உச்ச நீதிமன்றச் சீராய்வுக்குத் தப்புமா 10% இட ஒதுக்கீடு?
February 18 , 2019 2138 days 2139 0
இந்தியாவின் இட ஒதுக்கீட்டு வரலாறு சட்டச் சிக்கல்கள் நிறைந்தது. 1951 முதல் இட ஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் முட்டுக்கட்டை போடும்போதெல்லாம், அத்தீர்ப்புகளை மாற்றியமைக்கும் வகையில் அரசியல் சட்டம் திருத்தப்பட்டது. அரசியல் சட்டக் கூறுகள் 15 (4), 15 (5), 16 (4ஏ), 16 (4பி) மற்றும் கூறு 335-க்கான முன்நிபந்தனை ஆகியவை அரசியல் சட்டத்துடன் சேர்க்கப்பட்டன. 69% ஒதுக்கீட்டுக்கு வழிவகுக்கும் தமிழ்நாடு சட்டம், ஒன்பதாவது அட்டவணையில் வைக்கப்பட்டது.
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்குக் கல்வியிலும், அரசுப் பணிகளிலும் 10% இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது அரசியல் சட்டத்தின் சமீபத்திய 103-வது திருத்தம். இதன் மூலம் பின்தங்கிய நிலையை அறுதியிடுவதற்காகப் பொருளாதார அளவுகோல்களை உபயோகப்படுத்துவதற்கும், மொத்த ஒதுக்கீட்டில் உச்சவரம்பு 50% என்று உச்ச நீதிமன்றம் விதித்த தடையைப் பயனற்றதாக்குவதற்கும் நாடாளுமன்றம் முயன்றுள்ளது. தற்போதைய திருத்தம் இதற்கு முந்தையவற்றிலிருந்து எந்த வகையிலாவது மாறுபட்டதா? அப்படியென்றால் எப்படி?
இரண்டு கேள்விகள்
அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை அழிக்கவோ, ரத்துசெய்யும் விளைவுகளை ஏற்படுத்தவோ கூடாது என்று வலியுறுத்துகிறது கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்பு. அதன்படி, 103-வது சட்டத் திருத்தத்தின் மீது உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது இரண்டு கேள்விகளைப் பொறுத்தது. 1) சமத்துவம் என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியா? 2) உச்ச நீதிமன்றத்தின் தடை மற்றும் ஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பு ஆகியவற்றை 103-ஆவது திருத்தத்தின் மூலம் எதிர்ப்பது சமத்துவத்தை மீறும் செயலாகாதா?
சமத்துவம் என்பது சமமானவர்களிடையே மட்டுமே நிலவுகிறது, சமமற்றவர்களைச் சமமானவர்களாக நடத்தினால் அது சமனற்ற தன்மையை மட்டுமே நிலைநிறுத்தும் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள். நெடுநாளைய மரபான சமனற்ற நடத்துகையைச் சரிசெய்யும் விதமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுகூலமாக ஆக்கபூர்வமான வேறுபாடுகளை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் சட்டக் கூறுகள் 14 (சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் சட்டத்தில் அனைவருக்கும் சமமான பாதுகாப்பு), கூறு 15 (1) (மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த ஒரு குடிமகனிடமும் வேறுபாடு காட்டுவதற்குத் தடை), கூறு 16 (1) (பொது வேலைவாய்ப்பில் அனைத்துக் குடிமகன்களுக்கும் சமவாய்ப்பு) ஆகியவை முறைசார் சமத்துவத்தைப் பிரதிபலிப்பவை. இவை, தனிநபர்களை மையமாகக் கொண்டவை. இன்னொருபுறம், கூறு 15-ன் 3 முதல் 5 வரையிலான உட்கூறுகளும், 16-வது கூறும் ஆக்கபூர்வமான வேறுபாடுகளின் வாயிலாக சமத்துவத்தை உருவாக்க முயற்சிப்பவை. உதாரணமாக, கூறு 15 (4) சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பின்தங்கிய பிரிவினருக்கும், பட்டியலினத்தவருக்கும் கல்வி நிலையங்களில் சேர்வதற்கான ஒதுக்கீட்டை அளிக்கிறது.
கூறு 16 (4) நாட்டின் பணிகளில் போதுமான அளவு பிரதிநிதித்துவம் கொடுக்கப்படாத பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்குப் பொது வேலைவாய்ப்புகளில் ஒதுக்கீட்டினை அளிக்கிறது. இந்த உட்பிரிவுகள் குழுவினை மையமாகக் கொண்டவை. ஏனென்றால், பெண்களும் கீழ்ச் சாதியினராகக் கருதப்படுபவர்களும் பாகுபாட்டுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இட ஒதுக்கீட்டைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அரசியல் நிர்ப்பந்தங்கள் வழிவகுக்கக்கூடும் என்று அம்பேத்கர் முன்னமே ஊகித்திருந்தார். அரசியல் சட்ட நிர்ணய சபைக் கூட்டங்களில் பேசியபோது, ‘ஒதுக்கப்பட வேண்டிய இருக்கைகள் சிறுபான்மை இருக்கைகளுக்குள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்... (இல்லாவிட்டால்) ஒதுக்கீட்டின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட விதிவிலக்கு மொத்த (சமத்துவ) விதியையும் உண்டுவிடும். விதியில் எதுவும் மிஞ்சாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மைசூர் மாநிலத்துக்கு எதிராக எம்.ஆர்.பாலாஜி 1983-ல் தொடுத்த வழக்கில், கூறு 15 (4)-ன் கீழ் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரி சேர்க்கைக்காக ஏற்படுத்தப்பட்ட 68% ஒதுக்கீட்டை முடக்குவதற்கு உச்ச நீதிமன்றம் இந்தத் தர்க்கத்தை உபயோகித்தது. மேலும், ஒதுக்கீடு எந்த வகையிலும் 50%-ஐத் தாண்டக் கூடாது என்று தீர்ப்பளித்தது. இந்திரா சாஹனி, 1992-ல் தொடுத்த வழக்கின் தீர்ப்பிலும் அதன்பின் அளித்த தீர்ப்புகளிலும் 50% என்பதை இட ஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பாக வலியுறுத்திவருகிறது.
சட்டரீதியான பலவீனங்கள்
சமீபத்திய 103-வது திருத்தத்தில் பல வெளிப்படையான சட்ட பலவீனங்கள் தெரிகின்றன. முதலாவதாக, கூறு 15 (4)-ன் கீழ் கல்வி நிறுவனங்களின் சேர்க்கையில் ஒதுக்கீடு செய்வதற்கு ஒரு வர்க்கம் சமூகரீதியாகவும், கல்விரீதியாகவும் பின்தங்கியதாக இருக்க வேண்டும் என்பது கட்டாயத் தேவை என்பதை உச்ச நீதிமன்றம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திவருகிறது. அதேபோல், கூறுகள் 16 (4) மற்றும் 16 (4ஏ)-வின் கீழ் பொது வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு செய்வதற்கான கட்டாயக் காரணம், ‘பிற்படுத்தப்பட்ட நிலை’ மற்றும் ‘அரசின் பணிகளில் போதிய அளவு பிரதிநிதித்துவம் இல்லாமை’ என்ற இரண்டு நிபந்தனைகளையும் அந்த வகுப்பு கொண்டிருக்க வேண்டும்.
பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினருக்குக் கல்வி நிறுவனங்களில் ஒதுக்கீடு அளிக்கும் இந்தப் புதிய கூறு 15 (6) ‘கல்வியில் பின்தங்கிய நிலை’ என்ற முக்கிய அளவுகோலில் அமைதி காக்கிறது. பொது வேலைவாய்ப்பில் பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு அளிக்கும் புதிய கூறு 16 (6) ‘நாட்டிலுள்ள பணிகளில் போதுமான அளவில் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை’ என்பதில் மௌனம் காக்கிறது. இவை வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டதாகத் தோன்றுகிறது. பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்குச் சார்பாகவும் பட்டியல் சாதியினர், பழங்குடியினர், இதர பிற்பட்ட சாதியினருக்கு எதிராகவும் இருக்கிறது. கட்டாயத் தேவைகளான ‘கல்வியில் பின்தங்கிய நிலை,’ ‘அரசின் பணிகளில் போதிய அளவு பிரதிநிதித்துவம் இல்லாமை’ ஆகியவை இல்லாவிட்டாலும், இச்சட்டத் திருத்தம் பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினரைக் கல்வி மற்றும் பொது வேலைவாய்ப்பின் ஒதுக்கீட்டுக்குத் தகுதி உள்ளவர்களாக்குகிறது.
இரண்டாவதாக, 103-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்துக்கான ‘நோக்கங்கள் மற்றும் காரணங்களுக்கான அறிக்கை’ பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினர் தங்களின் நிதிப் பற்றாக்குறையால் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது வேலைகளில் சேர்வதிலிருந்து தவிர்க்கப்பட்டார்கள் என்று உறுதியாகக் கூறுகிறது. ஆனால், இதை நிரூபிப்பதற்குக் களப் புள்ளிவிவரங்களோ, ஆராய்ச்சிச் சான்றுகளோ கொடுக்கப்படவில்லை. ஒரு பிரிவு பிற்படுத்தப்பட்ட நிலையிலிருக்கிறது, பொது வேலைவாய்ப்பில் போதுமான அளவில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்பதைக் காட்டும் விவரங்களை ஒதுக்கீடு செய்வதற்கு முன்னால் அரசு சேகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ‘இந்திரா சாஹனி’ வழக்குக்கு முன்பும், அதற்குப் பின்பும் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்கிறது.
உதாரணமாக, அட்யன்ட் பிச்சாரா பார்க் சட்ரா சங், ஜார்கண்ட் மாநில வைஷ்ய ஃபெடரேஷனுக்கு எதிராக 2006-ல் தொடுத்த வழக்கில், களப் புள்ளிவிவரங்களோ, ஆராய்ச்சிச் சான்றுகளோ இல்லாத காரணத்தால், ‘மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு’, ‘பிற்படுத்தப்பட்ட பிரிவு’ என்ற இரண்டையும் இணைத்து ஒதுக்கீட்டு சதவிகிதத்தை 12-லிருந்து 9-ஆகக் குறைக்க ஜார்கண்ட் அரசு எடுத்த முடிவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மூன்றாவதாக, பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினரின் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையைத் தீர்மானிப்பதற்கு வரையறுக்கப்பட்டுள்ள சொத்தின் அளவும், வருமான உச்சவரம்பான எட்டு லட்சம் ரூபாயும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மேம்பட்ட அடுக்கைத் (கிரீமி லேயர்) தீர்மானிப்பதற்கு வரையறுக்கப்பட்டுள்ள வருமான உச்சவரம்பும் ஒன்றே. சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்டு, ஆனால் பொருளாதார அடுக்கில் மேல்நிலையிலுள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (ஓபிசி- நான் கிரீமிலேயர்) பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை 103-வது சட்டத் திருத்தம் அழிக்கிறது. இது சமமில்லாதவர்களைச் சமமாக நடத்துவதற்கு உதாரணம்.
ஆகஸ்ட் 2018-ல் மத்திய அரசின் புள்ளியியல் துறை இணை அமைச்சர் விஜய் கோயல், மக்களவைக்கு அளித்த எழுத்துபூர்வ பதிலின் பிரகாரம் பார்த்தால், 2016-17ல் இந்தியாவின் தனிநபர் வருடாந்திர வருமானம் வெறும் ரூ.82,229-தான். பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிக அளவு வருடாந்திர உச்சவரம்பான ரூ.8 லட்சம் பரந்த அடிப்படையில் அமைந்துள்ளது. இதனால் பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினரிடையே உள்ள ஏழைகளிலும் ஏழைகளுக்கு நியாயம் கிடைக்காது. வேறு வகையில் சொன்னால், பொருளாதாரரீதியில் நலிவடைந்த பிரிவினருக்குள்ளேயே இது சமமில்லாதவர்களைச் சமமானவர்களாக ஆக்கும்.
அடிப்படைக் கட்டமைப்புச் சவால்
இந்திரா சாஹனி வழக்கில் ‘சமத்துவம்’ என்பது அரசியலமைப்பின் அடிப்படை அம்சம் என்றது உச்ச நீதிமன்றம். எம்.நாகராஜ் வழக்கிலும் (2006) அதை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம், ‘50% உச்சவரம்பு, மேம்பட்ட அடுக்கு மற்றும் பின்தங்கிய நிலைமை, பிரதிநிதித்துவம் போதாமை போன்ற கட்டாயக் காரணங்கள் கோட்பாடு மற்றும் ஒட்டுமொத்த நிர்வாகத் திறன் ஆகியவை அரசியலமைப்பின் தேவைகள் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். இவை இல்லாமல் பிரிவு 16-ன் வாய்ப்புச் சமன் வடிவம் வீழ்ந்து விடும்’ என்று தீர்ப்பளித்தது.
103-வது திருத்தம், எம்.நாகராஜ் வழக்கில் கூறப்பட்ட ஒவ்வொரு சோதனையிலும் தோல்வியடையக்கூடும். இத்திருத்தம், சமத்துவத்தின் அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாட்டை மீறுகிறது என்று உச்ச நீதிமன்றம் முடக்கிவிடக் கூடும். உச்ச நீதிமன்றத்திற்கு இரண்டு விருப்பத் தேர்வுகளே இருக்கின்றன. 103-வது திருத்தத்தை முடக்க வேண்டும் அல்லது விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ வரம்பைத் தளர்த்த வேண்டும்.