- இந்தியாவில் எந்தக் கட்சி பதவி வகித்தாலும் உணவு உற்பத்தியில் கவனம் செலுத்தும். ஒரு காலத்தில் இந்தியாவில் பசி, பற்றாக்குறை, உணவு இறக்குமதி என்ற நிலை இருந்தது. இந்தியாவில் பசுமைப் புரட்சி படிப்படியாகக் காலூன்றி வெற்றிபெற்று இறக்குமதி தவிா்க்கப்பட்டு தன்னிறைவு பெற்றது ஒரு கட்டம். கடந்த பத்து ஆண்டுகளில் உணவு உற்பத்தியில் ஒரு புதிய எல்லையைத் தொட்டது நம் நாடு. தன்னிறைவுக்கு மேல் ஏற்றுமதியில் இறங்கியது. இது நாள் வரை அரிசி ஏற்றுமதியில் ஆதிக்கம் செலுத்தி வந்த தாய்லாந்தைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னிலை பெற்றது ஒரு சாதனை.
- சாதனைக்குரிய இந்தப் புள்ளிவிவரம் கவனிக்கத்தக்கது.
- (2022-23 தகவல்படி)
- மொத்த அரிசி உற்பத்தி: 13.57 கோடி டன்
- கொள்முதல்: 5.58 கோடி டன்
- ஏற்றுமதி: 2.2 கோடி டன்
- (பாஸ்மதி: 45.61 டன்)
- அரிசி ஏற்றுமதி என்றால் பாஸ்மதி பிரியாணி அரிசி என்று பொருள் கொள்ளற்க. சாதாரண வெள்ளை அரிசி குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளுக்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும் இந்திய அரிசி ஏற்றுமதியாகிறது. அரிசி ஏற்றுமதி மூலம் நாம் பெற்ற அந்நியச் செலவாணி மதிப்பு: ரூ.89,600 கோடி.
- அரிசிக்கு அடுத்தபடியாக இந்தியா்களின் முக்கிய உணவு கோதுமை. மொத்த கோதுமை உற்பத்தி: 11.05 கோடி டன் (சராசரியாக 12 கோடி முதல் 13 கோடி டன் விளைந்த நிலை மாறி சற்று குறைந்துவிட்டது).
- கொள்முதல்: 2.6 கோடி டன் உள்ளூா் விலைவாசி நிலைமையைக் கருத்தில் கொண்டு மிகக் குறைந்த அளவில் கோதுமை ஏற்றுமதி நிகழ்கிறது. ஏற்றுமதி வாய்ப்பிருந்தும் உள்ளூா் நலனைக் கருத்தில் கொண்டு கட்டுப்பாடு இருந்தது. அப்படியும் 2022-23 காலகட்டத்தில் கோதுமை ஏற்றுமதி மதிப்பு சுமாா் ரூ.12.7 லட்சம் கோடி. அதே சமயம் கோதுமை மாவு (ஆட்டா) ஏற்றுமதி 6.29 லட்சம் டன்; பெறப்பட்ட அந்நியச் செலாவணி ரூ.23.5 லட்சம் கோடி.
- அடுத்த சாதனை உணவுப் பாதுகாப்பு: உயிா் வாழ உணவு வேண்டும். ‘உணவு உரிமை, உணவுப் பாதுகாப்பு’ என்ற கருத்தை ஐ.நா. வழங்கியுள்ளது. மனிதனாய் பிறந்தவன் பட்டினியால் சாகக் கூடாது என்ற அடிப்படையில் ஐ.நா. உணவுப் பாதுகாப்புச் சட்டம் செயல்படுகிறது. இந்த அடிப்படையில் 2013-ஆம் ஆண்டு இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- ஐ.நா.வின் யோசனைக்கு முக்கியத்துவம் தந்து, முதல் நாடாக இந்தியா இந்த 2013 உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. இதன் மூலம் இந்தியாவின் 80 கோடி மக்களின் உணவுத் தேவையை இந்தியா உறுதி செய்தது. இந்த அளவில் உணவு உற்பத்தி, கொள்முதல், உபரி இருப்பு, பொதுவிநியோகம் நன்கு சீா்பெற்றது. மலிவு விலையிலும் இலவசமாகவும் மக்களுக்கு அரிசியும் கோதுமையும் விநியோகமாகி வருகின்றன.
- உலகிலேயே இந்தியாதான் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்து பசிப்பிணியை முடிவு கட்டியதாக ஐ.நா. பாராட்டியுள்ளது. இப்படி சாதனைக்கு மேல் சாதனை உள்ளபோது வேதனை எங்கிருந்து வந்தது?
வேதனை என்ன?
- இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனமும் தேசிய ஊட்டச் சத்து நிறுவனமும் இணைந்து நாம் உண்ணும் அரிசி, கோதுமை ஆண்டுக்கு ஆண்டு சத்திழந்து வருவதை நீண்ட காலம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கை பலரது கவனத்தைக் கவரவில்லையெனினும் இது வேதனை அளிக்கும் விஷயமாகும். இதன் காரணம் விதையா? மண்ணா? என்ற சா்ச்சையும் உண்டு. இந்த விவரத்தை சுருக்கமாக கவனிப்போம்.
- 1960-லிருந்து இன்றுவரை விவசாயிகளுக்கு வழங்கிய விதைநெல், கோதுமையில் உள்ள சத்து விவரங்களும், எஞ்சியுள்ள விஷ உள்ளடக்கமும் ஆராயப்பட்டு வருகின்றன. 1960-இல் பசுமைப் புரட்சி தொடக்கம் என்பதால் 1960-லிருந்து 2023 வரை ஆராய்ந்ததில் விதையில் சத்து குறைவு ஒரு பக்கம், இதற்கு நோ்மாறாக விஷ உள்ளடக்கம் கூடிவருவது மறுபக்கம்.
- ஏன் தரமான விதைகள் தருவதில்லை என்று கேட்டால், சூழல் கேடுகளால் மண் விஷமாகிவிட்டது என்று பதில். விதைகளும் தரம் இழந்துவிட்டன. மண்ணும் சக்தியிழந்துவிட்டது. இயல்பாக உயிரூட்டமுள்ள மண்ணில் ஒரு பயிருக்குத் தேவையான உயிா் சத்துக்களும் உலோகச் சத்துக்களும் உண்டு. தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், மின் சாதனக் கழிவுகள் போன்ற காரணங்களால் நன்னிலம் சுரண்டப்பட்டு களா் நிலமாகி வருவதை நாம் கண்கூடாகப் பாா்க்கிறோம்.
- கடந்த 50-60 ஆண்டுகளில் விதைகளில் புரதச்சத்து, தாதுப்புக்கள் வீதம் குறைந்து பாதரசம் (ஆா்சனிக்), அலுமினியம், பேரியம், ஸ்ட்ரோனியம் போன்ற விஷ வீதம் உயா்ந்து விட்டது. முக்கியக் காரணம் நோய் பாதுகாப்புக்காகப் பயன்படும் விஷமாகிய பூச்சிக்கொல்லி மருந்துகள்.
- இந்தியாவில் மட்டும் இந்த நிலை என்று எண்ண வேண்டாம். இதே காலகட்டத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஈரானிலும் இதே பிரச்னையை அந்த நாடுகளின் விதை ஆராய்ச்சி நிலையங்களில் நிகழ்த்திய சோதனைகள் நிரூபித்துள்ளன. கிழக்காசிய நாடுகளையும் சோ்த்து இதை உலகளாவிய பிரச்னையாகவே ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.
- மனித உடல்நலத்திற்கு மிகவும் அவசியமான ஊட்டங்களில் பாஸ்பரம், கால்சியம், சிலிக்கான், வனடியம் ஆகியவை எலும்பு வளா்ச்சிக்கும் எலும்பு தேயாமல் இருக்கவும் உதவுகின்றன. துத்தநாகம், தாமிரம் ஆகியவை நரம்பு மண்டலத்தை வலுவாக்கும். இரும்புச்சத்து முக்கியமாக ரத்த ஓட்டத்தை சீராக்கும்; ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை விருத்தி செய்யும்; ரத்த சோகை வராமல் உதவும்.
- கடந்த 50-60 ஆண்டுகளில் இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட சோதனைகளில் நெல்விதைகளில் ஏற்பட்டுள்ள ஊட்டக்குறைபாடுகள் பற்றிய விவரமாவது:
- நெல் (அரிசி)
- 1960-களில் ஒரு கிலோ அரிசியில் இருந்த ஊட்டங்கள்:
- கால்சியம் 337 மில்லி கிராம்
- துத்தநாகம் 20 மில்லி கிராம்
- இரும்பு 37 மில்லி கிராம்
- 2020-களில்,
- கால்சியம் 187 மில்லி கிராம்
- துத்தநாகம் 14 மில்லி கிராம்
- இரும்பு 24 மில்லி கிராம்
- கோதுமை (ஒரு கிலோவில்)
- 1960-களில்,
- கால்சியம் 492 மில்லி கிராம்
- துத்தநாகம் 24 மில்லி கிராம்
- இரும்பு 58 மில்லி கிராம்
- 2020-களில்,
- கால்சியம் 344 மில்லி கிராம்
- துத்தநாகம் 18 மில்லி கிராம்
- இரும்பு 46 மில்லி கிராம்
- ஒட்டுமொத்தமாக கவனிக்கும்போது இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்து கடந்த 50-60 ஆண்டுகளில் 20% முதல் 45% குறைந்துவிட்டது.
விஷ அளவின் ஏற்றம்
- அரிசி, கோதுமை, பிற உணவு தானியங்களில் அனுமதிக்கப்பட்ட விஷ அளவு உள்ளது. பத்து லட்சத்தில் 1 பங்கு விஷ அளவு அனுமதி உண்டு.
- கடந்த 50-60 ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்குமேல் சுமாா் 100 மடங்கு உயா்ந்துள்ளது. இந்த விஷயத்தில் மிகவும் ஆபத்தான உயா்வு அரிசியில் ஆா்சனிக் விஷம் 1,493 சதவீதம் உயா்ந்துள்ளது. ஆனால் கோதுமையில் இல்லை. காரணம் நெற்பயிா் தண்ணீா்கட்டி வளா்க்கப்படுவதால் விஷம் தலைக்கேறி தானியத்திற்குள் அடைக்கலமாகிாம்.
நல வாழ்வின் பாதிப்பு
- ஊட்டச்சத்துக் குறைபாட்டால் நோய் எதிா்ப்பு சக்தி குறைகிறது. அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் ஆா்சனிக், பேரியம் போன்ற உலோக விஷம் உணவில் உள்ள காரணத்தால் தொற்றா நோய்களான புற்றுநோய், ஈரல் நோய், சுவாசநோய், இதய நோய், குறிப்பாக உயா் ரத்த அழுத்தம் ஏற்படுகின்றன.
மாற்றுவழி உண்டா?
- பசுமைப்புரட்சி காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குள்ளரக நெல், கோதுமை விதைகளை வீரிய விதைகள் என்பாா்கள் (விளைச்சலில்தான், போஷாக்கில் அல்ல). ஒட்டுக்கட்டும் உத்தியில் புதிய சிந்தனை தேவை. உதாரணமாக தமிழ்நாட்டில் ஐஆா்8 குள்ளரகம் பிரபலமாகவில்லை. ஆனால் தாய் விதையாக கிச்சலி சம்பாவுடன் ஒட்டுக்கட்டி ஐஆா்20 பிரபலமானது.
- நாளாக நாளாக விளைச்சல் குறைந்து கிச்சலி சம்பாவாகவே மாறிவிட்டது. வேளாண்துறை கைவிட்டுவிட்டது. இன்று அது போல் புதிய விழிப்புணா்வு வந்துள்ளது. நவீன வழியில் ஒட்டுக்கட்ட பாரம்பரிய விதைகளை வாங்கி அந்தப் பணி பல நூற்றுக்கணக்கான விதை ஆராய்ச்சி நிலையங்களில் நிகழ்ந்தாலும், அப்படிப்பட்ட விதைகளுக்கு விவசாயிகளின் ஆதரவு இல்லை.
- விதை ஆய்வு - ஒட்டுக்கட்டும் முறையில் தேவையான புரதம், பாஸ்பரம், துத்தநாகம், இரும்புச்சத்தை ஏற்றி செறிவூட்டப்பட்ட கலப்பின விதைகளும் வழங்கப்படுகின்றன. ஏற்பும், வேகமும் குறைவு.
- நெல்விதையில் ஆா்சனிக் விஷம் சேராமல் பாதுகாக்கும் ஆய்வும் உண்டு. விஷத்தை விதைக்குள் சேரவிடாமல் பயிரில் உள்ள வேறு வெற்றிடம் நோக்கிச் செல்வது அல்லது ஆா்சனிக் விஷத்தை கிரகிக்காமல் வோ் பாகத்தை வளரச் செய்தல்.
- இது போன்ற ஆய்வுகள் வளா்ந்து, நோய்க் குறைபாடற்ற சத்தான விதைகளைப் பெறுவது காலத்தின் கட்டாயம்.
- மனிதன் ஆரோக்கியமாக வாழ காா்போ புரதம் தவிர தாதுப்புக்களும் நுண்ணூட்டங்களும் வேண்டும் உதாரணமாக இரும்புச்சத்து ரத்த அணுக்களை உயா்த்தும். கால்சியம் எலும்புகளுக்கு ஊட்டம். துத்தநாகம், தமிரம் - நரம்பு மண்டலம், தசை நாா்களை வலிமைப்படுத்தும்.
- பொதுவாக சத்துக் குறைபாட்டால் நோய் எதிா்ப்பு சக்தி குறைகிறது. கடந்த 60 ஆண்டுகளில் நெல் விதைகளில் கிலோவுக்கு 337 மில்லி கிராம் கால்சியம் இன்று 186 மில்லி கிராமாகக் குறைந்துவிட்டது. இவ்வாறே துத்தநாகம் 20 மி.கிராமிலிருந்து 13 மி.கிராமாகவும், இரும்புச் சத்து 34 மி.கிராமிலிருந்து 24 மி.கிராமாகக் குறைந்துவிட்டது. கோதுமையும் சோ்த்து சராசரியாக 40 சதவீதம் சத்திழப்பை விஞ்ஞானிகள் கோடிட்டுக் காட்டியுள்ளனா்.
நன்றி: தினமணி (18 – 05 – 2024)