- கண்ணும் கன்னத் துடிப்பும் அல்லாது மொத்த உடலும் முடங்கிப் போய்விட்டது; மருத்துவர்கள் உயிருக்கே உத்தரவாதம் கொடுக்க மறுத்துவிட்டனர். இதற்கு எல்லாவற்றுக்குப் பிறகும் 50 ஆண்டுகள் வாழ்ந்து ‘ஊனம்’ என்று சமூகம் சொன்ன உடலைக் கொண்டு அரிய அறிவியல் சாதனைகளை நிகழ்த்தியவர் ஸ்டீவன் ஹாக்கிங்.
- ஸ்டீவன் ஹாக்கிங், 1942இல் ஜனவரி 8இல் பிறந்தார். ஹாக்கிங்கின் தந்தை அவரை மருத்துவம் படிக்க நிர்ப்பந்தித்துள்ளார். ஆனால், அவருடைய விருப்பமோ பல்லாயிரம் ரகசியங்களை விரித்துவைத்திருக்கும் பிரபஞ்ச அறிவியலின் மீதிருந்தது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பயின்றார். உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். அண்டவியலில் கருந்துளைகள் குறித்த ஆய்வுகளில் விருப்பத்துடன் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலத்தில்தான், இந்தப் பாதிப்பை அவர் எதிர்கொள்ள வேண்டிவந்தது.
- 1963ஆம் ஆண்டு அவரது 21ஆவது பிறந்தநாளுக்குச் சில நாட்களே இருந்த நிலையில் பக்கவாதத்தால் தாக்கப்பட்டார். அவருடைய மருத்துவர்கள் கைவிரித்துவிட்டார்கள். இன்னும் இரண்டு வருடம் அவர் வாழ்ந்தால் பெரிய விஷயம் எனவும் சொல்லிவிட்டார்கள். ஆனால், இதையெல்லாம் ஹாக்கிங் தன் உளஆற்றலால் முறியடித்தார். பாதியில் நின்றுவிட்ட அண்டவியல் குறித்த அவரது ஆய்வைத் தொடங்க வேண்டும் என்கிற வேட்கை அவற்றையெல்லாம் கடக்க அவருக்கு உரமானது எனலாம்.
- உடல் ஒரு கருவிதான். அதை இயக்கும் மூளை ஹாக்கிங்கிடம் இருந்தது. அதனால் அவரது உடல் பகுதிபகுதியாகச் செயல் இழக்க அதைச் சமாளிக்க ஊன்றுகோல், சக்கர நாற்காலி, கன்னச் சதை மூலம் பேசும் கருவி ஆகிய கருவிகளைக் கொண்டு தனது வாழ்க்கையின் இயக்கத்தை அவர் தொடர்ந்தார். வாழ்க்கை துள்ளித் திரியும் 21வயதில் சக்கர நாற்காலியில் முடங்குவது யாரையும் மன ரீதியாகத் தகர்த்துவிடக் கூடியது. ஆனால், ஹாக்கிங்கோ, "அதற்கெல்லாம் கவலைப்பட எனக்கு நேரம் இல்லை. எனக்குச் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது" என்று தன் வேலைகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்.
- ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தனது ராஜபாட்டையைத் தொடர்ந்தார். பிரபஞ்சம் விரிந்துகொண்டே வருகிறது என்கிற அந்தக் கோட்பாட்டுக்கு எதிராக பிரபஞ்சம் சுருங்கவும் வாய்ப்புள்ளதாக ஹாக்கிங் தனது கருத்தைச் சொன்னார். அதனால் காலம் பின்னோக்கிச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் சொன்னார். காலம் எனக் கற்பனை செய்துவைத்திருக்கும் காலத்தின் உண்மைப் பொருளை ‘காலத்தின் சுருக்கமான வரலாறு’ என்கிற புத்தகத்தின்வழி எல்லாரும் புரிந்துகொள்ளும் எளிய மொழியில் அவர் விளக்கினார். சூரியன் தோன்றிய ஒரு பெரு வெடிப்பால் பிரபஞ்சம் உருவானது என்பதையும், அதனால்தான் சூரியனைக் கோள்கள் சுற்றுகின்றன என்பதையும் தர்க்கபூர்வமாக விளக்கினார் ஹாக்கிங்.
- ஹாக்கிங்கின் மற்றுமொரு முக்கியமான ஆய்வு, அண்டவெளியின் கருந்துளைகளைக் குறித்தது. கருந்துளைகளுக்குள் என்ன இருக்கிறது என்றும், அதன் காந்தப்புலத்தால் ஈர்க்கப்பட்டு உள் செல்லும் துகள்கள் வெளிவருவதில்லை என நம்பப்பட்டு வந்தது. ஆனால், அதிலிருந்து துகள்கள் வெளிவருவதை ஹாக்கிங் நிரூபித்தார். அதனால் அவை ‘ஹாக்கிங் துகள்கள்’ என்றே அழைக்கப்படுகின்றன. ஒவ்வொன்றும் பொருளால் ஆனது என்பது பொருள்முதல்வாதக் கருத்துக்கு வலுச்சேர்க்கும் கண்டுபிடிப்பு. இந்த அணு, புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் ஆகியவற்றால் ஆனது. மேலும் இந்த மூன்றையும் இணைக்கும் துகள்களில் 12ஆவது துகளான ஹிக்ஸ் போஸன் துகளின் மின்னூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பது ஹாக்கிங்கின் முக்கியமான ஒரு கண்டுபிடிப்பு. அப்படி அதிகரிக்கும்பட்சத்தில் இந்தப் பிரபஞ்சம் அழிவுக்குச் செல்லும் என்றும் சொன்னார்.
- இயல்பியல் துறையில் பல ஆராய்ச்சிகளைச் செய்தவர் சர்வதேச அளவில் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது உதாரண வாழ்க்கை, ’The Theory of Everything' என்கிற பெயரில் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. உடல் உறுப்புகள் செயலிழப்பதால், உடைந்துபோகத் தேவையில்லை என்பதைத் தனது அறிவியல் தேடலாலும் அதனால் விளைந்த சாதனைகளாலும் நிரூபித்தவர் ஸ்டீவன் ஹாக்கிங்.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 12 – 2023)