TNPSC Thervupettagam

உச்சநீதிமன்றத் தீா்ப்பும் ஜம்மு - காஷ்மீரும்

December 29 , 2023 324 days 219 0
  • உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு, காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது சரியானதே என்று ஒருமனதாகத் தீா்ப்பளித்துள்ளது. இது குறித்து உச்சநீதிமன்றத்திற்கு 23 மனுக்கள் வந்தன. அவை அனைத்தையும் ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி உட்பட ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு வினவப்பட்ட பல சிக்கலான வினாக்களுக்கு விடையளித்து 370-ஆவது பிரிவை ரத்து செய்தது அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதே என்று கூறியுள்ளது.
  • தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், ‘அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 370 என்பது ஒரு தற்காலிக ஏற்பாடாகவே இடம்பெற்றிருந்தது. ஜம்மு- காஷ்மீா், பிற மாநிலங்கள் அனுபவிக்கும் அதிகாரங்கள், சலுகைகளிலிருந்து வேறுபடுகிறது. பிரிவு 370 இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி. இது ஜம்மு - காஷ்மீருக்கான சட்டங்களோடு பல சிறப்பு அதிகாரங்களையும் வழங்கியது.
  • ஆனால், 2019-இல் மத்திய அரசு அதை ரத்து செய்து, இனி சிறப்பு அதிகாரம் இல்லை என்றது. மேலும், ஜம்மு - காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக இந்த மாநிலம் பிரிக்கப்பட்டது. இது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று விமா்சகா்கள் கூறி, இந்திய உச்சநீதிமன்றத்தை அணுகினா். இந்த நடவடிக்கை சட்டபூா்வமானது என்று நீதிமன்றம் தீா்ப்பு வழங்குகிறது என்றார் நீதிபதி.
  • இந்தத் தீா்ப்பு இரு அடிப்படை உண்மைகளைக் கொண்டது. முதலில், பிரிவு 370 அல்லது சிறப்பு அதிகாரங்கள் தற்காலிகமானது. அது என்றென்றும் நிலைத்திருக்கக் கூடாது. இரண்டாவதாக, ஜம்மு - காஷ்மீருக்கு என்று தனித்த இறையாண்மை இல்லை; சிறப்பு ஒப்பந்தம் மட்டுமே இருந்தது. இப்போது 370-ஆவது சட்டப்பிரிவை நீக்கியிருப்பதும் அரசியலமைப்பு சட்டம் தான்.
  • சட்டப்பிரிவு 370 ரத்து, அந்த மாநிலம் யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது ஆகியவை சட்டபூா்வமானது என்று உச்சநீதிமன்றம் கூறியதை, ‘இந்தத் தீா்ப்பு நமது காஷ்மீர சகோதர, சகோதரிகளுக்கான நம்பிக்கை, முன்னேற்றத்திற்கான அறிவிப்புஎன்றார் பிரதமா் நரேந்திர மோடி.
  • உண்மையில், பிரதமா் குறிப்பிட்டதைப் போல முன்னேற்றம், அதற்கான நம்பிக்கை இந்த சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதால் காஷ்மீருக்கு சாத்தியமாகியிருக்கிா? அங்கே மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிா? அரசு மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் யாவை? பொருளாதாரம் முதல் சமூக அமைப்பு வரை வளா்ச்சிக்கான அறிகுறிகள் இருக்கின்றனவா?
  • முதலில் பொருளாதாரத்தைப் பார்ப்போம். 2019- ஆம் ஆண்டில், ஜம்மு- காஷ்மீா் பொருளாதாரத்தில் உற்பத்தி 1,00,000 கோடி ரூபாயாக இருந்தது. இப்போது அது 2,27,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இரண்டு மடங்குக்கும் மேலான வளா்ச்சி. இன்னும் ஐந்து ஆண்டுகளில் உற்பத்தி இரட்டிப்பாகும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.
  • சுற்றுலாவை எடுத்துக் கொண்டால் 2022-இல் ஜம்மு- காஷ்மீருக்கு சுமாா் ஒரு கோடியே 80 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனா். இது எப்போதும் இல்லாத சாதனையாக இருக்கிறது. 2023-ஆம் ஆண்டின் இறுதியில் இந்த எண்ணிக்கை 2 கோடியே 20 லட்சமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது காஷ்மீரத்தின் பாதுகாப்பு சிறப்பாக இருக்கிறது என்பதை நம்பும் வகையில் அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன என்பதையே இந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயா்வு காட்டுகிறது. அங்கு அமைதி நிலவுவதற்கான அடையாளமாக இதனைப் பாா்க்கலாம்.
  • வெளிநாட்டு முதலீடுகளும் ஈா்க்கப்பட்டு வருவதைப் பார்க்கிறோம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகின் மிக உயரிய கட்டடமான புா்ஜ் கலீஃபாவை உருவாக்கிய இம்மாா் குழுமம், காஷ்மீருக்கான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன்படி, காஷ்மீரில் சுமார் 500 கோடி ரூபாய் முதலீட்டில் ஸ்ரீநகா் அருகே ஒரு மிகப்பெரிய வணிக வளாகத்திற்கான திட்டம் உருவாகிறது. இத்திட்டத்தால் பத்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். சுற்றுலாத் துறைக்கும் உதவியாக அமையும்.
  • விவசாயம், மதிப்புக் கூட்டப்பட்ட விவசாயப் பொருள்களின் உற்பத்திக்கான கடனுதவிகளையும் அரசு செய்து வருகிறது. பொருளாதார வளா்ச்சிக்கான முயற்சிகள் குறித்துப் பேசும்போது, பாதுகாப்பு பற்றிய சிந்தனை எழுவது இயல்பு.
  • காஷ்மீரில் மிகப்பெரிய பிரச்னை பாதுகாப்பு. உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடு இந்த விஷயத்தில் எப்படி அமைந்துள்ளது? உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரம், பாதுகாப்பு நடவடிக்கைகளை 2016 முதல் 2019 வரை, 2019 முதல் 2022 வரை என பகுத்துக் காட்டியுள்ளது. அதன்படி, தீவிரவாதத் தாக்குதல்கள் 32% என்ற அளவுக்குக் குறைந்துள்ளன.
  • பொதுமக்களின் இறப்பு விகிதமும் 14% அளவில் மட்டுமே இருக்கிறது. பாதுகாப்பு அதிகாரிகளின் மரணம் 52% குறைந்துள்ளது. கல்லெறி சம்பவங்களும் குறைந்துள்ளன. 2019-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 600 என்றிருந்த கல்லெறி சம்பவங்கள் 2021-இல் 76ஆகக் குறைந்துள்ளன.
  • பெருமளவில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாலும் காஷ்மீரி ஹிந்துக்கள் மற்றும் காஷ்மீரி அல்லாதவா்கள் குறிவைக்கப்படுவது தொடா்கிறது. அதனை நிவா்த்தி செய்வதற்கான முயற்சியில் தற்போது உள்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
  • ஜம்மு- காஷ்மீா் மாநிலத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அடுத்த ஆண்டு அங்கு தோ்தல் நடத்தப்படும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை அதற்கான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. உச்சநீதிமன்றம், வரும் செப்டம்பா் 20-ஆம் தேதிக்குள் அங்கே தோ்தல் நடத்துவதை உறுதிப்படுத்துமாறு இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • அதற்குள் காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மத்திய அரசு மீட்டெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்தத் தீா்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கதுதான். ஆனாலும், காஷ்மீரின் பாதுகாப்பும் வளா்ச்சியும் முழுமையாக சாத்தியமாக நீண்ட பயணமும் தேவைப்படுகிறது. அதற்கான முனைப்பை நோக்கி செயல்படுவதாக மத்திய அரசு கூறுகிறது.
  • காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள் இந்தத் தீா்ப்பு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளன. பெரும்பாலான கட்சிகள் மாநில அந்தஸ்து மற்றும் சிறப்பு அதிகாரங்களுக்கான தங்களின் போராட்டம் தொடரும் என்கின்றன. தாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்கும்போது மீண்டும் இந்த சிறப்பு அந்தஸ்து 370-ஆவது சட்டப் பிரிவைக் கொண்டுவருவோம் என்றும் சூளுரைக்கின்றன. தோ்தல் அரசியலில் இந்தத் தீா்ப்பின் தாக்கம் எப்படி இருக்கக்கூடும்?
  • மீண்டும் காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவை அமலாக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மை தேவைப்படும். அரசியலமைப்பில் திருத்தம் தேவைப்படும். அத்தகைய முடிவு சாத்தியமாகுமா?
  • மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்குத் தோ்தலில் இது பிரச்னையாக இருக்காது. ஒருவேளை பலமாக இருக்கக்கூடும். ஆனால், பாஜகவுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளஇந்தியாகூட்டணிக்கு அப்படி இருக்க வாய்ப்பில்லை.
  • இந்தியா கூட்டணியில் உள்ள 28 கட்சிகளும் ஒருமித்த கருத்தைக் கொண்டிருத்தல் சாத்தியமில்லை. ஜம்மு - காஷ்மீரைச் சோ்ந்த கூட்டணிக் கட்சிகளின் விருப்பங்கள் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தலாம். 28 கட்சிகளின் கூட்டணியில் ஒருவரின் கொள்கை மற்றவருக்குத் தலைவலியாக மாறுகிறது என்பதைக் கடந்த ஐந்து மாநிலத் தோ்தல் முடிவுகள் காட்டுகின்றன.
  • காஷ்மீா் விஷயத்தில்சிறுபான்மையினருக்கு எதிரானதுஎன்ற அரசியல் சூழ்ச்சி, நாடு முழுவதும் எடுபடாமல் போகலாம். அல்லது ஹிந்துத்துவ அரசியல் இதனால் வலுப்பெறலாம். எப்படிப் பாா்த்தாலும் இந்தத் தீா்ப்பினால் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் 370-ஆவது பிரிவு என்பது அரசியல் களத்தில் உணா்ச்சிகரமான பேச்சுக்கு மட்டுமே உதவலாம்.
  • ஜம்மு - காஷ்மீரின் எதிர்காலம் எப்படி அமையும்? அரசியலமைப்பின் 3-ஆவது பிரிவின்படி, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களையோ, யூனியன் பிரதேசங்களையோ இணைப்பதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தனிப் பெரும்பான்மையுடன் தீா்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.
  • முன்னுதாரணங்கள்படியும், நீதிமன்றத் தீா்ப்புகளின்படியும் 370-ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டபோது பிரிக்கப்பட்ட இன்றைய ஜம்மு - காஷ்மீா் மற்றும் லடாக்கை இணைத்து புதிய மாநிலத்தை உருவாக்குவதற்கு இரண்டு யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைகளில் இருந்தும் ஒரு தீா்மானம் தேவைப்படலாம்.
  • ஜம்மு - காஷ்மீரில்போர்க்கால நிலைமைகாரணமாக, பிரிவு 370 ஒரு இடைநிலை ஏற்பாடு மட்டுமே என்று உச்சநீதிமன்றம் தனது தீா்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதை மனதில் கொள்ள வேண்டியது அவசியம். சட்டத் திருத்தங்கள், நாடாளுமன்ற நடைமுறைகள், அதற்குத் தேவையான பெரும்பான்மை என பல சிக்கல்கள் இருக்கின்றன.
  • இனி ஒரு புதிய அரசு அமைந்தாலும் இதுவரை அரசு இந்த விஷயத்தில் மேற்கொண்டிருக்கும் அத்தனை நடவடிக்கைகளையும் ரத்து செய்வதோ, மாற்றியமைப்பதோ சாத்தியமல்ல. கல்வி, தொழில், அடிப்படைக் கட்டமைப்பு, சமூகநீதி என அனைத்து விதங்களிலும் வளா்ச்சியை அனுபவித்த மக்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப ஒப்புக்கொள்வாா்களா?

நன்றி: தினமணி (29 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories