- மணிப்பூர் மாநிலத்தில் மெய்தேய்-குக்கி சமூகங்களுக்கு இடையிலான வன்முறை தொடர்பாக ஊடகங்களையும் மாநில அரசின் செயல்பாடு களையும் விமர்சித்து அறிக்கை வெளியிட்டதற்காக, எடிட்டர்ஸ் கில்டு அமைப்பின் தலைவர் - உறுப்பினர்கள் ஆகியோர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் மணிப்பூர் அரசு வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது.
- மணிப்பூரில் மெய்தேய் சமூகத்தினருக்குப் பட்டியல் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது தொடர்பாக எழுந்த முரண்கள் வன்முறை வடிவம் எடுத்ததைத் தொடர்ந்து, இதுவரை 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50,000க்கும் மேற்பட்டோர் தாங்கள் வசித்துவந்த பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தப் பின்னணியில் மணிப்பூரில் கள ஆய்வு நடத்தி, செப்டம்பர் 2 அன்று எடிட்டர்ஸ் கில்டு அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
- அதில் மணிப்பூரில் பெரும்பாலான ஊடகங்கள் ஒருதலைப்பட்சமாகச் செய்தி அளித்ததன் மூலம் வன்முறை தொடர்வதற்குப் பங்களித்ததாகவும் மாநில பாஜக அரசு பக்கச்சார்புடன் நடந்துகொண்டதாகவும் கூறியிருந்தது. மணிப்பூரில் இணையத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததும் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க முடியாத சூழலுக்கு வித்திட்டு, ஒருதலைப்பட்சமான செய்திகள் வெளியிடப்படக் காரணமாக அமைந்ததாக எடிட்டர்ஸ் கில்டு அறிக்கை குற்றம்சாட்டியிருந்தது.
- இது மணிப்பூரின் வரலாற்றையும் களநிலவரத்தையும் புரிந்துகொள்ளாமல் வெளியிடப் பட்டுள்ள ஒருதலைப்பட்சமான அறிக்கை என்று மணிப்பூர் முதல்வர் என்.விரேன் சிங் சாடியுள்ளார். எடிட்டர்ஸ் கில்டு தலைவர் சீமா முஸ்தஃபா, உறுப்பினர்கள் சீமா குஹா, பரத் பூஷண், சஞ்சய் கபூர் ஆகியோர் மீது, இரண்டு சமூகங்களுக்கு இடையில் மோதலைத் தூண்டுதல், திட்டமிட்டு மத உணர்வுகளைப் புண்படுத்துதல், குற்ற நோக்கத்துடன் கூடிய அவதூறு ஆகியவற்றுக்கான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
- இதற்கு எதிரான மேல் முறையீட்டை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, இவ்வழக்கில் கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு செப்டம்பர் 6 அன்று இடைக்காலத் தடை விதித்தது. இதன் மூலம் எடிட்டர்ஸ் கில்டு தலைவரும் உறுப்பினர்களும் கைது செய்யப்படுவது தற்காலிகமாகத் தடுக்கப்பட்டுள்ளது.
- மணிப்பூரில் வன்முறையின் தீவிரம் குறைந்துவிட்டாலும். முழுமையாக நிறுத்தப்படவில்லை. பல மாதங்களாக இத்தகைய கலவரச் சூழல் நிலவும் மாநிலத்தில், ஊடகங்களின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன என்பது குறித்த உண்மையை வெளிக் கொண்டு வர முயல்வதில் தவறொன்றும் இல்லை. ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான லாபநோக்கற்ற அமைப்பான எடிட்டர்ஸ் கில்டின் இத்தகைய நடவடிக்கையை வன்முறையைத் தூண்டும் செயல்பாடாக மணிப்பூர் அரசு சித்தரிப்பது துரதிர்ஷ்டவசமானது.
- எடிட்டர்ஸ் கில்டு அறிக்கையில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் இருந்தால், அதற்கு எதிராக நீதிமன்ற வழக்கு தொடரலாம். அறிக்கைக்குத் தடைவிதிக்க, திரும்பப் பெற்றுக் கொள்ள உத்தரவிட வைக்கலாம். உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். மாறாக, அறிக்கையை வெளியிட்டதற்காகவே கைது நடவடிக்கையை நாடுவது மணிப்பூரில் உண்மைச் சூழலைத் தெரிந்துகொள்ள முயலும் அனைவரையும் அச்சுறுத்துவதாகும். இது நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் குடிமக்களின் உரிமையை மறுப்பதாகிவிடும்.
- மணிப்பூரில் வன்முறையை முற்றிலும் களைவது மட்டுமல்லாமல் மாநிலத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதில் வெளிப்படைத்தன்மையைப் பேணுவதும் முக்கியம். மணிப்பூர் அரசு இதை உணர வேண்டும். மணிப்பூரில் முழுமையான அமைதி திரும்புவதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து முன்னெடுக்க வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (12 – 09 – 2023)