TNPSC Thervupettagam

உடனடித் தீர்வு சரியா?

February 9 , 2025 2 days 19 0

உடனடித் தீர்வு சரியா?

  • பள்ளி, கல்லூரிகளில் ஒத்த வயதுடையோரின் கேலி, கிண்டல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அவர்கள் தரும் அழுத்தங்கள் ஆகியவை வளரிளம் பருவத்தினரின் உறவுகளில் சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்தச் சூழலில் ஒட்டுமொத்த சமூகமும் விழித்துக்கொள்ள வேண்டியது காலத்தின் தேவை.

மாற்றம் ஏற்படும் பருவம்:

  • வளரிளம் பருவத்தில்தான் ஒருவருக்கு இன்னொருவரின் நிலையிலிருந்து பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் திறன் வளர்கிறது. சிந்தனைக்கும் அனுபவத் துக்கும் இடையேயான தொடர்பினைப் புரிந்துகொள்வதிலும் நல்ல மாற்றம் ஏற்படுகிறது. இது கேள்வி கேட்கும் பருவமும்கூட. சரி, தவறைப் பிரித்துப் பார்த்தல், சுய ஒழுக்கக் கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளுதல், சுயத்தைப் பற்றிய புரிதல், சுயமரியாதை உணர்வு ஆகியவை இந்தப் பருவத்தில்தான் ஏற்படுகின்றன.
  • அதேபோல பாலினம் சார்ந்த அடையாளங்களை வளர்ப்பதும் அவற்றை நாடிச் செல்வதும் இந்தப் பருவத்தில் இயல்பானது. எதிர்பாலின ஈர்ப்பும் அவர்களுடன் இணைந்து பழக விரும்புவதும் நட்பு பாராட்டுவதும் இந்தப் பருவத்திற்கே உரியவை. இத்தகைய வளர்ச்சியைத் தங்களது வீடு, பள்ளி போன்ற இடங்களிலும் ஒத்த வயதுடைய நண்பர்களிடம் இருந்தும் இந்த வயதினர் கற்றுக் கொள்கின்றனர்.
  • ஆனால், இந்த வளர்ச்சிப் பாதையில் நெருக்கடியை எதிர்கொள்ளும் சிலர் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர். இதனால் அவர்களின் கல்வி, எதிர்காலம் பாதிக்கப் படுவது மட்டுமன்றி உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பின்னடைவைச் சந்திக்க நேர்கிறது.
  • பரிசோதனை செய்யும் பருவம்: தன்னை யாரும் புரிந்துகொள்வதில்லை என்று உணர்வுவயப்படுவதும், நிறைவேறாத ஆசைகளைப் பகல் கனவு காண்பதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய தன்மையும் இந்தப் பருவத்தில் இயல்பு. பொதுவாக இளம் பருவத்தினரிடம் புதிய விஷயங்களைப் பரிசோதித்து, ஆராய்ச்சி செய்து பார்க்கும் பழக்கம் இருக்கும். இதனை ‘புதியன தேடுதல்‘ (novelty seeking) என்று சொல்கிறோம்.
  • புதிய நண்பர்களைக் கண்டறிவது, புதிய மனிதர்களுடன் பழக விரும்புவது, நட்புரீதியான உறவுகளை ஏற்படுத்த விரும்புவது ஆகியவை இதில் அடங்கும். இளம் பருவத்தில் ஏற்படக்கூடிய எதிர்பாலின ஈர்ப்பு, எதிர்பாலினத்தினரிடமிருந்து எதிர்பார்க்கும் அன்பு, அரவணைப்பு, அங்கீகாரம் என்பது இயல்பாக எல்லாருக்கும் ஏற்படக்கூடிய ஓர் உணர்வுதான். இவை பல நேரத்தில் அவர்கள் எதிர்பார்த்த வகையில் நிறைவேறுவதில்லை.
  • இன்றைய இளைஞர்கள் உறவு சார்ந்த விஷயங்களில், கல்வி வளர்ச்சியில், வேலை முன்னேற்றங்களில், எதிர்காலத் திட்டங்களில் உடனடி பதில்களையும் தீர்வுகளையும் எதிர்பார்க்கின்றனர். தங்கள் விருப்பங்கள் உடனடியாக நிறைவேறியாக வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அதிவேகமாக வெற்றியைத் தொட்டுவிட வேண்டும், பிரபலமாக வேண்டும் என்கிற ‘இன்புளூயன்சர்’ கலாச்சாரமும் கல்வி கற்கும் மாணவர்களைப் பாதிக்கிறது.
  • உறவு சார்ந்த விஷயங்களிலும், மற்ற விஷயங்களிலும் உணர்வுவயப் பட்டு (Impulsivity) அவசரமாக முடிவெடுக்கின்றனர். பின்னர் அந்த முடிவு சரியில்லை என வருந்துகின்றனர். அதேபோல சக வயதினரின் அழுத்தம் காரணமாக சில உறவுகளை உருவாக்கிக் கொள்வதும் அதன் எதிர்மறை விளைவுகளைத் தாங்கிக்கொண்டு, அத்தகைய உறவைத் தொடர்வதும் இன்றைய இளம்பருவத்தினர் எதிர் கொள்ளும் மிக முக்கியச் சவால்.
  • எதிர்காலம் குறித்த கவலை, பதற்றம், கல்வி விளையாட்டு உள்ளிட்ட தங்களது செயல்திறன் குறித்தும் நண்பர்கள், குடும்பத்தினரிடம் தனக்கு உருவாகும் பிம்பம் குறித்தும் பெரும்பாலான இளம்பருவத்தினரிடம் பதற்றம் தொற்றிக்கொள்கிறது.
  • பெற்றோர் இதனைப் புரிந்துகொண்டு வெளிப்படையான கலந்துரையாடல் மூலம் அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதலை வழங்க வேண்டும். தேவை இருப்பின் நேரம் தாழ்த்தாமல் மருத்துவரின் உதவியை நாட வேண்டும். வளரிளம் பருவத்தில் காட்டப்படும் சரியான பாதை வாழ்வின் அடுத்த கட்டத்துக்குச் சிக்கல் இல்லாமல் அவர்களை இட்டுச் செல்லும்.

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories