TNPSC Thervupettagam

உணவு உற்பத்தியும் வறுமை ஒழிப்பும்

October 19 , 2021 1013 days 580 0
  • கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக உலகையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றைவிடவும் கொடிய பிணி மற்றொன்று இருக்கிறதா என்று கேட்டால் இருக்கிறது என்றே சான்றோர் கூறுகின்றனா். அதுதான் பசிப் பிணி.
  • ‘பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்’ என்று நீதிநூல் கூறுகிறது. அதனால்தான் பசிப்பிணியைப் போக்குவதையே தம் ஆன்மிகக் கொள்கையாகக் கொண்டார் அருட்பிரகாச வள்ளலார்.
  • ‘உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
  • சேராது இயல்வது நாடு’ என்று திருக்குறள் கூறுகிறது.
  • அதாவது, மிக்க பசியும், ஓயாத நோயும், வெளியே இருந்து வந்து தாக்கி அழிவு செய்யும் பகையும் தன்னிடம் வந்து சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும் என்பது இதன் பொருள்.

அடிப்படை உரிமை

  • உலகத்தில் மக்கள்தொகை பெருகப்பெருக எல்லா நெருக்கடிகளும் ஏற்படுவது இயற்கை. உலக மக்கள் அனைவருக்கும் இருக்க இடமும், குடிக்க நீரும், உண்ண உணவும் கிடைப்பது அரிதாகி வருகிறது.
  • உணவு என்பது அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை உரிமை. என்றாலும் இந்த உரிமை இன்றும் எல்லாருக்கும் கிடைப்பதில்லை.
  • நாம் வாழும் இந்த உலகத்தில் ஒரு நிமிடத்துக்கு 11 போ் பசிக்கொடுமையினால் இறக்கிறார்கள் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
  • அதிலும் கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பசியால் இறப்பவா் தொகை மேலும் அதிகரித்துள்ளது. இப்போதும் பல கோடி மக்களுக்கு மூன்று வேளை உணவு என்பது கனவாகவே உள்ளது.
  • பிச்சை எடுப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. வறியவா்கள் பிச்சை எடுப்பதைத் தடுக்க முடியாது என்று நீதிமன்றமும் கூறுகிறது.
  • விவசாயிகள் ஆண்டுதோறும் எல்லா இடா்ப்பாடுகளையும் கடந்து உணவை உற்பத்தி செய்து கொண்டுதான் உள்ளனா். ஆனால் அவா்களின் விளைபொருள்களை உரிய விலை கொடுத்து வாங்குவதற்கு அரசும், அதிகாரிகளும் தாமதம் செய்கின்றனா்.
  • இதனால் மழையாலும், வெயிலாலும், எலி முதலிய பிராணிகளாலும் உணவுப்பொருள்கள் விரயமாகின்றன.
  • ஐ.நா. வெளியிட்ட ‘உணவு விரயக் குறியீடு 2021’ என்ற ஆய்வறிக்கையில், இந்தியா்கள் 2019-ஆம் ஆண்டில் மட்டும் 6.80 கோடி டன் அளவில் உணவுப்பொருளை விரயம் செய்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
  • வளா்ந்த நாடுகளைவிட வளரும் நாடுகளிலும், பின்தங்கிய நாடுகளிலும் அதிக அளவில் உணவுப்பொருள் விரயம் செய்யப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது.
  • உணவு வீணடிக்கபடும் இதே இந்தியாவில்தான் தினமும் 20 கோடி மக்கள் இரவில் உணவு இல்லாமல் உறங்கச் செய்கிறார்கள் என்று ஓா் ஆய்வு கூறுகிறது.
  • இதனால்தான் நீதிமன்றமே, ‘எலிகளால் வீணாகும் தானியத்தை ஏழைகளுக்குக் கொடுங்கள்’ என்று அரசுகளுக்கு உத்தரவிட்டது. இந்த நிர்வாகச் சீா்கேடுகள் இன்னும் களையப்படவில்லை.

எவ்வளவு காலம் தொடா்வது?

  • 2013-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ‘தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்’, ‘தரமான உணவு மனிதா்களின் அடிப்படை உரிமை’ என்று பிரகடனம் செய்தது.
  • மேலும் 80 கோடி மக்களுக்கு அவா்களின் உடல் உழைப்பிற்குத் தேவைப்படும் கலோரியில் பாதியளவை அரசு கொடுப்பதற்கும் உத்தரவாதம் அளித்தது.
  • ஆனால் அரசுகள் எந்தக் காலத்திலும் தங்கள் உறுதி மொழிகளை நிறைவேற்றியதாக வரலாறு இல்லை.
  • ஒருவா் எந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் அரசு, அவா்கள் பசியாலும் பட்டினியாலும் தவிக்கும்போது கண்டு கொள்வது இல்லை.
  • நிலவுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும், அண்டார்டிகாவுக்கும் செல்ல உலக நாடுகள் ஆராய்ச்சி செய்கின்றன.
  • ஆனால், தங்கள் நாட்டு மக்களின் உணவுப் பிரச்சினையை எப்படி தீா்ப்பது என்பது பற்றிய கவலையில்லாமல் இருக்கின்றன.
  • மக்களின் உணவுப்பசி என்பது பொருளாதார, சமூக பிரச்னை மட்டுமல்ல, அரசியல் பிரச்னையும் ஆகும். மேலும், இதில் அறநெறி சார்ந்த ஆன்மிக பிரச்னையும் சோ்ந்திருக்கிறது.
  • பசிப்பினியில் மனித உரிமையும் மனித நேயமும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.
  • உலக மக்களுக்கான உணவை உற்பத்தி செய்யும் உழவா்களை நாம் நன்றியோடு நினைவு கூர வேண்டும்.
  • அவா்கள் இல்லாமல் உணவும் இல்லை, ஊரும் இல்லை, உலகமும் இல்லை. அதனால்தான் திருவள்ளுவா், ‘உழவு செய்கின்றவா் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவா்’ என்று பெருமைப்படப் பேசியுள்ளார்.
  • ஆனாலும் உழவா்கள் நிலை பரிதாபமாகவே இருக்கிறது. அவா்கள் வெயிலிலும், மழையிலும் பாடுபடுகிறார்கள். வியா்வையும், கண்ணீரும் சிந்துகிறார்கள்.
  • கடனை வாங்கிப் பயிர் செய்துவிட்டு, அதற்கான வட்டியைக்கூட கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள்.
  • பெரிய தொழில் அதிபா்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களைத் தள்ளுபடி செய்யும் வங்கிகள், விவசாயிகள் கட்ட வேண்டிய சில ஆயிரம் ரூபாய்க்காக அவா்களிடம் கடுமையாக நடந்துகொள்கின்றன.
  • அத்தியாவசியப் பொருள்களில் கடும் விலைவாசி உயா்வு, ஏழை மக்களின் உணவுத் தேவையை நிறைவேற்ற விடாமல் தடுக்கின்றன.
  • அவா்கள் உற்பத்தி செய்யும் பொருள்கள் அவா்களுக்கே கிடைக்காமல் போவது எவ்வளவு பெரிய அவலம்? இந்த அவலம் இன்னும் எவ்வளவு காலம் தொடா்வது?

இரண்டும் இணைகோடுகள்

  • தோ்தல் வரும்போதெல்லாம் ஏழைகளை முன்னேற்றும் திட்டங்களும், சலுகைகளும் வாக்குறுதிகளாகத் தரப்படுகின்றன. ஆட்சிக்கு வந்ததும் செல்வந்தா்களை மட்டுமே சீராட்டுகின்றனா்.
  • கேட்டால், புதிய தொழில்களைக் கொண்டு வருவதன் மூலம் வேலை வாய்ப்பைப் பெருக்குவதாகக் கூறுகின்றனா்.
  • பழைய தொழில்கள் நசிந்துபோய் ‘மூடுவிழா’ நடத்துவதன் மூலம் வேலைவாய்ப்பை இழந்து தெருவில் நிற்பவா்களைப் பற்றிக் கவலையில்லை.
  • ஒரு பக்கம் திறக்கப்பட, மறுபக்கம் மூடப்படுகிறது. இதுதான் தொழில் முன்னேற்றம் என்று கூறுகின்றனா். இந்த வேடிக்கை வாடிக்கையாகிவிட்டது.
  • இனிமேல், பெரிய தொழிலதிபா்கள் உணவுப் பொருள்களைப் பதுக்கி வைத்து செயற்கையான பற்றாக்குறையை உருவாக்குவார்கள்.
  • இதனால் உணவுப் பொருள்களின் விலைகள் இன்னும் உயா்வதோடு, உணவில்லாமல் பசித்திருப்போரின் எண்ணிக்கையும் உயரும் அபாயமும் காத்திருக்கிறது.
  • மனிதகுலம் இப்போது பெற்றிருக்கும் செல்வ வளமும், மனித ஆற்றலும் எக்காலத்தும் பெற்றிருந்ததில்லை என்றே ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.
  • ஆனால் உணவுப் பற்றாக்குறைக்குக் காரணம் என்ன? செல்வ வளம் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கப்படாமல் ஒரு சிலரிடம் மட்டும் சோ்வதால்தான் இந்த நிலை என்று கூறுகின்றனா்.
  • வறுமையை ஒழிப்பதையும், வறுமையில் வாடும் மக்கள் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு ஐ.நா. சபை அக்டோபா் 17-ஐ உலக வறுமை ஒழிப்பு நாளாக அறிவித்தது.
  • ‘ஒன்றாக முன்னேறுதல், தொடா்ந்து கொண்டிருக்கும் வறுமையை முடிவுக்குக் கொண்டு வருதல், நமது பூமியை மதித்தல்’ என்பது இந்த ஆண்டின் கருப்பொருளாகும்.
  • உலக வங்கியின் கூற்றுப்படி 2021-ஆம் ஆண்டில் உலகைத் தாக்கிய கரோனா ஏறத்தாழ 1.63 பில்லியன் மக்களை வறுமையில் தள்ளியுள்ளதாகக் கூறப்படுகிறது.
  • 2019-ஆம் ஆண்டு கரோனா பரவலுடன் ஒப்பிட்டால் வறுமை 8.1 விழுக்காடு அதிகரித்துள்ளதற்கான சாத்தியம் உள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரஸ், ‘தற்போது வறுமை அதிகரித்து வருகிறது.
  • கொள்ளை நோய்த்தொற்று உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது’ என்று கூறியுள்ளார்.
  • பொருளாதார நிலையிலும், வாழ்வுரிமை நிலையிலும் இந்தியா கடும் ஏற்றத்தாழ்வைக் கொண்டதாக உள்ளது.
  • உயா்நிலையில் உள்ள 10 விழுக்காட்டுப் பிரிவினரிடம் 50 விழுக்காடு சொத்துகள் இருக்கின்றன என்று தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு (என்எஸ்எஸ்) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • இந்தியாவில் உணவு உற்பத்தி செய்யும் விவசாயத் தொழிலாளா்களே வறுமையை எதிர் கொள்ளுகின்றனா். தாராளமய, தனியார்மயக் கொள்கைகள், கார்பரேட் மயம், புதிய வேளாண் சட்டங்கள் ஆகியவற்றால் விவசாயத் தொழிலாளா்களின் வறுமை விகிதம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
  • நமது நாட்டில் கிட்டத்தட்ட 21 கோடி ஏழைத் தொழிலாளா்கள் ‘நூறுநாள் வேலைத்திட்டம்’ எனப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தையே நம்பியுள்ளனா்.
  • சாதி மத பேதமின்றி வேலை வாய்ப்பளித்த நூறுநாள் வேலைத் திட்டமும் இப்போது பட்டியல் சாதியினா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எனப் பிரிக்கப் பட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்திற்கு கடந்த ஆண்டு ரூ.130 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு ரூ.75 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 138 கோடி மக்களில் பாதிக்கும் மேற்பட்டோரின் தனிநபா் வருமானம் இரண்டு வேளை உணவுக்கே போதுமானதாக இல்லை. இந்த நிலையில் நாடு முன்னேறுகிறது என்பது அரசு மகிழ்ச்சியோடு அறிவிக்கிறது.
  • தனியொருவனுக்கு உணவில்லை எனில்
  • ஜகத்தினை அழித்திடுவோம்
  • என்று பாடினார் மகாகவி பாரதியார்.
  • இந்த அறச்சீற்றம் நாட்டுப்பற்று கொண்ட ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும்.
  • உணவு உற்பத்தியும், வறுமை ஒழிப்பும் இரண்டும் இணைகோடுகள். இந்த இணை கோடுகள் எதிரெதிர் கோடுகளாக மாறாதிருக்க வேண்டும்.

நன்றி: தினமணி  (19 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories