின் நிறையும் பிரபஞ்சம் முழுவதிலும் 40 கிலோவில்தான் இருக்கும். ஆனால், ஈர்ப்பு விசை பிரபஞ்சத்தில் வெவ்வேறு பகுதிகளிலும் மாறுபடும் என்பதால் எடையின் அளவும் மாறுபடும். பூமியில் ஒரு பொருளின் எடை 40 கிலோ என்றால், நிலவில் அதன் எடை வெறும் 6.7 கிலோதான் இருக்கும். காரணம் நிலவின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையைவிடக் குறைவு.
- அப்படி என்றால் பூமி முழுவதும் உங்கள் எடை ஒரே மாதிரி இருக்குமா? இருக்காது. காரணம், பூமி முழுமைக்கும் புவி ஈர்ப்பு விசை ஒன்று போலவே இருக்காது. நம் பூமி வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது. இந்தச் சுழற்சியில் பூமத்தியரேகைக்கு (Equator) அருகில் உள்ள பகுதி விரிவடைகிறது. இதற்குக் காரணம் மைய விலக்கு விசை.
- ஒரு பையில் ஆரஞ்சு பழங்களைப் போட்டு தலைக்கு மேல் வேகமாகச் சுழற்றுங்கள். அவ்வாறு சுழற்றும் போது ஆரஞ்சு பழங்கள் இருக்கும் பகுதி, நம் கை இருக்கும் மையத்தில் இருந்து வெளியே இழுக்கப்படுகிறது அல்லவா?
- அதேபோல பூமி வேகமாகச் சுழலும்போதும் பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகள் மையத்தை விட்டு விலகுவதால் அங்கு புவி ஈர்ப்பு விசையும் குறைவாக இருக்கும். (புவி ஈர்ப்பு விசை பொதுவாக ஒரு பொருளின் மையத்தை நோக்கியே இயங்கும்.) இதனால் உங்கள் எடையும் குறைவாக இருக்கும். இதுவே நீங்கள் வட துருவத்துக்கு அருகிலோ தென் துருவத்துக்கு அருகிலோ இருக்கும்போது அங்கே மைய விலக்கு விசை இருக்காது என்பதால் புவி ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும். அதனால் உங்கள் எடையும் அதிகரிக்கும்.
- இது மட்டுமல்ல புவி எங்கும் மலைகள், கடல்கள், பள்ளத்தாக்குகள் என மாறுபட்டு இருப்பதால் அதன் அடர்த்தியும் இடத்துக்கு இடம் மாறுபடும். இதில் அடர்த்தி அதிகமான பகுதி அதிக ஈர்ப்பு விசைக்கும், அடர்த்தி குறைவான பகுதி குறைந்த ஈர்ப்பு விசைக்கும் உட்படும். இதுவும் நம் எடையைப் பாதிக்கும்.
- பூமி எங்கும் புவி ஈர்ப்பு விசை வேறுபடுகிறது என்பதை எப்படி விஞ்ஞானிகள் உறுதி செய்கின்றனர்?
- இதற்கு நாசா விஞ்ஞானிகள் ஒரே அளவிலான இரண்டு செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவினர். அவற்றை ஒன்றன் பின் ஒன்றாகக் குறிப்பிட்ட இடைவெளியில் அனுப்பினர். இதில் முதல் செயற்கைக்கோள் புவி ஈர்ப்பு விசை அதிகமுள்ள பகுதிக்கு அருகே வரும்போது, அதனால் ஈர்க்கப்பட்டு வேகமாக நகர்ந்தது. இதனால் இரு செயற்கைக்கோள்களுக்கு இடையேயான தூரம் அதிகரித்தது.
- அடுத்ததாக இரண்டாவது செயற்கைக்கோள் புவி ஈர்ப்பு விசை அதிகமுள்ள பகுதிக்கு அருகில் வந்தவுடன் அதன் வேகமும் அதிகரித்து முன்னால் செல்லும் செயற்கைக்கோளுக்கு அருகில் சென்று விட்டது. இப்போது இரண்டுக்கும் இடையேயான தூரம் பழையபடி சமநிலையை அடைந்து விட்டது.
- அதேபோல குறைவான புவி ஈர்ப்பு விசை இருக்கும் பகுதியைச் செயற்கைக்கோள்கள் அடைந்தபோது அவற்றுக்கு இடையேயான தூரம் குறைந்து, அந்த இடத்தைக் கடந்தவுடன் மீண்டும் பழைய இடைவெளி ஏற்பட்டது. இந்த இரண்டு செயற்கைக்கோள்களுக்கு இடையேயான தூரத்தில் ஏற்படும் மாற்றத்தை, தலைமுடியின் அகலத்துடன் ஒப்பிட்டு, புவி முழுவதுமான ஈர்ப்பு விசையின் வேறுபாட்டைத் துல்லியமாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த அளவீடுகளை வைத்துதான் ஜிபிஎஸ் கருவி கச்சிதமாக இயங்குவதும் குறிப்பிடத்தக்கது.
- இரண்டு செயற்கைக்கோள்களும் ஒன்றை இன்னொன்று துரத்திக்கொண்டே செல்வதுபோல இருப்பதால் அவற்றுக்கு, டாம், ஜெர்ரி என்றே விஞ்ஞானிகள் பெயரிட்டுவிட்டனர்.
- ஒப்பீட்டளவில் இமயமலை, ஆண்டிஸ் மலைத்தொடர், இந்தோனேசியா ஆகிய பகுதிகளில் புவி ஈர்ப்பு விசை அதிகமாகவும், ஹட்ஸன் வளைகுடா, இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் குறைவாகவும் இருப்பது தெரியவந்துள்ளது.
- பூமியின் சுழற்சி, நிலப்பரப்பின் அடர்த்தி ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, உலகிலேயே வட ரஷ்யாவுக்கு அருகே உள்ள கடல் பகுதியில் ஒரு பொருளின் எடை கூடுதலாக இருக்கும். பெரு நாட்டில் உள்ள ஹுவஸ்கரன் மலைப் பகுதியில் எடை குறைவாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக, பெரிய வித்தியாசம் எல்லாம் கிடையாது. தமிழ்நாட்டில் உங்கள் எடை 40 கிலோ என்றால், வட ரஷ்யக் கடல் பகுதியில் உங்கள் எடை 40.5 கிலோவாகவும், பெருவில் உங்கள் எடை 39.5 கிலோவாகவும் இருக்கும். அவ்வளவுதான்!
நன்றி: இந்து தமிழ் திசை (19 – 07 – 2023)