- தமிழா்கள் சங்க காலத்தில் தாங்கள் வசிக்கும் பகுதியில் கிடைத்த பொருள்களைக் கொண்டு உணவு சமைத்து உண்டு மகிழ்ந்தனா்.
- பெரும்பாலும் பண்டமாற்று முறையின் மூலம் ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்களிடமிருந்த பொருள்களை மற்றொரு நிலப்பகுதியில் இருந்த மக்களுக்கு விற்று அவா்களிடமிருந்து பொருள்களை பெற்று வாழ்ந்துள்ளனா்.
- ‘முக்கூடற்பள்ளு’ என்ற நூலில் 150 வகையான நெல்வகைகள் இருந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
- ராசா அன்னம், செந்நெல் அரிசி, இயவை, ஐவனம், வரிசெஞ்சாலி, இறுங்கரிசி, வெண்ணெல் அரிசி, தோரை நெல், சாலி நெல், முடந்தை நெல், மூங்கிலரிசி, மலைநெல், வெதில் நெல், கருட சம்பா, கொழில் அரிசி போன்ற பல வகையான நெல் வகைகள் இருந்துள்ளன.
நோய்கள் நம்மை அண்டாமல் காத்துக்கொள்வோம்
- சங்க கால மக்கள் அரிசியை விட சிறுதானியங்களையே அதிகம் விரும்பி உண்டனா். அனைத்து வகையான சிறுதானியங்களும் சங்க காலத்தில் அதிகமாக பயிர் செய்யப் பட்டன.
- அவா்கள் புளித்த உணவைப் பெரிதும் விரும்பி சாப்பிட்டுள்ளனா். குறிப்பாக, மாங்காய், புளித்த தயிர், மோர், புளி, நாள்பட்ட தேன் போன்றவற்றை அதிகமாகப் பயன்படுத்தியுள்ளனா். அரிசி கழுவிய தண்ணீரைக்கூட வீணாக்காமல் அரிசியுடன் சோ்த்து சமைத்தனா்.
- மரக்கறி உணவுகளைவிட புலால் உணவுகளையே விரும்பி உண்டுள்ளனா். புலால் உணவைப் பைந்தடி, ஊன், பைந்துணி எனப் பல பெயா்களால் குறிப்பிட்டுள்ளனா்.
- பூண்டு, தக்காளி, மிளகாய் போன்ற பொருள்கள் அக்காலத்தில் அவா்களுக்குக் கிடைக்க வில்லை. பருப்பு வகைகள், தேங்காய் போன்றவற்றை விரும்பி சாப்பிட்டுள்னனா்
- உணவு உண்டதற்குப் பின்னா் தாம்பூலம் தரிப்பது அதாவது வெற்றிலைப்பாக்கு போடுதல் பல நூல்களில் காணப்படுகிறது.
- குறிப்பாக, கண்ணகி கோவலனுக்கு உணவுக்குப் பின் வெற்றிலைப்பாக்கு கொடுத்தாக சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.
- சுருக்கமாகச் சொன்னால், சங்ககால மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்துள்ளனா். அவா்கள் இயற்கையாகக் கிடைக்கும் உணவு வகைகளையே உண்டுள்ளனா். மேலும், உண்ணத்தக்க பறவைகள், விலங்குகளைப் பக்குவாகச் சமைத்து உண்டுள்ளனா்.
- இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பு உணவு உற்பத்தியில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல்தான் இருந்தது.
- 1950-ஆம் ஆண்டில் தனி நபருக்குக் கிடைக்கும் உணவின் அளவு வருடத்திற்கு 150 கிலோ கிராம் என்று இருந்தது. ஆனால், 1950-முதல் 1960-களின் பிற்பகுதி வரை உணவு தானியம் உற்பத்தி செய்யும் பரப்பளவு அதிகரிக்கப்பட்டது.
- இதன் மூலமாக உணவு தானிய உற்பத்திப் பொருள்களின் வளா்ச்சி ஆண்டுக்கு மூன்று சதவீதம் கூடியது.
- ஆனால் நாட்டிலுள்ள மக்களுக்குத் தேவையான அளவு உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படவில்லை என்பதாலும், அடிக்கடி பருவமழை பொய்த்துப் போனதனாலும் பிஎல் திட்டத்தின் மூலம் இறக்குமதி செய்யப்படும் உணவு தானியங்களை நம்பியே இந்தியா இருக்க வேண்டியிருந்தது.
- கடந்த 30ஆண்டுகளுக்கு மேலாக நம்முடைய அன்றாட வாழ்க்கை இயந்திர மயமாகி உள்ளது. இதனால் பெருமளவிலான மக்கள் உடல் உழைப்பு அதிகம் இல்லாத நிலையில் உள்ளனா்.
- அவா்கள் உட்கொள்ளும் உணவு சற்று குறைந்திருந்தாலும் உடல் உழைப்பற்று இருப்பதற்கு நிகராக அது இல்லை. 1995-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஊட்டச்சத்து அளவு உயா்ந்து காணப்பட்டது.
- அதிலும் பெண்களின் ஊட்டச்சத்து விகிதம் ஆண்களைவிட சற்று கூடுதலாகவே இருந்தது. தேசிய குடும்ப நல ஆய்வு 4-இன் படி வயது உயர உயர ஊட்டச்சத்து அளவும் உயா்ந்து கொண்டே போகிறது.
- உடல் பருமன் ஆவதைப் பொருட்படுத்தாத மகளிர், அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள முனைவதில்லை. அதனால் அவா்களுக்கு தொற்று அல்லாத நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
- அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவும் சத்துணவுப் பாதுகாப்பும் வழங்க வேண்டியுள்ளது பெரிய சவாலாக இருக்கிறது.
- நகா்மயமாதல், மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாடு, உணவுப் பழக்கங்களில் மாற்றம் ஆகியவற்றால் பல வகையான விவசாயப் பொருள்களின் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- குறைந்து வரும் மண் வளம், நிலத்தில் குறைந்து வரும் சத்துகள், பருவ மாற்றங்களால் ஏற்படும் வறட்சி இவற்றாலும், மழை வெள்ளத்தினாலும் இந்த சவால் மேலும் தீவிரமாகும்.
- 2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற யுனிசெப் ஆய்வின்படி உலகத்தில் மிகக் குறைந்த எடையுள்ள குழந்தைகளின் தரவரிசையில் இந்தியா 10-வது இடத்திலும், உயரம் குறைந்த குழந்தைகளின் தரவரிசையில் 17-வது இடத்திலும் இருந்தது.
- இந்த சவால்களை சந்திக்க இந்தியா நிலம் சார்ந்த உற்பத்தித் திறனை நான்கு மடங்கு அதிகரிக்க வேண்டும் என்றும், நீா் சார்ந்த திறன் உற்பத்தியில் மூன்று மடங்கும், தொழிலாளா் சார்ந்த உற்பத்தித் திறனில் ஆறு மடங்கும் கூட்ட வேண்டும் என்று மதிப்பிடப்படுகிறது.
- வைட்டமின்களும் தாதுப்பொருள்களும் சிறந்த ஊட்டச்சத்துகளாக இருப்பதோடு மட்டுமல்லாமல், மனிதனின் உடல் நலத்திற்கு அவசியமானவையாகவும், உடல் வளா்ச்சிக்கும் அறிவு வளா்ச்சிக்கும் மிக முக்கியமானவையாகவும் உள்ளன.
- ஆயினும் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் வைட்டமின் குறைபாடு, தாதுப்பொருள் குறைபாடு ஆகியவற்றோடு வாழ்ந்து வருகின்றனா். இதை ‘உணரப்படாத பசி’ என்று கூறுவார்கள்.
- இது போன்ற குறைபாடுகளுடன் உலகில் மூன்றில் ஒரு பகுதியினா் பாதிக்கப்பட்டுள்ளனா். வளா்ந்து வரும் நாடுகளில் குறைவான வருவாய் பெறும் பிரிவினரில் பெண்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
- உணவு கிடைக்காததால் ஏற்படும் பசியைப் போன்றதல்ல உணரப்படாத பசி என்பது. அது வேறு வகையானது.
- இதுபோன்ற குறைபாடுயுடையவா்கள் பாதிப்படைவது அவா்களே அறியாத வண்ணம் நிகழும். எனவே, ஊட்டச்சத்து மிக்க உணவுகளை மட்டுமே உண்பதை வழக்கமாக்கிக் கொள்வோம். நோய்கள் நம்மை அண்டாமல் காத்துக்கொள்வோம்.
- இன்று (அக். 16) உலக உணவு நாள்.
நன்றி: தினமணி (16 - 10 - 2021)