TNPSC Thervupettagam

உடனடி கவனம் கோரும் சுகாதாரப் பேரிடர்

December 16 , 2024 22 days 49 0

உடனடி கவனம் கோரும் சுகாதாரப் பேரிடர்

  • நீரிழிவு நோயாளிகளின் தலைமையகமாக இந்தியா மாறிவருவது மிகுந்த கவலையளிக்கிறது. உலகில் வாழும் வயதுவந்தோரில் உள்ள நீரிழிவு நோயாளிகளில், நான்கில் ஒருவர் இந்தியாவில் வாழ்கிறார். இந்தியாவில் இந்த எண்ணிக்கை 21.2 கோடி, உலக அளவில் 82.8 கோடி.
  • 2022 வரையிலான தரவுகள் அடிப்படையில் இந்த எண்ணிக்கை தெரியவந்திருக்கிறது. சமீபத்தில் வெளியான ‘லான்செட்’ மருத்துவ ஆய்விதழின் அறிக்கை இந்தத் தரவுகளைத் தெரிவிக்கிறது. உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து தொற்றாநோய் ஆபத்துக் கூட்டுமுயற்சி (NCD-RisC) இணைந்து நடத்திய ஆய்வு அடிப்படையிலான அறிக்கை இது.
  • 1980களுடன் ஒப்பிடும்போது, 2022இல் 10-12% புள்ளிகளுக்கு இந்தியாவில் நீரிழிவு நோய் அதிகரித்திருக்கிறது. இந்திய மக்கள்தொகையில் 21.4% ஆண்கள், 23.7% பெண்கள் நீரிழிவு நோயால் அவதிப்பட்டுவருகிறார்கள். இது ஒரு மிகப் பெரிய சுகாதாரப் பேரிடர் என்பதை மத்திய, மாநில அரசுகளுக்கு இந்த ஆய்வறிக்கை உணர்த்துகிறது.
  • அதைவிட ஆபத்தான மற்றோர் அம்சத்தையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியிருக்கிறது. உரிய சிகிச்சையைப் பெறாத நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள நாடாகவும் (13.3 கோடி பேர்) இந்தியா இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும். இப்படிச் சிகிச்சை பெறாமல் நீண்ட காலத்துக்கு இருப்பவர்கள் உடல் உறுப்பு அகற்றம், இதய நோய், சிறுநீரகப் பாதிப்பு, பார்வையிழப்பு உள்ளிட்டவற்றுக்கு ஆளாகக்கூடும்.
  • நீரிழிவு நோய் உரிய காலத்தில் கண்டறியப்படுவதும், நீரிழிவைக் கட்டுப்படுத்தத் தொடர் சிகிச்சைகளும் மிக அவசியம். அப்போதுதான் நாள்பட்ட நீரிழிவு நோயால் ஏற்படும் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த முடியும். நீரிழிவு நோய் வர சாத்தியமுள்ளவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கான சரிவிகித உணவு முறை, வாழ்க்கை முறை, மருந்துகள் போன்றவை தரப்பட்டால் நீரிழிவு வருவதைத் தடுப்பதும், வந்தால் கட்டுப்படுத்துவதும் சாத்தியப்படும்.
  • நீரிழிவு நோய் தீவிரமடைவதற்கு மரபணுக் காரணம் மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் சீரழிவு, இளம் வயதில் உடற்பருமன் போன்றவையும் முக்கியக் காரணங்களாகின்றன. உலகிலேயே அதிக உடற்பருமன் உள்ள குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது. சர்க்கரைப் பொருள்களுக்கு அடுத்தபடியாக, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் (மாவுச் சத்து) உள்ள பொருள்களே உடல் பருமன் அடையவும் நீரிழிவு நோய்க்கும் அடிப்படைக் காரணங்களாக இருக்கின்றன.
  • எனவே, இந்தப் பொருள்களை அதிகம் கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்குக் கூடுதல் வரி விதிப்பதன் மூலமாகவும் நீரிழிவு நோயாளர்கள் பெருகுவதைக் கட்டுப்படுத்த முடியும் என்று லான்செட் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதேநேரம் தயிர், பால்பொருள்கள், முழுத் தானியங்கள், பச்சைக் காய்கறிகள், கீரைகள் போன்றவை நீரிழிவு ஆபத்தைக் குறைக்கின்றன.
  • உணவு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு நிலை குறித்த ஆய்வறிக்கை கூறுவதன்படி பாதிக்கு மேற்பட்ட இந்தியர்கள் ஆரோக்கியமான உணவு வகைகளை வாங்குவதற்கு உரிய பொருளாதார வசதியைக் கொண்டிருக்கவில்லை. இதற்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். நீரிழிவுப் பரவலைக் கட்டுப்படுத்த ஆரோக்கிய உணவைக் குறைந்த விலையில் கிடைக்கச்செய்தல், பள்ளிகளில் இலவச உணவு, புரத உணவு வகைகளை மக்களுக்கு வழங்குதல் அல்லது மானிய விலையில் வழங்குதல் போன்றவையும் பலன் அளிக்கக்கூடும்.
  • தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்தின் கீழ் 8 கி.மீ. தொலைவுள்ள நடைபாதைகள் கண்டறியப்பட்டு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டன. இதுபோன்ற முயற்சிகளுடன் பொது இடங்களில் உடற்பயிற்சிக் கருவிகளை நிறுவுவதோடு, இலவச உடற்பயிற்சிக் கூடங்களை அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் பரவலாக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories